ஹரீஷ் பூஜாரியைக் கொன்றது பஜ்ரங் தள் சகாக்களே: வெளிவந்த உண்மை

மாட்டிறைச்சியை வைத்திருந்ததாக பரப்பட்ட வதந்தியில் அடித்துக் கொல்லப்பட்ட தாத்ரி அக்லக் பற்றி பேசுபவர்கள் மூடுபித்ரியில் மாடுகளைக் காப்பாற்றும் ஆர்வலராக இருந்த ஹரிஷ் பூஜாரி கொலையை பேசவில்லையே ஏன் என அங்கலாய்த்தனர் இந்துத்துவத்தை முன்னெடுக்கும் அமைப்பினர்.

அப்பாவி முஸ்லிமானாலும் தீவிர இந்துவானாலும் அடித்துக் கொல்வதை மனிதத்தை விரும்பும் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் யார் எந்த சூழ்நிலையில் எப்படி கொல்லப்படுகிறார் என்பதும் அதில் உள்ள அரசியலும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. வன்முறைக்கான எந்த பின்னணியும் இல்லாமல் வாழ்ந்த அக்லக்கின் கொலை அசாதாரணமானது, அதன் பின்னால் இருந்த திட்டமிடல், அரசியல் எல்லாம் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த நாட்களில் விளங்கின. அதனால்தான் நாடு தழுவிய கண்டனமும் அறிவுஜீவிகளின் தன்னிச்சையான எழுச்சிப் போராட்டமும் வலுப்பெற்றது.

கர்நாடக மாநிலம், மூடு பித்ரியைச் சேர்ந்த ஹரிஷ் பூஜாரியை எடுத்துக் கொள்வோம். அவர் பஜ்ரங் தள் அமைப்பின் தீவிர செயல்பாட்டாளர். கர்நாடகாவை காங்கிரஸ் ஆண்டாலும் இந்து அமைப்புகளின் செயல்பாடு எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை. அதற்கொரு உதாரணம்தான் பேராசிரியர் எம். எம்.
கல்புர்கி கொலை. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்து அமைப்புகள் புது உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்து அமைப்புகளுக்கு எதிராக உள்ள அமைப்புகள் ஹரிஷ் பூஜாரியை கொன்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே. சிறுபான்மையினர் அச்சுறுத்தலில் வாழும் சூழலில் இத்தகைய கொலை செயல்கள் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிறுபான்மை அமைப்புகள் தெரிந்தே
வைத்திருக்கின்றன. இந்த அடிப்படையில்தான் ஹரிஷ் பூஜாரியின் கொலையை விவாதத்துக்குரிய ஒரு விஷயமாக யாரும் பார்க்கவில்லை. இது ஒரு உள்ளூர் ரவுடிகளின் கட்டபஞ்சாயத்து மோதலாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், பாஜகவினர் ஏன் இந்த பாரபட்சம் என்று பதறினர். வலதுசாரி ஊடகங்கள் ஹரிஷ் பூஜாரியின் கொலைக்கு ‘மத’ சாயம் பூசின. ரங்கராஜ் பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள் தாத்ரியில் நடந்ததைப் போலவே மூடு பித்ரியை சம்பவத்தையும் பார்க்க வேண்டும். சேலத்தில்கூட இந்து முன்னணி செயலாளர்
கொல்லப்பட்டார் ஏன் அதுகுறித்து பேசுவதில்லை என்று கதறினார். ஆமாம், கொலையாளிகளின் கொலையும்கூட கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதில் மறுப்பில்லை. கொலையாளிகளையும் அப்பாவிகளையும் சமன்படுத்துவதைத்தான் மறுக்க வேண்டியிருக்கிறது.

கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்ட இந்து முன்னணி செயலாளர், சக அமைப்பினராலேயே கொல்லப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து அவர்களும் கைதானார்கள். இது ரங்கராஜ் பாண்டே போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. தங்களுடைய ஊடக செல்வாக்கைப் பயன்படுத்தி பொது மக்கள் மத்தியில் ‘தர்க்கப் பூர்வமாக பேசி பொய்யை உண்மையாக்கும் முயற்சி இது.

தமிழகத்தில் நடந்ததுபோலத்தான் மூடு பித்ரி ஹரிஷ் பூஜாரி கொலையின் பின்னணியின் மூலம் இருக்கிறது. ஹரிஷ் பூஜாரியை அடித்துக் கொன்றது சக அமைப்பைச் சேர்ந்தவர்களே தான். கல்புர்கி கொலையானபோது அடுத்த கொலை கே.எஸ். பகவானுடையதுதான் என்று ட்விட்டனாரே அதே நபர்தான். பெயர் புவீத் ஷெட்டி. புவீத் ஷெட்டி(25)யும் அச்சுதா(28)வும் இணைந்து ஹரிஷ் பூஜாரியை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். சமியுல்லா என்ற மூஸ்லீமை கொல்லப்போய், ஹரிஷ் பூஜாரியைத் தவறுதலாகக் கொன்றுவிட்டார்களாம். தங்களுடைய வாக்குமூலத்தில் இவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

சமியுல்லாவை ஏன் கொல்லவேண்டும்? அவரைக் கொல்வதன் மூலம் அந்தச் சமூகத்தினரை பயமுறுத்த வேண்டுமாம். கல்புர்கி கொலையை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் எழுதியது மட்டுமில்லாமல், மற்றொரு மாற்றுக் கருத்தாளரும் அதுபோல் கொல்லப்படப் போவதாகவும் எழுதி புகழ்பெற்ற நபர், அடுத்து தன்னுடைய தீவிர அரசியலை ஒரு முஸ்லீமைக் கொல்வதன் மூலம் முன்னெடுக்கலாம் என நினைத்திருக்கிறார். அது திசைமாறி ஹரிஷ் பூஜாரியின் உயிரை வாங்கிவிட்டது.

தன்னை தீவிர இந்துவாகவும் இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஊடகங்களில் பேசியிருக்கிறார் புவீத் ஷெட்டி. இந்து தேசத்தை நிறுவும் பொருட்டு, மத, சாதி சிறுபான்மையினரை திட்டமிட்டுக் கொன்றதாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெருமைமிக்க
ஜனநாயக பதவிகளில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது புவீத் போன்ற அடிமட்ட தீவிர இந்து செயல்பாட்டாளரின் கனவு பரந்து விரிந்திருக்கும். அதனுடைய தொடர்ச்சியே இப்படியான ‘சொதப்பலான’ கொலைகள். இந்திய-பிரிட்டன் வாழ் சிற்பக்கலைஞர் அனிஷ் கபூர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது ‘இந்தியாவை இந்து தாலிபான்கள் ஆள்கிறார்கள்!’

Advertisements