Monthly Archives: ஏப்ரல் 2016
கருத்து கணிப்புகள் நம்பக்கூடியவையா?
தேர்தல் காலத்தில் கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துள்ளன. தங்களுக்கு சாதகமாக இருந்தால் கொண்டாடுவதும், எதிராக இருந்தால் வெளியிட்ட ஊடகங்கள் மீது சேற்றை வாரிப் பூசுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. கருத்து கணிப்புகள் நடைபெற இருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை செலுத்தப் போகின்றன? கருத்து கணிப்புகள் மெய்யாகின்றனவா? என்பதை பேசும் முன் கருத்து கணிப்பு குறித்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அனுபவத்தைப் பார்ப்போம்.
“உலகளாவிய அளவில் கருத்து கணிப்புகள் பொய்த்து வருகின்றன. கிரீஸ், துருக்கி, பிரிட்டன் என சமீபத்தில் தேர்தல் நடந்த நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் தவறாகியிருக்கின்றன. கருத்து கணிப்பும் தேர்தல் முடிவும் தொடர்பில்லாமல் வந்திருக்கிறது. நாங்கள் செய்த கருத்து கணிப்பும் இப்படியான எதிர் முடிவை எட்டியிருக்கிறது. அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்” என்று அறிவித்தார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்.
அவர் வேறு யாருமல்ல, என் டி டீவியின் பிரணாய் ராய். அவர் மன்னிப்புக் கேட்டது, சென்ற ஆண்டு நடந்த பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் கருத்து கணிப்பும் முடிவும் முற்றிலும் வேறாக இருந்தது என்ற காரணத்துக்காக.
பீகார் தேர்தல் மட்டுமல்ல, கடந்த மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகளும் கூட முடிவுகளுடன் ஒப்பிடும் போது முரண்பட்டவையாகவே இருந்தன. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சொல்லவில்லை. பாஜகவை தீவிரமாக ஆதரித்த ஒரு சில ஊடகங்களும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் கூறின.
இந்தப் பின்னணியில்தான் நாம் வரவிருக்கிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கணிப்புகளையும் பார்க்க வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, மூன்று செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் வார இதழ்களும் சில ஊடக அமைப்புகளும் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒருவகையில் மாறுபடுகின்றன. எல்லா கருத்து கணிப்புகளுக்கும் உள்நோக்கம் இருக்கிறது என குற்றம்சாட்ட முடியாது. அதேவகையில் எல்லா கருத்து கணிப்புகளும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும் சொல்லிவிட முடியாது.
கருத்து கணிப்புகளை வெளியிடும் நபர்களின் நிறுவனங்களின் பின்னணிகளை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, உண்மையில்லாத ஒன்றைச் சொன்னால், எளிதாக அவற்றை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மக்களின் நம்பகத்தன்மையை இழப்பார்கள்.
கருத்து கணிப்புகளை வெளியிடுபவர்களின் பின்னணி வெளிப்பட்டாலும் கருத்து கணிப்புகள் என்பவை எதன் அடிப்படையில், எத்தகைய அறிவியல்பூர்வமான நடைமுறைகளில் எடுக்கப்படுகின்றன? கோடிக்கணக்கான வாக்காளர்களின் பிரதிபலிப்புகளாக எப்படி 5 ஆயிரம் பேர் இருப்பார்கள்? எப்போதோ எழுதி வைத்த ஜோதிட கட்டங்களைப் பார்த்து, இன்று பிறந்த குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று சொல்வதுபோலத்தான், இந்தக் கருத்து கணிப்புகளும். உங்கள் மகள் ஐடி படித்து அமெரிக்க போவாள் என்று சொன்ன ஜோதிடத்தை நம்பி ஐடி படிக்க அனுப்பப்பட்ட எத்தனை பேருக்கு குறைந்தபட்சம் உள்நாட்டிலாவது வேலை கிடைத்தது? அதுபோலத்தான் தேர்தல் கருத்து கணிப்புகளும். ஒரு வேளை நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம்.
தேர்தல் முடியும்வரை ஊடகங்கள் தேர்தல் கால சுவாரஸ்யமாக கருத்து கணிப்புகளை வெளியிடும், அவற்றின் சாதக பாதகங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் கட்சிகள் கூடுதலாக உழைத்தால் வெற்றிக்கனியைப் பறிப்பார்கள். இதில் மக்களுக்கான பயன், நல்ல பொழுதுபோக்கு என்பது மட்டும்தான்!