வெள்ளம் விட்டுச் சென்ற துயரம் எல்லோருக்குமானது

வெள்ளம் சூழ்ந்த வசிப்பிடம், கையில் பொருளில்லை, சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, தொலைத் தொடர்புகள் இல்லை…மழை விட்டுச் சென்ற அசாதாரண சூழ்நிலை, வாழ்வின் துயரங்களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டது.  ஆனால் நம்மின் நிலைமை மேல் என்பதே நேரில் கண்ட வெள்ளத் துயரங்கள் உணர்த்தின.

எங்களுக்கு உணவளித்த உள்ளங்கள்

எங்களுக்கு உணவளித்த உள்ளங்கள்

அலுவலகம் செல்லலாம் என்று கடந்த வியாழன் அன்று மகனுடன் தி.நகர் புறப்பட்டேன். பேருந்து நடத்துனர் டிக்கெட் தரும்போதே வள்ளுவர் கோட்டம் வரைதான் பேருந்து செல்லும், அதற்கு மேல் செல்லாது எனச் சொல்லி விட்டார். வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது; சரி அங்கிருந்து ஆட்டோவில் அலுவலகம் சென்று விடலாம் எனக் கிளம்பினோம். மழை தூறல் ஆரம்பித்தது.

This slideshow requires JavaScript.

அண்ணாநகர் சாந்தி காலனியை அடுத்த பிரிவரி சாலையை ஒட்டி ஓடும் கூவம் ஆறு பாலத்தைத் தொட்டு ஓடியது. பிரிவரி சாலை முழுவதும் மூழ்கியிருந்தது.  ஆற்றின் இருபுறமும் இருந்த குடிசைகளின் கூரைகள் மட்டுமே தெரிந்தன.  இருப்பிடங்களை விட்டு வெளிறிய மக்கள் சாலைகளில் அகதிகளாக குவிந்திருந்தனர்.  ஒரு சிறுவன் தெருவில் தேங்கிய வெள்ளத்தில் நீந்தி வந்துக்கொண்டிருந்தான்.

அண்ணா வளைவு சாலையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் வீடுகளை விட்டு வெளியேறிய அமைந்தகரை மக்கள் நிரம்பியிருந்தனர்.  சூளைமேட்டை தொட்டுச் செல்லும் கூவம் ஆறு ஆக்ரோஷமாகப் பாய்ந்துக் கொண்டிருந்தது பயத்தைக் கொடுத்தது.

சூளைமேட்டில் கரை தொட்ட கூவம் ஆறு

சூளைமேட்டில் கரை தொட்ட கூவம் ஆறு

சிறு வயதில் குட்டை நீரைக் கண்டால்கூட அலறுவேன். கிருஷ்கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மழைக்காலத்தில் ஏரிகள் பெருக்கெடுத்து ஓடும். எங்கும் வெள்ளம் புரண்டுகொண்டிருக்கும்.  ஏரிக்கரைகளில் அமைக்கப்பட்ட சாலைகளை பேருந்து கடக்கும்போது நான் கண்களை மூடிக் கொள்வேன். இப்போது தேவலாம்.

கரையைத் தொட்டு ஓடிய கூவம் ஆறு என்னுடைய சிறு வயது பயத்தைக் கிளறிவிட்டது.  சூளைமேட்டின் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ரயில்வே பாலத்தை ஒட்டியிருந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நல்ல உள்ளத்துடன் அவர்களுக்கு சிலர் உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.

பேருந்து வள்ளூவர் கோட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டிருந்தார். நடத்துனர் தி. நகர் முழுதும் வெள்ளம் என்றார். என் மகனை இருகப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப முடிவு செய்தேன்.