பழிவாங்கும் அரசியலின் பாஜக முகம் ‘நேஷனல் ஹெரால்டு’!

“நான் இந்திரா காந்தியின் மறுமகள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்?” கடும் சினத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. காரணம் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்து ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை வழக்கில் தன்னையும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குற்றம்சாட்டப்பட்ட இன்னும் சில காங்கிரஸ் பிரமுகர்களையும் வரும் 19-ஆம் நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது என்பதே.

வழக்கின் பின்னணி:

ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை. தற்போது வெளிவராத இந்தப் பத்திரிகை அசோசியேடட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது.  இந்தப் பத்திரிகைக்கு அவ்வவ்போது கடனைத் திருப்பி அளிக்க வேண்டும் என்கிற விதிமுறையுடன் காங்கிரஸ் கட்சி ரூ. 90 கோடி வட்டியில்லா கடன் அளித்திருந்தது.  அசலை திருப்பி செலுத்தாததால் இந்த நிறுவனத்தை  2008-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான ‘யங் இந்தியா’ என்கிற தொண்டு நிறுவனம் தனதாக்கிக் கொண்டது.

நேஷனல் ஜெரால்டு பத்திரிகைக்கு ரூ. 2000 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருக்கின்றன. எனவே ரூ. 90 கோடி கடனுக்காக எப்படி இவ்வளவு மதிப்பு வாய்ந்த நிறுவனத்தை வளைத்துப் போடலாம் என பாரதிய ஜனதா கட்சியின் சுப்ரமணியம் சுவாமி சர்ச்சையை எழுப்பினார்.  தொண்டர்கள், காங்கிரஸ் அபிமானிகள் கொடுத்த நிதியை எப்படி தனியார் நிறுவனத்துக்கு கடனாகக் கொடுக்கலாம் என்பதும் ‘யங் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்களாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் (38 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்கள்) உள்ளனர். அவர்கள் நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார்கள் என்பது சுப்ரமணியம் சுவாமி வைத்த குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தைரியம் இருந்தால் நீதிமன்றத்துக்குச் சென்று முறைகேட்டை நிரூபியுங்கள் பார்க்கலாம் என்றது.

நீதிமன்றம் போன வழக்கு:

சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர்  மீது சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். மேலும், பத்திரிகையை வாங்கியதற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கில் சில சட்டரீதியிலான காரணங்களுக்காக சோனியா, ராகுலை தொடர்புபடுத்த முடியாது என்று கூறி அமலாக்கத் துறையின் முன்னாள் இயக்குநர் ராஜன் எஸ்.கடோச் விசாரணையை கடந்த ஆகஸ்ட் மாதம் முடித்துக் கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை இயக்குநர் பதவியில் இருந்து ராஜன் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கர்னால் சிங் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சோனியா, ராகுல் தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.

இதில் யார் பாதிக்கப்பட்டவர்கள்?

ஒரு வழக்கு என்றால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும் இல்லையா? ஆனால்,  இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. நேஷனல் ஹேரால்டு பத்திரிகை நிறுவனமான அசோசியேடட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸும்தான்.  அரசியல் கட்சி பத்திரிகைக்கு நிதி அளிக்கக்கூடாது என்ற வரைமுறையை மீறியதாகவும் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் கூறி வழக்குத் தொடர்ந்திருக்கிறார் சுப்பிரமணியம் சுவாமி. சுப்பிரமணியம் சுவாமிக்கு காந்தி குடும்பத்தின் மீதிருக்கும் ‘வெறுப்பு’ உலக அறிந்த ஒன்று. ‘ராகுல் காந்தி பிரிட்டன் பிரஜை’ என்பது போன்ற அபத்த காமெடிகளை அவ்வவ்போது அவிழ்த்து விட்டுக்கொண்டே இருப்பார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?

புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சி, ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சி மீது வழக்கு தொடர்வது இந்திய அரசியலில் வழக்கமான நடைமுறை ஆகிவிட்டது.  பாதிக்கப்பட்டவர்களே இல்லாத, முடித்து வைக்கப்பட்ட வழக்கை, அந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரியை அதிரடியாக நீக்கி, தனிப்பட்ட இரண்டு நிறுவனங்களின் பணப்பரிமாற்றத்தை வழக்காக்க முடிவதற்குப் பெயர்தான் ‘பழிவாங்கும் அரசியல்’!

நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது:

இந்த ‘பழிவாங்கும் அரசியல்’ கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தை  ஸ்தம்பிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.  ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில்  நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து ஆதரவு திரட்டிய பாஜக. ‘சகிப்பின்மை‘ விவாதத்துக்கு ஒத்துக்கொண்டதன் மூலம் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற எதிர்க் கட்சியினரை அடக்கிவிடலாம் என நினைத்தது பாஜக அரசு. ஆனால் அது நடக்கவில்லை.  இந்த வழக்கில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வரும் 19-ஆம் நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் கண்டனத்தை பதிவு செய்வதன் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கியுள்ளனர்.

தன் மீதுள்ள குற்றச்சாட்டை நீதிமன்றத்தின் முன் பொய்யென நிரூபிக்க காங்கிரஸுக்கு ஏராளமான வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்க, இது இரண்டு நிறுவனங்களின் தனிப்பட்ட விவகாரம் என்று சொல்லிக் கொண்ட காங்கிரஸ் கட்சி,  தனிப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தை முடக்கப் பயன்படுத்தலாமா?

வெள்ளிக்கிழமை(11-12-2015) தினச் செய்தி நாளிதழில் இந்தச் செய்திக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியிருக்கிறது.

3 thoughts on “பழிவாங்கும் அரசியலின் பாஜக முகம் ‘நேஷனல் ஹெரால்டு’!

  1. நெருக்கடி காலத்திலிருந்தே இந்திரா குடும்பத்திற்கு கோர்ட் என்றல் அலர்ஜி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.