சாகித்ய அகாடமியை துறக்க தமிழ் எழுத்தாளர்கள் ஏன் முன்வரவில்லை?

Shashi Deshpande

பகுத்தறிவுவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரும் தாத்ரியில் முகமது அக்லாக்கும் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தனது சாகித்ய அகாடமி விருதை திரும்ப ஒப்படைத்தார் பிரபல எழுத்தாளர் நயன்தாரா செகல். இதேபோன்று கவிஞர் அசோக் பாஜ்பாயியும் விருதினை திருப்பி அளித்தார்.

பகுத்தறிவாளர் கல்புர்கி கொலை உண்டதை அடுத்து, இதன் பின்னணியில் இருக்கும் இந்துத்துவ அரசியலைக் கண்டித்து, கர்நாடகாவில் ஆறு எழுத்தாளர்கள் மாநில அரசு தங்களுக்குக் கொடுத்த விருதினை திருப்பி அளித்திருக்கிறார்கள்.

பகுத்தறிவுக்குப் பெயர்போன தமிழகத்தில் சாதியமும், மத சகிப்பின்மையும், உணவு அரசியலும் அதிகரித்துவரும் வேளையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை மத்திய அரசுக்குக் காட்டுவார்களா? என்கிற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கிறது.

மோடியின் முகத்தில் இந்த விருதை விட்டெறியும் எழுத்தாளர்களுக்கு, அந்த விருதுடன் தரப்படும் பணத்தை தாங்கள் உண்டியல் ஏந்தி வசூலித்துத் தருவதாக அறிவித்திருக்கிறார்கள் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கருணாவும்.

“தமிழ்நாட்டில் நேரடி படைப்புக்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் 12 பேருக்கும் மேல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்கள். மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் உணவு உரிமைக்குள் உள்ள தலையீட்டைக் கண்டித்தும் அறவுணர்வோடு நியாயமான கோபத்தை, எதிர்ப்பை இவர்கள் விருதை திருப்பித் தருவதன் மூலம் காட்டலாம்” என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

இந்நிலையில் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி தன்னுடைய முகப்புத்தகத்தில், “மோடி அரசின் மதவெறி ஆதரவைக் கண்டித்து நயன்தாராவும் அசோக் பாஜ்பாயியும் சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பித் தந்ததைப் பாராட்டும் தமிழக முற்போக்குத் தோழர்கள் பாராட்டுவது போதாது. தமிழக இடதுசாரி எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன் முதலானோரையும் விருதைத் திருப்பித்தரச் சொல்லவேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து, முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ச. தமிழ்ச்செல்வனிடம் பேசியது.

“சாகித்ய அகாடமி விருதை இந்த எழுத்தாளர்கள் திருப்பித் தந்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், நாங்கள் இதை ஒரு போராட்ட வடிவமாகப் பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். சாதியத்தால் தாக்குதலுக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்குத் தொடுத்து போராடியதும் நாங்கள்தான். அத்தனை போராட்ட வடிவங்களிலும் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். இந்தப் போராட்ட வடிவங்களில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாதவர்கள், விருதைத் திருப்பித் தந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கல்புர்கி படுகொலை தொடர்பாக கிட்டத்தட்ட 100 இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்தியிருக்கிறது தமுஎச. அதனால் அமைப்பு ரீதியாக விருதைத் திருப்பித் தரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதில்லை. சாகித்ய அகாடமி மட்டுமல்ல, மத்திய அரசின் விருதுகள் அனைத்து துறையினருக்கும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் எழுத்தாளர்களை மட்டும் திருப்பித் தர வலியுறுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை, ஏனென்றால் நாங்கள் இந்த விஷயங்களுக்காக எப்போதுமே போராடிக்கொண்டுதானே இருக்கிறோம். ஒருவேளை எங்கள் அமைப்பைச் சேர்ந்த, சாகித்ய அகாடமி விருது பெற்ற மூவரும் விருதைத் திருப்பித் தர முன்வந்தால் வரவேற்போம். அவர்களால் பணமுடிப்பை திருப்பித் தர இயலாதபட்சத்தில் அந்த பணத்தை நாங்கள் தரவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற சில எழுத்தாளர்களை இதுகுறித்து கருத்து கேட்க அணுகியது. சிலர் இதுப்பற்றி வேண்டாமே என்று சொன்னார்கள். சிலர், பிறகு நானே கூப்பிடுகிறேனே என சொல்லி அழைப்பைத் துண்டித்தார்கள்.

 

 

ஃபீனிக்ஸாய் மீண்டெழுவாரா பெருமாள் முருகன்!

மாதொருபாகன் என்னும் பெயரைக்கேட்டதும் நண்பர் ஒருவர், சைவ நெடியடிக்கும் தலைப்பு என்றார். உண்மைதான். இது சிவனின் பெயர்களில் ஒன்று. பெண்ணுக்குத் தன் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீசுவர வடிவத்தை குறிக்கும் பெயர். அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருளைத் தருவன. எனினும் எனக்குள் ஒருவித மயக்கத்தை உண்டாக்கிய பெயர் ‘மாதொருபாகன்.’ பொதுவாக நாவலை முடித்த பிறகே தலைப்பை யோசிப்பது என் வழக்கம். ஆனால் இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பே இத்தலைப்பு எனக்குள் தோன்றிவிட்டது. எனினும் அதை ஒத்திவைத்துவிட்டு பல தலைப்புகளை யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதற்கு ஈடான நிறைவை வேறு எதுவும் தரவில்லை.

மூலவர் மாதொருபாகனாகச் சிவன் காட்சித் தருவது திருச்செங்கோட்டில் மட்டுமே. இவ்வுருவம் இக்கோயிலில் அமைய ஊகத்திற்கு உட்பட்டும் ஊகத்திற்கு அப்பாற்பட்டும் காரணங்கள் இருக்கலாம். சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம். வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒரு வடிவில் கோயில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. மலைஅடி வாரம் முதல் உச்சி வரை மக்கள் குறை தீர்க்கும் படையாகத் தெய்வங்கள் அணிவகுத்திருக்கின்றன. அந்தந்தச் சமயத்திற்கு ஏற்றாற்போலத் தெய்வங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்ட போது எனக்குக் கிடைத்தவை பல. படைப்பு உந்துதல் கொடுத்த விஷயங்களில் ஒன்று இந்நாவல். நான் சேகரித்தவற்றை விரிவாகப் பயின்று கொண்டிருக்கிறேன். ஆய்வின்போது நான் பெற்ற பேரனுபவங்கள் சில என்னுள் ஊறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் வரலாறு சார்ந்து விரிவாக எழுதும் தூண்டல் ஒன்றும் இருக்கிறது. அதற்குச் சில ஆண்டுகள் எனக்குத் தேவைப்படக்கூடும்.

– மாதொருபாகன் நாவல் முன்னுரையில் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

இப்படி பெருமிதத்துடன் எழுதிய நாவலோடு தன் எழுத்துப் பயணத்தை முடித்துக் கொள்வார் என எழுத்தாளர் பெருமாள் முருகனும்கூட நினைத்திருக்க மாட்டார்.

நாவலில் தங்கள் இனத்துப் பெண்கள் இழிவாகச் சித்தரிக்கப் பட்டுள்ளதாக சில சாதி அமைப்புகள் நாவல் எரிப்புப் போராட்டத்தை நடத்தின. பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என அவரை நிர்பந்தித்தன. சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக மிகப்பெரும் எழுத்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கட்ட பஞ்சாயத்துகளும் நடந்தன. அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினரும் சாதி அமைப்புகளால் கடுமையான அவதூறுகளுக்கு உள்ளானார்கள்.

இறுதியில், ‘எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்’ என அறிவித்தார். சர்ச்சைகளும் ஓய்ந்தன.

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு, ‘மாதொருபாகன்’ நாவலுக்கு கிடைத்திருக்கும் சமன்வய் விருதையொட்டி பொதுவெளியில் அறிக்கை மூலம் பேசியிருக்கிறார்.

பெருமாள் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்விருது நெடும் இலக்கியப் பாரம்பரியம் கொண்ட செம்மொழி ஆகிய தமிழுக்குக் கிடைத்திருக்கும் நவீன அங்கீகாரம் ஆகும். துரதிர்ஷ்டம் நிறைந்திருக்கும் இச்சூழலில் என் தாய்மொழி அடைந்திருக்கும் இப்பேறு அதன் வரலாற்றில் துருத்தும் மருவாக அல்ல, ஒளிரும் மணியாக அமையும் என்று நம்புகிறேன். இவ்விருதுக்குக் காரணமான அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இயற்கையின் இயல்புக்கு மாறாகப் பெருமாள் முருகனின் நிழலாக மட்டுமே தங்கி உலவும் நான் பெருமைமிகு தருணமாக இதை உணர்கிறேன். இவ்விருதை எல்லாம் வல்ல இறையாகிய மாதொருபாகனின் பாதக் கமலங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பல மாதங்களுக்குப் பிறகு ஊடகங்களில் அறிவிப்பு வழியாக பேசியிருக்கும் பெருமாள் முருகன், இனி எழுதுவதில்லை என்ற முடிவை மாற்றிக்கொள்வாரா? பெருமாள் முருகனின் பெருவாரியான நூல்களை வெளியிட்டிருக்கும் காலச்சுவட்டின் பதிப்பாளர் கண்ணனிடம் இது குறித்துக் கேட்டபோது.

“அவர் எழுதுவாரா என்பது குறித்து தெரியவில்லை. எழுதுவீர்களா என நானும் கேட்கவில்லை. சென்னை வந்த பிறகு அவர் அமைதியான மனநிலைக்குத் திரும்பியிருக்கிறார். இப்போது அவர் மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.” என்றார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரைத் தாக்கிய சாதியம், கோகுல்ராஜ் என்ற மாணவரின் படுகொலை, விஷ்ணுப் பிரியா என்ற காவல் அதிகாரியின் மரணம் வரை இழுத்துச்சென்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் கிளம்பிய இந்த சாதியத்தை உணர்ந்ததால்தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்தார் என்கிறார் கண்ணன்.

“மாதொருபாகனுக்கு எதிராக சாதிய அமைப்புகள் கிளம்பியபோது பெருமாள் முருகன் தேவையில்லாமல் அச்சப்படுகிறாரோ என பலர் பேசினர். சூழல் மோசமாகிவிட்டதை உணர்ந்ததால்தான் அவர் அப்படி அச்சப்பட்டார். இன்று அது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது” என்றவர், பெருமாள் முருகனின் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் என்ற முறையில் தங்களையும் சிலர் மிரட்டினார்கள் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

“இந்த பிரச்சினை கிளம்பிய நேரத்தில் காலச்சுவடு அலுவலகத்துக்கு நிறைய மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தன. என்னிடம் பேச பலமுறை முயன்றார்கள். என் செல்பேசி எண்ணை எப்படியோ தெரிந்துகொண்டு ஒருவர் அழைத்தார். ‘வணக்கம் இந்து துரோகியே!’ என்பதுதான் அவர் பேசிய முதல் வார்த்தை. நான் கடுமையாக பேசிவிட்டு பேசியை அணைத்தேன்.

சேலம் ஆர்எஸ்எஸ் என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்த ஒருவர், என் மனைவியின் முகநூல் பக்கத்தில் ‘திருச்செங்கோடு கோயிலில் நடைபெறும் திருவிழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கமெண்ட் போட்டிருந்தார். இப்படி அந்த சந்தர்ப்பத்தில் நிறைய சந்திக்க வேண்டியிருந்தது” என்கிறார்.

இன்னும் சில நாட்களில் எழுத்தாளர் பெருமாள் முருகன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் எழுதுவது குறித்து அவர் பேசுவார் என சொன்ன கண்ணன், தற்போது பெருமாள் முருகனின் நூல்களை மறுபதிப்பு செய்வதையும் நிறுத்தி வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன், வழக்கு முடியும்வரை பெருமாள் முருகன் பொதுவெளியில் பேசுவதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். வழக்கின் முடிவைப் பொறுத்தே அவர் எழுதுவாரா, இல்லையா என்பது தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் கிடைத்திருக்கும் மன அமைதியும் விருது பெற்றிருக்கும் மகிழ்ச்சியும் அவரை ஃபீனிக்ஸ் பறவைபோல சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்!

வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா? பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி!

பரமார்த்த குரு கதை:முன்னோடி முயற்சியாகுமா? என்ற தலைப்பில் எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை அவருடைய வலைத்தளத்தில் படித்தேன். பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை ஒட்டி சில விளக்கங்களையும் சில வினாக்களையும் முன்வைக்கிறேன். இந்தக் கட்டுரையின் ஊடாக வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் தமிழின் முன்னோடி முயற்சியில்லை என்று பெருமாள்முருகன் நிறுவ முயல்வது தெரிகிறது.

”வரலாற்றில் இவ்விதம் வைக்கப்படும் அளவுக்கான நூல்தானா அது?அப்படியானால் அது எங்கே கிடைக்கிறது? நூலகங்களில் பார்க்க முடியுமா?நூலில் மொத்தம் எத்தனை கதைகள் உள்ளன? பரமார்த்த குரு கதை என்னும் பெயரில் பாட நூல்களில் காணப்படும் கதைகள் வீரமா முனிவர் எழுதியவையா? நூல்களாக வெளியிடப்பட்டு இன்று புத்தகச் சந்தையில் கிடைப்பவை நம்பகமானவையா? இத்தகைய ஐயங்களுக்குப் பதில் சொல்வது என்பது வருத்தப்படுவதாகவே அமையும்.

  மூன்று நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அந்நூலைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. இது தொடர்ந்து அச்சில் இல்லாமைக்கான காரணம் பற்றியும் ஆராய வேண்டும். சிறுவர் கதை நூலாக அதன் தளம் சுருங்கிவிட்ட வரலாறும் பேசப்பட வேண்டும். பரமார்த்த குரு கதை பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடப் போதுமான அளவு இல்லை. இக்கதை தழுவல் என்றும் இலத்தீன் – தமிழ் அகராதியின் பின்னிணைப்பாக அவரால் வெளியிடப்பட்டது என்றும் 1728ஆம் ஆண்டு புதுச்சேரியில் அச்சிடப்பட்டது என்றும் கிடைக்கும் தகவல்கள் போதுமானவையாக இல்லை.” என்கிறார் பெருமாள்முருகன் அந்தக்கட்டுரையில்.
தமிழ் இலக்கியம் பயின்றவரான பெருமாள்முருகன், பரமார்த்த குரு கதைகளை முழுமையாக படிக்காமலேயே, இதுதான் பரமார்த்த குரு கதைகள் என்பதில்கூட அவருக்கு நிறைய சந்தேகம் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை நிறுவ முயல்வது எவ்வகையான ஆய்வுத்தன்மை என்கிற கேள்வி எழுகிறது.
paramartha guru kathaigal
1800களில் வெளியான பரமார்த்த குரு கதைகள் என்ற நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய பெஞ்சமின் பபிங்டன் என்பவர் முன்னுரையுடன் இதை பதிப்பித்திருக்கிறார். பெஞ்சமின் குறுகிய காலமே அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் பணியாற்றியிருக்கிறார். பிறகு, இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்றிருக்கிறார். இவர் இங்கிருந்த 1812லிருந்து 1830வரையான காலகட்டத்திலேயே இந்த நூல் வெளியாகியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். இவர் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை முக்கியமான ஆவணம் என்பேன். இதில் வீரமாமுனிவர் குறித்தும் பரமார்த்த குரு கதைகள் குறித்தும் இந்த கதைகள் எழுதப்பட்ட தமிழ்மொழி குறித்தும் எழுதியிருக்கிறார். இந்த நூலின் முகப்பில் இருக்கும் தமிழ் மொழியில் ஒரு கதை என்கிற வரிகள், இந்தக் கதைகள் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதல்ல என்கிற கருத்துக்கு வலுசேர்க்கின்றன. இந்த நூலில் மொத்தம் எட்டுக் கதைகள் மட்டுமே உள்ளன. வீரமாமுனிவர் இவற்றை மட்டும் தான் எழுதினாரா, இன்னும் சிலவற்றையும் எழுதியிருக்கிறாரா என்பதில் மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, பின்னாளில் வந்த கதைசொல்லிகள் வீரமாமுனிவரின் அடியொற்றி பரமார்த்த குரு கதைகளை விரிவாக்கியிருக்கிறார்கள். வீரமாமுனிவரின் மொத்த கதைகளும் கிடைக்கும்பட்சத்தில் இந்த மாதிரிகளை இனம்கண்டுவிடலாம்.
1720களில் எழுதப்பட்ட பரமார்த்த குரு கதைகள், கிட்டத்தட்ட 1820வரைக்கும்கூட பேசப்பட்ட படைப்பாக இருந்திருக்கிறது என்பதை பெஞ்சமினின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கா.சிவத்தம்பியும் இரா.தண்டாயுதமும் சொன்னதுபோல இது தமிழ் படைப்பிலக்கியத்துக்கு அடிக்கல் இட்ட படைப்பாக இது இருப்பதற்கு சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளன. ஆகவே  பெருமாள்முருகனின் கருத்தை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

இலக்கிய உலகின் மர்ம யோகி!

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

ன் கவிதையைப் போலவே காற்றின் திசை வழி பறந்து, எங்கெங்கெல்லாமோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோன வாழ்க்கை கவிஞர் பிரமிளுடையது. இலக்கிய உலகின் மர்மயோகி. சுடும் விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய விமர்சனங்களின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கமுடி யாமல் பிரமிளின் படைப்பாற்றல் குறித்து இலக்கியப் பரப்பில் போதுமான விவாதங்கள் நிகழாமலேயே இருக்கின்றன. ஏப்ரல் 20ல் தொடங்கும் பிரமிளின் 70வது பிறந்த தினத்தைக் கொஞ்சம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார் அவரது நண்பர் காலசுப்ரமணியம். பிரமிளின் புத்தகங்களை மறுபதிப்பு செய்யவும் அவரது ஓவியங்களைக் கண்காட்சிப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.

Piramil

அதுவரை தமிழில் வந்துகொண்டு இருந்த கவிதைகளிலிருந்து மாறுபட்டு, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தன பிரமிளின் கவிதைகள். நெருப்பைத் தீண்ட அஞ்சுவதைப் போல இலக்கியவாதிகள் அவரை நெருங்கத் தயங்கினார்கள்என்கிறார் காலசுப்ரமணியம்.

 

இலங்கை திரிகோணமலையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவருக்குப் பள்ளி இறுதி வரைதான் படிப்பு சாத்தியப்பட்டது. ஆனால், அங்கிருந்தபடியே அவர் தமிழ்நாட்டு இலக்கிய நடப்புகளை அறிந்துகொண்டு இருக்கிறார். 19 வயதிலேயே இலக்கிய இதழ்களில் அவர் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்ல் ஓவியம் கற்றிருக்கிறார். ஒரே உறவான அம்மாவும் இறந்த பிறகு, இந்தியா வந்த பிரமிள், மதுரை, சென்னை, டெல்லி எனச் சுற்றியலைந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டார். பிரான்சுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா வந்தவருக்கு அது இறப்பு வரை சாத்தியப்படவில்லை.

’’காசுக்காக எழுதமாட்டேன்’’ என்று பிடிவாதமாக இருந்தார். நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகமான நம்பிக்கை. அடிக்கடி பெயரை நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டே இருப்பார். தர்மு சிவராம், டி.அஜித்ராம் பிரேமிள், பிரமிள் என அவர் மாற்றிக்கொண்ட பெயர்களின் பட்டியல் நீளமானது

 

 Piramil's painting

அபாரமான விமர்சனப் பார்வை உடையவர். போலித்தனமான இலக்கியவாதிகளை எப்போதும் விமர்சித்தபடியே இருப்பார். பலருக்கும் புரிபடாமல் இருந்த மௌனியின் எழுத்து எப்படிப்பட்டது என்று இவர் எழுதிய கட்டுரைதான், மௌனியைப் பலருடைய வாசிப்புக்குக் கொண்டுசென்றது. இவருடைய ‘கடலும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் அபாரமான வீச்சு உடையவை. ஒரு மாத காலம் காய்ச்சலால் அவதிப்பட்டவரை நண்பர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. வீரியமான பிரமிள் விரலசைக்க முடியாமல் செயலிழந்து கிடந்தார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தனது 56வது வயதில் இறந்தார். இறப்புக்குப் பிறகும் கவனிக்கப்படாத கலைஞன் பிரமிள்!” வருத்தத்தோடு முடித்தார் காலசுப்ரமணியம்.

ஆனந்த விகடன் 23-04-08 இதழில் நான் எழுதிய கட்டுரை…

 

 

 

 

நாங்கள் கவிதாசரண்!

சென்னை, திருவொற்றியூரில், குண்டும் குழியுமான சாலைகளைக் குலுங்கிக் கடந்தால், டி.கே.எஸ். நகரில் இருக்கிறது ‘கவிதாசரண்’ என்ற பெயர்ப் பலகை சுமந்த அந்த இலக்கியவாதியின் வீடு.

என்ன செய்வதென்று புரியாமல் முதுமையைத் தனிமையில் கழிக்கும் பெரும்பாலான தம்பதிகள் மத்தியில், இந்த இலக்கியத் தம்பதிகளின் கதை வேறுபட்டது. வாழ்க்கையையே சமூக நோக்கத்துக்காக மாற்றிக்கொண்டு, ‘கவிதாசரண்’ என்ற பத்திரிகையை கொண்டுவருகிறார்கள் இவர்கள்.

Untitled-1 copy

”ஊர் பேரைச் சொன்னா சாதி என்னனு தெரியவரும், அதனால ஊர் பேர் வேண்டாமே! ஊரில் முதல் பட்டதாரி நான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கணித ஆசிரியராக இருந்தேன். சின்ன வயதிலேயே புரட்சி பேசியவன். சாதியைத் தூக்கிப் பிடிக்கிற கிராமத்தில் புரட்சி பேச, என்னைக் கொலை செய்கிற அளவுக்குப் பிரச்னையானதால் சென்னைக்கு வந்து விட்டேன். காரணம், பயம் இல்லை… வெறுப்பு!

பணியிடத்திலேயும் சக ஆசிரியர்களுக்காக, மாணவர்களுக்காக நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல். இன்னொரு பக்கம் இலக்கியவாதியாகவும் இயங்கிட்டு இருந்தேன். எங்களுடையது கலப்பு மணம். ஒரே மகன். கல்லூரிக்குப் போக, பள்ளித் தேர்வை எழுதிட்டுக் காத்திருந்தவன், மூளைக் காய்ச்சல் வந்து இறந்துவிட்டான். திடீர்னு ஒரு திகைப்பு, வலி, துயரம்… அதற்குப் பிறகு நாங்கள் வகுத்துக்கொண்டதுதான் இந்த வாழ்க்கை.

பொதுவா, ஒவ்வொருத்தரோட மிச்சமா, கனவா, அவங்க பிள்ளைகள்தான் காலத்துக்கும் தொடர்ந்து வருவாங்க. ஆனா, எங்களோட தொடர்ச்சியா இந்த சமூகத்துக்கு நாங்க தர நினைச்சது ‘கவிதாசரண்’ பத்திரிகையை!” – சொல்லிவிட்டு சற்றே நிதானிக்கிறார் கவிதாசரண்.

”அப்போ தொடங்கின புது வாழ்க்கையில் எங்க பேரையும் புதிதாக

மாற்றிக்கொண்டோம். நான் திரு கவிதாசரண். என் துணைவி, திருமதி கவிதாசரண். இலக்கியத்தை மையப்படுத்தி வந்த இதழை, சூழ்நிலை தான் சமூக மாற்றத்தைப் பேசுகிற இதழாக மாற்றியது. தலித்தியம் என்ற தனித்த அடையாளம் உருவாகாமல் இருந்த காலகட்டத்திலேயே, அதைப் பற்றிய பேச்சைத் துவக்கிவைத்தது எங்கள் இதழ்தான். சாதிக்கு எதிராக எங்களால் களத்தில் போராட முடியவில்லை என்பதால்தான் எழுத்தைத் தேர்ந்தெடுத்தோம்!” என்கிற கவிதாசரண், சமீபத்தில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுபதிப்பு செய்திருக்கிறார். தமிழைத் திராவிட மொழிகளின் தாயாக முதன்முதலில் நிரூபித்த ஆய்வு நூல் இது.

”எங்களுக்கென்று சொந்தமாக இருப்பது இந்த வீடு மட்டும்தான். இதை அடமானம் வெச்சுதான் கால்டு வெல் புத்தகத்தைக் கொண்டுவந்தேன். திராவிடம், திராவிடம் என்று மூச்சுக்கு மூச்சு பேசுகிற அரசாங் கங்கள் செய்கிற வேலையை நான் செய்திருக்கேன். ஒருவேளை நான் அவங்களை விமர்சிக்கலைன்னா, அவங்களே உதவியிருக்கக்கூடும். ஆனா, விமர்சிக்கிறதுக்காகத்தானே நான் பத்திரிகை தொடங்கினதே!” கம்பீரமும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் கவிதாசரண்!