அம்மாவின் டைரி-2

எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போதாவது என் கணவர் திருந்துவார் என்று நினைத்திருந்தேன். அவர் மேலும் அதிகமாக செலவு செய்ய ஆரம்பித்தார். என்னுடைய 3 மாத பிரசவ கால விடுப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது கைக் குழந்தையை வைத்திருக்கிறேனே என்றுகூட பார்க்காமல் எங்களை விட்டுவிட்டு ஊர்ஊராக சீட்டாடிக்கொண்டு திரிந்தார். நான் என்னுடைய 3 மாத கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து வேலைக்குப் போவேன். அப்போது பட்ட கஷ்டங்களை அளவிட முடியாது. ஆனால் என்னுடைய குழந்தையைப் பார்த்து சந்தோஷப்படுவேன்.
நான் வேலை பார்த்து வந்தது கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதியில். அங்கு தமிழ் பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் வசித்த கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு கிராமத்தில் இருந்த ஆரம்ப பள்ளியில்தான் என் மகளை சேர்த்து படிக்க வைத்தேன். தினமும் காலையில் என்னுடைய குழந்தையை விட்டுவிட்டு, மாலை 4 மணிக்கு போய் அழைத்து வருவேன்.
நான் வேலை செய்த கிராமத்து மக்கள் மிகவும் நல்லவர்கள். எனக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். இந்த நேரத்தில் என்னுடைய பள்ளி ஆயாக்களை குறிப்பிட்டு சொல்கிறேன்.
என்னுடைய வேலைகளை சரியாக செய்து ஊர் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தேன். அந்த ஊர் மக்களுக்கு தமிழ் பேச தெரியாது. தமிழ் படித்தவர்களும் கிடையாது. அதனால் நான் கஷ்டம் எதுவும் பார்க்காமல் அந்த ஊரைச் சேர்ந்த படிக்கிற பிள்ளைகளுக்கு தமிழ் பேச, எழுத கற்றுக் கொடுத்தேன். அதனால் அந்த ஊர் மக்கள் என் மீது பாசமாக இருந்தனர். அந்த ஊரில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார்கள். இப்படி 16 வருஷங்கள் அந்த ஊரில் வேலை செய்தபிறகு, எனக்கு பதவி உயர்வு கிடைத்தது.
அங்கன்வாடி டீச்சராக இருந்து, மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றேன். பயிற்சிக்காக கோயம்புத்தூர் சென்றபோதுதான் என்னுடைய கணவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.

(தொடரும்)

யானையும் பலாமரமும் கூடவே சாதியும

இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்  என் கிராமம் தன் சுயமான அடையாளத்துடனே இருந்தது. சுனை நீரை தேக்கி வைத்திருக்கும் பாறைகளும் புதர் படிந்த காடுகளும் சூழ இருந்தது என் கிராமம். ஜுலை மாதங்களில் வானம் பார்த்த பூமியெங்கும் போர்த்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற கடுகு பூக்கள் அழகோ அழகு! நீர் வளம் நிறைந்த இடத்தில்கூட அவ்வளவு செழிப்பாக ராகி பயிர் வளர்ந்து நான் பார்த்ததில்லை. இந்த பூமியில் எதைப்போட்டாலும் அது பல மடங்காகி வீடு வந்து சேரும்.  பலாமரங்களும் பேரிச்சம் மரங்களும் தேக்கு மரங்களும் என் கிராமத்தை இன்னும் வசீகரமாக்கிக் கொண்டிருந்தனர். பக்கத்திலே காடு என்பதால் பலா பழங்களை ருசிக்க யானைகள் எங்கள் வீடுகளுக்கு அருகேயே வந்துவிடும். சற்று தூரத்தில் பலாபழங்களை ருசி பார்த்துக்கொண்டிருக்கும் யானைகளை விரட்ட தீப்பந்தம் ஏந்தியபடி கும்பலாக செல்வார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடும் என்று முன்னோர் அறிந்திருந்த படியால் கிராமத்தை பள்ளமான பகுதியில் அமைநத்திருந்தார்கள். கிராமத்துக்குள் நுழைய செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கி வர வேண்டியிருக்கும். இதேபோல நிலக்கடலை அறுவடையாகும் நேரத்தில் முள்ளம்பன்றிகள் வந்து ருசி பார்த்து, நாங்கள் விளையாட இரண்டு முட்களை தன் உடம்பிலிருந்து உதிர்த்துவிட்டு போகும்.
தமிழகடத்தில் இருந்தாலும் எங்கள் ஊரில் கன்னட மொழி பேசுபவர்கள்தான் வசித்தோம். இரண்டொரு தமிழ் குடும்பத்தினரும் கன்னடமே பேசினார்கள். அய்யந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளியிலும் கன்னட மொழி வழிக்கல்விதான் சொல்லித்தரப்பட்டது. அதனால் தமிழ் படிக்க நான் நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னோட எனக்கு அடுத்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் நண்பர்களும் வருவார்கள். பெட்ரோல், டீசல் வாசனை நுகர்ந்திராத அந்த மண் சாலையில் நாங்கள் விளையாடிய படிய காட்டுச்செடியில் கனிந்திருக்கும் பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டு பள்ளி போய் சேருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்துக்கொண்டு சாகச பயணம் செய்வோம். மாம்பழ சீசன் என்றால் சொல்லவே வேண்டாம்.. வழி நெடுக விதவிதமான மாம்பழங்கள் மரங்களிலிருந்து பழுத்து விழுந்து கிடக்கும். விருப்பம் போல அள்ளித் திண்று, மாடுகள் தண்ணீர் குடிக்க வெட்டி வைத்திருக்கும்   குளங்களில் கை கழுவுவோம். அந்த காலத்தை நினைத்தாலே இனிக்கிறது!
எங்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இருக்கும். காப்பிச்செடிகளும் செர்ரி மரங்களும் டேரியாவும் டிசம்பர் பூக்களும் பீன்ஸ் செடியும் சிவப்பு‍, வெள்ளை கொய்யா, சப்போட்டா பழ மரங்களுமாக நிறைந்திருக்கும்.
இவையெல்லாவற்றையும் எங்கள் கிராமத்தில் இருந்த‌ சாதி  முழுங்கிக்கொண்டிருந்தது. கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே  தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள். நான் கிராமத்தில் வசித்த‌ பத்தாண்டுகாலமும் இந்த எழுதப்படாத விதி எந்த சந்தர்ப்பத்திலும் மீறப்படாமல் இருந்தது.
இடைநிலை சாதிக்காரர்கள் லிங்காயத்துகளின் சமையல‌றைக்கும் பூஜை அறைக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலித்துகளுக்கான அனுமதியோ எல்லோர் வீடுகளிலும் வாசல் படியோடு நின்றுவிட்டது.
சாதி படிநிலைக்கு ஏற்றபடி தன்னைவிட உயர்சாதியை சேர்ந்தவரை  ‘சாமி’ என்றுதான் விளிப்பார் கீழ்சாதி என்று கருதப்பட்டவர். கன்னடர், தெலுங்கர், மராத்தி, தமிழர் என்று பல மொழியினர் சேர்ந்து வசித்த என் கிராமம் திட்டம்போட்டு உருவாக்கியதைப்போல முழுக்க முழுக்க சாதியத்தால் உண்டாக்கப்பட்டிருந்தது. கிராமத்தை விட்டு வந்து 15 வருடங்கள் ஆகிறது. சாதியத்தை உடைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்ததா என்பது பற்றி தெரியவில்லை. சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…