குளவியின் தளராத முயற்சி…

 

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஒரு சிமெண்ட் தொட்டியில் குளவி ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. விடியற்காலையில் பெய்த மழையின் சொதசொதப்பு மண்ணில் அப்படியே இருக்க, அதை நேர்த்தியாக ஒரு குயவனைப் போல குழைத்து குழைத்து தன் கூட்டை கட்டிக் கொண்டிருந்தது இந்தக் குளவி.

இந்த இடத்தில் தொட்டிச் செடிகள் வளர்க்க ஆரம்பித்த காலத்திலிருந்த இந்தக் குளவி இங்கே வசிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கலாம். மழை வரும்போதோ, செடிகள் நடும்போதோ கூடு உடைந்துவிட்டால், அடுத்த சில நாட்களில் கூடு கட்டிவிடும் இந்தக் குளவி. இந்த முறை கூடு கட்டும்போது அதை பதிவு செய்ய விரும்பினேன்.

உள்ளிருக்கும் மண்ணைக் குழைத்து, முன்பக்க கால்களால் உருட்டி மேலே கொண்டி வந்து, அதை கட்டிக்கொண்டிருக்கும் வரிசைப்படி வைத்து தன் பின் பக்கத்தால் மண்ணை அழுத்துகிறது. இதனால் கூட்டின் உள்பக்கம் நேர்த்தியாக உருளை வடிவம் பெறுகிறது. எனக்கு கிராமங்களில் மண் வீடு கட்டுவது நினைவுக்கு வந்தது. ஆனாலும் இத்தனை நேர்த்தியாக மனிதர்கள் கட்டிய மண்வீட்டை நான் பார்த்ததில்லை!
DSCN0807

DSCN0808

DSCN0819

DSCN0820

குளவி கட்டி முடித்த மண் கூடு!

 

இதை காணொலியாகவும் பதிவு செய்திருக்கிறேன். ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் பார்க்கவும்…

காடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிரபல தொடரான சந்தனக்காடு தொடரில் வீரப்பனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒகேனக்கல் காட்டுப் பகுகளில் மறைந்திருப்பதாக ஒரு காட்சி. அந்தக் காட்டுப் பகுதியைக் காட்டுவதாக சில கோப்புக் காட்சிகளைக் காட்டினார்கள். அதில் யானைகள், குரங்குகள், சிங்கங்கள் உலவுவதாகக் காட்டினார்கள். எனக்கோ ஒரே ஆச்சரியம் ஒகேனக்கல் காட்டில் சிங்கமா? மதிப்பிற்குரிய வீரப்பன்தான் தோலுக்காக சிங்கங்களை சுட்டு வீழ்த்தியிருப்பாரோ என்று தோன்றியது. தொடரை இயக்கிய கெளதமனின் காட்டுயிர் அறிவை எண்ணி வியந்தேன். அது இருக்கட்டும், சிங்கங்கள் நம் நாட்டுக்கு உரிய உயிரினங்களே இல்லை என்கிறார் பிரபல காட்டுயிர் ஆய்வறிஞர் வால்மீகி தாப்பர்.

சமீபத்தில் இந்தியாவின் முதன்மையான வரலாற்றறிஞர்களுள் ஒருவரான ரோமிலா தாப்பர் மற்றும் மொகலாய வரலாற்று ஆய்வாளர் யூசுப் அன்சாரியுடன் வால்மீகி தாப்பர் எழுதிய Exotic Aliens: The Lion & The Cheetah in India என்ற நூல் சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் நம் நிலப்பரப்புக்குரிய உயிரினங்களே இல்லை என்கிறது. பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார்கள் இவர்கள். இந்திய காட்டுயிர் சகாப்தத்தில் இது மிக முக்கியமானதொரு ஆய்வு நூலாக பார்க்கப்படுகிறது. பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்திலும் இந்தியாவில் கிர் காடுகளிலும் மட்டும்தான் சிங்கங்கள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சிங்கங்கள் உருவத்தில் பெருத்தவை. ஆசிய சிங்கங்கள் எனப்படும் இந்திய சிங்கங்கள் உடலமைப்பில் சிறியவை.காட்டின் அரசனாக நாட்டுப்புற கதைகளிலும் வலிமை, வீரத்தின் அடையாளமாக வரலாற்றிலும் சொல்லப்பட்ட சிங்கங்கள், நம் நாட்டுக்குரிய பிரத்யேக உயிரினங்கள் இல்லை என்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கலாம்.

’’உலகின் எல்லாக் கண்டங்களிலும் தொன்மையான மத வழிபாட்டுக்குரிய விலங்காக சிங்கம் இருந்திருக்கிறது. இதை வலிமையின் சின்னமாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் கொண்டாடிய பகுதிகளில் இது காட்டில் உலவியிருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கும் என்று கருதுவதற்கு வாய்ப்பில்லை. பைபிளில்கூட சிங்கங்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை பாபிலோனிய பகுதிகளில் சிங்கத்தின் எலும்புகூடுகளோ, அவற்றின் மிச்சங்களோ கண்டறியப்படவில்லை. இங்கிலாந்து, பெல்ஜிய பேரரசுகளின் சின்னமாக சிங்கங்கள் உள்ளன. ஆனால் அந்தப் பகுதிகளில் மனித குடியேற்றத்திற்கு முந்தைய கால சிங்கங்களின் புதை படிமங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை’’ என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளரும் கவிஞருமான ருத் படெல்.

exotic aliens the lion and the cheetah in india

இவருடைய கருத்துப்படியே தமிழில் சங்க இலக்கியங்கள் தொட்டு எண்ணற்ற இலக்கியங்களில் சிங்கம் தொடர்பான வர்ணணைகள், உவமைகள், வியப்புகள், போற்றுதல்கள் பதியப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் குறித்து பல்வேறு காலக்குழப்பங்கள் இங்கே உண்டு. பொதுவாக முதலாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கலாம் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.

வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போதோ அல்லது அவருடைய படையெடுப்புக்குப் பிறகோ சிங்கங்களின் வருகை நிகழ்ந்திருக்கலாம் என்கிறார். அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு கி.மு. 327ல் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் கிரேக்க, ரோமானிய மக்களுடன் வணிக தொடர்பு இருந்தது சொல்லப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரபூர்வ சான்றுகளாக புதுச்சேரி அரிக்கமேடு பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள ரோமானிய கலைப்பொருட்கள் மற்றும் நாணயங்கள் (கி.மு. 1 நூற்றாண்டைச் சேர்ந்தவை) மூலம் தெரிந்துகொள்ளலாம்.

எனவே இவ்வகையான தொடர்புகள் மூலம் சிங்கங்கள் இங்கே வந்திருக்கலாம், அல்லது சிங்கத்தைப் பற்றி வாய்மொழியாகவோ சித்திரங்கள் மூலமாகவோ பண்டைய தமிழ்மக்கள் அறிந்திருக்கலாம். வலிமையின் வீரத்தின் அடையாளமாக இருந்த சிங்கங்கள் ஏன் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் கொடிகளில் இடம்பெறவில்லை? சிங்கத்துடன் ஒப்பிட்டு பாடப்பெற்றவ மன்னர்கள் ஏன் தங்கள் கொடிகளில் சிங்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சிங்கம் இந்த மண்ணுக்குரிய விலங்கு அல்ல என்பதற்கு இதை ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம். மற்றொரு முக்கியமான ஆதாரமாக தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்லும் ஐந்திணைகளை எடுத்துக்கொள்வோம். இதில், காடும் காட்டைச் சார்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் குறிஞ்சித் திணையின் கருப்பொருள்களில் புலி, யானை, கரடி,பன்றி என்ற விலங்குகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. சிங்கத்தை வேறு திணைகளின் கருப்பொருள்களிலும் சொல்லப்படவில்லை.

DSCN0715

மாமல்லபுர சிங்க சிற்பம்

அடுத்து, பல்லவர் கால மாமல்லபுர கல்சிற்பங்களில் சிங்க உருவங்கள், சிலைகள் பல இடங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இதை சிங்கங்கள் தமிழகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கொள்ளலாம் என காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான சு. தியடோர் பாஸ்கரன் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்னும் நூலில் சிங்கங்கள் பற்றி கட்டுரையில் தெரிவிக்கிறார். பல்லவர்கள் (கிபி 6ம் நூற்றாண்டு) வடக்கிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்தாக்கத்தை வரலாற்றாசிரியர்கள் பலர் முன்வைக்கிறார்கள். சிங்கங்கள், வட இந்தியாவில் நன்கு அறிமுகமான விலங்காக இருந்திருக்கலாம், அது வழிபாட்டுக்குறியதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அதன்பேரில் நம்பிக்கை கொண்டிருந்த பல்லவர்கள் இங்கு ஆட்சி செலுத்தியபோது அவற்றை சிலைகளாக செதுக்கியிருக்கக்கூடும்.

காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி, சிங்கங்கள் 6000 வருடங்களுக்கு முன்பு வடக்கு ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவிற்குள் வந்திருக்கலாம் என்கிற கருத்தை முன்வைக்கிறார். பண்டைய நகரமான பால்க் (ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பகுதி)லிருந்து கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தவை என்கிறார் வால்மீகி தாப்பர். காலங்கள் வேறுபட்டாலும் இருவருடைய முடிவுகளும் சிங்கங்கள், இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டவை என்பதை சொல்கின்றன. எதற்காக சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டன? அரசர்கள், குறுநில மன்னர்கள் தங்களுக்கு கட்டுப்பட்ட வனப்பகுதிகளில் செல்லப்பிராணிகள் போல் விட்டு வளர்ப்பதற்காக கொண்டுவந்தனர். 17ம் நூற்றாண்டில் மொசாம்பிக் காடுகளிலிருந்து அதிக அளவிலான சிங்கங்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் வால்மீகி. சிவிங்கிப்புலிகளை மொகாலய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளிலேயே செல்லப்பிராணிகளாக வளர்த்திருக்கிறார்கள்.

அக்பரிடம் 1000 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக அக்பர் நாமா என்கிற நூல் கூறுவதாக கட்டுரை ஒன்றில் சு. தியடோர் பாஸ்கரன் தெரிவிக்கிறார். அதேபோல் திப்பு சுல்தானிடம் 16 சிவிங்கிப்புலிகள் இருந்ததாகவும் அதே கட்டுரையில் சொல்லியிருக்கிறார். சிறுத்தை சற்றே பெருத்த உருவமும் உயரத்தில் சற்றும் குறைந்தும் இருக்கும். சிறுத்தை நீண்டு உயர்ந்த ஒல்லியான உடல்வாகைக் கொண்டது. இப்படியான உடல்வாகால் சிவிங்கிப்புலியால் மிக வேகமாக ஓட முடிகிறது. இந்த காரணத்தால்தான் இந்திய மன்னர்கள் காட்டில் வேட்டையாடச் செல்லும்போது சிவிங்கிப்புலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வதை விரும்பியிருக்கின்றனர். சிங்கங்களைப் போலவே சிவிங்கிப்புலிகளும் வேற்று நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என்பதற்கான வலுவான ஆதாரங்களாக இவற்றைக் கொள்ளலாம்.

FourSeals

ஹரப்பா முத்திரைகள்

இந்த நூலில் ரோமிலா தாப்பர், ’’சிங்கங்கள் இந்த மண்ணுக்குரிய தனித்துவமான விலங்காக இருந்திருக்கும் பட்சத்தில் இந்தியாவின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான ஹரப்பா முத்திரைகளில் புலி, காளை, காண்டாமிருக உருவ முத்திரைகள் உள்ளதுபோல், சிங்க முத்திரை ஏன் இடம் பெறவில்லை? 8லிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் சிங்க உருவங்கள் எதுவும் காணப்படவில்லை’’ என்கிறார். ’’புலிகள், சிறுத்தைகளோடு சிங்கம், சிவிங்கிப்புலிகளும் நம் காடுகளில் திரிந்திருக்குமென்றால், புலிகள், சிறுத்தைகள் மட்டும் இன்றுவரை எப்படி நிலைத்திருக்க முடிகிறது. இவற்றின் வலிமையோடு ஒப்பிடும்போது சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் வலிமை குறைந்தவை அல்ல.  எனில் எப்படி அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன?’’ என்கிற கேள்வியை முன்வைக்கிறார் வால்மீகி. ’

’குஜராத்தில் ஜூனாபாத் நவாப், சிங்கங்களைப் போற்றி வளர்த்தார். தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து வேறுபகுதிகளுக்கு சிங்கங்கள் கொண்டு செல்லப்படுவதை தடை செய்தார். இன்றைய குஜராத் ஆட்சியாளரும் சிங்கங்களை தம் மாநிலத்தின் சொத்தாகக் கருதுகிறார். மத்திய பிரதேச மாநில வனப்பகுதியில் சிங்கங்களைக் கொண்டு போய் விட்டு, அவற்றைப் பெருக்கும் திட்டத்தை எதிர்த்தார் மோடி. இந்த விஷயத்தில் முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களின் நிலைபாடு ஒன்றாகவே இருக்கிறது’’ என்கிறார் வால்மீகி.

இந்த நூலின் தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகளில் சிங்கம் மற்றும் சிவிங்கிப்புலிகள் குறித்து மறுவாசிப்பு அவசியமாகிறது. இந்த நூலை மறுத்தோ, ஆதரித்தோ பல்வேறு தடையங்கள் கிடைக்கலாம். இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தில் ’’இருக்கவே இருக்காது!’’ என தன்னுடைய வியப்பைத் தெரிவிக்கிறார் சான்சுவரி ஏசியா ஆசிரியர் பிட்டு சாஹல். உண்மை சில சமயங்களில் வியப்பையும் ஏற்படுத்துவதுண்டு. Exotic Aliens: The Lion & The Cheetah in India  புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

எல்லாம கர்மவினை!

‘கர்மவினை’ போன்ற பல அறிவியல் அனுகூலங்களை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்னபிறகும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் முன்னோர்களால் ஏன் நிகழ்த்தமுடியவில்லை?

journalism copy

‘கர்மவினை’ பற்றி அடிக்கடி நண்பர் ஒருவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார். அதாவது நியூட்டன் தன்னுடைய ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’ என்ற மூன்றாம் விதியை 1687ம் ஆண்டில் வெளியிடுவதற்கு முன்பே நம் முன்னோர்கள் ‘கர்மவினை’ என்ற ஒற்றை வார்த்தைக்குள்(அதாவது ‘கர்மம்’ என்றால் செயல், ‘வினை’ என்பது செயலுக்கு எதிராக வருவது) சொல்லிவிட்டார்கள் என்பது அவரின் விளக்கம். தட்டையாக எடுத்துக்கொள்ளும்போது இது நம்மையெல்லாம் பெருமையில் திக்முக்காட வைத்துவிடும்! நம் தாத்தாக்கள் (பாட்டிகள் இதில் சேர்த்தியில்லை) எப்படி யோசித்திருக்கிறார்கள் பாருங்கள் என்று மயிர் கூச்செறிய பேசத்தோன்றும். பேசமட்டுமே செய்வது நமக்கே உரிய சிறப்பு குணாதிசயம்! இப்படிப் பேசுபவர்கள் இன்று பல்கிப் பெருகிவிட்டார்கள்.

எல்லாம் சரிதான் ‘கர்மவினை’ பற்றி சொன்னவர்களால் ஏன் அதை அறிவியல் ரீதியாக அதை நிரூபிக்க முடியலில்லை?

‘கர்மவினை’ போன்ற பல அறிவியல் அனுகூலங்களை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்னபிறகும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் முன்னோர்களால் ஏன் நிகழ்த்தமுடியவில்லை?

இன்னொரு விஷயம்… ஒரே விதமான சிந்தனைகள் பல பேருக்கு ஒரே சமயத்தில் தோன்றுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த சிந்தனைக்கு யார் முதலில் நடைமுறை வடிவம் கொடுக்கிறார்கள் என்பதே முக்கியம். அந்த வகையில் நம் முன்னோர்கள் எல்லாம் நல்ல சிந்தனாவாதிகள் மட்டுமே. இதுபோன்ற சிந்தனைகள் உலகம் முழுக்க உண்டு. ஆப்பிரிக்க பழங்குடிகளிடம் உண்டு, இன்காக்களிடம் உண்டு, ஆஸ்திரேலிய  அபராஜினல்களிடமும் உண்டு.

‘கர்மவினை’ பற்றி சிந்தித்தவர்கள்தான் மக்களை பகுத்து, இவர்கள் இதை மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற வருணாசிரம கட்டுப்பாட்டை விதித்து, அவர்களை சிந்திக்கவே விடாதபடி செய்துவிட்டவர்கள். இதுதான் பெருமைபடுவதற்குரிய விஷயமா என்று சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

சிலந்திகளின் படையெடுப்பு பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?!

பருவநிலை மாற்றத்தை இயற்கை நமக்கு சமீபகாலமாக பல்வேறு விஷயங்கள் வழியாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு இந்த வருடம் பருவமழை தப்பியது, அடுத்த உதாரணம் அதிகப்படியான பனிப்பொழிவு. இவையெல்லாம் நம்மில் பெரும்பாலனவர்களின் பார்வைக்கு வருபவை. ஆனால் பருவநிலை மாற்றம் இயற்கையின்

IMG_0743

வேரடி மண்ணில் அசாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சென்ற மாதம் சென்னை பழவேற்காடு பகுதிக்கு வரும் பறவைகளின் இயல்புகளை படிப்பதற்காக சென்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஒரு  அறிகுறியை அங்கே கண்டிருக்கிறார்கள். பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிலந்தி வலையாக இருந்திருக்கிறது.

IMG_0713

‘‘அப்படியொரு காட்சியை இத்தனை வருடங்களில் நாங்கள் பார்த்ததே இல்லை. மரங்கள், புதர்கள், நெல் வயல்கள், தரைப் பகுதிகளில்கூட சிலந்தி வலைகளைப் பார்த்தோம். சிலந்திகளை சாப்பிடும் உயிர்கள் அந்தப் பகுதியில் குறைந்திருக்கலாம். இயற்கையின் உணவுச் சங்கிலியில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதே இப்படி சிலந்திகள் பெறுகியதற்குக் காரணம். எந்தவொரு உயிரனமும் அதிகப்படியாக இருந்தால் அது சூழலியலுக்கு ஆபத்தாகத்தான் முடியும்’’ என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் திருநாரணன்.

IMG_0724

ஆபத்தின் அறிகுறியாக இதை கருதி, அரசு அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

படங்கள்: நேச்சர் டிரஸ்ட்.

குதிரை வீரன் பயணம்

சமீபத்தில் கௌதம சித்தார்த்தனிடம் ‘உன்னதம்’ மீண்டும் எப்போது வரும் என்று கேட்டதற்கு இனி கொண்டுவரும் எண்ணமே இல்லை என்றார்.

பெண்ணிய, தலித் மற்றும் நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம் குறித்த பதிவுகளைத் தாங்கி வந்த உன்னதம், இனி வரப்போவதில்லை’ என சொன்னது வருத்தத்தைக் கொடுத்தது. அதேவேளையில் ‘இனி வருவதற்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லப்பட்ட சிற்றிதழ், மீண்டும் அச்சேரியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த சிற்றிதழ் ‘குதிரை வீரன் பயணம்’.

புத்தகக்கடையில் ஏதோ ஒரு தேடலில் பார்த்த ‘குதிரை வீரன் பயணம்’ பெயரில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் ஈர்ப்பை உண்டாக்கியது. வேட்டைபெருமாள் எழுதிய சிறுகதை,, பெயர் தெரியாத ஒரு எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் இன்னமும் மனதில் நிற்கின்றன. அதன் ஆசிரியர் யூமா. வாசுகியை ‘குங்குமம்’ இதழுக்காக சந்தித்தபோது, அவர் பழைய இதழ்கள் இரண்டு, மூன்றைக் கொடுத்தார். பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய விஷயம் உள்ளவையாக அந்த இதழ்கள் இருந்தன. இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சந்திப்பில் ‘குதிரை வீரன் பயணம்’ மீண்டும் வருமா? என்று கேட்டதற்கு ‘வாய்ப்பில்லை’ என்றார். இப்போது மீண்டூம் குதிரை வீரன் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

இப்போது குதிரை வீரன் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி இருக்கிறார். படிப்பதற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்பு. முந்தைய இதழ்களை விஞ்சும் உள்ளடக்கம்.
முதலாவது, எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வேயின் நேர்காணல். இதை நேர்காணல் என்று சொல்ல முடியாது. கட்டுரையும் நேர்காணலும் கலந்த வடிவம். ரொம்ப ஈர்ப்பான ஒரு கதையாடலைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது இந்த எழுத்து வடிவம்.

ஹெமிங்வேயை நேர்காணல் செய்ய தான் மேற்கொண்ட பிரயத்தனங்களை, ஹெமிங்வே பற்றி அவர் மேற்கொண்ட விசாப்புகள் இவற்றின் ஊடே, அவரின் நேர்காணலையும் பதிவு செய்திருக்கிறார் மில்ட் மச்லின். மொழிபெயர்ப்பும் அருமை. ஹெமிங்வேயின் புகழ்பெற்ற ‘கிழனும் கடலும்’
(ஆங்கிலத்தில் படிக்க இங்கே)

நாவலில் வரும் கிழவன் உண்மையான கதாபாத்திரமா என்ற கேள்விக்கு, சுவாரஸ்யமான பதில் தந்திருக்கிறார் ஹெமிங்வே.

அடுத்தது…‘என் வாழ்க்கை தரிசனம்’ என்ற பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்பின் கட்டுரை. அருமையான சூழலியல் கட்டுரை. மலையாளத்திலிருந்து இந்தக் கட்டுரையை கதிரவன் மொழிபெயர்த்திருக்கிறார். ஜான்சி சொல்லிச் செல்லும் தரிசனத்தை சூழலியலில் ஆர்வமுள்ள அத்தனைபேரும் தங்கள் வாழ்விலும் கண்டிருப்பார்கள். எனக்குப் பிடித்த இந்த வரிகள்..

‘‘மனிதர்களைப் பொறுத்தவரை கொஞ்சும் பெரிய கண்டுபிடிப்புகள் உண்டு. ஒள்று நெருப்பைக் கண்டுபிடித்தது. இன்னொன்று சக்கரத்தைக் கண்டுபிடித்தது. மூன்றாவதாக மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆயுதங்கள் அல்ல… நவீன முறையிலான விவசாயச் செயல்பாடுதான். அதாவது விவசாயப் புரட்சி’’

ஈழக் கவிஞர் சு. வில்வரத்னம் படத்தை அட்டையில் தாங்கி வந்திருக்கிறது. அவரின் ‘தோப்பிழந்த குயிலின் துயர்’ கவிதை இதழில் இடம்பெற்றிருக்கிறது. பனைமரங்களைக் கொண்ட நிலத்தை விட்டு விலகியிருக்கும் தன்னுடைய பிரிவுத் துயரைச் சொல்கிறது இந்தக் கவிதை.

நிக்கோலஸ் க்யுல்லன் என்ற க்யூபக் கவிஞர் பற்றிய அறிமுகத்தோடு, அவருடைய கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. கூத்தலிங்கம். கண்ணகன், பிரான்சிஸ் கிருபா கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருள்ளன.
புகழ்பெற்ற எழுத்தாளரான ஓம்பிரகாஷ் வால்மீகியின் சவ ஊர்வலம் என்கிற சிறுகதை இடம்பெற்றிருப்பது இதழுக்கு சிறப்பு சேர்க்கிறது.

‘ஆதவனின் முகம் அணிந்த சண்டை விளையாட்டுக் கவிஞன்’ என்ற தலைப்பில் கே.பி. ராமகிருஷ்ணனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் பேயாளன். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு டூப் போட்டவர் இவர். நேர்காணல் மூலம் ஏராளமான விஷயங்கள் பதிவாகியுள்ளன.

மறைந்த தோழர் என். வரதராஜனுக்கும் பத்திரைகையாளர் கிருஷ்ணா டாவின்சிக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு, இனி காலாண்டிதழாக குதிரை வீரன் பயணம் வரும் என்றிருக்கிறார் யூமா. வாசுகி. கலை, இலக்கியம், அரசியல், சமூகம் எல்லாமும் நம் களம் என்கிறார். செறிவுமிக்க ஒரு சிற்றிதழ் மீண்டும் வருவது தமிழிலக்கிய வாசகர்களுக்கு இப்போது தேவையும்சுட.
இலக்கியத் தேடல் உள்ளவர்கள் தொடர்புகொள்ள
யூமா வாசுகி (9840306118)