அத்வானியைப் புறக்கணித்தவர்களுக்கு கீர்த்தி ஆசாத் எம்மாத்திரம்?

அரசியல் கட்சிகள் சில நேரங்களில் மூத்தத் தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்களை தூக்கியெறிவது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால், மோடி-அமித் ஷா பாஜகவின் அதிகார மையங்களாகிவிட்ட பிறகு பல மூத்தத் தலைவர்கள், நேர்மையான அரசியல்வாதி என பெயர் எடுத்தவர்களை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதன் பட்டியல் இதோ…

அத்வானி

மோடி தலைமைக்கு பாஜக பலிகொடுத்த மூத்தத் தலைவர் ‘ரத யாத்திரை’ புகழ் அத்வானி. பிரதமர் கனவில் இருந்த அத்வானியை ஓரங்கட்டி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் முழு பங்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பையே சாரும்.  மோடி போன்ற அதிரடியாளர்கள்தான் தற்போதை ‘இந்துத்துவ’ வளர்ச்சிக்குத் தேவை என்பது அவர்களுடைய கணக்கு. அதன்படி மோடியை முன்னிறுத்தினார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அத்வானிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அறை ஒதுக்குவதில் ஆரம்பித்து, அவரை ‘கார்னர்’ செய்தது மோடி தலைமை.  அத்வானியுடன் முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களுடைய ஆலோசனைகளை அமித் ஷா புறக்கணித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஜுன் மாதம் அத்வானி,

“ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கம் நாட்டில் மேலோங்கி இருக்கின்றன. அரசியல் சாசன பாதுகாப்பு வலுவாக இருப்பினும் கூட ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கமே வலுவாக இருக்கிறது. இப்போது உள்ள சட்டதிட்டங்கள் அவசர நிலையை தவிர்க்க போதுமானதாக இல்லை.

மீண்டும் அவசர நிலை ஏற்படாமல் தடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியுடைய அரசியல் தலைமை இந்தியாவில் இல்லை என நான் கூறவில்லை. ஆனால், அந்த தலைமைக்கு அத்தகைய சூழலை தடுக்கும் வலிமையில்லை என்பதே எனது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. எனவே, நாட்டில் மீண்டும் அவசர நிலை ஏற்பட வாய்ப்பில்லை என நான் முழுமையாக நம்பவில்லை” எனக் கூறியிருந்தார்.

அருண்சோரி

பாஜகவின் மற்றொரு மூத்தத் தலைவரான அருண் சோரி, “முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பலகீனமான பிரதமர் நாட்டை ஆள்வதாக நான் உணர்கிறேன். பொருளாதார நிர்வாகம் என்பதை இந்த அரசு தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பது என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை எல்லோரும் இப்போது நினைவு கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் காங்கிரஸ்+பசு என்பதாகவே உள்ளது. காங்கிரஸ் வழியிலேயே பாஜக அரசும் செயல்படுகிறது” என்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் அருண் சோரி.

மோடியை விமர்சிக்க ஆரம்பித்ததிலிருந்து, மோடி ஆதரவாளர்கள் தன்னை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிப்பதோடு, மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் மகனையும் கேலி செய்வதாக அருண் சோரி தெரிவித்தார்.

“இந்த நிகழ்ச்சியில் என் மீதும் என் மகன் மீதும் தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதல்கள் குறித்து பேச ஆரம்பித்தால், பார்வையாளர்கள் அதிர்ச்சியடைவார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்…‘அவருக்கு பைத்தியக்கார மகன் ஒருவன் இருக்கிறான். அவனைப் போல இவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது’. இத்தகைய முட்டாள்களை பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவராக இருக்கிறார்” என்று பேசினார்.

கீர்த்தி ஆசாத்

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் தலைமை பதவியில் இருந்தபோது ஊழல் செய்ததாக அருண் ஜேட்லி மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத்.  இதற்காக அவரைக் கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்துள்ளது பாஜக.இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கீர்த்தி ஆசாத்,“நான் செய்த தவறு என்ன? என்னை கட்சியில் இருந்து நீக்கி தண்டித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.  ஊழல் குறித்து பேசுவதும், உண்மை பேசுவதும் குற்றம் என்றால், அந்த குற்றத்தை தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

வன்முறையை தூண்டும் படியாக பேசுபவர்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு அரவணைத்துச் செல்லும் பாஜக, தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியவர்களை நீக்கம் செய்வதும் அவர்களை கட்சியில் ஓரங்கட்டுவதையும் செய்கிறது பாஜக.

சந்திரபாபு நாயுடுவை கலங்கடிக்கும் செக்ஸ் முறைகேடு!

செம்பரக் கட்டைக் கடத்தலை ‘பல’ யுத்திகளைக் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆட்டம் காண வைத்திருக்கிறது ‘கால் மணி’ முறைகேடு. அதென்ன கால் மணி?

பணம் தேவைப்படுவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தால் வீட்டிற்கே வந்து பணம் தருவார்கள்.  பணம் என்றால் சும்மா கிடையாது; வட்டிக்குத்தான். அதுவும் கந்துவட்டி போல பத்து வட்டி, பதினைந்து வட்டி அல்ல. மீட்டர் வட்டி! இருபது, முப்பது வட்டி. அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்தால் அதில் 30 ரூபாய் வட்டியாக பிடித்துக்கொள்வார்கள். கடனைத் திருப்பிச்செலுத்தும்போது அசலைவிட வட்டிதான் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆந்திராவின் பல பகுதிகளில் குறிப்பாக விஜயவாடாவில் இந்த கால் மணி மிகவும் பிரபலமானது.

இந்த விதத்தில் அவசரத்து பணம் வாங்கிய மக்கள், ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார்கள். இதில் ரூ. 2000கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

chandrababu naidu
இந்த முறைகேட்டில் மீட்டர் வட்டி மட்டும் பிரச்சினையல்ல…கடன் கட்ட முடியாதவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாக பெரும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. கால் மணி மூலம் ரூ. ஒன்றரை லட்சம் கடன் பெற்ற ஒரு பெண், ரூ. ஆறு லட்சத்தை கட்ட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதைக் கட்டத் தவறியதால் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப் பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் செய்தார்கள். கால் மணி முறைகேடு, செக்ஸ் முறைகேடாக மாறியது.

இதில் உச்சக்கட்ட விவகாரமே இந்த முறைகேட்டில் ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம் எல் ஏக்கள் ஈடுபட்டார்கள் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக வைக்கிறது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்.

கால் மணி முறைகேட்டை விசாரிக்க தனிப் படை அமைத்திருப்பதாக சொல்லியிருக்கும் சந்திரபாபு நாயுடு, வெள்ளிக்கிழமை ஆந்திர சட்டமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். சந்திரபாபு நாயுடுவின் கட்சி எம் எல் ஏக்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கும்போது எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்  நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா, சட்டமன்றத்தில் சந்திர பாபு நாயுடுவின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். இதற்காக ரோஜாவை ஒரு வருட காலத்துக்கு சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்தார் சபாநாயகர்.

வெளியே வந்த ரோஜா, “ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் எல்லாம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் தகுதியானவரே கிடையாது. இந்த செக்ஸ் முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுவும் அவருடைய மகனுமே சம்பந்தப்பட்டிருக்கும்போது, எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும்?” என அதிரடியாகப் பேசினார்.

மரக்கட்டைகளுக்காக அப்பாவித் தமிழர்களின் உயிரை துச்சமென நினைத்து அவர்களை சுட்டுக் கொல்வதற்கு ஆதரவாக இருக்கும் முதலமைச்சர், தன் சொந்த மக்களுக்கு மட்டும் அனுசரணையாக இருப்பார் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

தினச்செய்தி நாளிதழில் வெளியானது

அதிகரித்துவரும் சிறார் குற்றங்கள்: சிறார் நீதிச் சட்டம் திருத்தப்பட வேண்டுமா?

வழக்கு : 1

2012 -ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மதிப்பெண்கள் குறைத்தார் என்பதற்காக ஆசிரியைக் குத்திக் கொன்றார் ஒன்பதாம் வகுப்பு மாணவர். அவருக்கு சிறார் நீதிமன்றம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 2 ஆண்டுகள் இருக்க தண்டனை கொடுத்தது.

வழக்கு: 2

மிகவும் பேசப்பட்ட  நிர்பயா வழக்கு. 2013-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஜோதி பாண்டே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றவாளிகளில் அதிகபட்ச வன்முறையை ஜோதி மீது செலுத்தியது 17 வயதான சிறுவர் குற்றவாளி என்பது நிரூபணமானது. மற்ற அனைவருக்கும் தூக்கி தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறார் நீதிமன்றத்தில் 3 வருட தண்டனை பெற்றார் 17 வயது குற்றவாளி.

இந்த இரண்டு வழக்கிலும் குற்றவாளிகள் சிறுவர்கள்தான் முதன்மையான மற்றும் அதிகபட்சம் குற்றம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.  இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 18 வயதுக்குக் கீழானவர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்கள் சிறார் நீதிமன்றம் மூலமே விசாரிக்கப்படுவார்கள்.  சிறார் நீதிச் சட்டம் – 2000ன் படி, கொடிய குற்றம் புரிந்த சிறுவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இந்த மூன்று ஆண்டுகளும் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

’நிர்பயா’ வழக்குக்குப் பிறகு, சிறார் நீதி சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பேச்சு சமூகத்தில் வேகமாக எழுந்தது. வேறொரு கொலை வழக்கில் சிறார் என்ற காரணத்தைக் காட்டி தண்டனையை குறைக்க முனைந்த ஒருவரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட தீவிர குற்றங்களை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கலாமா என்பதை மறு ஆய்வு செய்யுமாறு  மத்திய அரசைக் கேட்டது.

2014-ஆம் ஆண்டு சிறார் தண்டனை பெறும் வயதை 18-லிருந்து 16 வயதாக குறைக்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள், அதிமுகவினர் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சிறார் நீதி சட்டத்தில் மாற்றம் வேண்டும். ஆனால் தண்டனை வயதை 18லிருந்து 16 ஆக குறைப்பதை ஏற்க முடியாது என்பதே இந்தச் சட்ட மசோதாவின் எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம்.

மத்திய குற்ற ஆவணக் காப்பகம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரில்  5 சதவிகிதம் சிறார் என்கிறது.  ஆண்டுக்கு ஆண்டு இந்த சதவிகிதம் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இந்தச் சிறார்களின் குற்றத்துக்கு 3 வருட தண்டனை என்பது போதுமானதல்ல என்பதே சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பவர்களின் வாதம். சிறார் குற்றங்களை பொது சட்டத்தின் மூலம் தண்டிக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளில் சிறுவர் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

தூக்குதண்டனைகளால் குற்றங்கள் குறைந்துவிடுவதில்லை என்பதைப் போல சிறார் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது குற்றத்தை குறைத்துவிடாது என்பது சமூக செயல்பாட்டாளர்களின் கருத்து.  இவர்கள் முன் வைக்கும் முக்கியமான காரணம், சிறார் குற்றவாளிகள் உருவாக்கப்படுவதற்கான சமூகக் காரணிகளை கண்டறியுங்கள் என்பதே.
முதல் வழக்கை எடுத்துக் கொள்வோம். இந்த வழக்கில் குற்றம் செய்த சிறுவன், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மதிப்பெண்களை முன்வைத்து சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் அவனுடைய குடும்ப-சமூக சூழல்தான் அவனைக் குற்றவாளி ஆக்கியிருக்கிறது.

இரண்டாவது வழக்கில் கோடூர குற்றங்கள் செய்த சிறுவன், குழந்தை பருவம் முதலே பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியிருக்கிறார், மனதளவில் அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பழிவாங்கும் விதமாக அபலையாக தன்னிடம் சிக்கிய ஜோதி பாண்டே மீது செலுத்தியிருக்கிறார்.

குற்றவாளிகளாக்கப்படும் சிறார்களின்  பெரும்பாலான பின்னணிச் சூழல் வறுமையும் சுரண்டலும் நிறைந்ததாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தண்டனை பெற்று தங்களை சீர்திருத்திக் கொள்ள அனுப்பப்படும் சிறார் சீர்திருத்தப் பள்ளிகளின் நிலைமை படுமோசமாக இருக்கின்றன என்பதை  இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன என்றும் அந்த இடங்களை வரும் ஜனவரிக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. சீர்திருத்தப் பள்ளிகளில் அடிக்கடி சிறுவர்கள் தப்பிச் செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

அவர்களை கவனித்துக் கொள்ளவே ஆட்கள் இல்லை என்னும் போது அவர்களை பண்படுத்தும் சீர்திருத்தும் நடவடிக்கைகள் எந்த வகையில் சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. கொலை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் செய்த சிறார்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை நீட்டிக்க வேண்டும். சீர்திருத்தப் பள்ளிகளுக்கான பண்படுத்தும் நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குற்றங்களுக்கு காரணமான சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நடவடிக்கைகளை அரசு தொலைநோக்கோடு திட்டமிட வேண்டும். இவைதான் சிறார் குற்றங்களை குறைக்கும்; கடுமையான சட்டங்கள் அல்ல!

மஃபளர் மேனை கதறவைத்த சிபிஐ!

‘மஃப்ளர் மேன்’ அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி வந்துகொண்டிருக்கிறது. இந்த முறை மனிதர் நிதானத்தை இழந்து “மோடி ஒரு கோழை, மனநோயாளி” எனப் பொரிந்து தள்ளிவிட்டார். மத்திய அரசின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமான டெல்லிக்கு முதல்வராக பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்தாலும், முழு அதிகாரமும் மத்திய அரசின் கையில்தான். டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து தருவோம் என்று வாக்குறுதி தந்தார் பிரதமர் மோடி.  பாஜக படுதோல்வி கண்டது.  தனி மாநில அந்தஸ்து விவகாரம் வரும்போதெல்லாம் அதைப் பற்றி பரிசீலிப்பதாகச் சொன்னது மத்திய அரசு.

மத்தியில் பெரும் வெற்றி கண்ட மோடி, முதல் படுதோல்வியாக டெல்லி தேர்தல் அமைந்துவிட்டது. புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பெரும்பான்மை பலம் பெற்று விட்டதும் பாஜகவை அசைத்தது உண்மை. அந்த அசைவை நிமிர்த்தும் பொருட்டு, டெல்லியின் அதிகாரம் என்ற கடிவாளத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள விரும்புகிறது மத்திய அரசு.
டெல்லியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை, டெல்லி மாநில அரசின் பரிந்துரையைப் பெறாமல் தானாகவே நியமித்தது மத்திய அரசு. கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் நிழல் யுத்தம் ஆரம்பமானது இங்கேதான். இந்தச் செயலுக்கு மோடியின் தலைமையிலான பாஜக அரசை நேரடியாகத் தாக்கினார் கெஜ்ரிவால்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் மோடி வாயைத் திறந்து பேசவில்லை. அவருடைய அமைச்சரவை சகாக்களே பதில் சொன்னார்கள். துணை நிலை ஆளுநரை நியமிக்க மத்திய அரசுக்கு சட்டப் பூர்வமான அதிகாரம் உள்ளதென தெரிவித்தார்கள்.  டெல்லி போலிஸ் தன்னுடைய தினசரி அறிக்கைகளை ஆளுநரிடம் சமர்பித்தது.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், அரவிந்த கெஜ்ரிவாலின் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர்,  மோசடி கல்விச் சான்றுதழ் அளித்தார் என்பதற்காக டெல்லி காவல்துறை அவரைக் கைது செய்ய அலையோ அலையென்று அலைந்தது. இதே குற்றச்சாட்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது இருந்தும், அது ஏதோ கிணற்றில் போட்ட கல்லாக எந்த நடவடிக்கைக்கும் இல்லாமல் கிடக்கிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கி சர்ச்சையை இல்லாமல் ஆக்கினார். தன்னுடைய அரசு எல்லா தடைகளையும் தாண்டிசிறப்பாக நடத்திப் படுவதாக விளம்பரங்களில் வெளியிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்குயபோது இணைந்திருந்த பிரசாந்த் பூஷனும், யோகேந்திர யாதவும் கட்சியை விட்டு விலகினார்கள். பாஜக கடுமையாகத் தாக்கிய போது கட்சியை, தன்னை காத்த இவர்களுடைய இழப்பு பேரிழப்புதான் என்பதை கெஜ்ரிவால் உணராமல் இல்லை. இருந்தாலும் தனிமனிதனாக கட்சியைத் தாங்கி நின்றார்.

கூட்டத்திலிருந்து விலகிய ஆடுகளை வேட்டையாடுவது பெரிய விலங்குகளுக்கு எளிதானது. அதே யுத்தியைக் கையாள்கிறது பாஜக.  சமீபத்தில் டெல்லியில் அரசு நிலத்தில் ஆக்ரமித்திருந்த குடிசைகளை அகற்றுவது குறித்து டெல்லி அரசு-மத்திய அரசு-காங்கிரஸிடையே கடும் வார்த்தை போர் நடந்தது.  இதற்கு அடுத்தடுதடுத்த நாளில் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் பேரில் எழுந்த குற்றச்சாட்டுக்காக டெல்லி போலீஸ் அல்ல, சிபிஐயே நேரடியாக டெல்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டது.
தன்னை அரசியல் ரீதியாக எதிர்க்க திராணி இல்லாமல் தன்னுடைய அலுவலகத்தை சிபிஐ சோதனைக்கு உட்படுத்தியதன் மூலம் பாஜகவும் மோடியும் பழிவாங்கப் பார்க்கிறார்கள் என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார் கெஜ்ரிவால். இதன் உச்சம்தான் மோடியை கோழை, மனநோயாளி என்று பேசியது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தபோது, அருண் ஜேட்லி ‘முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடக்கவில்லை. முதல்வர் அலுவலகத்தின் அருகில் உள்ள அறையில்தான் சோதனை நடந்தது’ என்று விளக்கினார். இந்த விளக்கத்தை கசக்கி எறிந்த கெஜ்ரிவால் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி புளுகுகிறார் என்று ட்விட்டினார்.

இந்த விவகாரங்கள் பற்றி, அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் சகாவும் சட்ட வல்லுநருமான பிரசாந்த் பூஷண் இப்படிச் சொல்கிறார்…“முதன்மைச் செயலாளர் குற்றம் செய்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவருடைய குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்பே குற்றவாளியைத் தப்பவிடும் வகையில் அதிரடி சோதனைகளை சிபிஐ செய்தது நகைப்புக்குரியது. அதேபோல கெஜ்ரிவால் இந்த அளவுக்கு கதற வேண்டிய அவசியமும் இல்லை!”

தினச்செய்தி(16-12-2015) நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை.

 

மீண்டும் நீதி கேட்கிறார் நிர்பயா!

நிர்பயாவை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. டிசம்பர் 16-ஆம் தேதி 2012ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பேருந்திலிருந்து வீசியயெறியப்பட்டவர். வழிபோக்கர்கள் அவரை காப்பாற்றினர்.  படுபயங்கரமாக சிதைந்துபோன அவருடைய பால் உறுப்புகளும் அதனால் ஏற்பட்ட இரத்த இழப்பும் மருத்துவசிகிச்சையால் சரியாக்க முடியாத நிலைமைக்கு அவரைத் தள்ளின. நிர்பயா இறந்துபோனார்!

‘பயமற்றவள்’ என்று பொருள்படி ஜோதி பாண்டேவுக்கு ‘நிர்பயா’ என்கிற பெயர் (பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அவருடைய அல்லது அவருடைய குடும்பத்தாரின் அனுமதியின்றி பொதுவெளியில் சொல்லக்கூடாது என்பது சட்டம்) வைக்கப்பட்டது. “என் மகள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர் தன் மீது திணிக்கப்பட்ட குற்றத்துக்கு எதிராகப் போராடித்தான் தன் உயிரை இழந்திருக்கிறாள். எனவே, அவள் பெயரைச் சொல்வதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை” என்றார் அவருடைய தந்தை.  என்றாலும் இந்தியாவில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கான உச்சபட்ச அறிவுறுத்தலாக  ‘நிர்பயா’ என்கிற பெயர் இருக்க வேண்டும் என்றே  அரசும் சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் இந்தப் பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் குற்றம் நடந்த அடுத்த 24 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன். சிறைச்சாலையில் ஒரு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுவனைத் தவிர மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 18 வயதானவர்களுக்குத்தான் தண்டனைத் தர முடியும். 17 வயது 5 மாதங்களுமான சிறுவனுக்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி அங்கே அவன்  மூன்று வருடங்கள் தண்டனையை கழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது.  இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் மற்றவர்களுக்கு கிடைத்த மரண தண்டனை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு சிறந்த பாடமாக இருக்கும் என மக்கள் அதை வரவேற்றார்கள்.

இந்தியாவின் எந்தவொரு மூலையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலும்  நம் நினைவில் வந்துபோனார் நிர்பயா.  தற்போது மீண்டும் செய்தியாகியிருக்கிறார் நிர்பயா. இந்த முறை மீண்டும் தன்னுடைய நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.  நிர்பயா வழக்கில் மிகக் கொடூரமான குற்றவாளி வேறு யாருமல்ல, அந்த 17 வயது சிறுவன்தான்.  தன்னுடைய மூன்று வருட தண்டனைக் காலத்தை முடித்துக்கொண்டு டிசம்பர் 16-ஆம் தேதி சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவன் இளைஞனாக வெளிவருகிறார்.
பாலியல் வன்கொடுமை என்பதையும் தாண்டி, நிர்பயாவை இரும்புக் கம்பியால் பாலியல் உறுப்புகளில் தாக்கியது, உடலெங்கும் கடித்து காயத்தை ஏற்படுத்தியது போன்ற மிக மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்தது இந்த 17 வயது சிறுவனே. இந்நிலையில் எப்படி அவனை வெளியே சுதந்திரமாக விடலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

உள்துறை அமைச்சகம், அந்த இளைஞனிடம் இனி ஒழுங்காக நடந்துகொள்வேன் என கையெழுத்து வாங்கிக்கொண்டும் விடுதலை செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விடுதலைக்குப் பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் அங்கேயே தங்க வைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகிவருகிறது.

சிறு வயதில் பாலியல் ரீதியாக அவன் துன்புறுத்தப்பட்டதால்தான் நிர்பயாவிடன் அப்படி நடந்துகொண்டான் என குற்றவாளியின் வழக்கறிஞர் சொல்கிறார்.
இந்திய தண்டனைச் சட்டப்படி தண்டனை பெறும் வயதை 18லிருந்து 16ஆக குறைப்பது குறித்து விவாதங்கள் எழுந்துவருகின்றன.  16 வயது என்பது மனித வாழ்நாளின் மூன்றில் ஒரு பகுதி. 16 வயதில் தண்டனை பெற்ற ஒருவன் மீதி உள்ள தன் வாழ்நாளில் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என்பதாலேயே கடுமையான தண்டனை பெறும் வயதை 18 ஆக வைத்திருக்கிறார்கள்.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உள்ள மனிதநேய கண்ணோட்டத்தோடு, மிகக் கொடூரமான இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களை மிக சொற்ப தண்டனையுடன் வெளியே சுதந்திரமாக வெளியே விடுவது நல்ல முன்னுதாரணமாக முடியாது.  மூன்று வருட தண்டனை என்பதை அதிகப்படுத்தும் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும்.  ஏனெனில் சமீபகாலமாக சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இவர்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் மிகக் கொடூர மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இவர்களை அதிகபட்ச தண்டனை வரம்புக்குள் கொண்டுவரவிட்டாலும் குறைந்தபட்ச தண்டனை இவர்கள் செய்த குற்றங்களுக்கு ஒருபோதும் நீதி பெற்றுத்தராது என்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள்.

“அவன் சுதந்திரமாக வெளியே வந்தால், எங்களுக்கு எப்படி நீதி கிடைத்ததாக சொல்லிக் கொள்ள முடியும்? அரசு அவனை வெளியே விட்டால், மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். இது போன்ற கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடும் இவன் வயதில் உள்ளவர்களுக்கு தவறான செய்தியைத்தான் அரசு சொல்லப் போகிறதா?” என்று தன் மகளுக்கு நீதி கேட்கிறார் நிர்பயாவின் தாய்.

நீதி மீண்டும் அரசின் கைகளில்!

தினச்செய்தி(13-12-2015) நாளிதழில் வெளியான கட்டுரை.