ஓரினச் சேர்க்கை: ஒரு சமூக குற்றமா?

தென்னிந்திய ஃபேஷன் உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியிருப்பவர் சுனில் மேனன்… தன்னை ஓரினச் சேர்க்கையாளராக வெளிப்படையாக அறிவித்து, அதனாலேயே பல போராட்டங்களையும் சந்தித்தவர்.
”கட்டுக்கோப்பான கேரளக் குடும்பம் என்னுடையது. பள்ளி செல்லும் காலத்திலேயே என்னுள் இருக்கும் பெண் தன்மையை உணர ஆரம்பிச்சுட்டேன். ஆனாலும், என்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல். கவனத்தைப் படிப்பின் மீது முழு மூச்சாகத் திருப்பினேன். விலங்கியலில் பட்டப்படிப்பு முடிச்சதும், மானுடவியலில் மாஸ்டர்ஸ் படிக்கிறதுக்காக சென்னை வந்தேன். பிறகு, அதிலேயே ரிசர்ச் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் உலக சுகாதார மையத் திலிருந்து, ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் பணிபுரியும் வாய்ப்பு எதிர்பாராமல் வந்தது. அவர்களிடம் ஹெச்.ஐ.வி. பற்றிப் பிரசாரம் செய்யணும்கிறதுதான் எனக்கு இடப்பட்ட வேலை. 15 வருஷத்துக்கு முன்னாடி ஓரினச்சேர்க்கைங்கிறது அதிர்ச்சிகரமான விஷயமா இருந்தது. சமூகத்துக்குள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை அப்படி வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள முடியாத நிலைமை இருந்தது. நானும் அவங்கள்ல ஒருத்தனா இருந்ததால, அப்படியானவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு, ரிசர்ச் பண்றதுக்கு வசதியா இருந்தது. அப்போதான் எனக்கான சுதந்திரத்தை உணர்ந்தேன். ஓரினச்சேர்க்கையாளன்னு வெளிப்படையா அறிவிச்சுக்கிட்டேன்!” – அஸ்ஸாம் டீயை உறிஞ்சியபடி, சில நொடிகள் இடைவெளிவிட்டுத் தொடர்கிறார் சுனில்.
”ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் பத்தின ப்ராஜெக்ட் செய்து முடிச்ச பிறகு சில வருடங்கள் இடைவெளி விழுந்தது. அப்போதான் எனக்குள் இருந்த ஃபேஷன் ஆர்வத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைச்சுது. ஃபேஷன் கொரியோகிராஃபி படிச்சேன். எய்ட்சுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு ஃபேஷன் ஷோ நடத்தினப்போ, கொரியோகிராஃபி பண்றதுக்கு எனக்கு வாய்ப்புக் கிடைச்சுது. அதுதான் என்னோட முதல் ஷோ! இதுதான் நான் சாதிக்கப்போற இடம்னு அப்போதே தீர்மானிச்சுட்டேன். ரொம்ப அழகா டிசைன் செய்த ஒரு டிரஸ்ஸைக் கடையில் அடுக்கி வெச்சிருந்தா யாரும் கண்டுக்க மாட்டாங்க. அதையே ஒரு மாடலுக்குப் போட்டு கிளாமரா வெளிப்படுத்தினா, பார்க்கிறவங்க உடனே அதை வாங்க நினைப்பாங்க. ஒரு ஃபேஷன் ஷோவோட முழுப் பொறுப்பும் ஃபேஷன் கொரியோகிராஃபரோடதுதான். மாடலைத் தேர்ந்தெடுக்கிறது, ஹேர் ஸ்டைல், ஸ்டேஜ்ல என்ன மியூஸிக் போடணும்னு எல்லாத்தையும் நான்தான் முடிவு செய்வேன். பொதுவா ஃபேஷன், மாடலிங் தொடர்பான இடங்கள்ல ஆண் வேலை பார்ப்பது பல நேரங்கள்ல சங்கடத்தைக் கொடுக்கும். ஆனா, என்னைப் போல உள்ளவங்களுக்கு ரொம்பவும் பொருத்தமான இடம் இதுதான். நீங்க எவ்வளவு தூரம் கிரியேட் டிவ்வா இருக்கீங்கன்னுதான் இங்கே பார்ப்பாங்க. ஒரு பேங்க்லயோ, ஐ.டி. கம்பெனியிலேயோ என்னால இவ்வளவு சுதந்திரமா வேலை பார்த்திருக்கவே முடியாது. புறம் பேசியே என்னை அவமானப்படுத்தியிருப்பாங்க! கடவுளோட ஆசீர்வாதத்தில் நான் தப்பிச்சுட்டேன்.
தென்னிந்திய ஃபேஷன் உலகத்தில் இன்னிக்கு எனக்குனு ஓர் இடம் இருக்கு. இதுக்கு மூன்று பேர் முக்கியக் காரணம். ஃபேஷன் டிசைனர் ரெஹானே, என் ஃபேஷன் குரு பிரசாத் பித்தப்பா, இந்தியாவோட நம்பர் ஒன் ஃபேஷன் கொரியோகிராஃபர் என்னோட தோழி அட்சலா சச்தேவ்… இவங்க இல்லைன்னா நான் உருவாகியிருக்கவே முடியாது!” என்று நெகிழ் கிறார் சுனில்.
”ஆண் ஓரினச் சேர்க்கையாளனா இருந்துக்கிட்டு சமூகத்துல மதிக்கக்கூடிய இடத்துக்கு வர்றது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை! இப்போ எனக்கு ஒரு கௌரவமான வேலை இருக்கு. வாழ்க்கை இருக்கு. ஆனா, என்னைப் போல உள்ள மத்தவங்க நிலைமையைச் சொல்லவே தேவையில்லை. சென்னைல இருக்கிற பெரும்பாலான ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்கதான். அவங்களையும் அறியாமல் வெளிப்படுகிற பெண்தன்மையால் எங்கேயும் வேலை பார்க்க முடியாம முடங்கிக் கிடக்கிறாங்க. அவங்களுக்குத் தெரிகிற மாற்று வழி பாலியல் தொழில்தான்! அதுல இருக்கிற ஆபத்துகள் தெரியாம போய் விழுந்துடறாங்க. அவங்களை மீட்பதற்காக ‘சகோதரன்’ங்கிற அமைப்பைத் தொடங்கினேன். இப்போ எங்க அமைப்புக்கு சர்வதேச அளவுல விருதும் அங்கீகாரமும் கிடைச்சிருக்கு.
இன்னிக்கு இருக்கிற இளைய தலைமுறையைச் சேர்ந்தவங்ககிட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றின புரிதல் வர ஆரம்பிச்சிருக்கு. ஓரினச் சேர்க்கைங்கிறதை ஒரு சமூக குற்றமா அவங்க பார்க்கிறதில்லை. அந்தப் பக்குவம் எல்லாத் தரப்பிலும் வரணும்!”

ஆழ்கடலில் திசைமாறிய படகு…

பார்டான்ஸர்களின் மறுபக்கம்

 கோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும்! நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது! இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி

என் பேரு ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்தது, வளர்ந்தது சென்னையிலதான். தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம். அப்பாவுக்கு சரியான சம்பாத்யம் கிடையாது. இதுலதான் அம்மா, நான், தம்பி, தங்கச்சிங்க வாழ்ந்தாவணும். ஏழாவதுக்கு மேல படிக்க இஷ்டமில்லாம போயிடுச்சி. அப்புறம் அக்கம் பக்கத்துல சின்ன சின்ன வேலைகளுக்கு போயிட்டு இருந்தேன். அப்படி வேலைக்குப் போன இடத்துலதான் அவரைப் பார்த்தது. அந்த வயசு நல்லது கெட்டதை யோசிக்கத் தெரியாது. நல்லா வச்சி காப்பாத்துவாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் சரி கிடையாது. பிறந்த வீட்டிலேயாவது ரெண்டு வேலை சாப்பாட்டுக்கு வழி இருந்துச்சி. இங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம, தினம் பட்டினியா கிடக்க வேண்டிய நிலை. அப்பதான் ஏரியாவுல தெரிஞ்ச ஒருத்தர்நீ ஏன் இப்படி கிடந்து கஷ்டப்படற? வெளிநாட்டுல டான்ஸ் ஆடப்போனா கைநிறைய பணம் கிடைக்கும். உன் செலவுக்குப் போக, தம்பி, தங்கச்சிங்களுக்கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கலாம்னு. முதல்ல துபாய்க்கு அழைச்சுட்டு போனாங்க. ‘லட்சக்கணக்குல பணம் கிடைக்கும். சேட்டுங்க நகையெல்லாம் போடுவாங்கன்னு நிறைய சொன்னாங்க. ஆனா அங்க நிலைமையே வேற. மூணு நாளைக்குள்ள டான்ஸ் ஆடி நூறு டோக்கன் எடுக்கணும். ஒரு டோக்கனுக்கு இவ்வளவு ரூபாய்னு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிச்சுடுவாங்க. டான்ஸ் பார்க்க வர்றங்க. நம்ம டான்ஸ் புடிச்சிருந்தா காசு கொடுத்து டோக்கன் வாங்குவாங்க. எந்த அளவுக்கு டோக்கன் அதிகமா வாங்கறமோ அந்த அளவுக்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடவே பணமும் கிடைக்கும். மூணு நாளைக்கு நூறு டோக்கன் எடுக்கணுங்கிறது முடியாத காரியம். அப்போதான் எங்களை அழைச்சிட்டு போன ஏஜெண்ட்டுகளோட நிஜ முகம் தெரிய ஆரம்பிக்கும். ‘டான்ஸ் ஆடி டோக்கன் எடுக்கலைன்னா என்ன? அதே காசை நாலு பேருக்கிட்ட படுத்து சம்பாதின்னு கட்டாயப்படுத்த ஆரம்பிப்பாங்க. எனக்கும் இதுதான் நடந்தது. நான் அதுக்கு சம்மதிக்கவே இல்லை. அடிஉதை, சூடுன்னு தினம் தினம் சித்திரவதை. ஒரு கட்டத்துக்கு மேல வந்தது வந்துட்டோம், நாம நிறைய சம்பாதிச்சு கொடுக்கப்போறதா நினைச்சுட்டு இருக்கிற குடும்பத்துக்கு நாம எதை செய்யப்போறோம்னு நினைச்சு நான் என் முடிவை மாத்திக்கிட்டேன் ஜோதியின் வார்த்தைகளில் வாழ்க்கையின் மீதான சலிப்பு தெரிக்கிறது.

” 12 மணி வரைக்கும் டான்ஸ் ஆடணும். அதுக்கு மேல 10, 20 பேருகிட்ட படுக்கச்சொல்வாங்க. துபாய்க்கு போறோம்னு தான் பேரு. ஏதோ ஒரு அபார்ட்மெண்ட்ல எங்களை தங்க வைப்பாங்க. 3 மாசம் இருந்தாலும் 3 வருஷம் இருந்தாலும் அந்த நாலு சுவத்தைதான் பார்த்துட்டு இருக்கணும். மெஷினைவிட கேவலமான வாழ்க்கை. இப்படியே தொடர்ந்தா பைத்தியம் பிடிச்சுடுமேங்கிற பயத்துல அங்கிருந்து வெளியேறணும்னு முடிவு செய்தேன். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எங்களை அழைச்சுட்டு போன ஏஜெண்ட் விடலை. சென்னையில இருந்த நண்பர்கள் போலீசுக்குப் போயிடுவோம்னு மிரட்டியதால் என்னை பிளைட் ஏத்தி அனுப்பிவைச்சாங்க. இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு எனக்கு கிடைச்சது என்னவோ வெறும் ஐயாயிரம் ரூபாய்தான்!” என்கிற ஜோதி தற்சமயம் சென்னையில் உள்ள சில கிளப்புகளில் ஆடி வருகிறார். வெளிநாடுகளுக்கு போவதைவிட சென்னையிலேயே ஓரளவு பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறைவு என்பது ஜோதியின் கருத்து.

வெளிநாடுகள்ல டான்சுக்குன்னு கூப்பிட்டு போறதே மெயினா தொழில் செய்யறதுக்குதான். வடபழனி ஏரியாவுல இப்படி பெண்களை அனுப்பி வைக்கறதுக்கே ஏகப்பட்ட ஏஜெண்டுகள் இருக்காங்க. சினிமா ஆசையில ஜெயிக்கவும் முடியாம, வாழவும் வழியில்லாம தவிக்கிற பெண்கள்தான் இவங்களோட டார்கெட்!” என்கிற ஜோதியின் கூற்றுக்கு உதாரணம் காட்டுவதாக இருக்கிறது கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் அனுபவம்.

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட கவிதாவுக்கு படிப்பு ஒன்பதாம் வகுப்பு. வாழ்வு தேடி குடும்பத்தோடு சென்னை வந்தவர். சினிமாவில் மேக்கப் அசிசிஸ்டெண்டாக வேலை. “இந்த வேலைக்கு காலம் முழுக்க நூறு ரூபாய்தான் கிடைக்கும். கேபரே டான்ஸ் ஆடினா மூணு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிக்கலாம்என்ற ஆசை வார்த்தைகள் கவிதாவின் குடும்ப கஷ்டத்துக்கு வடிகாலாக இருக்க, கேபரே டான்ஸ் ஆடப்போனார்.

முதல்ல உள்ளூர்ல ஆடிட்டு இருந்தேன். வெளியூர் போன அதிகமா சம்பாதிக்கலாம்னு பாண்டிச்சேரிக்கு அனுப்பினாங்க. மூணு மாசம் அக்ரிமெண்ட். முன்னாடியே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்க. நம்ம குடும்ப கஷ்டத்துக்கு விடிவு கிடைச்சுடுன்னு போனா.. கேபரே டான்சுக்கு இன்னொரு பக்கமும் இருக்குன்னு அப்புறம் தெரிய ஆரம்பிச்சது. வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடினா ஆயிரம் ஆயிரமா பணம் கொட்டிடாதுன்னு தொழில் செய்ய வற்புறுத்தினாங்க. வழக்கம்போல சித்ரவதை. வேற என்ன செய்ய முடியும்? அவங்க சொல்றமாதிரி கேட்க ஆரம்பிச்சேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அங்கேயிருந்து வெளியேறினேன்என்கிற கவிதா, தான் இப்படி பாலியல் தொழிலாளியாக மாறியது தன் வீட்டுக்கு தெரியாது என்கிறார்.

வெளியூருக்கு போகும்போது ஷூட்டிங் போறன்னு சொல்லிட்டு போவேன். இப்ப லோக்கல்லதான் ஆடிகிட்டு இருக்கேன். டான்ஸ் மட்டும் ஆடினா ரெண்டாயிரம், மூவாயிரம்தான் கிடைக்கும். தொழிலும் சேர்த்து செய்தா ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் எடுத்துட்டு வரலாம். திருவிழாவுலயும் ஆடப்போறேன். அங்கேயும் சில பேர் கேப்பாங்க. எனக்கு விருப்பம் இருந்தா போவேன். வேற வழியில்லாம இந்த வாழ்க்கைக்கு வந்துட்டோம்னு ஒவ்வொரு நாளும் வருத்தப்படறோம். இதுல இருந்து விடுபடணும்னு விரும்பறோம். ஆனா எங்களை மனுஷியாகூட சிலபேர் மதிக்கிறதில்லை. குடும்பத்தோடு கோயில், குளம்னு எங்காவது போயிருப்போம். புரோக்கருங்க அங்க வந்து வர்றீயான்னு கூப்பிடுவாங்க. புரோக்கருங்க மட்டும் இல்லை, வெளியூருக்கு போன இடத்துல யாருக்காவது நம்ம போன்நம்பர் கிடைச்சுட்டா போதும் சொல்ல முடியாத சித்ரவதைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அவங்க கூட போக விருப்பமில்லைனு சொல்லும்போது அவங்களால தாங்கிக்க முடியாது, அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுடுவாங்கஎன்கிறார் கவிதா.

பதினாறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் புஷ்பா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலத்தை சேர்ந்த இவர், காதலின் பேரால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதனாலேயே சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர். வழி தேடி சென்னைக்கு வந்தவர், புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளால் படுகுழியில் விழுந்திருக்கிறார். திருவிழாவுக்கு நடனம் ஆடப்போன இடத்தில் பாலியல் தொழில் செய்ய வந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க, கொடுமையின் உச்சகட்டமாக நான்கு பேர் கொண்ட கும்பல் புஷ்பாவை கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. அதன் பாதிப்புகள் புஷ்பாவின் கண்களில் இன்னமும் உணரமுடிகிறது. இப்போது கேபரே டான்ஸர் என்பதோடு பாலியல் தொழிலாளியாகவும் உருமாறியிருக்கிறார் புஷ்பா.குடும்பத்தில் பணப்பிரச்னை, கணவன் அல்லது காதலனால் ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் கேபரே ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும். “மற்ற பெண்களைப் போல எங்கள் வாழ்க்கையும் மாறணும்என்கிற இந்தப் பெண்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிப்பதே குற்றவுணர்ச்சியிலிருந்து நம்மை காப்பாற்றும்!

நன்றி : சூரியகதிர்