பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு

மோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல்  தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்!

மாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது என சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின.  உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன்  குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த அடிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சாதியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.

தீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.

நன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)

Advertisements

One thought on “பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு

  1. வரவேற்கவேண்டிய இந்த தீர்ப்பு மதவாதிகள், இனவாதிகள் எழுத்தாளர்களுக்கு படதயாரிப்பாளர்களுக்கு எதிராக அவர்களின் படைப்புகளை முடக்க முயற்சிக்கும் போதும் அவர்களை பாதுகாக்க வேண்டும்.

    //சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது.//
    மதவாதிகள் விஸ்வரூபம் படத்தை தடைசெய்ய சொல்லி சென்னையையே அல்லோகல்லபடுத்த அனுமதித்த அரசு தானே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.