தலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து! கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்துக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்!
படங்கள்: சண்முகசுந்தரம், நந்தினி