சந்திரபாபு நாயுடுவை கலங்கடிக்கும் செக்ஸ் முறைகேடு!

செம்பரக் கட்டைக் கடத்தலை ‘பல’ யுத்திகளைக் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆட்டம் காண வைத்திருக்கிறது ‘கால் மணி’ முறைகேடு. அதென்ன கால் மணி?

பணம் தேவைப்படுவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தால் வீட்டிற்கே வந்து பணம் தருவார்கள்.  பணம் என்றால் சும்மா கிடையாது; வட்டிக்குத்தான். அதுவும் கந்துவட்டி போல பத்து வட்டி, பதினைந்து வட்டி அல்ல. மீட்டர் வட்டி! இருபது, முப்பது வட்டி. அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்தால் அதில் 30 ரூபாய் வட்டியாக பிடித்துக்கொள்வார்கள். கடனைத் திருப்பிச்செலுத்தும்போது அசலைவிட வட்டிதான் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆந்திராவின் பல பகுதிகளில் குறிப்பாக விஜயவாடாவில் இந்த கால் மணி மிகவும் பிரபலமானது.

இந்த விதத்தில் அவசரத்து பணம் வாங்கிய மக்கள், ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார்கள். இதில் ரூ. 2000கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

chandrababu naidu
இந்த முறைகேட்டில் மீட்டர் வட்டி மட்டும் பிரச்சினையல்ல…கடன் கட்ட முடியாதவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாக பெரும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. கால் மணி மூலம் ரூ. ஒன்றரை லட்சம் கடன் பெற்ற ஒரு பெண், ரூ. ஆறு லட்சத்தை கட்ட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதைக் கட்டத் தவறியதால் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப் பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் செய்தார்கள். கால் மணி முறைகேடு, செக்ஸ் முறைகேடாக மாறியது.

இதில் உச்சக்கட்ட விவகாரமே இந்த முறைகேட்டில் ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம் எல் ஏக்கள் ஈடுபட்டார்கள் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக வைக்கிறது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்.

கால் மணி முறைகேட்டை விசாரிக்க தனிப் படை அமைத்திருப்பதாக சொல்லியிருக்கும் சந்திரபாபு நாயுடு, வெள்ளிக்கிழமை ஆந்திர சட்டமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். சந்திரபாபு நாயுடுவின் கட்சி எம் எல் ஏக்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கும்போது எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்  நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா, சட்டமன்றத்தில் சந்திர பாபு நாயுடுவின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். இதற்காக ரோஜாவை ஒரு வருட காலத்துக்கு சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்தார் சபாநாயகர்.

வெளியே வந்த ரோஜா, “ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் எல்லாம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் தகுதியானவரே கிடையாது. இந்த செக்ஸ் முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுவும் அவருடைய மகனுமே சம்பந்தப்பட்டிருக்கும்போது, எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும்?” என அதிரடியாகப் பேசினார்.

மரக்கட்டைகளுக்காக அப்பாவித் தமிழர்களின் உயிரை துச்சமென நினைத்து அவர்களை சுட்டுக் கொல்வதற்கு ஆதரவாக இருக்கும் முதலமைச்சர், தன் சொந்த மக்களுக்கு மட்டும் அனுசரணையாக இருப்பார் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

தினச்செய்தி நாளிதழில் வெளியானது

பணிபுரிய திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள் வேண்டும் என்றுகூட சொல்வார்கள்!

திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள்தான் முழுமூச்சில் உழைப்பார்கள் என்று மூடக் கருத்து ஊடக நிறுவனங்களிலும் இருக்கிறது. நான் என்னைடைய பிரசவத்துக்கு ஒரு வாரம் முன்பு வரைக்கும்கூட பணியாற்றினேன். நிறைவாகவே பணி செய்தேன். ஏற்கனவே அந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவள், இடைவெளிக்குப் பிறகு ஒன்பது மாதங்கள் நிறைவாகவே உழைத்தேன். பணிக்கு இடையூறு வந்துவிடுமோ என்று ஐந்து மாதங்கள் என் கர்ப்பத்தை மறைத்தேன். தீபாவளி நாட்களில் இதழ் பணிகளில், கடும் பசியுடன் இரவு எட்டு, எட்டரை வரைக்கும் பணியாற்றினேன்.

பிரசவத்துக்குப் பிறகு, மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று மட்டும் சொன்னார்கள். ஒரு மாதச் சம்பளம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் மீண்டும் ஐந்து மாதம் கழித்து அந்த நிறுவனத்திலே சேர்ந்தேன். இரண்டு வருடங்கள் மேலும் உழைத்தேன். பணி நியமனம் கேட்டு பல முறைப் போராடினேன். தரவில்லை. எனக்கு ஊடக வாய்ப்பளித்தவர், என்னை ஊக்குவித்தவர், என்னுடைய ஆசிரியருக்கு பணியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிக் கொள்ளக்கூட விரும்பவில்லை. விலகிவிட்டேன்.

குழந்தை இருப்பதை நம்முடைய பணித்திறனை பாதிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். நம்முடைய திறமையும் அர்ப்பணிப்பும் எப்போதும் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ராதிகா அப்தே நடித்திருக்கும் மைந்தரா விளம்பரம், என்னை எனக்கு நினைவு படுத்துகிறது. விளம்பரத்தில் ராதிகாவின் கதாபாத்திரம் பிரமாண்டமான அலுவலகம் அமைத்து புதிய தொழில் தொடங்கும் அளவுக்கு எனக்கு பொருளாதார வசதி இல்லையெனினும் என்னுடைய சுயமுயற்சிகள் குறித்து எப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

‪#‎RadhikaApte‬ ‪#‎BoldIsBeautiful‬

 https://youtu.be/rz5rAFAvqCs
 

 

சென்னையின் பெருமழையில் ஒரு பயணம்

CUgc0EpWUAAWjAk

நுங்கம்பாக்கத்தில் தேங்கிய நீரில் நீந்திச் செல்லும் பேருந்து

சென்னை மக்கள் திங்கள்கிழமை(23-11-2015) இரவை ஆயுசு முழுக்கவும் நினைவில் வைத்துக் கொள்வார். அப்படியொரு அனுபவம்; கொட்டித்தீர்த்த பெருமழையும் நகர முடியாமல் திணறிய வாகனங்களும் திங்கள் இரவை பேரிடர் நேர அனுபவமாக்கிவிட்டன.  அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் போய் சேர்ந்துவிடக்கூடிய தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நான்கரை மணி நேரத்தில் போய் சேர்ந்தேன்.

விடாது துரத்திய மழையும், வழி நெடுக மக்கள் பட்ட பாடுகளும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நிறைந்துவிட்டன.  குறிப்பாக பெண்களின் அவஸ்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அதிகாலை 1 மணிக்கு, 4 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்த பெண்களின் அனுபவங்களைக் கேட்டபோது அவர்கள் மேல் அனுதாபம் கூடியது.

எனக்கிருந்த ஒரே பிரச்சினை என் மகன் பசியோடு காத்திருந்தான் என்பதுதான். ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் அவனைத் தொடர்பு கொண்டு ‘இதோ வந்துவிட்டேன்’ என சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ‘நீ போம்மா அப்படித்தான் சொல்லுவ’ என்று சலித்துக்கொண்டு இணைப்பைத் துண்டிப்பான்.

பசிக்கிறதே என்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை பிரிக்கப் பார்த்து அதை பிரிக்கத் தெரியவில்லை என்றான். மனம் வலித்தது.  நல்லவேளையாக உணவகத்தில் தோசை கிடைத்தது. இருவரும் சேர்ந்து உண்டபோது மணி 11 ஆகியிருந்தது.

என் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இரவு 1 மணி, 4 மணிக்கெல்லாம் வீடு போய் சேர்ந்தவர்களின் குழந்தைகள் எப்படி உண்டிருப்பார்கள்?  பெண் தான் வீட்டுக்கு வந்து சமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்கிற நிலை இந்தக் காலத்திலும் நீடிப்பது சரிதானா? ஆண்கள் எப்போது தங்கள் வீட்டுப் பெண்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்?

பெருமழையும் திங்கள்கிழமை இரவின் அசாதாரண பயணச் சூழலும் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்விகளை  மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன!

யார் குற்றவாளி: பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தும் அரசியல்வாதிகளா? பாலியல் வன்கொடுமை செய்தவர்களா?

Untitled

உலகை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர், ‘பெண்கள் என்றால் அடக்கஒடுக்கமாக இருக்க வேண்டும். இரவு வேளைகளில் பெண்ணுக்கு வெளியே என்ன வேலை?’ என்று பிபிசி ஆவணப்படத்தில் கேட்டிருந்தார். ஒட்டுமொத்த ஆணாதிக்க சமூகத்தின் குரலாக ஒலித்தது அது.

ஒவ்வொரு முறையும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் போதும் இந்தச் சமூகம் பெண்கள் மீதே குற்றத்துக்கு முழு பொறுப்பையும் ஏற்கச் செய்கிறது. அதிகார வர்க்கத்தில் அமர்ந்துள்ள அரசியல்வாதிகள் முதல், அதிகாரமற்ற ஆண்கள் வரை அத்தனை பேருடைய பொதுக் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது.

கடந்த புதன்கிழமை இரவு பெங்களூரு கப்பன் பூங்காவில் உள்ள டென்னிஸ் கிளப்பில் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கும் பொருட்டுச் சென்றார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். இரவு 8 மணி இருக்கலாம். அலுவலர்கள் சென்றுவிட்டதால் அடுத்த நாள் வரும்படி சொல்லியிருக்கிறார்கள். கிளப் அலுவலகத்திலிருந்து அந்தப் பெண் கிளம்பி வெளியேற முயற்சித்திருக்கிறார். ஆனால், இரவு நேரம் என்பதால் சரியாக வெளியேறும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவருடைய நிலையை கண்காணித்துக் கொண்டிருந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள்(தனியார் நியமித்த) அந்தப் பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையால் காப்பாற்றப்பட்டார். அவரை வன்கொடுமை செய்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வழிதெரியாத பெண்ணுக்கு உதவ வேண்டிய பூங்கா காவலர்களே அவரை வன்கொடுமை செய்தது மக்களிடை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்நிலையங்களிலேயே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்கும் வரலாறும் இருக்கிறதில்லையா? பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் பொறுக்கிகளாக மட்டுமே இருப்பதில்லை என்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் யார் வேண்டுமானால் பாலியல் வன்கொடுமை செய்வார்கள் என்பதற்கும் ஏராளமான உதாரண சம்பவங்கள் உண்டு. காரணம் சமூக மனநிலை அப்படிப்பட்டது.

முழுக்கட்டுரையும் இப்போது.காமில்

 

தாய்மையின் உடலும் அழகானதே: கஸ்தூரி

kas

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மலாய்கா அரோரா கான், தனக்கு குழந்தை பிறந்த புதிதில் தன்னுடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதைக் காட்ட குழந்தையை தோள்களில் கிடத்தியபடி ஆடையில்லா படம் ஒன்றை எடுத்து வெளியிட்டிருந்தார். அந்தப் படம் குழந்தைப் பெற்றாலும் உடற்பயிற்சியின் மூலம் பெண் தன்னுடலை மீண்டும் இயல்பான நிலைக்குக் கொண்டுவரலாம என்பதைச் சொல்வதற்காக எடுக்கப்பட்டதாக சொன்னார் மலாய்கா.

ஊடக பிரபலமான மலாய்காவுக்கு உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பது சாத்தியமாகலாம். ஆனால், சாதாரண ஒரு பெண்ணுக்கு அது அவ்வளவு சாத்தியமானதல்ல. குழந்தை பெற்றதால் உண்டான தொப்பையும் குழந்தையை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த பிறகு பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடல் எடை கூடுவதும் அன்றாட வாழ்க்கைச் சூழலில் அந்தப் பெண் சுமக்க வேண்டியதாகிறது. தொப்பை,குண்டு என சுற்றத்தாரின் சொற்களையும் கூடவே சுமக்க வேண்டியிருக்கிறது.

தாய்மை அழகென்றால் தொப்பையும்கூட அழகுதானே என்கிறார் நடிகை கஸ்தூரி. தாய்மையின் உடலும் அழகானதே என்பதைச் சொல்ல Bodies Of Mothers என்ற பெயரில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படத் தொகுப்பில் கஸ்தூரியின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

கஸ்தூரி 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகை. சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். தற்போது அமெரிக்காவில் கணவர், குழந்தைகளுடன் வசிக்கிறார். Bodies Of Mothers தொகுப்புக்காக கஸ்தூரி தன் குழந்தையை அணைத்திருப்பது போன்ற ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாகப் பிரபலமாகி வருகின்றன. இதுகுறித்து கஸ்தூரி பகிர்ந்துகொண்டவை இங்கே…

“ஆங்கிலம் பேசக்கூடிய மேற்கத்திய நாடுகள்ல பெண்ணின் உடல் இப்படித்தான் இருக்கணும்ங்கிறத பத்தி நிறைய கட்டுப்பாடுகள வெச்சிக்கிட்டு இருக்காங்க. அதுவும் குழந்தை பிறந்த பெண்கள் தங்கள் உடல் பாழாயிட்டதா நினைச்சு ரொம்பவே மனசுஒடிஞ்சு போறாங்க. அதபத்தின கருத்தை மாத்தணும் தாய்மையின் உடலும் கொண்டாடப்படக்கூடியதேன்னு சொல்றதுக்குதான் பிரபல போட்டோகிராஃபர் ஜேட் Bodies Of Mothers தொகுப்பை உருவாக்கினாங்க. அவங்களும் ஒரு தாயா இந்த தொகுப்புல இடம்பெற்றிருக்காங்க.

என்னை அணுகினப்போ சந்தோஷமா நான் இதுக்கு ஒப்புக்கிட்டேன். எந்தவித ஒப்பனையும் இல்லாம. பிரசவத்துக்குப் பிறகான சோர்வோட, கண்களில் கருவளையத்தோட, பிரசவமாகி இயல்புக்குத் திரும்பாத வயிற்றோட இந்த ஒளிப்படத்துல இருப்போம். இதுவும் அழகுதானேங்கிறதை வலியுறுத்தறதுதான் நோக்கம். மூணு வருஷத்துக்கு முன்பு எடுத்த படங்கள் இவை” என்ற கஸ்தூரியிடம் இப்போது எப்படி இந்தப் படங்கள் பிரபலமானது என்றோம்..

“என்னுடைய பிரைவசியை என்னைக் கேட்காமலேயே விளம்பரப்படுத்திட்டாங்கன்னு ஒரு வருத்தம் இருக்கு. என்னோட சமூக வலைத்தள பக்கத்துல இந்தப் படத்தை பகிர்ந்திருந்தேன். அதை எடுத்து பல மீடியாக்கள் பயன்படுத்தியிருக்காங்க. அது அப்படியே இப்போ வைரல் ஆகிருச்சு.

இந்தப் படங்களைப் பார்த்து பல வித விமர்சனங்கள் வந்துச்சு. எல்லாம் மோசம்னு சொல்ல முடியாது. இணையத்துல வந்தபிறகு எல்லா விமர்சனத்தை ஏத்துக்கறதுக்கும் தயாரா இருக்கணும். ஒரு குழந்தைக்கு தாய் ஆகிட்டப் பிறகு, இதெல்லாம் இவங்களுக்குத் தேவையான்னு ஒரு சிலர் சொன்னாங்க. காசுக்காக இப்படிச் செய்யலாமான்னு ஒருசிலர் சொன்னாங்க. விரல்விட்டு சொல்லக்கூடிய சிலர் என்னுடைய மார்பகங்கள் பத்தி தரக்குறைவா பேசினாங்க.

உதவாங்கப் போறேன்னுதான் நினைச்சு என்னோட ஃபேஸ்புக் பக்கத்துல போட்டேன். ஆனா 97 சதவீத மக்கள் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க; எதிர்த்த பலரும்கூட அவங்க கட்டிக் காத்த கலாசாரம் போய்டிடுச்சேன்னுதான் பேசினாங்க. பாரதியாரையே தள்ளி வெச்ச ஊராச்சே? ஏற்கப்பட்ட கோட்பாடுகளை யார் உடைச்சாலும் அவங்களுக்குக் கிடைக்கிறது எதிர்ப்புதான்; விமர்சனம்தான்.

தனிப்பட்டவங்க சொன்ன விமர்சனங்களைத்தாண்டி, ஊடகங்கள்தான் அரை நிர்வாணப்படம், டாப் லெஸ் படம்னு போட்டு இந்தப் படம் எடுக்கப்பட்டதோட நோக்கத்தையே சிதைச்சிட்டாங்க. குறிப்பிட்ட ஒரு அறையில் நம்முடைய ரகசியங்களை பகிர்ந்துக்கறதுக்கும் மேடை போட்டு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு புத்தகத்தோட ஒரே ஒரு பக்கத்தை மட்டும் கிழிச்சுவச்சிக்கிட்டு முன்ன பின்ன பார்க்காம பேசக்கூடாது. நல்ல கருத்துக்களை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கிற ஊடகங்கள் இப்படிச் செய்றது வருத்தமா இருக்கு” என்று தன்னுடைய பேச்சை வருத்தத்தோடு முடித்தார் கஸ்தூரி.