//இன்று நூலகத்திற்குச் சென்றிருந்த நான், எனக்கான ஒரு நூலைத் தேர்ந்தெடுக்க என்னற்ற புத்தகங்களைக் கையில் தாங்கியபடி நின்றிருந்தேன். அவ்வேளையில் சட்டென உங்களின் ”நான்” என்ற புத்தகம் என் கண்ணில் பட்டது. உங்களின் வகையே மற்ற எல்லா நூலின் வகைகளிலும் மாறுபட்டு இருந்ததே காரணம். பிறகு வீட்டில் நுழைந்த உடனே வாசிக்கத் தொடங்கி சில மணி நேரங்களிலேயே வாசித்து முடித்து விட்டேன்.பதிப்புரையில் குறிப்பிடப் பட்டிருந்ததைப் போன்று படைப்பாளியின் மொழியிலேயே அவர்களைப் புரிந்து கொள்ள பெரு வாய்ப்பாக இந்நூல் எனக்கு அமைந்திருந்தது. நாம் இன்று பார்க்கும் பரவலான பரிச்சமிக்க எழுத்தாளர்கள் கூட தங்களின் தொடக்க காலத்தில் மிக எளிமையாகவே பங்களின் படைப்பு உலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர் என்பது என்னைப் போன்ற எழுத்தார்வம் மிக்கனுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக பிரளயன் அவர்கள் வெற்றி குறித்த கருத்து என் மனதில் உள்ள கருத்தை அப்படியே பிரதியெடுத்தது போன்று இருந்தது.ஆக உங்களின் இம்முயற்சி நல்ல பலனைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்க.சம்பத் குமார்.//
Category Archives: நான்
‘‘பணத்தாலும் பதவியாலும் கிடைக்காத திருப்தி எழுத்தில் கிடைக்கிறது’’ பெருமாள் முருகன்
நான் எழுத வந்தது எனக்கே வியப்பான விஷயமா இருக்கு. ரொம்ப குறைச்சலான நிலத்தை வச்சி விவசாயம் பார்த்த சிறு விவசாய குடும்பம் எங்களோடது. அந்த நிலத்துல வருசம் முழுக்க உழைச்சிக்கிட்டே இருந்தாதான் சாப்பிட முடியும். மேட்டுக்காடுன்னு எங்க வட்டாரத்துல சொல்லக்கூடிய மேடும் பள்ளமுமாக, கரடுமுரடா இருந்த நிலம். அதுல விவசாயம் பார்க்கணும்னா இடைவிடாத உழைப்பைக் கொட்டித்தான் ஆகணும். படிப்பு வாசனையே இல்லாத குடும்பம். என் தலைமுறையில அண்ணன், தங்கைகள்எல்லாம் ஆறு, ஏழு வகுப்பிலேயே படிப்பை நிறுத்திட்டாங்க. நான்தான் எங்க குடும்பத்துல முதல்ல பத்தாவது பாஸாகி வரலாறு படைச்சவன். முதல் முதல்ல அரசு வேலைக்கு போனவனும் நான்தான்!
எங்க ஊரு பக்கமெல்லாம் விவசாயிகள் ஊருக்குள்ள வசிக்க மாட்டாங்க. அவங்கவங்க விவசாய நிலங்களுக்குள்ளேயே வீடு கட்டி குடியிருப்பாங்க. இதனால என் வயசு குழந்தைகளோட சேர்ந்து விளையாடவோ, பழகவோ வாய்ப்பு இல்லாம போயிடுச்சு. என்கூட பிறந்தவங்க ஒண்ணு என்னைவிட அஞ்சு வயசு அதிகமானவங்களாகவோ, இல்லைன்னா அஞ்சு, ஆறு வயசு குறைஞ்சவங்களாகவோ இருந்தாங்க. அதனால சின்ன வயசை தனிமையில கழிக்க வேண்டியதா போச்சு. மனுசனுக்கு பகிர்தல் என்பது அடிப்படையான விஷயம். அது எனக்கு இல்லாமலேயே போயிடுச்சு. சக மனுசங்களோட இந்த பகிர்தல் இல்லாததால யாரும் இல்லாதப்போ தன்னந்தனியா பேச ஆரம்பிச்சேன். நானே எனக்காக பாடிக்குவேன், பாராட்டிக்குவேன்.
நான் ஏழாவது படிச்சிட்டு இருந்தப்போ என்னோட தனிமைக்குள்ள வந்தது வானொலி. அதுவே எனக்கு மிகப்பெரிய உலகமா இருந்தது. அப்போ ஞாயிற்றுகிழமை காலை திருச்சி வானொலியில ‘மணிமலர்‘னு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை ஒலிபரப்புவாங்க. அதுல பூனைக்குட்டி, நாய்க்குட்டின்னு அவங்களா ஒரு தலைப்பு கொடுத்து பாட்டு எழுத சொல்வாங்க. நானும் பாடல்கள் எழுதி அனுப்புவேன். அப்படி நான் அனுப்பினதுல நிறைய பாடல்கள் ஒலிபரப்பு ஆனது. என்னை வெளிப்படுத்திக்கறதுக்கு இதை ஒரு வாய்ப்பா நினைச்சேன்.
அப்புறம் சிறுபத்திரிகைகள், வார பத்திரிகைகள் அறிமுகமாச்சு. தனிமையில இருந்த எனக்கு பகிர்ந்துக்கணும்கிற ஆசை எப்போதும் இருந்துக்கிட்டிருந்தது. நான் நினைக்கிறதை பகிர்ந்துக்கணும். அந்த பகிர்தல் நண்பர்களோடவோ, உறவுகளோடவோ ஊர்க்காரர்களோடவோ ஒரு குறுகிய வட்டத்துல அடங்கிடாம, உலகத்துல இருக்கிற மற்றவர்களிடமும் அடுத்தடுத்து வர்ற தலைமுறைகளிடமும் போய் சேரணும்னு விரும்பினேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்த வடிவம்தான் எழுத்து.
ஸ்கூல் முடிச்சு, கல்லூரியில காலடி எடுத்து வைக்கிற வரைக்கும் நான் பாட புத்தகத்துல படிச்ச மரபுக் கவிதைகளை பின்பற்றி மரபுக் கவிதைகளைத்தான் எழுதினேன். புதுக்கவிதை, சிறுபத்திரிகை விசயங்கள் அறிமுகமான பிறகு அதுவரைக்கும் எழுதினதை மறுபரிசீலனை பண்ண முடிஞ்சது. என்னைச் சுத்தி நடக்கிறது, என் கிராமம், என் குடும்பம் சார்ந்த விசயங்கள், தமிழ் வாழ்க்கை சார்ந்த விசயங்களை எழுத ஆரம்பிச்சேன்.
முதல் நாவல் ‘ஏறுவெயில்’(மருதா வெளியீடு) வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்காக விவசாய நிலத்தை விட்டுப்போன குடும்பங்கள் எப்படி வாழ்வியல் பாதிப்புக்குள்ளானதுங்கிறதுதான் கதை. என் சின்ன வயசுல இப்படியொரு நிகழ்வு எங்க ஊருல நடந்தது. அரசாங்கம் கொடுத்த சொற்ப பணத்தை வாங்கிக்கொண்டு பிழைப்புக்கான வழி தெரியாமல் சிதைவுக்குள்ளான குடும்பங்களில் எங்களுடைய குடும்பமும் ஒன்று. இந்த நாவல் எழுதி 15 வருடங்கள் ஆகிடுச்சு. ஆனா விவசாய நிலங்களைப் பிடிங்கிக்கொண்டு அந்த விவசாயிகளை விரட்டக்கூடிய நிலை இன்னைக்கும் இருந்துகிட்டு இருக்கு. அது தொடர்ந்து பேசக்கூடிய விசயமாகவும் இருக்கும்.
அதுக்குப்பிறகு, நாங்க நகரம் சார்ந்த வாழ்க்கைக்கு போயிட்போம். அப்பா ஒரு தியேட்டர்ல கடை வெச்சிருந்தார். அங்க பலவிதமான அனுபவங்கள். அந்த அனுபவங்களை ‘நிழல் முற்றம்’ (காலச்சுவடு) நாவல்ல பதிவு செய்தேன். தமிழ்ல திரைப்படத் துறை பற்றிய பதிவு இருக்கு. ஆனா திரைப்படங்களை சார்ந்து வாழக்கூடிய தியேட்டர்ல சோடா, மிக்சர் வித்து பிழைக்கிற விளிம்பு நிலை சிறுவர்களைப் பற்றிய பதிவுகள் இல்ல. அதைத்தான் ‘நிழல் முற்ற’த்துல சொன்னேன்.
அடுத்து வந்த ‘கூளமாதாரி’ ஆடு மேய்க்கிற சிறுவர்களிடையே ஜாதிங்கிற ஏற்றத்தாழ்வுகள் எப்படி வருதுங்கிற பற்றிய நாவல்.
எழுத்துங்கிற குறிப்பிட்ட ஒரு விசயத்தோட மட்டுமே நின்னுடறது கிடையாது. நான் இதுவரைக்கும் எழுதின நாலு நாவல்லேயும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமான பிரச்னைகள சொல்லியிருக்கேன்.
சமீபத்தில வந்த ‘கங்கணம்’ (அடையாளம்) திருமணத்தைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிற நாவல். இந்த சமூகத்துல திருமணம்கிறது ஆணும் பெண்ணும் முடிவு பண்றதா இல்லை. பொருளாதாரம் போன்ற வேறு விஷயங்கள்தான் தீர்மானிக்குது. இதுல உள்ளோட்டமா பெண் சிசு கொலை பற்றிய பதிவை செஞ்சிருக்கேன். ஒரு குறிப்பிட்ட வருசத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்துல பெண் சிசு கொலைகள் அதிகமா நடக்கும்போது. அதே சமயத்துல பிறக்கிற ஆண்கள் வளர்ந்து திருமணத்திற்கு நிற்கும்போது அந்த சமூகத்துல பெண்கள் இல்லாம போயிடறாங்க. இதையும் நான் சொல்லியிருக்கேன்.
நாம் வாழற சூழல்ல நம்மை பாதிக்கிறமாதிரி நடக்கிற செயல்களுக்கு நம்மால் உடனடியா எதிர்வினை செய்ய முடியறதில்லை. கையாளாகாத நிலைமைதான் இருக்கு. அந்த வகையில எழுத்தாளன் சமூக உணர்வோட செயல்பட முடியுது. அதுலேயும் சிலதை மட்டும் பேசலாம், செய்யலாம்,. எழுத்துல கொண்டுவரக்கூடாதுன்னு வரையறை வேற செய்யறாங்க. எழுத்துன்னா நீங்க நல்லது கெட்டதுன்னு எல்லாத்தையும் கொண்டுவரத்தான் வேணும்.
‘பீக்கதைகள்’ (அடையாளம்) சிறுகதை தொகுப்புல அப்படி மற்றவங்க பேச தயங்கின, புறக்கணிச்சதை நான் பேசியிருக்கேன். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைன்னு பல வடிவங்கள்ல அதை வெளிப்படுத்தறேன்.
இதுல கவிதையை எனக்கு நெருக்கமான வடிவமா என்னோட அக விசயங்களை பேச பயன்படுத்திக்கறேன். எந்த வடிவமானாலும் சரி, ஒவ்வொரு வரி எழுதும்போதும் என்னை முழுமையா வெளிப்படுத்த முடியுமான்னு பார்க்கிறேன். எப்பவும் அதிருப்தி இருந்துகிட்டுதான் இருக்கு. ஆனாலும் எழுத்துங்கிறது எனக்கு மிகப் பெரிய வடிகாலா இருக்கு. பணத்தாலும் பதவிகளாலும் கிடைக்காத சந்தோசம் எனக்கு எழுத்துல கிடைக்குது. மனிதனுக்கு எதுல திருப்தியோ அதுல ஈடுபடறது நல்லது. அந்த வகையில சமூகத்துல வேற எந்த மனிதருக்கும் கிடைக்காத திருப்தி ஒரு எழுத்தாளரா எனக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.
குங்குமத்தில் இலக்கிய ஆளுமைகளின் தன் அறிமுக தொடரான ‘நான்’ இல் பதிவுசெய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் தன்அறிமுக தொகுப்பு ‘ஸ்கிரிப்டி’ல்!
தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் தன்அறிமுக தொகுப்பு ‘ஸ்கிரிப்டி’ல்!
‘குங்குமம்’ இதழில் தொடராக நான் எழுதிய எழுத்தாளர்களின் தன்அறிமுகம் புத்தகவடிவில். இதோ இங்கே படிக்கலாம்.
”தனியா வாழற பெண் எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான்” – பாமா
பாமாவுக்கு ரொம்ப நாளா ஒரு ஆச உண்டு. எதுக்கெடுத்தாலும் ஆம்பளயதான் கேக்குறாங்க. கரண்ட் பில்லு கட்டணும்னாலும் ஆம்பள. ஒரு போன் வேணும்னாலும் ஆம்பள வேணுங்கறாங்க. அதான் சம்பளத்துக்குப் புருசன் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு ஆச. கேக்கறவங்களுக்கெல்லாம் இவன்தான் புருசன், புருசன்னு காட்டணும். ஏன்னா இந்த சமூகம் எப்பவும் அப்பா, கணவன், மகன், அண்ணன், தம்பின்னு ஒரு ஆம்பளயத்தான் புடிச்சி வச்சிருக்கு. சம்பளத்துக்குப் புருசன் வேலைப் பார்த்து, வேலை முடிஞ்சா அவன் வேலையைப் பார்த்துட்டு போறமாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா நல்லா இருக்கும்னு பாமாவுக்கு நினைக்கத் தோணுது. ஏன்னா தனியா ஒரு பொம்பள வாழ்க்கை நடத்தறதுங்கிறது இந்த ஆண்மைய சமுதாயத்துல என்னைக்குமே ஒரு கேள்விகுறியாதான் இருக்குது.
ஏன் இவ கல்யாணம் கட்டிக்கல?
எவனையாவது மனசுல நெனச்சுட்டு இருக்காளோ?
இவ வீட்டுக்கு யார் யார் வாராங்க?
எவ்வளவு நேரம் பேசறாங்க?
வர்றவங்ககிட்ட இவ எப்படி பேசுறா?
சிரிச்சுப் பேசுறாளா? மொறச்சிப் பேசுறாளா?
இப்படி கேள்விகள் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும்.
அதாவது தனியா வாழற பெண் இந்த சமுதாயத்துக்கு எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான். இதையெல்லாம் மீறி பாமா சுதந்திரத்தை விரும்பறா.
அதுக்காக இன்னும் எத்தனை விதமான கேள்விகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கா.
மதுரை மாவட்டம், புதுப்பட்டி பிறந்து, வளர்ந்தது. மத்த பெண்களைவிட தலித் பெண்கள் சுதந்திரமானவங்க. ஒண்டிக்கிறதுக்காக மட்டும்தான் சின்ன குடிசை. மத்தபடி வெளியிலதான் ஒலகம். பேசவும் சிரிக்கவும் ஆடவும் பாடவும் சுதந்திரம் இருந்தது. அந்த சுதந்திரத்தை அனுபவிச்சவ பாமா. ஆனாலும் கல்யாணம்னு வரும்போது எல்லா பெண்களைப்போல இவங்களும் சராசரியாதான் வாழ்ந்தாகணும். ஆணுக்காகவே, ஆணின் வசதிக்காகவே மனைவி, குழந்தை எல்லாம். ஆண்கள் எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்ல வரலை. ஜனநாயக முறை குடும்பத்துல இல்லன்னு சொல்ல வர்றேன்.
ஒடுக்கப்படற தலித் பெண்களை மீட்கணும்னா, அவங்களுக்குக் கல்வி கிடைக்கணும். கல்வி ஒண்ணுதான் அவங்களை உயர்த்தும்னு நம்பிக்கை. அதுக்காகவே தன் வாழ்க்கையை வாழணும்னு கிறித்துவ மடத்துல சேர்ந்தா பாமா. ஆனா, அங்கயும் சமூகத்துல இருக்குற அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் இருந்தது. பண்பாடு, ஜாதி, மொழி, பணம்னு அங்கயும் ஏகப்பட்ட பிரிவினைகள்.
துக்கத்துல இருந்தாலும் சந்தோசமா இருக்குறமாதிரி காட்டிக்கிற பாவ்லா வாழ்க்கை அது. சமத்துவம், சகோதரத்துவம்ங்கிற கிறித்துவ மதிப்பீடுகள் அங்கே காணாமல் போய்கிட்டு இருந்துச்சு. பணக்கார பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பாமா டீச்சர் தேவையில்லை. வேற யாராவது செஞ்சுட்டு போகட்டுமே.
பாமா என்ன நினைச்சுப் போனாளோ அது அங்க இல்ல. ஏழு வருசத்துக்கு அப்புறம் மடத்தை விட்டு வந்தாச்சு.
பெறகுதான் போராட்டம் ஆரம்பமாச்சி. ஒரு பொண்ணு மடத்தை விட்டு வந்துட்டான்னா அது அவ சார்ந்த குடும்பத்துக்கே மானக்கேடான விசயமா இருக்கும். அதனால வீட்டுக்கும் போக விரும்பலை. தனியாகவே வாழ்ந்துக்கலாம்னு முடிவு பண்ணி, மதுரையில வாடகைக்கு வீடு எடுத்து தங்கியாச்சு. வேலைக்காக அலைஞ்சிட்டு இருந்த நேரம். தொண்டையை அடைக்கிற துக்கம் இருந்துகிட்டே இருக்கு. அழுது முடிக்கவும் முடியல. நண்பர் ஒருத்தர் எழுதுனா துக்கம் தீரும்னார். எழுதிக் காட்ட, இலக்கியமா இருக்கு. முழுசா எழுதுன்னார். துக்கத்தை, வாழ்க்கையை எழுதின பிறகு அது ‘கருக்கு’ன்னு நாவலா வந்தது.
92-ம் வருசம் நாவல் வந்ததும் பல விசயங்கள் நடந்தது. இலக்கிய ஒலகத்துல மொழியிலயும் வடிவத்திலயும் புது முயற்சின்னாங்க. கிறித்துவ அமைப்புகள்ல இருந்து முணுமுணுப்பு வந்தது. உண்மையை எழுதினதால அதை அவங்க மறுக்கல. ஆனா, எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பார்க்காத எதிர்ப்பு. புதுப்பட்டி மக்கள், நம்ம ஊரப்பத்தி அசிங்கமா எழுதிட்டாளேன்னு கோவப்பட்டாங்க. ஊருக்குள்ள கொஞ்ச காலம் போக முடியல. படிச்ச பிள்ளைகள் நாவலைப் படிச்சி காட்டி ஊரைப்பத்தி பெருமையாதான் எழுதியிருக்கான்னு புரிய வைக்கவும். பாமாவைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. பெறகு அவங்க கதைகளைச் சொல்லி இதையும் எழுதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் ‘சங்கதி’, ‘வன்மம்’ன்னு நாவல் ரெண்டும் ‘கிசும்புக்காரன்’னு சிறுகதை தொகுப்பும் எழுதணும்னு நெனச்சி எழுதினது.
பாமா ஊர விட்டு வந்து பல வருசங்கள் ஆனாலும் பேசும்போது மொழி மாறியிருக்கே தவிர, எழுத ஒக்காந்தா புதுப்பட்டியோட மொழிதான் வந்து ஒக்காந்துக்குது. அந்த மொழிய எழுது பிரியமா இருக்கு. செல பேர் கெட்ட வார்த்தைகயை அப்படியே எழுதறதா சொல்றாங்க. இது கெட்ட வார்த்தை, இது நல்ல வார்த்தைன்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.
ஒரே வார்த்தை ஒருத்தருக்குக் கெட்டதாவும் இன்னொருத்தருக்கு நல்லதாகவும் தோணலாம். உண்மையைப் பதிவு பண்ணும்போது நல்லது, கெட்டது பார்க்கக்கூடாது.
யாரு பாமா? வாழ்க்கையை நேசிக்கிற, வாழ்க்கையை வாழத் துடிக்கிற மனுசி. அண்ணன், தம்பி, அப்பா, அம்மா, நண்பர்கள், சமுதாயம் கொடுத்த எத்தனையோ பிரச்னைகளுக்கு ஊடாக சந்தோசத்தை அனுபவிக்கிறவ பாமா. கடந்த காலத்தைப் பத்தியோ, எதிர்காலத்தைப் பத்தியோ கவலைப்படாம இந்த நிமிசத்துல வாழறவ. எல்லோரும் கேப்பாங்க, ‘வயசாயிட்டா என்ன பண்ணுவே?’ன்னு. தள்ளாத வயசு வரைக்கும் வாழ்வோம்னு யாரால சொல்ல முடியும்? பெத்த புள்ளைகளே தள்ளிப்போன்னு சொல்ற காலமிது. பணம் பிரதானமாயிட்ட காலத்துல உறவுகளுக்கு மரியாதை இல்லை. அதுக்கு இதுவே பரவாயில்லை. பாமா செத்துக்கிடந்தா எடுத்துப் போடுங்க. ஏன்னா, செத்ததுக்கு அப்புறம் பாமாவுக்கு கவலைப்பட ஒண்ணும் இல்லை. அதப்பத்தி நீங்கதான் கவலைப்படணும்!
குங்குமம் இதழில் ‘நான்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலரை நேர்காணல் செய்து, அவர்கள் மொழியிலேயே ஒரு தொடர் எழுதியிருந்தேன். அதில் இடம்பெற்ற பாமாவின் தன் அறிமுகம் இது.
சென்னைக்குள்ளேயே நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்த நான், பாமாவைப் பார்க்க உத்தரமேரூர் போனதுதான் முதல் வெளியூர் பயணம். அதற்குப் பிறகு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்தவகையில் ஒரு நல்ல அனுபவத்துக்கு பாமா தொடக்கமாக இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
தலித் இலக்கியத்தில் பாமாவின் எழுத்துக்களுக்கு தனித்த இடம் உண்டு. பள்ளி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் அவர் நிறைய எழுத வேண்டும். அவருடைய ‘கருக்கு’ நாவலும் ‘கிசும்புக்காரன்’ சிறுகதை தொகுப்பும் அவசியம் படிக்க வேண்டியவை. தமிழில் ’கருக்கு’ நாவல் தள்ளுபடி விலையில் வாங்க ஆங்கிலத்தில் படிக்க
கருக்கு அமேசானிலும் கிடைக்கும்