விரைவில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘வீர’ சாவர்க்கருக்கு இந்தியாவின் மதிப்பிற்குரிய விருதான பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என்கிறது பாரதிய ஜனதா கட்சி.
இந்தி பேசும் பசு வளைய மாநிலங்களில் சாவர்க்கர், ஒரு தேச பக்தர்; சுதந்திரத்துக்காக போராடிய வீரர். மகாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்டபடியால் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக, சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ கோருவதன் மூலம் மக்களின் வாக்குகளை அள்ள முடியும் என நம்புகிறது.
சாவர்க்கருடன் மேலும் இருவர் பாரத் ரத்னா விருது பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் இந்த விருதுகள் அளிக்கப்படவில்லை என்பது விருதுக்கான அவமானம். கல்லடிபட்டு, சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டிய, முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கிய ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கும் சேர்த்து ‘பாரத ரத்னா’ அளிக்கக் கேட்டிருக்கிறது பாஜக.
ஒரே கல்லில் பல மாங்காய் என்பதுபோல, சாவர்க்கரை பரிந்துரைப்பதன் மூலம் சங்க பரிவார சார்புள்ளவர்களை திருப்திபடுத்தவும் அதே சமயம் ஒடுக்கப்பட்ட – இடை சாதியினரின் வணக்கத்துக்குரிய புலே தம்பதியை பரிந்துரைப்பதன் மூலம் இந்த சமூகங்களை கவரவும் பாஜக வாக்கு வங்கி அரசியல் செய்திருக்கிறது.
புலே தம்பதியின் சமூகப்பணி என்றுமே கேள்விக்குள்ளானதில்லை; பல காலமாக மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அவர்களுக்கு உயரிய கவுரவங்கள் அளிக்கப்படுவதை எந்தப் பிரிவினரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், சாவர்க்கர் எப்படிப் பட்டவர்? பாரத ரத்னா விருது ஆட்சியாளர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும், பாஜக சொல்லிக்கொள்ளும் சாவர்க்கர் ஈடுபட்ட சுதந்திர போராட்டத்தின் உண்மையான வரலாறு என்ன?
ஆம்…சாவர்க்கர் ஒரு காலத்தில் புரட்சியாளராக இருந்தார். இந்திய சுதந்திரத்துக்காக ஆட்களை திரட்டினார். 1906-ஆம் ஆண்டு சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றபோது, ‘ஃப்ரீ இந்தியா சொசைட்டி’ என்ற பெயரில் அங்கிருந்த இந்திய மாணவர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காகத் திரட்டினார். அப்போது அவர் சொன்னார்:
“நாம் பிரிட்டீஷ் அதிகாரிகளை குறை சொல்வதை நிறுத்த வேண்டும். அதுபோலவே அவர்களுடைய சட்டங்களை குறை சொல்வதையும் நிறுத்த வேண்டும். நம்முடைய இயக்கம் குறிப்பிட்ட எந்தவொரு சட்டத்தோடு நின்றுவிடக்கூடாது. ஆனால், அது சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தைப் பெறுவதற்காக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நமக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும்”.
ஆனால் சாவர்க்கரின் ‘இந்திய’பற்று மிகக் குறுகிய காலத்திலேயே ‘ஆங்கிலேயே’பற்றாக மாறிவிட்டது. அதுவும் மூன்றே ஆண்டு இடைவெளியில்…
1909-ஆம் ஆண்டில் நாசிக்கின் அப்போதைய கலெக்டர் ஜாக்சனை கொல்வதற்காக அபினவ் பாரத் சொசைட்டியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் துப்பாக்கியை தந்த குற்றத்துக்காக சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது பிரிட்டீஷ் அரசாங்கம்.
சுதந்திர போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கென்ற உருவாக்கப்பட்ட அந்தமானின் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். சிறை கொட்டடி வீரர்களை புடம் போடும் என்பார்கள். ஆனால், ‘வீர’ சாவர்க்கருக்கு செல்லுலர் சிறை புதிய திறப்பைக் கொடுத்தது.
பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு 1911-ஆம் ஆண்டு முதல் மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர். அது நிராகரிப்பட்டது. 1913-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இரண்டாவது கடிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. (நல்லவேளை அந்தக் கடிதங்கள் வரலாற்று ஆவணங்களாக பல்வேறு நூல்களில் பதிவாக்கப்பட்டுவிட்டன. இல்லையேல், சங்க பரிவாரங்களால் வரலாறு எப்போதோ மாற்றப்பட்டிருக்கும்).
சிறையில் தன்னுடன் கைதானவர்களுக்குக் கிடைத்த ‘சிறப்பு’ சலுகைகள் தனக்குக் கிடைக்கவில்லை எனத் தொடங்குகிறது அந்தக் கடிதம். சரியாக நடத்தப்படவில்லை; அதிக வேலை தருகிறார்கள், சிறப்பு கைதிகளுக்கான உணவு தராமல் சாதாரண கைதிகளுக்கான உணவு தரப்படுகிறது இப்படி தன்னுடைய ‘குறைகளை’ச் சொல்கிறார் சாவர்க்கர்.
“என்னை இந்த சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைப்பது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை சாத்தியமற்றதாக்குகிறது. ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் நிலை வேறு. ஆனால், ஐயா, 50 ஆண்டுகள் சிறை தண்டனை என்னை வெறித்து பார்க்கிறது. என்னுடன் இருக்கும் பயங்கரமான குற்றவாளிகள் பெற்ற சலுகைகள் எனக்கு மறுக்கப்படும்போது நான் எப்படி தார்மீக பலத்தை பெற முடியும். தயை கூர்ந்து, என்னை இந்திய சிறைக்கு அனுப்புங்கள்” என அடுத்த பத்திகளில் கெஞ்சத் தொடங்குகிறார் சாவர்க்கர்.
அடுத்தடுத்த பத்திகளில் பிரிட்டீஷ் அரசாங்கள், திடீரென நல்லாட்சி தருவதை உணர்ந்தவராய் இப்படி எழுதுகிறார்…
“1906-1907 -ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான பாதைகளுக்கு தள்ளியது. ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட மனிதாபிமான எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க மாட்டான்.
ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன் அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடந்து கொள்வேன்.”
கிட்டத்தட்ட பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தீவிர விசுவாசியாகவே மாறிவிட்ட சாவர்க்கரை அதில் காணலாம். இந்த விசுவாசத்தை எதிர்காலத்தின் காட்டுவேன் என முத்தாய்ப்பாய் இப்படி முடிக்கிறார்.
“அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்கு சென்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். என்னுடைய மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன்.”
பல மன்னிப்புக் கடிதங்களுக்குப் பின், பத்தாண்டு சிறை தண்டனைக்குப் பின் 1921-ஆம் ஆண்டு அந்தமானிலிருந்து ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டு, 1924-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆனார் சாவர்க்கர்.
அதற்குப் பிறகு, சாவர்க்கர் கையில் எடுத்ததுதான் பிரிவினைவாத அரசியல். பிரிட்டீசாரை எதிரியாகக் கொண்டு புரட்சி செய்ய கிளம்பியபோது, சதி கொடுமையை தடை செய்தல், கல்விக்கூடங்களை நிறுவுதல் போன்ற சீர்திருத்தங்களை கிறித்துவ மதத்தைப் பரப்பவே அவர்களை எதிர்த்தார். இந்துக்கள், முகமதியர்களின் கலாச்சாரத்தை அழிக்க பிரிட்டீசார் முயல்வதாக குற்றம்சாட்டினார்.
சிறையிலிருந்து வெளிவந்த சாவர்க்கர், முற்றிலும் வேறொரு நிலையை எடுத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைந்த இந்து-முசுலீம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் ‘இந்துத்துவ’ அரசியலை முன்வைத்தார் அவர். ‘இந்துத்துவம்’ என்ற சொல்லாடலை உருவாக்கியவரும் அவரே. ஆங்கிலேயர்களுக்கு தன்னுடைய மன்னிப்புக் கடிதத்தில் கூறியிருந்தபடியே விசுவாசியாக நடந்துகொண்டார்.
காந்தி சாத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கியபோது, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்க பிரிட்டீஷ் படையில் சேரும்படி பள்ளி, கல்லூரி மாணவர்களைத் திரட்டிக்கொண்டிருந்தார் சாவர்க்கர்! 1941-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்க்க ஜப்பானுடன் கூட்டு வைத்து படைகளைத் திரட்டினார் சுபாஷ் சந்திர போஸ், இந்த காலக்கட்டத்தில் ‘வங்காளம் மற்றும் அசாமை சேர்ந்த இந்துக்களே உடனடியாக ஒரு நொடியையும் வீணாக்காமல் ஜப்பானை எதிர்க்க, பிரிட்டீஷ் இராணுவத்தில் சேருங்கள்’ என பேசினார். சாவர்க்கரின் பங்களிப்புக்காக பிரிட்டீஷ் கமாண்டர் பாராட்டு தெரிவித்தார் என இந்து மகா சபையின் ஆவணங்களே கூறுகின்றன.
ஒத்துழையாமை இயக்கத்தின் போதும், பிரிட்டீஷ் ஆட்சியில் பணியாற்றும் இந்துக்களை அந்தப் பதவிகளிலேயே தொடருங்கள் என வலியுறுத்திய ‘போராட்ட வரலாறு’ சாவர்க்கருடையது!
இவை அனைத்தையும்விட காந்தி படுகொலையில் சாவர்க்கரின் பங்கை வரலாறு புறம்தள்ளிவிடாது. காந்தி படுகொலையில் கோட்சேவுடன் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கரும் உண்டு. போதிய சாட்சியங்கள் இல்லையெனக் கூறி அவர் விடுவிக்கப்பட்டார். இதுவரையான வரலாறு மட்டுமே அனைவரும் அறிந்தது.
ஆனால், அதன்பின் சாவர்க்கரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்க, நீதிபதி ஜிவன்லால் கபூர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை, சாவர்க்கர் மற்றும் குழுவினரால் படுகொலை சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான முகாந்திரம் உள்ளது எனக் கூறியது. ஆனால், அறிக்கை வெளியான ஆண்டு, 1969. மூன்றாண்டுகளுக்கு முன்பே சாவர்க்கர் இறந்துபோயிருந்தார். சங்க பரிவாரங்கள் இதைப் பேச துணிவதில்லை.
அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பக்த் சிங் சிலையுடன் சாவர்க்கரின் சிலையையும் சேர்த்து இரவோடு இரவாக வளாகத்துக்குள் நிருவியது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் இறுதிவரை மண்டியிடாத, தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரர் பகத் சிங்கும், பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் விசுவாசியா இருந்த பிரிவினையாளர் சாவர்க்கரும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருந்தனர்.
அதாவது, பகத் சிங் என்னும் வீரருடன் சேர்ந்து சாவர்க்கரும் சுதந்திர போராட்ட வீரராகிவிடுவார் என சங்க பரிவாரங்கள் ‘புதிய’ வரலாற்றை திணிக்கப் பார்க்கிறார்கள் என்பதையே அந்த சிலை காட்டியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வுதான் சாவர்க்கருக்கு பாரத ரத்னா என்னும் முழக்கம். நடந்துகொண்டிருப்பது சாவர்க்கரின் சித்தாந்தத்தில் நடக்கும் ஆட்சி, நிச்சயம் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படலாம். அதில் சந்தேகமில்லை.
ஆனால், எப்படி இந்தத் திணிப்புகளை சகித்துக் கொண்டீர்கள் என்கிற கேள்வியை மக்களாகிய நம்மிடம் வரலாறு எழுப்பிக் கொண்டே இருக்கும்.
நன்றி: தின செய்தி.