பெண் வணங்கியதால் கோயிலுக்குத் தீட்டு ஏற்பட்டு விட்டதாம்!

shani

அண்மையில் ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கோயில் நிர்வாகி, பெண்கள் மாதவிலக்கானதை கண்டறியும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் அது நிறைவேறும் என்றார். இந்த விவகாரம் நாடு முழுவது பெண்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள, சனி கோயிலில் பெண் ஒருவர் கடவுளை தொட்டு பூஜை செய்ததால் தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி, அந்த கற்சிலைக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

நூறாண்டுகளாக தடை

கடந்த நூறு ஆண்டுகளாக இந்தக் கோயிலில் பெண்கள் வழிபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சனிக்கிழமை மதிய நேரத்தில் இந்தக் கோயிலுக்கு வந்த பெண் ஒருவர், கற்சிலைக்கு பூஜை செய்தாராம். ஒரு சில நொடிகள் கோயில் நிர்வாகம் கவனக் குறைவாக இருந்ததால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகவும், பிறகு அந்தப் பெண்ணை அழைத்து கண்டித்து அனுப்பிவிட்டதாகவும் கோயில் நிர்வாகி சாயாராம் பங்கர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு காரணமானதாக இவர் உள்பட, ஏழு கோயில் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தீட்டு கழிக்கப்பட்டது!

பெண் வணங்கியதால், கற்சிலைக்குத் தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி, பால் மற்றும் எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா ஷிரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சனி கோயிலுக்கும் சென்று வழிபடுவது வழக்கம்.

மறுக்கப்படும் பெண்களின் வழிபாட்டு உரிமை

இந்தக் கோயில் மட்டுமல்லாது மகாராஷ்டிராவில் உள்ள பல கோயில்களில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தடை உள்ளது. இந்துக் கோயில்களின் வழிமுறையை ஒட்டி சில தர்காக்களில் பெண்கள் மாதவிலக்கான நாட்களில் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர தபோல்கரின் போராட்டம்

இந்து சனாதன அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், சனிக் கோயில் உள்பட மகாராஷ்டிராவில் உள்ள பல கோயில்களில் பெண்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைக்காகப் போராடினார். பல முறை பெண்களை அழைத்துக் கொண்டு கோயில் நுழையும் போராட்டம் நடத்தி கைதானார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. ‘மகாரஷ்டிர அந்தஸ்ரத்தா நிர்மூலன் சமிதி’ என்ற தன்னுடைய அமைப்பின் மூலம், 2000 வருடங்களாக பெண்களுக்கு வழிபடும் உரிமை மறுக்கப்பட்ட மகாலஷ்மி கோயிலில் 2011-ஆம் ஆண்டு வழிபடும் உரிமைப் பெற்றுத்தந்தவர் தபோல்கர். இந்தக் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தபோல்கர் தொடர்ந்த நீதிமன்ற வழக்கு தீர்ப்பு நோக்கி இருக்கிறது.

 

One thought on “பெண் வணங்கியதால் கோயிலுக்குத் தீட்டு ஏற்பட்டு விட்டதாம்!

  1. பெண் வணங்கியதால் கோயிலுக்குத் தீட்டு…
    இந்த செய்தி இங்கேயும் வந்திருக்கிறது.மிகவும் அவமானமாக இருந்தது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.