மத போதகருக்கு மொட்டையடித்து, கழுதையில் ஏற்றி ஊர்வலம்: கிறித்துவர்களை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்!

ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் 2008-ஆம் ஆண்டு கிறித்துவர்களின் மதமாற்றத்தை தடுப்பதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் தூண்டிவிட்ட கலவரம் மறக்கக் கூடியதல்ல.  இந்தக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டதும் 50 ஆயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானதும் நடந்தது.  அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் பிரதமர் மன்மோகன் சிங், ‘நாட்டின் அவமானம்’ என்று இதை சொல்லியிருந்தார்.

இந்து மதத்தின் தனித்துவத்தை காப்பாற்றும் பொருட்டு, பழங்குடி மக்கள் கிறித்துவ மதத்துக்கு தாவுவதை தடுக்கும் வகையில் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாமியார்கள் இதை முன்னின்று நடத்தினர். இந்த சம்பவங்களுக்கெல்லாம் முன்னோடியாக 1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இருமகன்களுடன் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது எரித்துக் கொல்லப்பட்டார். இதைச் செய்தது விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த தாராசிங் என்பவர்.

இந்தச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை கிறித்துவ போதகர் ஒருவர் மிகக் கடுமையான முறையில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். பாதி மழித்த மீசை, பாதி மழித்த தலைமுடி, புருவ முடியும்கூட பாதி மழிக்கப்பட்டநிலையில், செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு கழுதையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவரை இப்படி ஊர்வலமாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்கள் அழைத்துச் சென்றனர்.
பஜ்ரங் தள் அமைப்பினர் போதகர் மேல் குற்றச்சாட்டு, மூன்று இந்துக்களை ஏமாற்றி கிறித்துவர்களாக மதம் மாற்றி அவர்களை மாட்டிறைச்சி உண்ண வைத்தார் என்பதே. மாட்டிறைச்சியை வேண்டுமென்றே உண்ண வைத்தார் என்று இவர்கள் அழுத்தம் சேர்த்துக் கொள்கின்றனர்.

தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் அதைப் பற்றி போதனை செய்யவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமையாக வரையறுக்கிறது. இந்நிலையில் மதத் தூய்மைவாதம் பேணுகிறோம் என்கிற பெயரில் இந்துத்துவ அமைப்புகள், அடிப்படை உரிமைகளை பறிக்கும்வகையிலும் மனிதத் தன்மையற்ற முறையிலும் இத்தகைய செயல்களைச் செய்கின்றன. உபியில் மனிதத்தன்மையற்று போதகரிடம் நடந்து கொண்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2015-ஆம் ஆண்டில் மட்டும் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் எதிராக 600க்கும் மேற்பட்ட வன்முறைகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இந்த வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த விவரம் சொல்கிறது. கிறித்துவர்களுக்கு எதிராக மட்டும் 149 வன்முறைச் சம்பவங்கள். இதில் கொல்கத்தாவில் 70 வயது கன்னிகாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடங்கும்.

பெரும்பாலும் முஸ்லிம்களை குறிவைத்தே அரங்கேறிய வன்முறை சம்பவங்கள், இப்போது கிறித்துவர்களை நோக்கி படர ஆரம்பித்துள்ளன. மவுனப் பிரதமராக பெயர் பெற்ற மன்மோகன் சிங், மத வெறியாட்டங்களைப் பார்த்துக்கொண்டு எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனால், அக்லக் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரமாகட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு வன்முறையாகப்பட்டும் இன்றைய பிரதமர் மோடி, வாயைத் திறக்காமல் மவுனம் காக்கிறார். இந்த மவுனம்தான் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு வன்முறையை அவிழ்த்துவிட சம்மதமாகத் தெரிகிறதோ என்னவோ?!

தினச்செய்தி(31-01-2016) நாளிதழில் வெளியானது.

கலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா?

விதைகளே பேராயுதம்
– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்

மாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட்ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.

காய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா? என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

மரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு? தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை  சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.

பசுமைப் புரட்சியின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் மிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.

சென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.

ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது.  இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.

நெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.

பாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றார்.

கலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத்து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.

விவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.

பக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.  இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் கொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.

சுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம்.  வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.

இத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களுக்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா? என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.

இந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.

சுபாஷ் சந்திர போஸை முன்வைத்து அமித் ஷா-மோடியின் அரசியல்!

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான வரலாற்றில் மர்மமாக நீடிப்பவர் சுபாஷ் சந்திர போஸ். சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்துவிட்டாரா அல்லது இன்னமும் வாழ்கிறாரா என்பதை புனைகதைகளை விஞ்சும் புதிய புதிய கதைகள் மூலம் திரும்ப திரும்ப ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.  இதில் அவரவர் கட்சி சார்ந்து அரசியல் செய்வதற்கு சுபாஷ் சந்திர போஸ் உதவிக் கொண்டிருக்கிறார் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் சந்திர போஸின் குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி, சந்திர போஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அவருடைய அறிவிப்பு வெளியான அடுத்த மாதமே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  மாநில அரசிடன் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் பார்வைக்கு விட்டார்.  மேற்கு வங்க தேர்தலை ஒட்டி மாநிலத்தில் கணிசமாக உள்ள ‘போஸ்’ வகுப்பினரின் ஓட்டுக்களை கவரும் உத்தியுடனே பிரதமரும் மாநில முதலமைச்சரும் கணக்குப் போட்டார்கள். இதில் திதி முந்திக்கொண்டார்.

மம்தா வெளியிட்ட ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சையைத் தீர்த்து வைத்ததா? அதுதான் இல்லை. இங்கு சர்ச்சையே இல்லை. தெளிவான ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் செல்லும் வழியில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தைபெய்யில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தார் என்று தெரிவித்தன.  ஆனாலும் ‘புனைகதை மன்னர்கள்’ சுபாஷின் மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இல்லை.
பிரதமர் வெளியிடவிருக்கும் ஆவணங்களுக்காக காத்திருந்தார்கள். நடுவில் இங்கிலாந்து இணையதளம் ஒன்று, சுபாஷ் சந்திர போஸின் மரணம் விமான விபத்தில் நேர்ந்தது என ஆதாரங்களுடன் சொன்னது. போஸின் மரண சர்ச்சை ஒருவகையில் முடிவுக்கு வந்ததற்கான அமைதி நிலவியது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 23-ஆம் தேதி போஸின் பிறந்த தினத்தில் தேசிய ஆவணக் காப்பகத்தின் மூலம் போஸ் குறித்த இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிட்டார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டு காலமும் இந்தக் கோப்புகளை ரகசியமாக காங்கிரஸ் அரசு பேணி வந்ததற்கு காரணம் இருந்தது. பிரபல வரலாற்று அறிஞர்களும்கூட இந்த ரகசிய ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. காரணம், போஸ் குறித்து முதல் பிரதமர் நேருவின் கருத்துக்களும் கடிதப் பரிமாற்றங்களும்கூட அதில் இருந்தன என்பதே.

நேருவும் போஸும் இரு வேறு துருவங்களாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்டவர்கள். இங்கிலாந்துடன் போர் புரிவது ஒன்றே இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்று ஆயுதம் ஏந்தி, ஜெர்மன் கொடுங்கோலர் ஹிட்லரின் உதவியை நாடினார் போஸ். நேருவின் பாதை, காந்தி முன்னிறுத்தி இருந்தது.  எனவே, இவர்களுக்கிடையே விமர்சனங்கள் கடுமையானதாக இருந்திருக்கலாம். இந்த ஆவணங்கள் வெளியே வந்தால் அவை சர்ச்சைகளைக் கிளப்பும் என காங்கிரஸ் அரசு நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இதை அரசியலாக்க முயற்சித்தது. அதன் வெளிப்பாடே போஸ் ஆவணங்களை வெளியிடும் முடிவு. இந்திய அரசுக்கு நன்றாகத் தெரியும், போஸ் மரணம் விபத்தினால் ஏற்பட்டதுதான் என்பது. ஆனால் அவரது மரண சர்ச்சையை முன்வைத்து, நேரு-போஸ் கடிதங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதே பாஜக அரசுக்கு இருந்த உள் அரசியல். அதன்படி ஆவணங்களும் வெளியிட்டாகிவிட்டது.

ஆனால், ஆதாயம் கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை. நேரு எழுதியதாக வெளியிட்ட ஒரு கடிதம், போஸ் ஒரு போர்க் குற்றவாளி என நேரு சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கு எழுதப்பட்டதாகவும் அதை இந்திய பிரதமராக இருந்த நேரு எழுதியதாகவும் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் வெளியாகியிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட காலம் 1945 என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகே, நேரு பிரதமரானார். ஆனால், அந்தக் கடிதம் 1945-ஆம் ஆண்டு நேரு பிரதமர் என்பதாக உள்ளது.
இத்தனை ஓட்டைகளுடன் இந்த ஆவணம் ஆவணக் காப்பகத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்ததா என்றும், ஆங்கிலப் புலமை பெற்ற, நேரு இத்தனை தவறுகளுடன் கடிதம் எழுதினாரா என்பதும் வரலாற்று அறிஞர்களிடம் நகைப்பை உண்டாக்கியிருக்கிறது.  போட்டோஷாப்புக்கு புகழ்பெற்ற மோடி அரசின் புகழ் போஸின் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களில் முழுமையடைந்திருப்பதாக சமூக ஊடகங்கள் பகடி செய்கின்றன.
இந்நிலையில்  இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது மேற்கு வங்க தேர்தல் முடியும் வரை இந்த ரகசியக் கோப்புகள் வெளிவரும் என நம்பலாம். ஆனால், ரகசிய கோப்புகளை மட்டும் நம்பக்கூடாது!
கொசுறு:  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர் சந்திரா போஸ் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் போஸ் பற்றுக்கும் இந்த இணைவிற்கும் ஏதும் தொடர்பில்லை என நம்புவோமாக!

ரோகித் வேமுலா: இந்திய மாணவர் சமூக எதிர்கொள்ளும் சவால்களின் அதிர்ச்சி குறியீடு!

மாணவர்களின் கல்விச்சூழல் பல்வேறு தளங்களில் பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. தனியார்மயம், உலகமயம் இவற்றுக்கு இடையே அரசு உதவிகளை நம்பியே தங்களுடைய கல்வியைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களின் உதவித் தொகையை-இடஒதுக்கீட்டை ரத்து செய்ய காத்திருக்கும் அரசு நிர்வாகம் என முக்கிய பிரச்சினை எழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பாஜக தலைமையில் மத்தியில் புதிய அரசு அமையும் என்று எதிர்பார்ப்பு எழுந்த காலக்கட்டத்திலேயே அதனுடன் தொடர்புடைய காவி அமைப்புகளின் ‘எழுச்சி’யும் தொடங்கிவிட்டது. பிரபல வரலாற்றாசிரியர் வெண்டி டொனிகர் எழுதிய இந்துக்கள் தொடர்பான புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அதை விற்பனையில் இருந்து மீளப் பெற வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது, பாஜகவின் மாணவர் அமைப்பான ‘அகில பாரதிய வித்யா பரிஷத்’. ஒரு மாணவர் அமைப்புக்கு பயந்து, பதிப்புத்துறையில் ஜாம்பவானாக இருக்கும் ஒரு பதிப்பகம் பிரபல ஆசிரியரின் புத்தகத்தைத் திரும்பப் பெற்றதை, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதற்காக குறியீடாக அப்போது அதை யாரும் கணிக்கவில்லை. தற்போது இந்திய மாணவர் சங்க அமைப்புகளிலே மிக வலுவான அமைப்பாக வளர்ந்து நிற்கிறது அகில பாரதிய வித்யா பரிஷத். இந்த அபார வளர்ச்சிக்கு தற்போதைய பலியே ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா!

இந்த நேரத்தில் அகில பாரதிய வித்யா பரிஷத்தின் அரசியல் குறித்து சொல்வது அவசியமாகிறது. ஆர்.எஸ். எஸ் கொள்கைகளை அரசியல் கட்சியாக முன்னெடுக்க பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. கட்சி அரசியலில் மாணவர்களின் ஈடுபாடு என்பது மிகக் கணிசமான அளவில் உள்ளது என்றபடியாலும், தலித்-கம்யூனிஸ்ட்-பகுத்தறிவு இயக்கங்களின் செல்வாக்கை மாணவர் மத்தியில் தகர்க்கும் வகையிலும் செயல்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ‘மாணவர் முகம்’ தேவைப்பட்டது. அதை நிறைவேற்றும் பொருட்டு பணிக்கப்பட்டதே ‘அகில பாரதிய வித்யா பரிஷத்’. மாணவர்களின் நலனுக்காக போராடும் இயக்கம் என மேம்போக்காக சொல்லிக் கொண்டாலும் இந்த இயக்கத்தின் முதன்மையான செயல்பாடு இந்துத்துவத்தை வளர்த்தெடுப்பதே ஆகும். குறிப்பாக அறிவியலுக்கு தொடர்பட்ட புராணக் கதைகளில் அறிவியல் இருப்பதாக கருத்தரங்கம் நடத்துவது, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துபவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்துவது போன்றவை இவர்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்தச் செயல்பாடுகளைத் தாண்டி, பகுத்தறிவு பேசும் மாணவர் இயக்கங்களை ஒடுக்குவதுதான் இந்த அமைப்பின் முக்கியச் செயல்பாடு. புனே திரைப்படக் கல்லூரியில் 2013-ஆம் ஆண்டு ‘ஜெய் பீம் காம்ரேட்’ என்ற ஆவணப்பட திரையிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதே ஆண்டில் காஷ்மீர் குறித்த ஆவணப்படத்தை திரையிட இருந்த ஹைதராபாத் பல்கலைக்கழக அரங்கத்துக்குள் புகுந்த இந்த அமைப்பினர், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இந்தப் பின்னணியில் ஹைதராபாத் பல்கலையில் உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடந்த கலவரத்தின் பின்னணியில் ஆர்,எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் பங்கை வெளிச்சமிட்டுக் காட்டிய ‘முசாஃபர் நகர் பக்கி ஹை’ என்ற ஆவணப்படத்தை திரையிட்டது மாணவர்களின் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பில் ரோகித் வெமூலா உள்ளிட்ட ஐந்து தலித் மாணவர்கள் இருந்தனர். இந்த ஆவணப்படத் திரையிடலைத் தடுக்கும் வகையில் அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பு, ஏற்பாட்டைச் செய்த மாணவர்கள் மீது வன்முறையை ஏவியது. ஆனால், பல்கலை நிர்வாகம் இந்த அமைப்பு ஆதரவாக இருந்ததால், தாக்குதலை நடத்தியவர்களிடமே தலித் மாணவர்களை மன்னிப்புக் கேட்க வைத்தது. அதுவும் போதாது என்ற இந்த அமைப்பின் அழுத்தத்தால் இந்த மாணவர்களின் உதவித் தொகை நிறுத்தப்பட்டது; பல்கலை மாணவர் விடுதியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர்.

பலமுறை தலித் மாணவர்கள் தங்களுடைய நியாயங்களைச் சொல்ல முற்பட்டும் பல்கலைக் கழக நிர்வாகம் காதுகொடுத்து கேட்கவில்லை. பல்கலைக் கழகம் கட்டுப்படுத்தும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேரடியாக கடிதம் எழுதியதும், அதற்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உடனடி எதிர்வினையும், தலித் மாணவர்களின் மீது மேலும் அழுதத்தையும் புறக்கணிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இடத்தில் சென்னை ஐஐடி, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் மீதான தடையை ஒப்பிடலாம். ஆனால், தமிழகத்துச் சூழல், மாணவர்களை இத்தகைய ஒடுக்குதலுக்கு ஆளாக்காமல் தடுத்தது என்பதையும் சொல்ல வேண்டும்.

தினச்செய்தி நாளிதழில்(20-1-2016) வெளியான கட்டுரை

இந்திய – இலங்கை உறவு பிராந்திய நலனுக்காகவா? மோடி நண்பர்களின் நலனுக்காகவா?

இலங்கை போரின் இறுதிக் காலக்கட்டங்களில் இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் என தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தனர் விடுதலை புலிகள்.  போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகே பாஜக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.  ஆனால், காங்கிரஸ் அரசைக் காட்டிலும் பாஜக அரசு இலங்கையுடன் நெருக்கம் காட்டி வருகிறது. பாஜக அரசு இலங்கை அரசுடன் கைக்கோர்ப்பதற்கான காரணங்கள் ஏராளமாக உண்டு. தேசிய நலன் என்பதைக் காட்டிலும் பாஜக அரசு தன்னுடைய தனிப்பட்ட பலன்களுக்காக இலங்கையுடன் நெருக்கமான உறவைப் பேண நினைக்கிறது.

இலங்கையின் தமிழர் வசிக்கும் பகுதிகளில் ஆர் எஸ் எஸ், போருக்குப் பிறகான சீரமைப்புப் பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பெயரில் ஆழமாக காலூன்றி இருக்கிறது. தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்ளும் பாஜக எம்பி தருண் விஜய், இந்துசமய நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்கிறார். யாழ்பாண பல்கலையில் இந்து சமய இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். அதுபோல புத்த பல சேனா போன்ற அடிப்படைவாத புத்தமத இயக்கங்களுடன் ஆர் எஸ் எஸ் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக போருக்குப் பிறகு, இலங்கையின் தொழிற்துறையில் திறந்துவிடப்பட்டுள்ள வாய்ப்புகளை இந்திய தொழிலதிபர்களுக்குப் பெற்றுத்தருவதில் மோடி அரசு முனைப்பாக இருக்கிறது. இதே கண்ணோட்டத்துடன் தனக்கிருக்கும் வர்த்தக லாபங்களுக்காக இந்தியாவின் உறவை வலிமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறது இலங்கை அரசு.

கடந்த ஆண்டு, மோடியின் இலங்கை பயணத்தின் போது, “டயர் உற்பத்தி, இருசக்கர, மூன்று சக்கர வாகன உற்பத்திகளில் இந்தியா-இலங்கை கூட்டு வர்த்தகத்தின் மூலம் இலங்கையின் போருக்கு பின்னான பொருளாதாரத்தில் உடனடியான பலனை பெற முடியும்” என்று இலங்கையின் மைய வங்கியின் கவர்னர் சொன்னார்.  இலங்கையுடன் இந்தியாவின் வர்த்தக உறவு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது முன்னிலையில்தான் இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கிடையே 2014-ஆம் ஆண்டு  4.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. வர்த்தக அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகும் என்பதே அரசு மற்றும் வர்த்தக துறையினர் எதிர்பார்ப்பு.

இந்த நிலையில், கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். இலங்கை ராணுவத்துக்கு போர் விமானங்கள் வாங்குவது உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என இலங்கை-பாகிஸ்தான் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. ஆனால், அதே சமயத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையோர பதன்கோட் பகுதியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் இந்த ஒப்பந்தங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘விடுதலை புலிகளுடம் போர் முடிந்துவிட்ட சூழலில் இராணுவ விமானங்கள் வாங்குவதற்கு ஏன் பெரிய தொகையை செலவழிக்க வேண்டும்?’ இந்தியா வாய்மொழியில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 400மில்லியன் டாலர் மதிப்பிலான ஜெ எஃப் 17 ரக விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக இலங்கை ரத்து செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சீனாவின் தொழிற்நுட்பத்தில் தயாரான இந்த விமானங்கள் பாகிஸ்தானின்  காம்ரா விமான கட்டுமான நிலையத்தில் ஒன்றிணைக்கப்பட்டவை(மேன் இந்தியா போல, மேன் இன் பாகிஸ்தான்). இலங்கையில் பாகிஸ்தான், சீனாவின் மேலாதிக்கத்தை தடுக்கவே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக் கூறுகிறது. சீன-பாகிஸ்தான் மேலாதிக்கத்தை தடுக்கவா அல்லது  அனில் அம்பானி போன்ற இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் மோடியின் நண்பர்களின் வர்த்தக நலனுக்காகவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!