பணிபுரிய திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள் வேண்டும் என்றுகூட சொல்வார்கள்!

திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள்தான் முழுமூச்சில் உழைப்பார்கள் என்று மூடக் கருத்து ஊடக நிறுவனங்களிலும் இருக்கிறது. நான் என்னைடைய பிரசவத்துக்கு ஒரு வாரம் முன்பு வரைக்கும்கூட பணியாற்றினேன். நிறைவாகவே பணி செய்தேன். ஏற்கனவே அந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவள், இடைவெளிக்குப் பிறகு ஒன்பது மாதங்கள் நிறைவாகவே உழைத்தேன். பணிக்கு இடையூறு வந்துவிடுமோ என்று ஐந்து மாதங்கள் என் கர்ப்பத்தை மறைத்தேன். தீபாவளி நாட்களில் இதழ் பணிகளில், கடும் பசியுடன் இரவு எட்டு, எட்டரை வரைக்கும் பணியாற்றினேன்.

பிரசவத்துக்குப் பிறகு, மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று மட்டும் சொன்னார்கள். ஒரு மாதச் சம்பளம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் மீண்டும் ஐந்து மாதம் கழித்து அந்த நிறுவனத்திலே சேர்ந்தேன். இரண்டு வருடங்கள் மேலும் உழைத்தேன். பணி நியமனம் கேட்டு பல முறைப் போராடினேன். தரவில்லை. எனக்கு ஊடக வாய்ப்பளித்தவர், என்னை ஊக்குவித்தவர், என்னுடைய ஆசிரியருக்கு பணியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிக் கொள்ளக்கூட விரும்பவில்லை. விலகிவிட்டேன்.

குழந்தை இருப்பதை நம்முடைய பணித்திறனை பாதிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். நம்முடைய திறமையும் அர்ப்பணிப்பும் எப்போதும் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ராதிகா அப்தே நடித்திருக்கும் மைந்தரா விளம்பரம், என்னை எனக்கு நினைவு படுத்துகிறது. விளம்பரத்தில் ராதிகாவின் கதாபாத்திரம் பிரமாண்டமான அலுவலகம் அமைத்து புதிய தொழில் தொடங்கும் அளவுக்கு எனக்கு பொருளாதார வசதி இல்லையெனினும் என்னுடைய சுயமுயற்சிகள் குறித்து எப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

‪#‎RadhikaApte‬ ‪#‎BoldIsBeautiful‬

 https://youtu.be/rz5rAFAvqCs
 

 

4 thoughts on “பணிபுரிய திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள் வேண்டும் என்றுகூட சொல்வார்கள்!

  1. சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருக்கிறது. ஆனால் இன்னும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. சிலருக்கு வாழ்க்கையை விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேண்டியதிருக்கிறது. சிலருக்கு வாழ்க்கை பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. மழைக்கு பிறகு, சென்னை வாழ்க்கையை தொடரலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்திருக்கிறது.

    • இன்று சொத்துக்கள் பல சேர்த்திருந்தாலும், இங்கே வசிக்கும் பலருடைய வாழ்க்கை பூஜ்ஜியத்திலிருந்து இருந்துதான் ஆரம்பித்திருக்கும். எனவே, அவர்களால் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து மீண்டெழ முடியும். குழப்பமே வேண்டாம். சென்னை வாழவைக்கும்.
      நீர்நிலைகளை ஆக்கிரமித்த தவறுக்குதான் நான் அனுபவித்தோம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  2. காணொளியைப் பார்த்தேன். அலுவலகங்களில் குழந்தையைக் காரணம் காட்டிப் பதவி உயர்வு மறுக்கப்படும் பிரச்சினையை அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல பெண்கள் எவ்வளவு தான் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தாலும் திறமை குறைத்தே மதிப்பிடப்படுகிறது. உங்கள் சுயமுயற்சிகள் குறித்துக் கனவு கண்டு கொண்டே இருங்கள். கனவு ஒரு நாள் நிச்சயம் நிஜமாகும். உங்கள் எழுத்துத் திறமைக்குப் பொருளாதார வசதி தேவையில்லை. பெரிய மூலதனம் ஏதும் இல்லாமலே உங்களால் சாதிக்க முடியும். வாழ்த்துக்கள் நந்தினி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.