நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது

ஊடகங்கள் சமூகத்தின் நாடி. இங்கே நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது. நமக்குத் தேவை மேற்குவங்கத்தின் டெலிகிராப் போல துணிச்சலான வெகுஜென ஊடகம். உ.பி. தேர்தலில் தோல்வியடைந்த பாஜக குறித்த தலைப்பு செய்தி இப்படி சொல்கிறது, ‘லெனினுக்கு பிறகு, நகரத்தில் புதிய சிலை’. இந்தத் தோல்வி குறித்து கருத்து சொல்லாத மோடியின் மவுனம் குறித்து பேசுகிறது இந்த தலைப்பு! டெலிகிராப்பின் முகப்பு பக்க தலைப்புகளை தொகுத்து கட்டுரை எழுதலாம். அடுத்து வருகிற ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரியாக இப்படி ஊடகம் இருக்கும் என காட்டுவதற்கு உதவும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டமோ, காவிரிக்கான போராட்டமோ நீர்த்துப் போகிறது, உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது எனில் அதற்கான முதன்மையான காரணமாக நான்காவது தூண் சாய்ந்து கிடப்பதே. ஸ்டெர்லைட்டின் விளம்பரத்துக்காக மக்களை விற்றவர்கள் அல்லவா இவர்கள்?
#IndiaBetraysTamilnadu

பிரபல என். ஜி.ஓனாலே இப்படித்தான்!

இதழ் ஒன்றுக்காக பிரபல என் ஜி ஓ ஒருவரிடம் பேட்டி கேட்டிருந்தேன். ஓரிரு தொலைபேசியில் பேசியதுண்டு. முதல் முறை இந்த இதழுக்காக பேட்டி வேண்டும் என்று கேட்டேன். சரி இத்தனை மணிக்கு அழையுங்கள் என்றார். அழைத்தேன். எடுக்கவில்லை.. சிறிது நேரம் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை. அடுத்த நாள் இடைவெளி விட்டு அழைத்தும் எடுக்கவில்லை. ஒரு பதினைந்து நாள் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை, இதுபோல பல முறை வெவ்வேறு நேரங்களில் அழைத்தும் எடுக்கவில்லை.
 
அவர் பரபரப்பானவர் என்பதால் ஏதோ வேலையில் சிக்கியிருக்கலாம் என ஒவ்வொருமுறையும் நினைத்தேன். ஆனால், அவர் புறக்கணிக்கிறார் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இதழுக்கோ அல்லது பேட்டியாளருக்கோ பேட்டி கொடுக்க விருப்பமில்லை என நேரிடையாக சொல்லிவிடலாம். இதில் வருத்தப்பட ஏதும் இல்லை. அவரவர் சுதந்திரம்,விருப்பம் என ஒதுங்கிவிடலாம். ஆனால் தருகிறேன் என சொல்லிவிட்டு, எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் அலையவிடுவது எவ்வகையான செயல்பாடு?
 
இதுவே பிரபல அச்சு ஊடகங்களுக்கோ, தொலைக்காட்சி ஊடகங்களுக்கோ அவர் செய்துதிருப்பாரா? சுதந்திர பத்திரிகையாளராக இருப்பதும், அல்லது சிறு பத்திரிகையாக இருப்பதும் இவர்களுக்கு அலட்சியமாகத் தெரிகிறது. என் ஜி ஓக்கள் எதில் அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதைத்தான் பார்ப்பார்கள்; புரிந்துகொள்ளக்கூடியதே.
 
என்ஜிஓக்கள் குறித்து விமர்சித்து எழுதிவருகிறேன். அந்த வகையில் அயற்சியாக உணர்ந்தபோதும் அவரை பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்க்காமல் போனதிலும் அவரைப் பற்றி தெளிவு கிடைத்ததிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

கிள்ளிவளவனும் திருமாவளவனும்: படச்சுருள் சாதி அடையாள சினிமா சிறப்பிதழில் என் கட்டுரை

தீவிர சினிமா இதழ்கள் கோட்பாட்டு மொழியில் சற்றே அயர்ச்சி தரும் மொழிநடையிலேயே வருகின்றன. அதிகபட்சம் வார இதழ் வாசிப்பைக் கொண்டிருக்கிற, இலக்கிய வாசிப்பு அனுபவம் இல்லாத சினிமா எடுக்க முயற்சிக்கும், அல்லது ஏற்கனவே சினிமா துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த கோட்பாட்டு கட்டுரைகள் அயற்சியைத் தருமே தவிர, எதையும் கற்றுக்கொடுக்காது என்பது என் எண்ணம்.  ‘படச்சுருள்’ இதழ் அதிலிருந்து விலகி தெரிகிறது.  எளிய வாசகர்களையும் சென்றடையும் வகையில்  அதன் மொழி நடை இருக்கிறது. என்னாலும் வாசிக்க முடிகிறது. 🙂

அக்டோபர் 2016 படச்சுருள்‘சாதி அடையாள சினிமா’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இயக்குநர் பாலாஜி சக்திவேல் குறித்து எனக்கு வேறுபட்ட எண்ணம் இருந்தது. விடலைப் பருவத்து காதலை புனிதப்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாகிவிட்டதோ ‘காதல்’ படம் என்ற விமர்சனம் அது. ஆனால், அவருடைய படச்சுருள் நேர்காணல் மூலம் புதிய விளக்கங்களைப் பெறமுடிந்தது. நன்று. அதுபோல ‘மதயானைக்கூட்டம்’ விக்ரம் சுகுமாறனின் நேர்காணலும்.

இதழில் வந்திருந்த கட்டுரைகள் பலவும் வளர்ந்துவரும் புதியவர்கள் எழுதியது, மலர்ச்சியாகவே இருந்தன. ‘நமது சினிமா சாதி காப்பாற்றும் சினிமா’, ‘சுயபெருமை போற்றுதும்’ ‘சாதி அடையாளத்தில் தமிழ் சினிமா’ ‘அடையாளச் சிக்கலில் உருவான சாதிய சினிமாக்கள்’ என  கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கு ஒருவித தொடர்ச்சியுடனும் தனித்த செய்திகளுடனும் எழுதப்படிருந்தன.

இதில் ‘அடையாளச் சிக்கலில் உருவான சாதிய சினிமாக்கள்’ என்னுடைய கட்டுரை.  நண்பர்கள் இந்தக் கட்டுரைக்கு நேர்மறையான எண்ணங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். உற்சாகம்தான்.

தீவிர சினிமா இதழ்களில் எழுதவும் உழைக்க வேண்டும். அதை எல்லோராலும் செய்துவிட முடியாது. திரை எழுத்து குறித்து எனக்கு போதாமைகள், கற்க வேண்டியவை ஏராளமாக உண்டு.  ஸ்பெஷலிட்ஸ்டாக இல்லாவிட்டாலும் அவ்வவ்போது சினிமா தொடர்பாக எழுத கற்க வேண்டும்.

படச்சுருளில் வெளியான கட்டுரையின் ஒரு பத்தி:

“2015-ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ என்றொரு சினிமா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த படம். ரவுடியாக விரும்பும் போலீஸ்காரர் வீட்டுப் பையனுக்கும் தன் தாயைக் கொன்ற ரவுடியைப் பழிவாங்க கொலை செய்யத் தயாராக உள்ள பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் விளைவுகளும் கதை. நகைச்சுவைப் படமாகவும் அறியப்பட்டது. ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் நுணுக்கமாக சாதியத்தை சொருகியிருப்பார். வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் கிள்ளிவளவன். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், சேரியில் இருக்கும் ஒரு குடிசையில் அவருடைய படம் மாட்டப்பட்டிருக்கும். வளர்ந்து வரும் அரசியல்வாதி, கொடூரமான கொலைக்காரர். கிள்ளிவளவன் என்கிற பெயர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை மறைமுகமாக குறிப்பிடுவதாக நாம் புரிந்துகொள்ளலாம். அதற்கான காட்சியமைப்புகளை இயக்குநர் அழுத்தமாகவே வைத்திருக்கிறார்.”.

படச்சுருள் இதழை வாங்க

கபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்!

இன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது சாதி. சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடந்த மண்ணில் சாதியை பின் ஒட்டாக வைத்து முகநூல் குழுக்கள் தோன்றுகின்றன.  அவை சாதி பெருமையைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; வன்மத்தை கக்கும் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாழ்க்கைக்கு சாதியே பிரதானமாகிவிட்டச் சூழலில் இத்தகைய குழுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை.  சமூக ஊடகங்கள்  சாதிய சமூகத்தின் கண்ணாடிகளாக மாறிப்போயிருக்கும் இந்தச் சூழலில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த தகவல் ஒன்றையும் சொல்ல வேண்டும். இணைய தேடு பொறிகளில் தமிழில் தேடப்படும் விஷயங்களில் நடிகர்களின் சாதி எது என்பது குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

தங்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நடிகர்களின் சாதியைத் தெரிந்துகொள்ள இணையவாசிகள் ஏன் விரும்புகிறார்கள்? சாதிய சமூகம் ஒரு காரணம் என்றாலும் வெகுஜென கலைவடிவமான சினிமா மீது சாதிய கண்ணோட்டத்தை  ஏற்படுத்தியது இதே கலைத்துறைச் சார்ந்தவர்கள்தான். நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகனிலிருந்து பாரதிராஜாவின் தேவர் பெருமை பேசும் இடைக்காலப் படங்களிலிருந்து கே. எஸ். ரவிக்குமார், உதயகுமார் ஆகியோரின் கவுண்டர் பெருமை பேசும் படங்களிலிருந்து சாதிய நிழல் சினிமா மீது  படர்ந்தது எனச் சொல்லலாம். இவர்களின் அடிகளை பின்பற்றி நூறு படங்களாவது வந்திருக்கும்.

சமகாலத்தில் தேவர் சாதியினரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, தேவர் சாதி பெருமை பேசும் சினிமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சாதிய கொலைகளும் சாதி பெண்கள் மீது செலுத்து வன்முறையும் பெருமைக்குரிய, வீரம் செறிந்த கதைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. தேவர் மகனில் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடல் சாதி வெறியேற்றும் வகையில் ஆதிக்க சாதிகளின் விழாக்களின் ஒலிக்க வைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கொம்பன், சுந்தர பாண்டியன் இன்னும் பல படங்களின் பாடல்கள், சாதி கலவரத்தைத் தூண்டும்வகையில் தலித் சாதியினரை உசுப்பேற்றும் வகையில் ஒலிக்க வைக்கப்படுவதாக பல பதிவுகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் பதிவாகியுள்ளன.

இத்தகையதொரு சூழலில் தலித் என்கிற அடையாளத்துடன் பா. ரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருகிறார்; முதல் படமாக ‘அட்டைக்கத்தி’ காதலைப் பற்றிப் பேசினாலும் அது தலித் வாழ்வியலின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. திணிப்பாக இல்லாமல் மிக இயல்பாக அதை பா. ரஞ்சித் செய்திருந்தார். அவருக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. வெற்றி என்பது அனைத்து ‘சாதி’யைச் சார்ந்த ரசிகர்கள் கொடுத்தது தானே? பா. ரஞ்சித்தின் தலித் அடையாளம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் தலித் மக்கள், தங்கள் சமூகத்தின் வெற்றி முகமாக ரஞ்சித்தை கொண்டாடினார்கள்.

ஆயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவர் வெற்றியாளராக நிற்கும்போது அவரை, அவர் சார்ந்த சமூகம் கொண்டாட நினைப்பது இயல்பான ஒன்றே. தங்களை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கெதிரான வன்முறைகளைக்  கட்டவிழ்க்கும் போதெல்லாம் சாதிய சினிமாப் பாடல்களை ஒலிக்கவிடும் ஆதிக்க சாதியினரின் செயல்கள், தங்களுக்காகவும் தங்களை பிரதிநிதிப்படுத்தவும் ஒருவர் வந்திருக்கிறார் என உவகை கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நமக்காக ஒருவர்,  என்கிற நினைப்புக்கும் நாம்தான் எல்லாம் என்கிற நினைப்புக்கு பாரதூர வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கும் சாதியின் பெருமையை பதிவு செய்யும் சினிமாவுக்கும் ஒடுக்கப்படும் சாதியின் வாழ்வியலை பேசும் சினிமாவுக்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.

ஆனால், இங்கே நடப்பது என்ன? தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா? கபாலிடா’ என்ற வசனங்கள் அனலைக் கிளப்பின.  சமூக ஊடகங்களில் அறிவுஜீவிகள் கபாலியின் குறியீட்டைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். இதுஒரு கொண்டாட்ட மனநிலைதான். அதுவே முகநூலில் இயங்கும் சாதிய குழுக்களை கிளப்பிவிட்டிருக்கலாம்.

கபாலி பாடல்கள் வெளியானபோது ஒரு பாடலில் ஒலித்த ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று வருவதை வைத்து மிகப் பெரிய சர்ச்சை முகநூலில் எழுந்தது. இந்த வரியை வைத்து பா. ரஞ்சித்தின் சாதியுடன் பிணைத்து வன்மமாக எழுதினார்கள். ‘பற’ என ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது பொருள் தந்தார்கள். அவர் சார்ந்த சாதி மக்களின் தொழிலுடன் தொடர்பு படுத்தி இவரும் அந்த வேலைகளுக்குத்தான் லாயக்கு என்று எழுதினார்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அத்தனை தகுதியும் இந்தப் பதிவுகளை எழுதியவர்கள் கொண்டிருந்தார்கள். சில நடுநிலைமைவாதிகள் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என இவர்களும் வன்முறைப் பாதையை கையில் எடுப்பதா என்றார்கள். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்’ என அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் சொன்ன பாடல்களையெல்லாம் நீங்கள் ரசிக்கவில்லையா? ஆண்டைகளின் கதை முடிப்பான் என்ற வரிகள் ஏன் உங்களை கதி கலங்க வைக்கின்றன என்று முற்போக்குவாதிகள் சிலர் பா. ரஞ்சித்தின் தரப்பில் பேசினார்கள்.

இப்படியாக விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும் வேளையில், நமக்கு ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது? நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம்? நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா? உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா? அப்படித்தான் பா. ரஞ்சித்தையும் ஒரு கலைஞனாகப் பாருங்கள், அவருடைய சாதியைப் பார்க்காதீர்கள்!

ஜூன் மாதம் இதழ் ஒன்றில் எழுதியது.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு

மோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல்  தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்!

மாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது என சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின.  உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன்  குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த அடிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சாதியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.

தீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.

நன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)