விநாயகர் சதுர்த்தியும் துரத்தியடிக்கடிக்கப்படும் யானைகளும்

விநாயகர் சதுர்த்தி நாடெங்கிலும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தனை வருடங்களாக எங்கள் தெருவில் தோன்றாத பிள்ளையார், இந்த ஆண்டு கோலாகலமாக வீற்றிருக்கிறார். உபயம் இந்து முன்னணி. என்னுடைய இந்தப் பதிவு அதைப்பற்றியதல்ல. யானைகளை துரத்தியபடி யானை தலையைத் தாங்கி நிற்கும் ஒரு கடவுளை வணங்கும் நம்மைப் பற்றிய சுயவிமர்சனம் இந்தப் பதிவு. யானைக் கடவுளை வணங்கும்படி எனக்கு குழந்தைப் பருவத்தில் சொல்லித்தரப்பட்டது. யானைக் கடவுளுக்கான விழாவை நான் பிறந்த ஊரில் விமர்சையாகவே கொண்டாடுவார்கள். ஆனாலும் பிரத்யேகமான கவர்ச்சியோ, உறவோ யானை கடவுள் மேல் எனக்கு ஏற்பட்டதில்லை. யானைகள் மேலும் அப்படித்தான். அது என்னோடு வாழும் ஒன்றாகவே பட்டது. அதன் பேரில் வியப்பும் இல்லை, ஈர்ப்பும் இல்லை. யானைகள் வந்து செல்லும் வழித்தடத்தில்தான் எங்களுடைய பள்ளிப் பயணம் இருக்கும். யானை தின்றுவிட்டுப்போன பலாப்பழங்களை சேகரிப்பது என்னுடைய பால்ய கால ஆர்வமாக இருக்கும். காட்டு யானைகளை பால்ய வயதில் நேரில் பார்த்த நினைவு எனக்கு இல்லை. வளரும் பருவத்தில் தெருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த யானைகளைப் பார்த்திருக்கிறேன். சமீபகாலத்தில்தான் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மூங்கில் கிளைகளை ஒடித்துக்கொண்டிருந்த ஒரு யானைக் கூட்டத்ததைப் பார்த்தேன்.

யானைக்கும் எனக்குமான தொடர்பு நான் ஏழுமாத கருவாக இருந்தபோதிலிருந்து ஏற்பட்டது. என்னை கர்ப்பத்தில் சுமந்திருந்த அம்மா, விறகுகட்டுகளை தலையில் தூக்கி சுமந்தபடி அந்திவேளையில் வீடு திரும்பியபோது யானையைப் பார்த்து அலறி விழுந்ததாகவும் அப்போது இடுப்பில் ஏற்பட்ட வலி இப்போதும் இருக்கிறது என்று என் அம்மா இறக்கும்வரை சொல்லிக்கொண்டிருந்தார். நான் பிறந்தது யானைகள் நடமாட்டம் உள்ள, சூழலியல் மொழியில் சொல்லப்போனால் யானை வழித்தடத்தின் மேல் அமைந்த ஒரு ஊரில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது அந்த ஊர். இந்த ஊர் குறித்து நான் எழுதிய இந்தப் பதிவில் படிக்கலாம். சுற்றிலும் காடு, சிறிது பண்படுத்தப்பட்ட விவசாய நிலம், அதை நம்பிருந்தனர் அந்த ஊர் மக்கள். 25 ஆண்டுகளுக்கு முன்புவரை மண்சாலைகள்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்த ஊருக்குச் சென்று வந்திருந்த அம்மா, தார்ச்சாலைகள் போடப்பட்டு பேருந்து போக்குவரத்து வசதியும் செய்திருப்பதாக சொன்னார். இதேபோல அந்த வனப்பகுதியில் இருந்த மற்ற ஊர்களுக்கும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கும், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும், கட்டடங்கள் பெருகியிருக்கும் (இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஊரில்  யானைகள் வந்து செல்லும் பலாமரக்காட்டை அழித்து குடியிருப்புகள் கட்டப்பட்டன), மக்களும் பெருகியிருப்பார்கள். ஆனால் யானைகள்?

யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக செய்திகளில் அதிகம் அடிபடும் பகுதியாக இப்போது இந்தப் பகுதி மாறியிருக்கிறது. வெட்கமே இல்லாமல் அது எப்படி மனிதர்களால் மட்டும் பொய்யை மெய்யாக்க முடிகிறது? யானைகளின் வாழ்விடங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதென்னவோ நாம்தான். வாழ்விடங்களைப் பிடிங்கிக்கொண்டு அகதிகளாக துரத்தியடிக்கப்படும் இந்த உயிர்களின் மேல் ஏன் நமக்கு எந்த கரிசனமும் வருவதில்லை? மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் எனக்கு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அந்த மக்களுக்கு நம்மோடு சகஉயிரியாக இருக்கும் காட்டுயிர்களின் மேல் அக்கறை இல்லாமல் இருக்கிறதே என்பதே என்வேதனை. இதற்கெல்லாம் காரணகர்த்தாக்களாக அரசுகளைத்தான் கைகாட்ட வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் வெறுமனே கண்துடைப்புக்காக கொண்டுவரப்படும் வனத்துறை சட்டங்கள், இன்னொரு பக்கம் வனத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பை அசுரவேகத்தில் ஆக்கிரமிப்பு செய்வது. இரண்டும் முறைகேடு மிகுந்த இந்த அரசுகளின் அவலட்சணமான முகங்கள்.

Elephant family

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு யானை குடும்பம்

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளை பழங்குடிகளைத் தவிர, புதிய குடியேறிகள் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தொடக்கம் முதலே அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அடுத்தது காட்டுயிர் நடமாட்டம், குறிப்பாக யானை வழித்தடங்களை அறிவியல் ரீதியாகக் கண்டறிந்து அந்த வழித்தடங்களில் உள்ள குடியிருப்புகள் அப்புறப்படுத்துதல், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைச் செய்யவில்லை. அடுத்தது வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருக்கும் ஆன்மிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது. அரசுகளின் ஆதரவோடு நடக்கும் சூழலியல் சார்ந்த மிகப்பெரிய முறைகேடு, ஊழல் இதுவாகத்தான் இருக்கும். யானை உள்ளிட்ட காட்டுயிர்களின் அழிவுக்கு அடித்தளமாக இருக்கும் இந்த பிரச்னைகளை களையாமல் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளாக்கப் போவதாக 6 காட்டுயானைகளைப் பிடித்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே…

படம் நன்றி : தி நேச்சர் டிரஸ்ட்

தப்பிய வடகிழக்கு பருவமழை – இடம் மாறிய பூநாரைகள்!

படம்

நளினமும் அழகும் மிக்க பறவையினங்களில் ஒன்று பூநாரை! சென்னைக்கு அடுத்துள்ள பழவேற்காடு பகுதி பூநாரைகளுக்கு ரொம்பவும் பிடித்த இடம்.  இது ஒரு சூழலியல் சுற்றுலா தளமும்கூட. கடலை ஒட்டியிருக்கும் கழிமுகப் பகுதிகளில் கிடைக்கும் பாசியும் இறாலும் அதிகப்படியாக கிடைப்பதால் இந்தப் பகுதியில் சீசனின்போது ஆயிரக்கணக்கான பூநாரைகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம்.
பொதுவாக பூநாரைகளின் சீசன் ஏப்ரல் மாதத்துக்கு மேல்தான் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பூநாரைகள் வரத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் சூழுலியல் செயல்பாட்டாளர் திருநாரணன். தி நேச்சர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பை நிறுவி பல்வேறு சூழலியல் சார்ந்த பணிகளைச் செய்துவரும் இவர், அதன் ஒரு பகுதியாக பழவேற்காடு போன்ற பகுதிகளில் களஆய்வு மேற்கொள்கிறார்.
‘‘வருடா வருடம் பழவேற்காடு பகுதிகளில் எங்கள் அமைப்பு சார்பாக களஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் ஆய்வில் கவனித்த விஷயம்…ஜனவரியிலேயே பூநாரைகளை அதிக அளவு பார்க்க முடிந்ததுதான். பழவேற்காடு ஆந்திர_தமிழக எல்லையில் அமைந்திருக்கும் பகுதி. வழக்கமாக நவம்பரில் வரத்தொடங்கும் பூநாரைகள் ஆந்திர மாநில எல்லைகளான சூலூர்பேட்டை, தடா பகுதிகளில் இருக்கும். அங்கு தண்ணீர் வற்றத் தொடங்கியது. தமிழகத்தின் அண்ணாமலைச் சேரி, பொன்னேரி பகுதிகளுக்கு வரத்தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் ஆந்திர எல்லையோர நீர்நிலைகள் வற்றிப்போய், இப்போதே தமிழக பகுதிகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன.

படம்

இப்படி மழை தவறி பெய்வது அல்லது சரியான மழை பொழியாதது தொடர்ந்தால் வரும் காலங்களில் பூநாரைகள் இந்தப் பகுதிகளுக்கு வருவதை நிறுத்திவிடும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்நு எச்சரிக்கை மணி அடிக்கிறார் திருநாரணன்.

படங்கள் : தி நேச்சர் டிரஸ்ட்

 

தொடர்புடைய பதிவுகள்

வெளிர் சிவப்பு ஓவியம்!

சிலந்திகளின் படையெடுப்பு பருநிலை

மாற்றத்தின் அறிகுறி?!

பனிவிழும் அதிகாலை பொழுதில் ஒரு ஜோடி பறவைகளின் கீச்சுக்குரல்!

DSC_0229

சென்னையின் கான்கீரிட் காடுகளிலிருந்து தப்பித்து, புத்துணர்வு பெற நீங்கள் ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. இதோ இங்கேயே இருக்கிறது ஒரு இடம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது கழிமுகத்துவாரமான கழிவெளி. நன்னீரும் கடல் நீரும் சேரும் இந்த இடத்தில் பல வகைப்பட்ட பறவையினங்கள், ஊர்வன, புல் வகைகள், மீன் வகைகள் என பல்லுயிர்ச்சூழல் நிரம்பி காணப்படுகிறது.

DSC_0168 copy

முதலை பண்ணை செல்பவர்கள் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த இந்த இடத்திற்கும் சென்று பாருங்கள். நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும். இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். இது வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடுவதற்கான இடமல்ல, நம் சூழலை காப்பதன் முக்கியத்துவத்தை அனுபவித்து உணர்வதற்கான இடம்.

DSC_0227 2 copy

பனி நிறைந்த ஒரு அதிகாலைப் பொழுதில் அமைதியாக அமர்ந்து, கூட்டிலிருந்து வெளியே வரும் பறவையின் கீச்சுக்குரலை கேளுங்கள். அதுவொரு இனிய அனுபவமாக இருக்கும்!

சூழலியல் சுற்றுலா

பனிபடர்ந்த காலை வேளையில் வரவேற்பைத் தந்த இணைப் பறவைகள்

மசினிகுடியில் அதிகாலை விடியல்

தீ பூக்களில் தேனை உறிஞ்சும் குருவிகள்

தலைகீழாக பிடித்து லாகமாக தேனை உறிஞ்சுகிறது இந்தக் குருவி

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முளைத்திருக்கும் புதிய குடியிருப்புகள்

சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்கென்றே வனவிலங்குகளுக்கு இடையூறாக இரவு பகலாக இயங்கும் வாகனங்கள்

முதுமலைப் பகுதியில் அமைந்துள்ள பழங்குடிகளின் இருப்பிடம்

மசினிகுடி…மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருக்கும் அழகான ஊர். முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் இருக்கும் இந்த இடத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இவை…

புலிகளுக்காக ஒரு பயணம்…

முதுமலை/புலிமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. வெறுமனே பொழுதை போக்கிவிட்டு வரவும் ஆர்வம் இல்லை. நேரமும் சரிவர ஒத்துழைக்கவில்லை. நேரம் கனிந்து வந்தபோது, முதுமலையை  சுற்றியுள்ள பகுதிகளை புலிகள் சரணாயமாக அறிவித்ததை ஒட்டி அப்பகுதிகளில் வாழும் மக்கள் (பழங்குடிகள்) எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தி வெளியானது.

காட்டுயிர்/சுற்றுச்சூழல்  பாதுகாப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களிடம் விசாரித்தபோது “நீங்களே நேரில் சென்று பாருங்கள்” என்று பீடிகை போட்டது முதுமலைக்குச் செல்லும் ஆவலுக்கு தூபம் இட்டது.
சமீப காலமாக மனிதனுக்கு கானக உயிர்களுக்குமான இருப்பு சார்ந்த போராட்டம் வலுத்து வரும் சூழலை ஒட்டி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கும் முயற்சி குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதற்கான களஆய்வுப் பணிகளைத் தொடங்க இது சரியான தருணமென முதுமலைக்குச் செல்லும் பயணப்பணிகளைத் தொடங்கினோம். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்காத சூழ்நிலையில் நானும் லிசியும் மைசூர் வழியாக கடந்த திங்கள் முதுமலைக்கு பயணப்பட்டோம்.

மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் 90 கி.மீட்டரில் இருக்கிறது முதுமலை யானைகள் சரணாலயம். அருகிலேயே பந்திப்பூர் புலிகள் சரணாலயம். இரண்டும் ஒரே காடுதான், முன்னது தமிழகப்பகுதியிலும் பின்னது கர்நாடகப்பகுதியிலும் இருக்கிறது. பந்திப்பூரை புலிகள் சரணாலயமாக அறிவித்தது 1973ல். நமக்கு இப்போதுதான் புலிகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. அதற்கும் எதிர்ப்புகள்…
முதுமலை தெப்பக்காட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் மசினிகுடி என்ற ஊர். அவ்வூர் மக்கள்தான் புலிகள் சரணாலயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். காட்டுப்பகுதியை கடந்து செல்லும்போது அதன் வனப்பு எங்களை லயிக்க வைத்தது. கூடவே நகரத்தை விஞ்சும் வகையில் நொடிக்கு ஒருதரம் கடந்து போன வாகனங்களைப் பார்க்க சாவு மணி அடிப்பதைப்போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது.

மூன்று நாட்கள் முதுமலையின் சில கிராமங்களைக் கண்டோம். முடிநதமட்டும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தோம். 20,30 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக அப்பகுதிகளில் குடியேறி அம்மண்ணின் வளத்தை உறிஞ்சி,இன்று சகல வசதிகளுடனும் வாழும் ஒரு சிலரின் எதிர்ப்புதான் ஊடகங்களால் பழங்குடிகளின் போராட்டமாக திரிக்கப்பட்டுள்ளது (அல்லது) ஊடகங்களுக்கு திரித்து சொல்லப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயம் ஆக்கப்பட்டால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், அதனால் சுற்றுலாவை நம்பிருக்கும் தங்களுடைய சுரண்டல் தொழில் பாதிக்கப்படும் என்பதுதான் இந்தப்போராட்டங்களின் காரணம்.

பழங்குடி பெண்களுடன் லிசி
ஆனால் இப்போதும் யானை கலக்கிவிட்டுச் சென்ற குட்டை நீரையே குடிநீராக குடித்து வாழும் பழங்குடிகளின் மன்றாடல் என்னவோ யானையும் புலியுமாவது அதனுடைய உரிமையை அனுபவிக்கட்டும் எங்களை வேறு இடங்களில் குடியமர்த்துங்கள் என்பதாக இருக்கிறது…

விரிவாக சொல்ல வேண்டிய விஷயமிது, சுருக்கமாக தந்திருக்கிறேன்.