குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள், பசுமையான காடுகள், சுழித்து ஓடும் நீரோடைகள் அல்லது நள்ளிரவு அமைதி…தங்களுக்கு கற்பனை வளம் பெருக்கெடுத்தும் ஓடும் சூழல்களாக பிரபல எழுத்தாளர்கள் நேர்காணலில் சொல்லிக் கொள்வார்கள். நான் பிரபல எழுத்தாளரும் அல்ல, சொல்லப்போனால் நான்கு வரிகளுக்கு மேல் என் முகநூல் பக்கத்தில் எழுதியதில்லை. ஆனால் எனக்கு பாத்திரங்கள் துலக்கும்போது கற்பனை வளம் பெருக்கெடுத்து ஓடும். ஆம், சமையல் பாத்திரங்கள் தாம்! நான் ஒரு இல்லத்தரசிதானே, ஒரு நாளைக்கு மூன்று வேளை கட்டாயமாக பாத்திரம் துலக்கிவிடுவேன். நடுநடுவே மாமியார் – மாமனார் குடிக்கும் காபி தம்பளர்களை துலக்கி வைப்பேன். காபி தம்பளர்களை சேர்த்து வைத்து கழுவுவது அவர்களுக்குப் பிடிக்காது.
என் கற்பனை வளம் பெருக்கெடுக்கும் விஷயத்தை சொல்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பாத்திரங்களை துலக்க செலவிடுவேன். மற்ற பெண்களைப் போலத்தான் திருமணம் ஆகும்வரை பாத்திரங்களை துலக்கியதில்லை. திருமணத்திற்குப் பிறகு, சமைப்பதும் துலக்குவது துவைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது. இந்திய குடும்ப சாசனத்தில் பெண்கள் கட்டாயம் செய்யவேண்டிய கடமைகள் இவை. வாரத்தின் ஏழு நாட்களும் மாதத்தில் 30 நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் செய்ய வேண்டிய கடமை இது. திருமணமான 15 ஆண்டுகளில் அம்மா வீட்டுக்குச் சென்ற நாட்களைத் தவிர, ஓயாமல் இந்தக் கடமையைச் செய்துகொண்டிருக்கிறேன். ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஓய்வு கிடைக்குமே என்றெல்லாம் சலுகை எதிர்பார்க்க முடியாது. உடல்நலன் தேறியவுடன் வேலை இருமடங்காகி இருக்கும். சுயகழிவிரக்கும் கொள்கிறோனோ? இல்லையில்லை, பணிக்கு வெளியே செல்லும் கணவருக்கு பொருளாதார ரீதியாக உதவுகிறேன். பாத்திரம் துலக்க குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் சம்பளம் தரவேண்டியிருக்கும். பெருநகர வாழ்க்கையில் கூடுதல் சுமைதான். வீட்டில் சும்மா தானே இருக்கிறேன், ஏதாவது வேலை செய்ய வேண்டும் இல்லையா?
இப்படி பாத்திரம் துலக்குவதை கடமையாகக் கருதி செய்ய ஆரம்பித்து, அதையே என் கற்பனை வளத்துக்கான திறப்பாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். மலைகளுக்கு பயணம் போகத் தேவையில்லை; நதிகளில் கால் நனைத்தபடியே வானத்து மேகங்களை அன்னார்ந்து பார்த்து கற்பனையை தட்டி தட்டி விடவேண்டியதில்லை. பாத்திரங்களில் ஒட்டியுள்ள எண்ணெய் பிசுக்குள்ள குழம்பை வழித்தெடுக்கும்போதே என் கற்பனை வீறுகொண்டு எழுந்துவிடும். குக்கரில் ஒட்டியுள்ள காய்ந்த சோற்று பருக்கைகளை அழுத்தி தேய்க்கும்போது என் கற்பனைக்கான விஷயம் ஒரு நிலையை எட்டியிருக்கும். பாத்திரத்தில் ஒட்டியுள்ள சோப்புக் கரைசலை சலசலக்கும் தண்ணீரில் கழும்போது வார்த்தைகளும் வாக்கியங்களும் வந்து விழும்.
ஆனால், எது குறித்து எழுத நினைத்து வார்த்தைகளை கோர்த்தேனோ அதை எழுதியதில்லை. நான் ஒரு இல்லத்தரசி; எழுத்தாளரில்லை. ஸ்மார்ட் போனில் ‘ஹாய் ஃபிரண்ட்ஸ் குட் மார்னிங்!’ என்று எழுதுவதே அதிகபட்சம். ஆஃப் ட்ரால் நானொரு இல்லத்தரசி. நான் எழுத வேண்டும், எழுத்தாளராகப் போகிறேன் என்று வீட்டில் சொன்னால் ஆவி பிடித்தவளைப் போல என்னைப் பார்ப்பார்கள்.
நான் புத்தகங்கள் படிப்பேன். முகநூலில் பிரபல எழுத்தாளர்களை பின்தொடர்கிறேன். அவர்கள் எல்லோரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்…நாவல் எழுதுகிறார்கள்; சிறுகதை எழுதுகிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், கட்டுரை எழுதுகிறார்கள், முகநூலில் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்…அவர்களைப்போல நானும் எழுதிக்குவிக்க வேண்டும். ஒருவேளை நான் ஆணாகப் பிறந்திருந்தால் எழுதிக் குவித்திருப்பேன். என் மனைவி என் இல்லத்துக்கு அரசியாக எல்லாப் பணிகளையும் செய்துகொண்டிருப்பாள். நானும் சுரண்டியிருப்பேன்.
சுரண்டல் என்றதும் சிட்னி போலக்கின் The way we were படத்தின் நாயகி காதாபாத்திரமான கேத்தி நினைவுக்கு வருகிறாள். நான் பார்த்ததிலேயே கம்யூனிஸ்டுகளை உயர்வாகக் காட்டிய படம் இதுதான். நீங்கள் அமேசிங் ஸ்பைடர் மேன் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தின் முதல் காட்சியில் தோன்றும் ரஷிய வில்லன், காலில் அரிவாள் சுத்தியலை பச்சை குத்தியிருப்பான். சரி..கேத்தியின் கதையை சொல்கிறேன், அவள் ஒரு முற்போக்கான பெண்; கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கத்தில் செயல்படுகிறவள். நேர் எதிர் கருத்துகளைக் கொண்ட நாயகனை விரும்புகிறாள். தன்னுடைய கொள்கைகளை தூக்கி வைத்துவிட்டு, தன்னை நாயகனுக்குரியவளாகக் காட்ட அவனுடைய துணிகளை துவைத்து சலவை செய்து தருகிறாள். முரண்களுக்கிடையே இருவரும் இணைகிறார்கள்; பிரிகிறார்கள். நாயகன்தான் அவளை, அவளுடைய அரசியல் செயல்பாடுகளுக்காக ஒதுக்குகிறான், துரோகம் இழைக்கிறான். குழந்தையுடன் கேத்தி ஒதுங்கிக்கொள்கிறாள். மறுமணம் செய்துகொண்டு தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடர்கிறாள் கேத்தி. 70களில் வந்த படம். காதல் படம் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு பெண்ணின் அரசியல் பற்றிய படம்.
பெண்களுக்கு அரசியல் பிடிக்குமா? என சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவர் எழுதியது நினைவுக்கு வருகிறது. பெண்கள் வாக்களிக்க வேண்டுமா என கேட்பதுபோல இருந்தது. எனக்கு அரசியல் பிடிக்கும். கேத்தியைப் போல எனக்கும் அரசியல் நிலைப்பாடு உண்டு. என்னுடைய கணவரின் குடும்பம் தீவிர திமுக விசுவாசிகளைக் கொண்டது. தன்னுடைய இளம் வயதில் திமுக தலைவர் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி பெருமையோடு கதை சொல்வார் என் மாமனார். என் கணவர் எந்த சூழ்நிலையிலும் உதயசூரியனுக்கன்றி வேறெந்த சின்னத்திலும் வாக்களித்ததில்லை என்பார். ஆனால் அவருக்கு அரசியலில் ஒன்றும் தெரியாது. எனக்கு அரசியல் பிடிக்கும், நான் வாக்களிக்க மறுத்தபோது என்னைக் குடும்பமே திட்டிதீர்த்தது.
கேடிவியில் ”ஒரு பொண்ணுன்னா எப்படியிருக்கணும் தெரியுமா?” வசனங்களுடன் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை கணவரும் இரண்டு மகன்களும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் அரசியல் விவாதங்களை பார்க்கத் துடிப்பேன். பெரும்பாலும் விளம்பர இடைவெளிகளில் அந்த வாய்ப்பு கிட்டும்.
எப்படியாயினும் நான் ஒரு இல்லதரசி. என்னால் எழுத முடியாது; அரசியல் பேசக்கூடாது. கேத்தியை போல நானும் சமரசம் செய்துகொண்டிருக்கிறேன். கேத்தியிடம் தீர்க்கமான அரசியல் இருந்தது. என்னிடம் என்ன இருக்கிறது என பாத்திரங்களை துலக்கிக்கொண்டே சிந்திக்கிறேன். அழுக்குப் பாத்திரங்களில் சத்தங்களில் கிளர்தெழும் சொற்களாக, வாக்கியங்களாக அவை இருக்கலாம். சொற்களை, வாக்கியங்களை சேகரித்து உருவம் தருவேன். நான் மட்டும் பார்க்கும்படியாக முகநூலில் அந்த உருவத்தை பதிவு செய்வேன். ரகசியமாக அவ்வப்போது படித்துக்கொள்வேன். ஏனெனில் நானொரு இல்லத்தரசி ரகசியங்களை ஒளித்து வைத்து வாழ்பவள்.
பின்குறிப்பு: புனைவில் வரும் அத்தனையும் கற்பனையே. எவரையும் மறைமுகவாகவோ நேரடியாகவோ சுட்டுவன அல்ல.
படம் நன்றி: டிசைன் பப்ளிக் டாட் இன்