பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘த பியானோ டீச்சர்’ குறித்து ஒரு பிரபல(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) எழுத்தாளர் எழுதிய கட்டுரை ஒன்றை சிறுபத்திரிகையில் படித்திருக்கிறேன். ஒரு ஆண், ஒரு பெண்ணிய படைப்பு குறித்து எழுதினால் எப்படியிருக்கும்? பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா? அதுவும் இந்திய ஆண்களால்? ஃபெனிமிஸ்ட் ஆண்கள் என எவரும் இங்கே இல்லை… என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது, ஃபெனிஸ்ட் என சொல்லிக்கொள்கிறவர்கள் தங்களை தாங்களே சீர்தூக்கிப் பார்க்கலாம். விஷயத்திற்கு வருகிறேன். பாலியலை கொண்டாடக்கூடிய படமாக ‘பியானோ டீச்சர்’ குறித்து அந்த எழுத்தாளர் எழுதியிருந்தார். போர்னோகிராபியை கொண்டாடுகிற தாராளவாத பார்வை முற்போக்காளர்கள் பலருக்கும் உண்டு.

ஆனால், இது போர்னோகிராபி அல்ல, அதற்கு எதிரானது என்கிறார் இந்தப் பிரதியை எழுதிய எல்ஃபிரீட் ஜெனிலிக். 2004-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. எனக்கு கூட்டத்தைப் பார்த்தால் பேச்சுவராது(அது ஒரு போபியா) என செய்தி அனுப்பினார். ஆனால் அது மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது. எல்ஃபிரீட் தீவிர இடதுசாரி ஆதரவாளர். ஆஸ்திரிய இடதுசாரி கட்சியில் இணைந்து செயல்பட்டவர். அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளின் படையெடுப்புகளை கடுமையாக விமர்சித்தவர். இவருடைய எழுத்து போர்னோகிராபி என சொல்லி நோபல் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்குலகின் ஊடகங்கள், தாராளவாத அறிவுஜீவிகள் எல்ஃபிரீட்டை அதிகமாக விமர்சித்திருக்கின்றனர். இவர்கள் சொல்லும் இதே காரணங்கள் தாராளவாத பெண்ணிய எழுத்தாளர்களுக்கு மாறுபடும். இடதுசாரி என்ற காரணத்துக்காகவே எல்ஃபிரீட் விமர்சிக்கப்படுகிறார். பெண்களை முதலாளித்துவ சமூகம், நிலவுடைமை சமூகத்திலிருந்ததைக் காட்டிலும் அதிகமாக சுரண்டிக்கொண்டிருக்கிறது என்பதும் அதற்காக எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன என்பதுமே எல்ஃபிரீட் எழுத்து.

சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என பலவடிங்களில் எழுதிவரும் எல்ஃபிரிட்டை நேர்மறையான முறையில் புரிந்துகொள்ள இந்த நேர்காணல் உதவும் என நினைக்கிறேன்.

”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்