கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…

அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை உடைக்கும் பகுத்தறிவு சிந்தனையாளர்களை மத அடிப்படைவாத சமூகம் எப்படி எதிர்கொண்டதை என்பதை வரலாறாக நாம் படித்திருக்கிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குலகைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மத அடிப்படைவாதிகளால் மூர்க்கமாக வேட்டையாடப்பட்டார்கள். ரத்தக்கறை படிந்த அந்த வரலாற்றை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன, நம் அருகாமை மாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்.
 
கடந்த நான்காண்டுகளில் நடந்த பகுத்தறிவாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களுமான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்வு அடங்காத நிலையில், பத்திரிகையாளரும் அடிப்படைவாத இந்துத்துவ கருத்துக்களை எதிர்த்தவருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தப் படுகொலைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடத்தப்படுகின்றன என்கிற கருத்து இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் அஜெண்டாவான் ‘இந்துராஷ்டிரம்’ கோருகிற துண்டு துக்கடா அமைப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளன என்பதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால், சனாதானத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் எல்லா ஆட்சிகளின்போதும் பெரும்பான்மை மக்களின் மத அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் மத அடிப்படைவாதத்தை பரப்ப சடங்குகள்-யாகங்கள்-பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் போன்றவற்றை தூக்கிப் பிடித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர் பிரச்சாரம் செய்ய கிளம்பிய பகுத்தறிவாளர்கள்தாம் படுகொலை செய்யப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர்.
 
2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க முனைந்த போதும், ஆட்சியமைத்த பிறகும் பாஜக-சங்பரிவார் அமைப்புகளின் அடிப்படைவாத செயல்களை நுணுக்கமாக கண்டுணர்ந்து எழுதிவந்தவர் கௌரி லங்கேஷ். கர்நாடகம், தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் அப்போதே எழுதினார். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. அடிப்படைவாத செயல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது, தங்களுடைய பேனா முனையால் போரிட்டுக்கொண்டிருக்கும் இந்த எளிய மனிதர்களைத்தான். இவர்களை பட்டியல் போட்டு, படுகொலை செய்கிறார்கள். ‘நாங்கள் அடுத்து இவர்களைத்தான் படுகொலை செய்யப்போகிறோம்’ என அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். எதிர் அரசியல் பேசினாலும் ஆட்சியாளர்களால் இவர்களை நெருங்கக்கூட முடிவதில்லை.
 
பொது சமூகமாக இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி? சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா? சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள்! அவர்கள் வளர்ச்சியின் பேரால் நம்மை ஒருங்கிணைப்பார்கள், ஊழல் எதிர்ப்பு பேசுகிறோம் என்பார்கள். ஒருபோதும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள். அனைத்தும் பொய்யின் மேல் கட்டப்பட்ட போலி பிம்பங்கள். இந்த போலிகளை நம்பி இறங்கினால், நம்மின் மனசாட்சிகளாக வளம் வரும் கௌரியையோ கல்புர்கியையோ இங்கேயும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். மனசாட்சியில்லாத சமூகம் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே அமைதியும் வளர்ச்சியும் இருக்காது…வெறித்தனம் மட்டுமே இருக்கும்!
 
நன்றி: கி.ச. திலீபன், குங்குமம் தோழி டீம்…
image courtesy: patrika.com