நாம் காலம் முழுக்க கற்றுக்கொள்ளலாம் என்றாலும் ஒரு மனிதரை செதுக்குவது அவரின் குழந்தை பருவம் முதல் பதின்பருவம் வரையான காலகட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் என் அம்மாவின் அரசுப் பணி காரணமாக எங்களுடைய குடும்பம் வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொரு ஊரின் பழக்கமும் கலாச்சாரச் சூழலும் படித்த பள்ளிகளும் ஏராளமான விசயங்களைக் கற்றுக்கொடுத்தன. துரதிருஷ்டவசமாக ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் என்னை ஊக்கப்படுத்தினார் என சொல்வதற்கு வாய்ப்பே அமையவில்லை.
நம்மை கண்டுபிடித்து நம்மை ஏற்றிவிடும் ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி காலத்தில் கிடைக்கவில்லை என்றபோது, பதின்பருவத்தின் இறுதியில் என் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஆசிரியரை சந்தித்தேன். அவர் பத்திரிகையாளர் லோகநாயகி.
ஆசிரியர் தன்னளவில் ஓர் உதாரண மனிதராக இருக்க வேண்டும் என பெரியோர் கூறுவதுண்டு. என்னுடைய ஆசிரியர் தன்னளவில் ஓர் உதாரண மனுசி. இன்றளவும்கூட பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் பணிக்குச் செல்வது சிக்கலான விசயமாக உள்ளது. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின், பத்திரிகையில் பணியாற்ற வேண்டும் என பெரும் விருப்பம் கொண்டு, (விருப்பம் என்பதைவிட லட்சியம் என்றுதான் சொல்ல வேண்டும்) குடும்பத்தோடு சென்னைக்கு வந்தவர்.
இரண்டு குழந்தைகள் உள்ள பெண்ணுக்கு லட்சியம், விருப்பம், ஆசை, கனவெல்லாம் இந்திய சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விடாப்பிடியாக உங்கள் லட்சியத்தில் நீங்கள் உறுதியோடு இருந்தால், அதற்கான ‘விலை’யை நீங்கள் கொடுத்தே அக வேண்டும். குடும்பம் முதல் சமூகம் வரை உங்களுக்கு தடையாக உள்ளவற்றை எதிர்க்கொண்டாக வேண்டும். இதையெல்லாம் அவர் எதிர்கொண்டிருக்கிறார். சாவி’ பத்திரிகையில் ஆரம்பக் கட்டத்தில் பணியாற்றி, பின் ஆனந்த விகடன் இதழில் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, குமுதம் நிறுவனம் ‘சிநேகிதி’ என்ற பெண்கள் இதழைத் தொடங்கியபோது அதன் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
படிப்பதற்கு எளிதானதாக இருக்கலாம், ஆனால் என்னுடைய ஆசிரியர் கடந்துவந்த பாதையை, முப்பதுகளில் இருக்கும் ஒரு குழந்தையின் தாயாக உள்ள என்னாலும் அதே சூழலில் உள்ளவர்களாலும் மட்டுமே அது எத்தகைய போராட்டம் மிக்க பயணமாக இருந்திருக்கும் என புரிந்துகொள்ள முடியும்.
நான் ஏன் அவரை எனது ஆசிரியர் என்கிறேன்? பெரும்பாலும் தான் கடந்து வந்த பாதையை மறந்து தனது வளர்ச்சியில் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் கவனம் செலுத்துவார்கள். எனது ஆசிரியர் உண்மையாக கற்றுக்கொள்ள ஆர்வமுடன் வருகிறவர்களை ஏற்றிவிடக்கூடியவர்.
என்னையும் அப்படித்தான் ஏற்றிவிட்டார். கல்லூரி படிப்பு முடித்து தேர்வு எழுதிய கையோடு ஊருக்குச் செல்லாமல் வேலைத் தேடிக்கொண்டிருந்தேன். நான் படித்தது காட்சி தகவல் தொடர்பியல். சில தொலைக்காட்சிகளில்கூட அப்போது பணிக்கு முயற்சித்தேன். பத்திரிகைகளிலும் முயற்சித்துக்கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் மூலமாக குமுதம் சிநேகிதியில் பணி இருப்பதாக அறிந்தேன்.
விண்ணப்பித்து அவர்கள் அழைக்கும் வரை காத்திருக்கும் பொறுமையான சூழலில் நான் இல்லை. உடனடியாக வேலை கிடைக்கவில்லை என்றாலும் கையிலிருக்கும் கொஞ்ச பணமும் போய்விடும். ஊருக்குத் திரும்பிச் செல்வதன்றி வேறு வழியில்லாத சூழல் ஏற்படும். எனவே, உடனடியாக பத்திரிகை அலுவலகத்துக்கு தொலைபேசி செய்தேன்.
ஆசிரியருடன் இணைப்பைக் கொடுத்தார்கள். ஆசிரியரிடம்தான் பேசுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. எடுத்த எடுப்பிலேயே ‘எனக்கு வேலை வேண்டும்’ என்று கேட்டேன். உடனடியாக ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டு சந்திக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. எழுதிக்கொண்டு போனேன்; எழுத்தையும் எனது உத்வேகத்தையும் பார்த்து உடனடியாக சில பணிகளைக் கொடுத்தார். அதில் தேர்ச்சி பெற்றதால் அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு பணியும் கிடைத்தது.
வாழ்க்கையில் என்னவாகப்போகிறோம் என்கிற கேள்வி இருந்த காலக்கட்டத்தில் பத்திரிகையில் எழுதுவதான உன்னுடைய பணி என கைக்காட்டிய திருப்புமுனை சம்பவமாக அது அமைந்தது. போலவே, என்னுடைய எளிமையாக எழுதுவதையும் ஒரு இதழை எப்படி நடத்துவது என்பதற்கான நுட்பங்களை அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
இதைத்தான் கற்றுக்கொடுக்க வேண்டும், இது கூடாது என ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. தன் பிள்ளைக்கு அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தந்துவிட வேண்டும் என விரும்புகிற தாயின் அன்பு அதில் இருந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும்கூட அவரிடமிருந்து கற்றுக்கொண்டது ஏராளம். உண்மையாக இருப்பது, நேர்மையாக நடப்பது, சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருவது எனபனவற்றையும் அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் இருக்கிறேன். கற்பிப்பதை அர்ப்பணிப்போடு செய்யும் அவரைப் போன்ற ஒரு ஆசிரியரை நான் மீண்டும் சந்திக்கவே இல்லை. எங்கோ ஒரு பின் தங்கிய மாவட்டத்திலிருந்து பணிக்கு வருகிற பெண்களை கற்றுக்கொடுத்து கைத் தூக்கி விடுகிற எண்ணம் ஒரு சிலருக்குத்தான் அவர். அது என் ஆசிரியரி லோகநாயகி அவர்களுக்கு இருந்தது!
இத்தனைக்கு நானோ அவரோ ஒரே சாதியை சேர்ந்தவர்களோ, ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களோகூட அல்ல. சித்தாந்த அடிப்படையிலும்கூட வேறுபட்டவர்களே. அவர் கண்ணன் மீது அளவுகடந்த பக்தி கொண்டர். இந்துமத கட்டுப்பாடுகள், சடங்குகள் மீது நம்பிக்கை கொண்டவர். நான் அப்படியே நேரெதிர். நாத்திகம் பேசக்கூடியவள். ஆனாலும், ஒருபோதும் என் மீது தனது கருத்துக்களை அவர் திணித்ததில்லை. மேலதிகாரி, ஆசிரியர் என்பதைக் கடந்து அம்மா-மகள் உறவைப் போலத்தான் இருந்தது.
ஒரு கட்டத்தில் அலுவல் ரீதியாக முரண்பட்டு, அவரிடம் சொல்லாமல் பணியை விட்டு நின்றுவிட்டேன். அது ஒரு நெருக்கடியான காலக்கட்டம். அவர் என்னிடம் பேச முயற்சித்தபோதும் நான் பேசவில்லை. அந்தக் கோபம் ஓரிரு மாதங்கள்தான் நீடித்தது என்றபோதும், இதுவரை அவரை தொடர்பு கொண்டு பேசவில்லை. என்னை அவ்வவ்போது அழுத்துகிற விசயமாக இது இருந்து வருகிறது. இந்த தருணத்தில் எனக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியரிடம் பேசாமல் நிராகரித்ததற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.
கற்றுத்தருவது மட்டுமல்ல, மன்னிப்பும்கூட ஒரு நல்லாசிரியரின் ஆகச்சிறந்த குணம்தான். என்னுடைய ஆசிரியர் ஒரு நல்லாசிரியர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை!