சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு

’செய்து பாருங்கள்’ இதழ் தொடங்கிய பின், கிடைத்த இரண்டு அனுபவங்களை சொல்ல விரும்புகிறேன். தொடர்புடையவர்களை சிறுமைப்படுத்துவதாக எண்ண வேண்டாம். சமூகத்தை புரிந்துகொள்ள உதவும் என்பதாக எடுத்துக்கொள்ளவும்.
 
அனுபவம் ஒன்று:
 
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி அது. சிபாரிசின் பேரில் பள்ளியின் தாளாளரை சந்தித்தேன். சிபாரிசு செய்தவர், அவருக்கு நெருங்கிய உறவு. பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்பு அல்லது சந்தா கேட்கும் பொருட்டு அவரை சந்தித்தேன். அந்தப் பகுதி பெற்றோர் வசதி குறைவானவர்கள் என்பதால், அவர்களால் எக்ஸ்ட்ரா ஆக்டிவிடிஸுக்கு பணம் கொடுக்க முடியாது என்றார். சந்தா செலுத்த முடியும். எனக்கு ஐந்து பள்ளிகள் உள்ளன என்றார். ‘அம்மா சொல்லி வந்திருக்கீங்க, உங்களை வெறும் கையோடு அனுப்பக்கூடாது’ என்று விளம்பரம் தருகிறேன் என செக் எழுதி கொடுத்து, இதை இப்போது பேங்கில் போட வேண்டாம். நான் சொல்லும் போது போடுங்கள் என்றார். நான் அப்போதே, செக்கை பிறகு வாங்கிக்கொள்கிறேன், இதழ் முடிக்கும் தருவாயில் இருக்கிறேன், விளம்பரம் கொடுங்கள், கையோடு வாங்கிச் செல்கிறேன் என்றேன். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் வெளியில் சென்றிருந்த காரணத்தால், பிறகு அனுப்பி வைக்கிறேன் என்றார். அப்புறம் என்னைப் பற்றி விசாரித்தார்…ஊர், என்ன படிப்பு, எப்படி இந்த வேலை என்பதையெல்லாம் கேட்டார். தப்பா நெனக்காதீங்கம்மா உங்க சாதி என்னன்னு தெரிஞ்சிக்கலாமா? என்றார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். ஓ…அந்த சாதியா? என்று கேட்டு..மேலும் சில கேள்விகள் கேட்டார். சிரித்துக்கொண்டே நன்றியுடன் அவரிடமிருந்து விடைபெற்றேன். அடுத்த நாள் விளம்பரம் கேட்டு தொலைபேசினேன். பிஸியாக இருப்பதாக சொன்னார். அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள், நேரில் இரண்டு முறை, கிட்டத்தட்ட 20 நாட்கள் விளம்பரம் தந்துவிடுவார்கள் என நம்பிக்கையோடு காத்திருந்தேன். மெல்ல புரிய ஆரம்பித்தது… ஒரே சாதியாக இருந்தால் கிடைத்திருக்கும் என்பது. ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால், அவருடன் பேசிய அரை மணி நேரத்தில், அருகில் அமர்ந்திருந்த நபருடன் சாதி பெருமைகளை 10 நிமிடமாவது சொல்லியிருப்பார். என்னை சிபாரிசு செய்தவர், தன் சாதிக்காரரைத்தான் அனுப்பியிருப்பார் என அவர் நம்பியிருக்கக்கூடும். சிபாரிசு செய்தவர் சாதி பார்த்து எனக்கு உதவவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பொருளாதார உதவிகள் என வரும்போது ஸ்ரிக்டாக சாதி பார்ப்பது இங்கே பட்டவர்த்தனமாக புரிந்தது. இது சாதி பெருமை பேசுபவர்களின் பொதுவான குணம். இதிலும் விலக்குகள் இருக்கலாம்.
 
இரண்டாவது அனுபவம்:
 
அந்தப் பெண் வசதிக்கு குறைவில்லாதவர். கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம். பெண்கள் இதழ்களில் தன்னைப் பற்றிய செய்தி வரவேண்டும் என்பதில் தீரா ஆசை உண்டு. செய்து பாருங்கள் இதழைப் பற்றி இணையத்தில் படித்து தொடர்பு கொண்டார். அந்தப் பெண்ணை ஆர்வத்தோடு சந்தித்து இதழ்களை அளித்தேன். இந்த இதழில் இடம்பெற எவ்வளவு காசு தரவேண்டும் என்றார். காசெல்லாம் வாங்குவதில்லை..உங்களுக்கு தெரிகிற கலையை செய்து காட்டுங்கள் போதும் என்றேன். உங்களைப் போல ஒருவரை நான் பார்த்ததேயில்லை. அந்த பத்திரிகையில் அவ்வளவு கேட்டார்கள் என பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கிருந்த ஆர்வத்துக்காக அவரை ஊக்கப்படுத்தினேன். அவருக்காக ஒரு பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்துகொடுத்தேன். எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை இதழ்களை மட்டும் பயிற்சி கட்டணத்துடன் சேர்த்து தந்துவிடுமாறு அக்ரிமெண்ட். பயிற்சி கட்டணம் பெரிய தொகைதான், முழுக்க அவருடைய உழைப்பு. நானும் உழைத்திருக்கிறேன் இல்லையா, அதற்கான கூலி மிக சொற்பம். இறுதியில் அதைக்கூட அந்தப் பெண் சாமர்த்தியமாக தர விரும்பவில்லை. நானும் கேட்கவில்லை. காசு வாங்காத பத்திரிகையாளர்கள், லஞ்சம் வாங்காதவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்பதாக இந்த சமூகம் நினைத்துக்கொண்டிருக்கும். அதே சமயத்தில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்றும் சொல்லிக்கொள்ளும். இந்த ஒருங்கிணைந்த குணாம்சத்தை அந்தப் பெண்ணிடம் பார்த்தேன். ஆகச் சிறந்த அனுபவம். ஒரு மாதம் மன உளைச்சலை கொடுத்த அனுபவம்…