செங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்

மருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள்! தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.

செங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.

kanthal

உயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.

மரகதப் புறா

பச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.

நீலகிரி வரையாடு

இதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்!

காட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.

முகப்புப் படம்: திருநாரணன்

திருநாரணன் தொடர்புக்கு:

KVRK THIRUNARANAN
FOUNDER
THE NATURE TRUST
G-3, KRISH VIEW APPTS.,

PLOT NO 45-A, VALMIKI ST.,
EAST TAMBARAM
CHENNAI-600059.

044 22393959
9444477358
9176893949

 

 

எண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.

வட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.

“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.

எண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.

படங்கள்: அமிர்தராஜ் ஸ்டீபன்

யுனிலிவருக்கு எதிராக பாடகர் டி. எம். கிருஷ்ணா

இந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்பாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் ஜட்கா என்ற சூழலியலுக்கான ஊடகம் தயாரித்த ‘கொடைக்கானல் அடங்காது’ என்ற ராப் பாடல் சமூக தளங்களில் வெளியாகி, இந்தப் பிரச்சினையை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது. கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலிவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அந்நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
இதையொட்டி நித்தியானந்த் ஜெயராமன் தலைமையிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் ‘யுனிலிவர் பொருட்களை வாங்க மாட்டோம்’ என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மனை கொடைக்கானல் கழிவுகளை அகற்றுங்கள் என்று நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்றுவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. யுனிலிவர் கொடைக்கானலில் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்தது எனக் கூறப்படுகிறது. ‘உலக பெருவணிக நிறுவனம் இதே கழிவை இங்கிலாந்தில் அகற்ற பயன்படுத்த ஒரு முறையும் இந்தியாவில் அதைவிட தரம் தாழ்ந்த முறையும் பின்பற்றுவது இந்திய மக்களின் நலனில் எள்ளளவும் அது அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும் அவர்,

தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…
தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…
“டாமினிக் என்பவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பணியிடத்தில் பாதரசம் ஏற்படுத்திய விளைவால் அவருக்கு வலிப்பு நோய் வந்தது. நன்றாகப் பாடக்கூடிய இவரால் தற்போது இயல்பாகப் பேசக்கூட முடியாது. ஆனால் இந்நிறுவனமோ சுற்றுச்சூழல் மட்டும்தான் மாசடைந்ததாகவும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. தன் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் யுனிலிவர் நிறுவனம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்ற சில லட்சங்களை ஒதுக்கத் தயங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் பசுமை விருதைப் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை நிறுவனம் பெற்றுள்ளதாக என்பதை நாங்கள் அந்நிறுவனத்திடம் கேட்கிறோம்” என்கிறார்.

“வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. யுனிலிவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் அது கடுமையாக பாதிக்கும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசோ கொடைக்கானல் கழிவுகளை அகற்ற இதுவரை அந்நிறுவனத்தை வலியுறுத்தவில்லை. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு விபத்து குற்றவாளிகளை தப்பவிட்டதுபோல யுனிலிவருக்கு அரசுகள் சாதகமாகவே இருக்கின்றன” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

காணாததைக் கண்ட ஆமான்…

காண்டற் பொருளாற் கண்டில துணர்த
லுவம மாவ தொப்புமை அளவை
கவய மாவாப் போலுமெனக் கருத

– மணிமேகலை 21:40-42

காண்டற் பொருளாற் காணாதை உணர்வதற்கு உதாரணமாய் சீத்தலை சாத்தனார் இங்கே ‘ஆ’வைக் குறிப்பிடுகிறார். காட்டில் உலவும் ஆ’வை நாட்டில் காணமுடியாது இந்த ஆ’தான் சங்கப் பாடல்களில் பல இடங்களில் ‘ஆமான்’ என எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சங்க இலக்கிய ஆய்வாளர் பி.எல்.சாமி.

ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டுமாடு
ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டுமாடு

காட்டில் உலவும் ஆமானைக் கொண்டாடிய தமிழ் இலக்கிய மரபில் வந்த நாம் இப்போது இதைக் காட்டெருமை என்று அழைக்கிறோம். எருமைக்கும் மாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறையாகிவிட்டோம் நாம். ஆ என்பது மாட்டைக் குறிக்கும் சொல். எருமை என்ற விலங்கினம் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை. அது பிற்காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கினம். ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் மாட்டினத்தை காட்டுமாடு என்று அழைப்பதே பொருத்தமாகும்;சரியாகும்.

காட்டுமாடு உயர்ந்த திமிலும் வளைந்த கொம்புகளும் கொண்டது. யானைகளுக்கு அடுத்து காட்டில் வாழும் பெரிய விலங்கினம் இது. வயது வந்த காட்டுமாடு 8-10 அடி நீளமிருக்கும். எடை 650-1000கிலோ வரைக்கும் கொண்டது. வீட்டு மாடுகளைப் போல புல், தழைகள்தான் உணவு. ஆனால் வீட்டு மாடுகளைப் போல சாதுவானவை அல்ல, மூர்க்கமானவை. இதன் பலத்தை சிங்கத்துடன் ஒப்பிடுவார்கள்.

gaur

மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வாழும் காட்டுமாடுகள், காட்டை விட்டு வெளியே வந்து ஊறுவிளைவிப்பதாக ஊடகங்களால் காட்டெருமை என்ற பெயரில் பொதுமக்களுக்கு அறிமுகமானவை. மேற்கு பழனிமலைக் காடுகளில் உள்ள காட்டுமாடுகள் குறித்தும் கீழானவயல் பகுதியில் மனிதனுக்கும் காட்டுமாடுகளுக்குமான பிணக்கு குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். காட்டுமாடு-மனித பிணக்குக்கு முக்கிய காரணமாய் இருப்பது காட்டுமாடுகளின் வாழிடம் நாளுக்குநாள் குறைந்து வருவதே ஆகும். காட்டுமாடுகளில் இயல்பான மூர்க்க குணம் சில சமயம் மனிதர்களை தாக்கிவிடுகிறது. பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுவது தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களே.

காட்டு விலங்குகளுக்கு மனிதர்களுக்கும் ஏற்படும் பிணக்குகளுக்கு நிச்சயம் மனிதர்களின் பேராசைகள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை காடுகளை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்படுத்துவதும் செல்வந்தர்களின் ஆக்கிரமிப்பு அல்லது வளர்ச்சி நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிப்பதும் இந்தப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காட்டுமாடு கன்றுடன்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காட்டுமாடு கன்றுடன்

திருக்கழுக்குன்றம் அருகே ஒரு கரும்புத்தோட்டத்தில் வழிதவறி வந்த ஒரு காட்டுமாடு கன்று மணி என்று பெயரிடப்பட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த மணியும் இன்னும் சில பெண் காட்டுமாடுகள் இணைந்துதான் இன்று வண்டலூர் பூங்காவில் 21 மாடுகளாக எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றன. இரண்டு வருடங்களில் வளர்ந்து பருவமடையும் குட்டி ஈன்ற தயாராகும். ஆயுட்காலம் 20 வருடங்களாகும். அந்த வகையில் மற்ற இந்திய பூங்காக்களில் இல்லாத வகையில் வண்டலூர் பூங்காவில் 21 மாடுகள் பெருகியிருக்கின்றன.

காடுகளைப் பொருத்தவரை காட்டுமாடு அழிந்துவரும் உயிரினம். 1972 ஏற்படுத்தப்பட்ட வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காட்டுமாடு வேட்டையாடுதல், கொல்லுதல் சட்டப்படி தடைசெய்யப்பட்டதாகும்.

சூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

திருநாராணனின் இயற்கை அறக்கட்டளையின் இலட்சினை காட்டுமாடு. காட்டுமாடுகள் குறித்து கள ஆய்வையும் செய்திருக்கிறார் திருநாராணன்.

தமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா?

சமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள்.  அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.  அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.

சமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன்.  வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.

இந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.

spider of India

கொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம்.  சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.

DSCN2046

Oxyopes lineatipes

 

DSCN2098

Oxyopes shweta

 

நான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae  இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.

அழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.