ரோகித் வேமுலா: இந்திய மாணவர் சமூக எதிர்கொள்ளும் சவால்களின் அதிர்ச்சி குறியீடு!

மாணவர்களின் கல்விச்சூழல் பல்வேறு தளங்களில் பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. தனியார்மயம், உலகமயம் இவற்றுக்கு இடையே அரசு உதவிகளை நம்பியே தங்களுடைய கல்வியைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களின் உதவித் தொகையை-இடஒதுக்கீட்டை ரத்து செய்ய காத்திருக்கும் அரசு நிர்வாகம் என முக்கிய பிரச்சினை எழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பாஜக தலைமையில் மத்தியில் புதிய அரசு அமையும் என்று எதிர்பார்ப்பு எழுந்த காலக்கட்டத்திலேயே அதனுடன் தொடர்புடைய காவி அமைப்புகளின் ‘எழுச்சி’யும் தொடங்கிவிட்டது. பிரபல வரலாற்றாசிரியர் வெண்டி டொனிகர் எழுதிய இந்துக்கள் தொடர்பான புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அதை விற்பனையில் இருந்து மீளப் பெற வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது, பாஜகவின் மாணவர் அமைப்பான ‘அகில பாரதிய வித்யா பரிஷத்’. ஒரு மாணவர் அமைப்புக்கு பயந்து, பதிப்புத்துறையில் ஜாம்பவானாக இருக்கும் ஒரு பதிப்பகம் பிரபல ஆசிரியரின் புத்தகத்தைத் திரும்பப் பெற்றதை, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதற்காக குறியீடாக அப்போது அதை யாரும் கணிக்கவில்லை. தற்போது இந்திய மாணவர் சங்க அமைப்புகளிலே மிக வலுவான அமைப்பாக வளர்ந்து நிற்கிறது அகில பாரதிய வித்யா பரிஷத். இந்த அபார வளர்ச்சிக்கு தற்போதைய பலியே ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா!

இந்த நேரத்தில் அகில பாரதிய வித்யா பரிஷத்தின் அரசியல் குறித்து சொல்வது அவசியமாகிறது. ஆர்.எஸ். எஸ் கொள்கைகளை அரசியல் கட்சியாக முன்னெடுக்க பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. கட்சி அரசியலில் மாணவர்களின் ஈடுபாடு என்பது மிகக் கணிசமான அளவில் உள்ளது என்றபடியாலும், தலித்-கம்யூனிஸ்ட்-பகுத்தறிவு இயக்கங்களின் செல்வாக்கை மாணவர் மத்தியில் தகர்க்கும் வகையிலும் செயல்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ‘மாணவர் முகம்’ தேவைப்பட்டது. அதை நிறைவேற்றும் பொருட்டு பணிக்கப்பட்டதே ‘அகில பாரதிய வித்யா பரிஷத்’. மாணவர்களின் நலனுக்காக போராடும் இயக்கம் என மேம்போக்காக சொல்லிக் கொண்டாலும் இந்த இயக்கத்தின் முதன்மையான செயல்பாடு இந்துத்துவத்தை வளர்த்தெடுப்பதே ஆகும். குறிப்பாக அறிவியலுக்கு தொடர்பட்ட புராணக் கதைகளில் அறிவியல் இருப்பதாக கருத்தரங்கம் நடத்துவது, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துபவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்துவது போன்றவை இவர்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்தச் செயல்பாடுகளைத் தாண்டி, பகுத்தறிவு பேசும் மாணவர் இயக்கங்களை ஒடுக்குவதுதான் இந்த அமைப்பின் முக்கியச் செயல்பாடு. புனே திரைப்படக் கல்லூரியில் 2013-ஆம் ஆண்டு ‘ஜெய் பீம் காம்ரேட்’ என்ற ஆவணப்பட திரையிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதே ஆண்டில் காஷ்மீர் குறித்த ஆவணப்படத்தை திரையிட இருந்த ஹைதராபாத் பல்கலைக்கழக அரங்கத்துக்குள் புகுந்த இந்த அமைப்பினர், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இந்தப் பின்னணியில் ஹைதராபாத் பல்கலையில் உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடந்த கலவரத்தின் பின்னணியில் ஆர்,எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் பங்கை வெளிச்சமிட்டுக் காட்டிய ‘முசாஃபர் நகர் பக்கி ஹை’ என்ற ஆவணப்படத்தை திரையிட்டது மாணவர்களின் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பில் ரோகித் வெமூலா உள்ளிட்ட ஐந்து தலித் மாணவர்கள் இருந்தனர். இந்த ஆவணப்படத் திரையிடலைத் தடுக்கும் வகையில் அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பு, ஏற்பாட்டைச் செய்த மாணவர்கள் மீது வன்முறையை ஏவியது. ஆனால், பல்கலை நிர்வாகம் இந்த அமைப்பு ஆதரவாக இருந்ததால், தாக்குதலை நடத்தியவர்களிடமே தலித் மாணவர்களை மன்னிப்புக் கேட்க வைத்தது. அதுவும் போதாது என்ற இந்த அமைப்பின் அழுத்தத்தால் இந்த மாணவர்களின் உதவித் தொகை நிறுத்தப்பட்டது; பல்கலை மாணவர் விடுதியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர்.

பலமுறை தலித் மாணவர்கள் தங்களுடைய நியாயங்களைச் சொல்ல முற்பட்டும் பல்கலைக் கழக நிர்வாகம் காதுகொடுத்து கேட்கவில்லை. பல்கலைக் கழகம் கட்டுப்படுத்தும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேரடியாக கடிதம் எழுதியதும், அதற்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உடனடி எதிர்வினையும், தலித் மாணவர்களின் மீது மேலும் அழுதத்தையும் புறக்கணிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இடத்தில் சென்னை ஐஐடி, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் மீதான தடையை ஒப்பிடலாம். ஆனால், தமிழகத்துச் சூழல், மாணவர்களை இத்தகைய ஒடுக்குதலுக்கு ஆளாக்காமல் தடுத்தது என்பதையும் சொல்ல வேண்டும்.

தினச்செய்தி நாளிதழில்(20-1-2016) வெளியான கட்டுரை

Advertisements