மேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. இல்லையெனில் பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் அரசியல்வாதியாகவும் மேட்டுக்குடியினரின் சிநேகிதனாகவும் கல்விக்கென எவ்வித முன்னெடுத்தலையும் செய்யாத சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்திய வரலாற்றில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு ஆசிரியர் உண்டெனில் அவர், சாவித்ரிபாய் புலெ ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரே கல்வி சார்ந்த அனைத்துக்கும் முன்னோடி. என்னுடைய 30 ஆண்டு கால வாழ்நாளில் நேற்றுதான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இது என் அறியாமை அல்ல, எனக்கு சொல்லித்தந்த புரட்சியாளர்கள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார்? ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார். இப்போது சொல்லுங்கள் யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று!
1831ஆம் ஆண்டு, ஜனவரி 3ம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தவர் சாவித்ரிபாய். தன்னுடைய 9 வயதில் மகாத்மா ஜோதிபா புலெவின் துணைவியானார். ஜோதிபா புலெதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்ற சாவித்ரி, பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியை ஆனார். முதல் பெண்களுக்கான பள்ளியை 1848ல் தொடங்கினார். பெண்களுக்காக மட்டுமல்லாமல் முந்தைய பத்தியில் சொன்னதுபோல அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட்டார். (அந்தக் காலக்கட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்திய பள்ளிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்!)
கல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார்.
கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது. இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது. இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர்.
இதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். இன்னும் இவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பெண்கள் தினத்தில் ஒரு உண்மையான பெண்ணிய போராளியைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
சரி…இத்தனை சமூக மாற்றங்களுக்கு முதன்மையானவராக முன்னோடியாக இருந்தவரை ஏன் இந்திய வரலாறு மறைக்கிறது? ஏனெனில் இந்திய வரலாறு மேட்டிக்குடி ஆண்களால் எழுதப்படுகிறது. அதில், பெண்களுக்கு கல்வி வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேண்டும், பாலியல் சுரண்டல்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிகாலம்வரை குரல் கொடுத்த சாவித்ரிபாயின் வரலாறு மறைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.. அவர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த விடிவெள்ளி என்பதே அது!