ஷாரூக் வழியில் அமீர்கான்: சகிப்பின்மை சூழல் நீடித்தால் நாட்டை விட்டு வெளியேற யோசனை

Amir Khan with wife

Amir Khan with wife

எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளித்துக் கொண்டிருப்பது குறித்து பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், நாட்டில் சகிப்பின்மை சூழல் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார். அதே கருத்தை டெல்லியில் நடைபெற்ற சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கான ரான்நாத் கொயங்கா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமீர்கானும் இப்போது தெரிவித்திருக்கிறார்.

“உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முதியவர் அக்லக் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களை படிக்கும்போது அது எனக்கு எச்சரிக்கையூட்டுவது போல் தோன்றுகிறது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை எடுத்துரைக்கும் விதமாக நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் என் மனைவி கிரண் ராவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி நாட்டைவிட்டே வெளியேறி விடலாமா என்றுகூட என்னிடம் பேசினார்” என்று விழா மேடையில் பேசிய அமீர்கான்,

“நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தங்களின் அதிருப்தியை படைப்பாளர்கள் வெளிப்படுத்த விருதுகளை திருப்பி அளிப்பதும் ஒரு வழிதான்” என்று தெரிவித்தார். அமீர்கானின் இந்தக் கருத்தை தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி தியாகி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

மோடி சகிப்பின்மை சூழல் எல்லாம் இந்தியாவில் இல்லை; இது காந்தி நாடு என்று சொன்ன பிறகும் அஸ்ஸாம் ஆளுநர், “இங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முஸ்லிம்கள் பாகிஸ்தான் போகட்டும்” என்கிறார். சாத்வி நிரஞ்சன் ஜோதி “முஸ்லிம்களே, உங்களுக்கு நாங்கள் மரியாதை தரவேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்கு முதலில் மரியாதை தாருங்கள்” என்கிறார்.

அமீர்கான் போன்ற அந்தஸ்து மிக்கவர்களே பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால் மக்களின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்?!

Advertisements