தேர்தல் வேலை செய்ய இனி தொண்டர்கள் தேவையில்லை; பி.ஆர். ஏஜென்ஸி போதும்!

வரப்போகிற சட்டப் பேரவை தேர்தலுக்கு வாக்களார்களைச் சந்திக்கும் புது யுத்தி, தமிழகத்தில் அறிமுகமாக இருக்கிறது. மோடியின் மக்களவைத் தேர்தல், பீகார் தேர்தல்களில் இந்த யுத்தியைப் பயன்படுத்தித்தான் கட்சிகள் வெற்றி கண்டன என்கிற பேச்சும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அது என்ன யுத்தி என்கிறீகளா?

தேர்தல் வந்தால் கட்சிகள் தொண்டர்களை அழைத்து, வாக்காளர்களை சந்தித்து ஓட்டுக் கேட்க அனுப்புவார்கள். இனி ஓட்டுக் கேட்ட தொண்டர்கள் தேவையில்லை, பி.ஆர்.ஏஜென்ஸிகள் எனப்படும் செய்தித் தொடர்பு நிறுவனங்களே போதும் என்கிற நிலை இந்திய அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனங்கள் எப்படி செயல்படும்?

* செய்தித் தொடர்பு நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் கொள்கைகள், அறிக்கைகளை, தேர்தல் நேர பரப்புரைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இவர்களுடைய பணி.

* வேட்பாளர்களுக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட தொகைப் பெற்றுக் கொண்டு அவர்களின் வெற்றிக்காக இந்த பி.ஆர். நிறுவனங்கள் உழைக்கும்.

* ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைத்தளங்கள் மூலம் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது இவர்களுடைய யுத்தி.

முன்னணி நிறுவனங்கள்

* APCO Worldwide

* Perfect Relations

* Acti Media

* Kamnath Mudralaya

* Mutual PR போன்றவை இந்தியாவில் செயல்படும் சில முன்னணி அரசியல் செய்தித் தொடர்பு நிறுவனங்கள்.

* Oakland Brigs

மோடிக்கு மிகப் பெரும் வெற்றியைத் தந்த நிறுவனம்

APCO Worldwide என்ற நிறுவனம்தான் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு பிரச்சாரத்தை செய்த நிறுவனம். இவர்கள் வடிவமைத்ததே ‘ஆப் கி பார் மோடி சர்க்கார்; நமோ’ போன்ற வாசகங்கள்.

அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உலக அளவில் பெரிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுக்கு பேரங்களைப் பேசி முடிப்பதை பணியாகக் கொண்டது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற இந்த நிறுவனம், அரசியல் கட்சிகளின் வெற்றிகளை வடிவமைக்கும் நிறுவனமாகவும் செயல்படத் தொடங்கியது.

குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி, அப்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பயன்படுத்தினார். இந்த நிறுவனம் நடைமுறைப்படுத்திய யுத்திகளின் அடிப்படையில் குஜராத் முதல்வராக மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அடிப்படையில் மக்களவைத் தேர்தலில் APCO Worldwide நிறுவனத்தை மீண்டும் அணுகினார் மோடி.அதற்கான பலனை 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அறுவடை செய்தது. இதற்காக மாதம் 25 ஆயிரம் டாலர்கள் பாஜக செலவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழியைப் பின்பற்றியே நிதிஷின் மகா கூட்டணி பீகார் தேர்தலில் வென்றதாகவும் சொல்கிறார்கள். இந்த வெற்றியைத் தேடித் தந்ததில் பிரசாந்த் கிஷோர் என்பவரின் செய்தித் தொடர்பு யுத்தி முக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது.

தமிழகக் கட்சிகள் ஆர்வம்

இந்த நிலையில் வரவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் இந்த யுத்திகளைப் பயன்படுத்த தமிழகக் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. மு.க. ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

அதிமுகவும் தன்னுடைய அரசியல் செய்தித் தொடர்புக்கு Oakland Brigs என்ற அமெரிக்க அணுகியிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. Oakland Brigs நிறுவனம் அஸ்ஸாமில் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்க தேர்தலுக்கும் இந்த நிறுவனத்து அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ‘புது யுத்தி’ தமிழக அரசியல் கட்சிகளுக்குக் கைக் கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

Advertisements

One thought on “தேர்தல் வேலை செய்ய இனி தொண்டர்கள் தேவையில்லை; பி.ஆர். ஏஜென்ஸி போதும்!

  1. பதில் தர முடியவில்லையா ?அந்தப் பின்னூட்டத்தையே நீக்கு என்பது லேட்டஸ்ட் முற்போக்கு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.