அப்ரூவரான டேவிட் ஹெட்லி: மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு வெளிவருமா?

2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26-ம் நாள் இந்தியாவை நிலைகுலைய வைத்த மும்பை தாக்குதலை நடத்த திட்டதீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர் டேவிட் கால்மென் ஹெட்லி என்கிற தாவூத் சயீது கிலானி. மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் இவர் “நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன், என்னை மன்னியுங்கள்” என்று தன் வழக்கறிஞர் மூலம் கேட்டிருந்தார்.  35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று தற்போது அமெரிக்கச் சிறையில் இருக்கிறார் ஹெட்லி.
இந்திய-பாகிஸ்தான் இடையே சுமூகப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில் ஹெட்லியின்  முடிவும் நீதிமன்றத்தின் முடிவும் பாகிஸ்தான் அரசை சற்றே திடுக்கிட வைத்திருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவருகிறது பாகிஸ்தான். அதோடு, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை திட்டமிட தன் மண்ணில் இடம் கொடுக்கிறது என பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டை வைக்கிறது இந்தியா. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க சிறையில் இருந்தபடியே விடியோ கான்ப்ரன்சிங் மூலம், நீதிமன்றத்தில் பேசிய ஹெட்லி, தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்பதாகத் தெரிவித்தார். மும்பை தாக்குதல் தொடர்பாக  11 குற்றச்சாட்டுகள் ஹெட்லி மீது பதிவாகியுள்ளன.
“அமெரிக்காவில் இதே குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை அனுபவித்துவருகிறேன். இந்தியாவில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறேன், என்னை மன்னித்து இந்தக் குற்றங்களிலிருந்து விடுவியுங்கள்” என்று அப்போது கேட்டார் ஹெட்லி. அதற்கு நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது.
ஹெட்லியின் மூலம் மும்பை தாக்குதலில் விடைதெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறது இந்தியா.  பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் நேரடியாக இந்தத் தாக்குதல் திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள் என்று இந்திய புலனாய்வுத் துறை ஏற்கனவே கண்டறிந்திருக்கிறது.  இந்நிலையில் மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தின் பங்கு என்ன என்கிற முடிச்சை ஹெட்லியின் வாக்குமூலம் அவிழ்க்கும் என் நம்புகிறது அரசு.
அதுபோல, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் பங்கு என்ன என்பதையும் ஹெட்லி சொல்வார் என எதிர்ப்பார்க்கிறது இந்திய அரசு. மும்பை மீது தாக்குதல் நடத்திய 10 பேருக்கு யார் பயிற்சி அளித்தார், குறிப்பாக லாகூரிலிருந்து கராச்சிக்கு பயணம் மேற்கொள்ள உதவியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு ஹெட்லியின் சாட்சியம் பதில் அளிக்கும் என நம்பப்படுகிறது.
மும்பை தாக்குதல் குறித்து புலனாய்வு செய்த பாகிஸ்தான் அரசு அதில் இந்தியாவால் குற்றம் சுமத்தப்பட்ட பலர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. குறிப்பாக லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, சஜித் மஜித், அப்துர் ரஹ்மான், மேஜர் இக்பால், ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த மேஜர் சமீர் ஆகியோர் பங்கை முற்றாக மறைத்தது பாகிஸ்தான்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளி ஒருவரே தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பது அவரை இதுவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹெட்லியின் வாக்குமூலங்கள் வெளிவரும் போது பாகிஸ்தான் – இந்தியா இடையே நிச்சயம் உறவுச் சிக்கல் தோன்றும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

டேவிட் ஹெட்லி யார்?
டேவிட் ஹெட்லி பாகிஸ்தானிய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர்.
2002 முதல் 2005 வரை பாகிஸ்தானுக்கு தீவிரவாத பயிற்சிகளுக்குச் சென்று வந்தார் ஹெட்லி. அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் உளவாளியாக இருந்த ஹெட்லி, பாகிஸ்தானுக்கும் உளவாளியாக இருந்தார்.
2006 ஆம் ஆண்டு தன்னுடைய தாவூத் கிலானி என்ற பெயரை டேவிட் ஹெட்லி என மாற்றிக் கொண்டார்.
2006-2008 வரை ஐந்து முறை மும்பை தாக்குதலை திட்டமிடும் பொருட்டு இந்தியாவுக்கு உளவு பார்க்க வந்திருக்கிறார் டேவிட் ஹெட்லி. லஷ்கர் இ தொய்பாவுக்காக
2009 ஆம் ஆண்டு இறைத்தூதர் முகமது குறித்த அவதூறு கார்டூனுக்காக டச்சு பத்திரிகை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முன் அக்டோபர் 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கட்டுரை சனிக்கிழமை(12-12-2015) தினச்செய்தி நாளிதழில் வெளியானது.

Advertisements

One thought on “அப்ரூவரான டேவிட் ஹெட்லி: மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு வெளிவருமா?

  1. டேவிட் ஹெட்லி பாகிஸ்தானிய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்தவரென்றால், கலிபோனியாவில் 14 பேரை கொன்று 17 பேரை காயபடுத்திய சயிட் பாருக் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானிய பெற்றோருக்கு அங்கேயே பிறந்தவர்!
    நல்ல பதிவு.தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.