தேசிய தலைவராகும் நிதிஷ்?

Bihar Cm

பீகார் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார் நிதிஷ்குமார். இந்தப் பதவி ஏற்பு விழாவை கோலாகலமாக மாற்ற முயற்சிக்கின்றன பாஜக எதிர்ப்பு அரசியல் செய்யும் கட்சிகள். பாஜவை எதிர்க்க பலமான சக்தியை உருவாக்க இந்த பதவியேற்பு விழா ‘கூடுதல்’ உதவி செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முக்கிய தலைவர்கள் அணிவகுக்கும் விழா

நிதிஷின் பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவின் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, முன்னாள் பிரதமர் ஹெச். தேவேகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத்பவார், ஃபிரபுல் பட்டேல், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபாரூக் அப்துல்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போன்றோரும் பல மாநில முதல்வர்கள் வர இருக்கிறார்கள்.

குறிப்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இந்தப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார்கள். அதோடு காங்கிரஸ் ஆளும் ஆறு மாநில முதல்வர்களான சித்தராமையா, தருண் கோகாய், பி.கே.சாம்லிங், இபாபி சிங், நபாம் டுகி, வீர்பத்ரா சிங் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் தம்பிதுரையும் பங்கேற்கின்றனர். முன்னதாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நிதீஷ் குமார் விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், அதே நாளில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால், அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு இணையான செல்வாக்கு

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று பிரதமராக மோடி பதவியேற்றபோது, தெற்காசிய நாட்டின் தலைவர்களை அழைத்தார். தெற்காசிய பிராந்தியத்தில் தன்னுடைய ஆளுமையை பறைசாற்றிக்கொள்ள மோடி அப்படி செய்தார். அதேபோல, மோடிக்கு எதிரான அலையில் பீகாரில் வெற்றியைக் குவித்த நிதிஷ்குமார், தன்னுடைய அரசியலை தேசிய அரசியலாக மாற்றும் முயற்சியில் பதவியேற்பு விழாவை கோலாகலமாக நடத்துவதைப் பார்க்கலாம். மோடிக்கு இணையான செல்வாக்கும் அரசியலை வழிநடத்தும் திறமையும் தனக்குள்ளதாக நிதிஷ் நினைக்கிறார். அதற்கு கட்டியம் கூறுவதாகத்தான் நிதிஷின் பதவி ஏற்பு விழா அமைந்திருக்கிறது.

 

Advertisements