“அடித்து துரத்தும் வரலாறு இடதுசாரிகளுக்கு புதிதல்ல…”

amitav1

ஒரு எழுத்தாளர் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய எழுத்தை நிச்சயமாகப் படித்தாக வேண்டும். எழுத்தாளர் குறித்து மற்றவர்கள் தரும் விமர்சனம், மேலதிக தகவல்கள் அந்த எழுத்தாளரின் அறிமுகத்தை தருமேயன்றி அவையே இறுதியான மதிப்பீடுகளாக முடியாது. நம்முடைய சுய அனுபவத்தின் மூலமாகவே எழுத்தாளர் குறித்த மதிப்பீட்டினை பெற முடியும் என்பது என் கருத்து. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு இது மிகவும் அவசியம். தமிழில் எழுதும் எழுத்தாளர்களை நேர்காணல் செய்யும் அவர்கள் எழுதிய குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது படித்துவிட்டுத்தான் பேசுவது என்கிற வழக்கத்தை வைத்திருக்கிறேன். (வெகுஜன ஊடகங்களில் விரிவான நேர்காணலுக்கு சாத்தியம் இல்லை என்பதால் இந்த அளவுகோல்) அமிதவ் கோஷ் தன்னுடைய SEA OF POPPIES’ நாவலின் சென்னை வெளியீட்டுக்காக வந்திருப்பதாக பென்குயின் பதிப்பகத்தின் சென்னை பொறுப்பாளர் என்னை அழைத்திருந்தார். அவர் சொல்லித்தான் அமிதவ் கோஷ் என்கிற எழுத்தாளர் இருக்கிறார் என்பதே தெரியும். அமிதவ் குறித்த தகவல்களை இணையத்தின் மூலம் அறிந்துகொண்டபோது அவர் இந்திய ஆங்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை என்பது புரிந்தது. அவருடைய எழுத்துகளை படிக்க ஆர்வம் கொண்டபோதும் என்னுடைய ஆங்கில போதாமையின் காரணமாக குறைந்த கால அவகாசமே இருந்த நிலையில் SEA OF POPPIES’ நாவலில் ஆசிரியர் குறிப்பும் மதிப்புரையுமே படிக்க முடிந்தது. அதனாலேயே நாவல் குறித்து அதிகம் கேட்காமல் நந்திகிராம், சிங்கூர் பிரச்சினை, மகாஸ்சுவேதா தேவி என்று வேறுவேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் தயாரித்துக்கொண்டேன். அமிதவ் உடனான பேட்டி என்னளவில் திருப்தி கொடுத்தது, அவருடனான சந்திப்பு பிரமிப்பை அளித்தது. அவருடைய படைப்புகளை படிக்க முயன்று கொண்டிருக்கிறேன். அமிதவ் கோஷின் டிரைலாஜி நாவலான SEA OF POPPIES’ புக்கர் பரிசுக்கு இறுதிப் பட்டியல் வரை தேர்வானது. இந்த ஆண்டு புக்கர் பரிசு அமிதவுக்குத்தான் என்று எழுத்தாளர் வட்டாரங்களில் எதிர்பார்ப்பும் இருந்தது. இறுதி நிமிடத்தில் அர்விந்த் அடிகாவுக்கு புக்கர் கிடைத்தது. கடந்த ஜூலையில் பதிவு செய்த பேட்டி இது. சுருக்கமாகவே நான் பணியாற்றிய இதழில் வெளியானது. அவர் பேசியபோது எடுத்த குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை என்பதால் இதழில் வெளியான பேட்டியையே இங்கு கொடுத்திருக்கிறேன். நந்திகிராம் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இடதுசாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து அமிதவ்விடம் கேட்டபோது மக்களை அடித்து துரத்துவது இடதுசாரிகள் ஏற்கனவே செய்ததுதான் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு வரலாற்று உண்மையை சொன்னதற்காகவே அமிதவ் கோஷின் இந்த பேட்டியை மீள் பிரசுரம் செய்கிறேன்.அமிதவ் கோஷ்வங்காளம் உருவாக்கிய இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். மனதில் நினைப்பதைப் பளிச் என்று பேசுகிற படைப்பாளி. அமிதவ் கோஷின் ஒரு புத்தகத்துக்காக பதிப்பகங்கள் தரும் தொகை கிட்டத்தட்ட அரைக் கோடி! அமெரிக்காவில் வசிக்கும் அமிதவ், பென்குயின் பதிப் பகம் பதிப்பித்திருக்கும்சீ ஆஃப் பாப்பிஸ்‘ (Sea of poppies) என்ற புதிய நாவலின் வெளியீட்டுக்காக சென்னை வந்து இருந்தார்.

”வங்காள விரிகுடாவின் கடற்கரையிலிருந்து சைனாவுக்கு ஓபியம் கொண்டுசெல்வதுதான் பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் கொடிகட்டிப் பறந்த கடல் வாணிபமாக இருந்தது. பீகாரின் பல பகுதிகளில் இதற்காகவே கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் ஓபியம் செடிகள் வளர்க்கப்பட்டன. ஓபியம் செடிகளிலிருந்து பூக்கும் பூக்கள்தான் பாப்பி! நீல நிறத்தில் பூத்துக்கிடக்கும் இந்த பூக்களைப் பார்க்கும்போது நிலத்தில் கடல் முளைத்தது போல இருக்கும். அங்கிருந்துதான் ‘சீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தலைப்பு கிடைத்தது” வார்த்தைகளை நிதானமாக, அழுத்தமாகப் பேசுகிறார் அமிதவ்.

”மேற்கு வங்கத்தில் நடக்கும் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இடதுசாரி அரசு நடந்துகொள்ளும் விதம் சரிதானா?”

”கோவாவில் எனக்கு வீடு இருக்கிறது. கொல்கத்தாவில் உள்ளதைப் போல கோவாவிலும் சில பிரச்னைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், அரசின் அணுகுமுறையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதே ‘செஸ்’ விவகாரத்தை கோவாவில் பள்ளி ஆசிரியர்களாகவும் சாதாரண கூலிகளாகவும் இருப்பவர்கள் கையில் எடுத்துப் போராடுகிறார்கள். அங்கே மக்கள் போராட்டம் வென்றிருக்கிறது. நிலங்களைக் கையகப் படுத்தும் திட்டம் கை விடப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்க அரசு தன்னுடைய கொள்கை களை மக்கள் மேல் திணிக்கப் பார்க்கிறது. சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் நடக்கும் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டு இருக்கின்றன. மாநிலத்தின் வளர்ச்சியைத் தவறான முறையில் செயல்படுத்தப் பார்க்கிறது வங்க அரசு. வங்கப் போர் நடந்த காலத்தில் அகதிகளாக சுந்தரவனக் காடுகளில் குடியேறினார்கள் வங்க தேச மக்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற காரணம் சொல்லி, இதே வழிமுறையில் அவர்களை அடித்துத் துரத்தியே கொன்று குவித்த வரலாறு இடதுசாரி அரசுக்கு உண்டு!”

”எழுத்தாளரும் சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவி, ‘நரேந்திர மோடியைவிட மோசமானவர் புத்ததேவ்’என்று சொல்லி இருக்கிறார். இது குறித்து உங்களுடைய பதில் என்ன?”

”மகாஸ்வேதாதேவி மூத்த எழுத்தாளர். அவர் இப்படியொரு கருத்தைச் சொல்லும்போது நிறைய சிந்தித்திருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் மிகவும்மோசமான மத தாக்குதலை நிகழ்த்தியவர் நரேந்திர மோடி. அவரோடு புத்ததேவை ஒப்பிடுவது சரியல்ல. மேற்கு வங்கத்துக்குப் பொருந்தாத முன்னேற்றக் கொள்கையை எடுத்ததுதான் புத்ததேவ் அரசு செய்த மாபெரும் தவறு. முப்பது ஆண்டு காலமாக ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதன் விளைவுதான் இது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் சொல்லக் கூடாது. கருத்துச் சொல்வதிலும் சில கட்டுப்பாடுகள் தேவை. மகாஸ்வேதா தேவியைப் போல தஸ்லிமா நஸ்ரினுக்கும் இது பொருந்தும். சொல்லத் தேவை இல்லாத சில கருத்துக்களைச் சொல்லி, இப்போது ஐரோப்பிய கலாசாரத்துக்கு பொருந்திப்போக முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார் தஸ்லிமா!”

16/7/08