ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…
சமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து. புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.
மகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா? போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.
இந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது! இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன. அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.
கடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.
தலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.
ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.
நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..