இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை

மே 1′  2009ல் எழுதி காணாமல் போன ‘இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை’ கட்டுரையின் மறுபிரசுரம் இது…

”குடிக்கத் தண்ணி வேணும்” என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்’ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்’ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான். சிங்கள அரசியல்வாதிகள்தான் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் எனில் தமிழன் இன்னொரு தமிழனை கொல்வதை எந்த வகையில் சேர்ப்பது? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்’ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார். என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும். ஈழத்தமிழர் போராட்டத்தையும் இன்னல்களையும் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளைப்போல சாகச மனநிலையில் அணுகும் பெருங்கும்பல்கள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிறது என்ற ஷோபா சக்தியின் கூற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன் . உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது! இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!

சிங்களவர்களின் விருப்பம் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான்!

vithanageஉலகசினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குநர் பிரசன்னவிதனாங்கே. போரின் ஆழமான பாதிப்புகளுக்கிடையே மனிதத்தைத்தேடும் இலங்கைப்படைப்பாளி. இவருடையடெத் ஆன் எ  ஃபுல் மூன் டேசர்வதேச அளவில் பலவிருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றபடம். தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

”உங்களுடைய பின்னணி…”

”நான் கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவன். என் அப்பா தீவிர சினிமா ரசிகர். தமிழ், இந்தி, சிங்களம் என எல்லா மொழிப் படங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார். இப்போது நான் இருக்கும் இடத்துக்கான தயாரிப்புகள் அத்தனை யும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிவிட்டன. சினிமாவும் புத்தகங்களும் தனிமையில் எனக்கான கனவுலகத்தைத் திறந்துவைத்தன. சிறுவனாக இருந்தபோது நடிகனாக வேண்டும் என்றுதான் விரும்பினேன். வளர வளர… ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற படங்கள் பார்க்கக் கிடைத்த போது, என்னுடைய சிந்தனையின் தடம்மாறிவிட்டது. ‘எது நல்ல படம்’ என்ற புரிதல் கிடைத்தது. இலங்கையில் சினிமாவைக் கற்றுத் தர பள்ளிகள் கிடையாது. சினிமாவைப் பார்த்து, எனக்குநானே ஆசானாக இருந்து சினிமா எடுக்கக் கற்றுக் கொண்டேன். சினிமாவில் திரைக் கதாசிரியராக நுழைந்து, இயக்குநராக மாறினேன். 92ல்முதல் படம் ‘சிசிலா கினி கனி’ வந்தது. இப்போது ஆறாவது படமான ‘ஆகாச குசும்’ தயாராகிக்கொண்டு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகத் துறையில் சிறிது காலம் இருந்தேன். என் படங்களில் நல்ல நடிகர்களும், நல்ல நடிப்பும் வருவதற்கு நாடகத் துறை அனுபவம்தான் கை கொடுக்கிறது.”

”நீங்கள் ஒரு சிங்களராக இருந்தபோதும், ஆளும் சிங்கள அரசின் மீதான விமர்சனத்தைத் தயங்காமல் உங்கள் படங்களில் வைக்கிறீர்கள். இதற்குஅரசுத் தரப்பிலிருந்து ஏதும் அச்சுறுத்தல்கள் வரவில்லையா?”

”இருபத்தைந்து ஆண்டுகால போர்ச்சூழல் இலங்கையின் ஒவ்வொரு மனிதனையும் பாதித்திருக்கிறது. இலங்கையில் ஒவ்வொருவரும் தான் நேசித்த யாராவது ஒருவரைத் தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். போருக்குப் பின்னால் இருக்கக்கூடியஉண்மை யைச் சொல்லும்போது கசப்பு இருக்கத்தான் செய்யும். நான் உணர்ந்த உண்மையை என் படங்களில் சொல்ல விரும்புகிறேன். ‘டெத் ஆன் எ ஃபுல் மூன் டே’ படத்துக்கு அரசு தடை விதித்தது. நான் உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி திரையிட அனுமதி வாங்கினேன். ‘நீ அவன் ஆள்’ போன்ற முத்திரையும் குத்தினார்கள். ஒரு படைப்பாளி என்ற வகையில் இதை எதிர்கொள்வதும் என்னுடைய பணிதான்!”

”உங்கள் படங்கள் மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?”

”வளரும் படைப்பாளியாக இருந்தபோது விருதுகளைப் பெரிய அங்கீகாரமாக நினைத்த துண்டு. ‘டெத் ஆன் எ ஃபுல்மூன் டே’ சிறப்பு அனுமதியோடு யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி, போரில் பலியான ஒரு ராணுவ வீரன்… அவன் இறந்துவிட்டதை அறிந்தும் அவன் வருவான் என காத்திருக்கும் ஒரு வயோதிகத் தந்தை… இதன் பின்னணியில் போரின் விளைவுகளைப் பேசும் படம். தமிழ் இளைஞர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அவர்களுடைய வாழ்த்துக்களை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி இருந்தார்கள். பிரித்துவைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் உள்ளுக்குள் உறைந்துபோன மனிதத்தைத் தோண்டி எடுக்கும் வேலையை ஒரு படைப்பு செய்ய வேண்டும். அப்படியான படைப்புகளுக்குத்தான் உள்ளத்தில் இருந்து பாராட்டுக்கள் வரும்! அது என் படங்களுக்குக் கிடைக்கிறபோது நான் முழுமையான படைப்பாளியாகிறேன்.”

”இலங்கையில் தற்போதுள்ள நிலைமை என்ன? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடக்கும் உரிமைப் போரின் முடிவுக்கு, ஒரு சிங்களராக நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?”

”இந்தியாவில் பணவீக்கம் 11 சதவிகிதமாக இருக்கிறது என்கி றார்கள். ஆனால், இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பண வீக்கம் 20 சதவிகிதத்தைத்தாண்டி விட்டது. அத்தியாவசியப் பொருட் களின் விலை பத்து மடங்கு விலையேற்றம்செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு நிம்மதியான, அமைதியான சூழலுக்கு மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடைய சுயநலத்துக்கு நம்மைப் பிரித்து ஆண்டார்கள். அதையே ஏன் நாமும் கடைப்பிடிக்க வேண்டும்? எல்லோருடைய வாழ்க்கையிலும் போரின் பாதிப்புகள் நிறையத் தழும்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு குடிமகனாக என்னுடைய கருத்தெல்லாம்… அமைதியை அமைதியான முறையில்தான் கொண்டு வர வேண்டும்என்பது தான்!”

ஆனந்த விகடன் (09-07-08)

பின் குறிப்பு :பிரசன்னவிதானங்கே குறித்து ஆனந்தவிகடனில் வந்த உலகசினிமா தொடரில் படித்தபோது பிரமிப்பும் மரியாதையும் உண்டானது. அவர்அடிக்கடிசென்னை வருகிறார் என்ற தகவலின் அடிப்படையில் ரொம்ப காலம் யாரைப் பிடித்தால் அவரை சந்திக்க முடியும் என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒருநாள் எதேச்சையாக அஜயன்பாலாவிட ம்இதைசொல்லப்போகஎழுத்தாளர் விஸ்வாமித்திரன், பிரசன்னவிடம் இணை இயக்குநராக இருக்கும் விஷயத்தைசொன்னார். உடனே விஸ்வாமித்திரனை கைபேசியில்பிடித்தேன். 3 மாதங்களுக்கு பிறகுதான் அவர் சென்னை வரவிருக்கிறார் என்றார் விஸ்வாமித்திரன். 3 மாதங்கள் முடிந்தநிலையில் மீண்டும் அவரிடம் பேசினேன். இங்குதான் இருக்கிறார் எனறார். மகிழ்ச்சிஒரு சந்திப்புக்குஉதவி செய்யுங்கள் என்றேன். சரி என்றார். நினைவுபடுத்த மீண்டும் அழைத்தேன். அடுத்த வாரம் என்றார். வாரம் கழிந்த நிலையில் மீண்டும்அழைத்தேன். வேலைபளு என்றார்இப்படியாக சில மாதங்கள் கழிந்தநிலையில் ஒருநாள் விஸ்வாமித்திரனிடம் சண்டையே போட்டுவிட்டேன். பாவம் பயந்துவிட்டாரோ என்னவோ பிரசன்னவின் முந்தையபடங்களைப் பார்க்கச்சொல்லி, சந்திக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பிரசன்னவின் படங்களைப்போல அவருடைய சுபாவமும். வெளிபூச்சு இல்லாத மனிதராக பழகினார். என்னுடைய கேள்விகளுக்கு மனதிலிருந்து பேசினார். இலங்கை அரசிமிடருந்து அவருக்கு வந்துகொண்டிருந்த மிரட்டல்கள் காரணமாக அரசியல் பேசுவதை தவிர்த்தார். அப்படியிருந்தும் அவருடைய பேட்டி, அமைதியை விரும்பும் ஒரு மனிதநேயவாதியின் எதிர்ப்பார்ப்பை கூறுவதாகவே அமைந்திருந்தது. அரசியல் பேசியது. இன்றைசூழலுக்கு இது மிகவும்தேவை என்பதால் பிரசன்னவின் பேட்டியை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன்.