சுபாஷ் சந்திர போஸை முன்வைத்து அமித் ஷா-மோடியின் அரசியல்!

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான வரலாற்றில் மர்மமாக நீடிப்பவர் சுபாஷ் சந்திர போஸ். சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்துவிட்டாரா அல்லது இன்னமும் வாழ்கிறாரா என்பதை புனைகதைகளை விஞ்சும் புதிய புதிய கதைகள் மூலம் திரும்ப திரும்ப ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.  இதில் அவரவர் கட்சி சார்ந்து அரசியல் செய்வதற்கு சுபாஷ் சந்திர போஸ் உதவிக் கொண்டிருக்கிறார் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் சந்திர போஸின் குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி, சந்திர போஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அவருடைய அறிவிப்பு வெளியான அடுத்த மாதமே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  மாநில அரசிடன் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் பார்வைக்கு விட்டார்.  மேற்கு வங்க தேர்தலை ஒட்டி மாநிலத்தில் கணிசமாக உள்ள ‘போஸ்’ வகுப்பினரின் ஓட்டுக்களை கவரும் உத்தியுடனே பிரதமரும் மாநில முதலமைச்சரும் கணக்குப் போட்டார்கள். இதில் திதி முந்திக்கொண்டார்.

மம்தா வெளியிட்ட ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சையைத் தீர்த்து வைத்ததா? அதுதான் இல்லை. இங்கு சர்ச்சையே இல்லை. தெளிவான ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் செல்லும் வழியில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தைபெய்யில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தார் என்று தெரிவித்தன.  ஆனாலும் ‘புனைகதை மன்னர்கள்’ சுபாஷின் மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இல்லை.
பிரதமர் வெளியிடவிருக்கும் ஆவணங்களுக்காக காத்திருந்தார்கள். நடுவில் இங்கிலாந்து இணையதளம் ஒன்று, சுபாஷ் சந்திர போஸின் மரணம் விமான விபத்தில் நேர்ந்தது என ஆதாரங்களுடன் சொன்னது. போஸின் மரண சர்ச்சை ஒருவகையில் முடிவுக்கு வந்ததற்கான அமைதி நிலவியது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 23-ஆம் தேதி போஸின் பிறந்த தினத்தில் தேசிய ஆவணக் காப்பகத்தின் மூலம் போஸ் குறித்த இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிட்டார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டு காலமும் இந்தக் கோப்புகளை ரகசியமாக காங்கிரஸ் அரசு பேணி வந்ததற்கு காரணம் இருந்தது. பிரபல வரலாற்று அறிஞர்களும்கூட இந்த ரகசிய ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. காரணம், போஸ் குறித்து முதல் பிரதமர் நேருவின் கருத்துக்களும் கடிதப் பரிமாற்றங்களும்கூட அதில் இருந்தன என்பதே.

நேருவும் போஸும் இரு வேறு துருவங்களாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்டவர்கள். இங்கிலாந்துடன் போர் புரிவது ஒன்றே இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்று ஆயுதம் ஏந்தி, ஜெர்மன் கொடுங்கோலர் ஹிட்லரின் உதவியை நாடினார் போஸ். நேருவின் பாதை, காந்தி முன்னிறுத்தி இருந்தது.  எனவே, இவர்களுக்கிடையே விமர்சனங்கள் கடுமையானதாக இருந்திருக்கலாம். இந்த ஆவணங்கள் வெளியே வந்தால் அவை சர்ச்சைகளைக் கிளப்பும் என காங்கிரஸ் அரசு நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இதை அரசியலாக்க முயற்சித்தது. அதன் வெளிப்பாடே போஸ் ஆவணங்களை வெளியிடும் முடிவு. இந்திய அரசுக்கு நன்றாகத் தெரியும், போஸ் மரணம் விபத்தினால் ஏற்பட்டதுதான் என்பது. ஆனால் அவரது மரண சர்ச்சையை முன்வைத்து, நேரு-போஸ் கடிதங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதே பாஜக அரசுக்கு இருந்த உள் அரசியல். அதன்படி ஆவணங்களும் வெளியிட்டாகிவிட்டது.

ஆனால், ஆதாயம் கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை. நேரு எழுதியதாக வெளியிட்ட ஒரு கடிதம், போஸ் ஒரு போர்க் குற்றவாளி என நேரு சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கு எழுதப்பட்டதாகவும் அதை இந்திய பிரதமராக இருந்த நேரு எழுதியதாகவும் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் வெளியாகியிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட காலம் 1945 என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகே, நேரு பிரதமரானார். ஆனால், அந்தக் கடிதம் 1945-ஆம் ஆண்டு நேரு பிரதமர் என்பதாக உள்ளது.
இத்தனை ஓட்டைகளுடன் இந்த ஆவணம் ஆவணக் காப்பகத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்ததா என்றும், ஆங்கிலப் புலமை பெற்ற, நேரு இத்தனை தவறுகளுடன் கடிதம் எழுதினாரா என்பதும் வரலாற்று அறிஞர்களிடம் நகைப்பை உண்டாக்கியிருக்கிறது.  போட்டோஷாப்புக்கு புகழ்பெற்ற மோடி அரசின் புகழ் போஸின் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களில் முழுமையடைந்திருப்பதாக சமூக ஊடகங்கள் பகடி செய்கின்றன.
இந்நிலையில்  இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது மேற்கு வங்க தேர்தல் முடியும் வரை இந்த ரகசியக் கோப்புகள் வெளிவரும் என நம்பலாம். ஆனால், ரகசிய கோப்புகளை மட்டும் நம்பக்கூடாது!
கொசுறு:  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர் சந்திரா போஸ் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் போஸ் பற்றுக்கும் இந்த இணைவிற்கும் ஏதும் தொடர்பில்லை என நம்புவோமாக!