கருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திருக்கும் காமுகர்களின் சமூகம்!

Copy of Photo-0008_1

‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

வறட்சியால் துவண்டு கிடக்கும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதில் மெட்ரோ பாலிடன் சென்னையைத் தேடி வரும் ஆயிரக்கணக்கானவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னார். 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை அவருக்கு. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட, ஆரம்பத்தில் விவசாயம் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் நகரத்து கட்டட வேலைகளுக்கு விவசாயிகள் வரத் தொடங்கிய நேரத்தில் இவரும் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சித்தாளாக 15 ஆண்டுகள் கல், மண் சுமந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். தற்போதும் இங்கேயே வசிக்கிறார்.

சமீபத்தில் இவருடன் பேசியபோது இயல்பாக இவர் சொன்ன அந்த விஷயம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருமகள் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக சொன்னவர், இந்த முறை ஆண்தான் என்று உறுதியாக தெரிந்துவிட்டது என்றார்.

‘எப்படி?’
‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

‘எந்த ஆஸ்பிட்டல்? பேர் என்னா?’

‘பேர் தெரியலமா, ஆயிரபா குடுத்தா ஸ்கேன் பண்ணி சொல்லிர்றாங்க. எம் மருமவ அங்கதான் போய் பாத்துட்டு வந்துருக்குது. ஆம்பளை புள்ளன்னு சொல்லிட்டாங்களாம்.’

‘ஹாஸ்பிட்டல் பேர் தெரியலையா?’

‘தெரில…என்னான்னு. இப்படி ஸ்கேன் பண்ணி சொல்றாங்கன்னு தெரிஞ்சி கெவர்மெண்ட்ல சீல் வச்சிட்டாங்களாம். பூட்டு போட்டிருந்தாகூட பின் பக்கமா போயி வந்துகுனுதான் இருக்காங்க.’

அதற்கு மேல் அவரிடமிருந்து தகவல்களைப் பெற முடியவில்லை. அரசாங்கம் சீல் வைத்த பிறகும் ஒரு மருத்துவமனை இயங்குகிறது என்றால், அதற்கு பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பு முதன்மையான காரணம். அடுத்த காரணம் தவறை கண்டுகொள்ளலாம் இருக்கும் அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள என் பூர்விக கிராமத்துக்குச் சென்றிருந்தபோது இதேபோல் இன்னொரு சம்பவத்தையும் கேள்விப்பட்டேன். என்னுடன் படித்த பெண் அவர், அவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள், மூன்றாவதாக கர்ப்பமானதாகவும் 5 மாதத்தில் அது பெண் என்று தெரிந்துவிட்டதால் கலைத்துவிட்டதாகவும் சொன்னார்.

‘அப்பாடா பெண் சிசுக்கொலைகளை ஒழித்துவிட்டோம். தொட்டில் குழந்தை திட்டம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது’ அரசுகள் ஒருபுறம் கூவிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பெண் சிசுக்கொலைகள் நவீன வசதிகளோடு உலா வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஆரம்ப கட்ட சமூக சீர்திருத்தத்தைக் கூட செய்ய முடியாத அரசாங்கம் காமுகர்களிடமிருந்து எப்படி பெண்களைக் காப்பாற்றும்?

அப்படியே கருவிலிருந்து தப்பி வந்தாலும் 3 வயதில், 12 வயதில், 22 வயதில், 38 வயதில், 50 வயதில் ஏன் 70 வயதில்கூட காமுகர்கள் விடமாட்டார்கள். கருவிலிருந்து கல்லறை போகும்வரை பெண்ணை சிதைக்க காத்துக்கொண்டிருக்கிறது இந்த கேடுகெட்ட சமூகம்!

30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்!

கிட்னி மோசடி பற்றி மீடியாக்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செய்தி வந்துகொண்டு இருக்கிறது…ஆனாலும் சில இடங்களில் இது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

வறுமையை வியாபாரமாக்கும் நவீன கொள்ளையாக உருமாறி இருக்கிறது கிட்னி மோசடி வறுமையைத் தவிர வேறு எதையும் அடையாளமாக சொல்ல முடியாத இந்தப் பகுதிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. கிட்னிவாக்கம் என்பதுதான் அந்த அடையாளம். கடந்த 20 வருடங்களாக நடந்துவறுகிற கிட்னி வியாபாரமே இந்தப் பேர் வரக்காரணம்.

‘இப்போ போனா கூட கிட்னி வாங்க முடியும்’ என்று சொல்கிற அளவுக்கு இந்தப் பகுதியில் கிட்னி வியாபாரம் நடப்பதாக சொல்கிறார்கள்..
சென்னையின் பகட்டான பகுதியான அண்ணாநகரை ஒட்டி அமைந்திருக்கிறது வில்லிவாக்கத்தில் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதி…தள்ளுவண்டி பழ வியாபாரம், காய்கறிகளை தலையில் சுமந்து வீடு வீடாகச் சென்று விற்பது, கட்டட வேலைகளில் மண் சுமப்பது, இப்படிப்பட்ட வேலைகள்தான் இங்கே வாழும் பலருக்கு அன்றாடம் சோறுபோடுகிறது. சம்பாதிப்பதெல்லாம் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே போய்விடும் நிலையில் பண்டிகை, திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு மற்றவர்களிடம் கை நீட்டும் நிலை ஏற்படுகிறது. அஞ்சு வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என பல பெயர்களில் கடன் வாங்க, அன்றாடச் செலவுகளுக்கே அல்லல்படுவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் பூதாகரமாகப் பெருகி நிற்கிறது. இந்தப்பகுதி மக்களின் பொதுவான வாழ்க்கை நிலையே இதுதான். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிலர் அறிமுகப்படுத்தியதுதான் கிட்னி வியாபாரம்!
தங்கள் உடலின் அத்தியாவசியமான ஒரு உறுப்பை, முடியை வெட்டி தூக்கி எறிவதைப்போல கொடுத்துவிட்டு. பிறகு அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் இன்னும் சிலரின் அவல நிலைமை இதோ…
கட்டட வேலை செய்துகொண்டிருந்த தாட்சாயினிக்கு எதிர்காலம் குறித்து நிறையவே கவலை.குடிகாரக் கணவனவால் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் இல்லாத நிலையில், தன் ஒரே மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்று கலங்கிக் கொண்டிருந்தார் தாட்சாயினி…

தாட்சாயினியின் கலக்கம் கிட்னி புரோக்கர்களின் கவனத்துக்கு வர, வறுமையும் புரோக்கர்களின் மூளைச் சலவை வார்த்தைகளில் விழுந்து வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்காக தனது கிட்னியை விற்றிருக்கிறார். வந்ததை வைத்து மகளின் திருமணத்தை முடித்த தாட்சாயினியின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியில். கட்டடத் தொழிலாளியாக செங்கல் சுமந்தவரால் வீட்டு வேலைகள்கூட செய்ய முடியாத நிலை.

வீடு வீடாகச் சென்று பூ வியாபாரம் செய்வதுதான் பிரபாவின் தொழில்.கணவர் ஆட்டோ ஓட்டுநர்… எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் காலில் அடிபட்டு அதுவும் போனது. இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என நான்கு பேருடைய ஜீவனமும் ஓட பூ வியாபாரத்தில் வரும் வருமானம்தான் ஒரே வழி.கணவரின் மருத்துவ செலவும் குழந்தைகளின் படிப்புச் செலவுகளும் கடனாக வளர்ந்து நிற்க.செய்வதறியாது புலம்பி நின்றார் பிரபா.ஒரு கட்டத்துக்கு மேல் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிக்க ஆரம்பிக்க.பிரபாவுக்கு உதயமானது கிட்னியை விற்கும் யோசனை.ஏற்கனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிட்னி விற்றிருந்ததால் இன்னும் வேலை சுலபமாகப் போய்விட்டது.

கிட்னி ஆபரேஷனுக்கு முன் 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் கொடுத்தது என்னவோ 80 ஆயிரம் ரூபாய்தான்.கடனுக்கு வட்டிக் கட்டவே அந்தப் பணம் சரியாக இருந்தது என்கிற பிரபா, தன் முடிவை எண்ணி இப்போது கலங்குகிறார்.

கிட்னி தானம் குறித்த மருத்துவ சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்தி கிட்னி பெற்றவர்கள் அதற்குப் பிறகு பிரபாவை கண்டுகொள்ளவே இல்லை.கிட்னி தானம் வழங்கியவருக்கு 3 மாத கால இடைவெளியில் செய்யப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை ஒரு முறைகூட பிரபாவுக்கு செய்யப்படவில்லை.
கிட்னி வழங்குவதில் உள்ள மருத்துவ நெறிமுறைகள், சட்டங்கள் எதுவும் இவர்கள் விஷயத்தில் பின்பற்றப்படுவதில்லை.தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தும் ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்கவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவோ பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை. இவர்களை மூலதனமாக்கி தங்களுடைய பைகளை இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் நிரப்பிக் கொள்வது தொடர்கதையாகிறது. கிட்னி மோசடி பல காலமாக இந்தப் பகுதியில் நடந்துவந்தபோதும் அதைப்பற்றி எந்தவொரு முன்யோசனையும் இன்றி கிட்னி கொடுத்திருக்கிறார் சேகர்..

கிட்னி விற்ற பணத்தை சதா குடித்து குடித்தே கரைத்திருக்கிறார் சேகர். குடித்தால் இருக்கும் ஒரு கிட்னியும் இல்லாமல் போய்விடும் என்று மனைவி எடுத்துச் சொல்லியும் சேகர் காதில் வாங்கவில்லை.இவரை நம்பி தன் வாழ்க்கை ஒப்புக் கொடுத்த மனைவியும் குழந்தைகளும் இப்போது திசை தெரியாமல் நிற்கிறார்கள்.

கிட்னி தானம் பெறுவதில், கொடுப்பதில் நிறையவே கட்டுப்பாடுகள் உள்ளன. சட்டப்படி ரத்த உறவுக்குள்ளும் அன்பின் காரணமாக நண்பர்களுக்கும் கிட்னி பறிமாற்றம் செய்யலாம். இவை மீறப்படும்போதுதான் கிட்னி தானம் கிட்னி மோசடியாக கருதப்படுகிறது. கிட்னி கொடுத்த தாட்சாயினி, பிரபா, சேகர் ஆகியோர் இந்த வகையில்தான் சேர்த்தி. இவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

நம் நாட்டில் ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கிட்னி தேவைப் படுவதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். கிட்னி தானம் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பலர் சட்ட விரோதமான முறைகளில் கிட்னி வாங்க முயற்சிக்கிறார்கள். அதனாலதான் கிட்னி மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சில மோசமான நோய் உள்ளவர்களைத்தவிர மற்ற எல்லோரும் கிட்னியை தானமாகத் தரலாம் இந்த மோசடி கும்பலுக்கு சாதகமான விஷயமாகிவிட்டது. கிட்னியை தானம் தந்தபிறகு மீதியிருக்கும் ஒரே கிட்னியை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிற பொறுப்பு இவர்களுக்கு இருக்கு. அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்படுகிற தாட்சாயினி போன்றவங்கள் கிட்னி தானம் செய்வது தங்கள் உயிரை பணயம் வைப்பதற்கு சமம்…

2009ல் பதிவு செய்யப்பட்டது.

அரசு மருத்துவமனை… என் அனுபவம்!

இன்றைக்கு எத்தனை பேர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கிறீர்கள் என்று தெரியாது. அரசு மருத்துவமனைகள் என்றாலே நாற்றமடிக்கும், சரியான சிகிச்சை தர மாட்டார்கள் என்கிற மேம்போக்கான நினைப்பு நடுத்தர வர்க்கத்துக்கு நிறையவே இருக்கிறது என்பது மட்டும் தெரியும். எனக்கும்கூட அப்படியொரு நினைப்புதான் இருந்தது.

 

சென்ற வருடம் 8 மாத கர்ப்பிணியாக இருந்தநேரத்தில்தான் முதன்முதலில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வந்தது. முதல் மாதம் தொடங்கி, 7 மாத காலம்வரை தனியார் மருத்துவமனையில்தான் மாத பரிசோதனைக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒரு முறை டாக்டரை சந்தித்து பிரஷர், வெயிட், குழந்தையின் இதய துடிப்பு, அசைவுகள் தெரிகிறதா என்று பரிசோதிக்க ரூபாய் 250 பீஸ். இதுதவிர விட்டமின், புரோட்டின், கால்சியம் மாத்திரைகளுக்கு என்று மாதம் ஆயிரம் ரூபாய் செலவானது. இதில் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். பொதுவாக இவர்கள் தரும் விட்டமின் மாத்திரைகள் குழந்தை, தாயின் உடல் எடையை அதிகப்படியாக கூட்டக்கூடியவை. ஒரு நல்ல டாக்டர் உணவுகளின் மூலமே சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுவார். அப்படி எந்த டாக்டரும் சொல்ல மாட்டார். காரணம் சிசேரியன்..குழந்தையின் எடையை காரணம் காட்டியே இன்றைக்கு பெரும்பாலான சிசேரியன் பிரசவங்கள் நடக்கின்றன. எனக்கும் இப்படி சிசேரியன் இருக்குமோ என்கிற லேசாக தலைக்காட்டியது. அதற்கு முன்…எந்த பிரசவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்று அந்த மருத்துவமனையில் விசாரித்தோம். சுகப் பிரசவத்துக்கு 50 அல்லது 60 ஆயிரம் ஆகும், சிசேரியனுக்கு 70லிருந்து 80 ஆயிரம் ஆகும் என்றார்கள். உண்மையில் இந்த விலை விசாரிப்புக்குப் பிறகு, அந்த மருத்துவமனை பக்கமே போகவில்லை.
கணவரின் பணியிடத்தில் கொடுத்த இஎஸ்ஐ கார்டு பயன்படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அக்கம்பக்கத்தவர்கள் சொன்னார்கள். அதன்படியே சென்றோம், பதிவு செய்து கொண்டோம்.
பொதுவாக கர்ப்பம் தரித்த இரண்டாவது மாதத்திலேயே பதிவு செய்துவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உள்ளதுபோலவே ஸ்கேனிங் வசதியும், கர்ப்பிணிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துமாத்திரைகளையும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வழங்குகிறார்கள். கூடவே, அங்கன்வாடிகள் மூலம் சத்துமாவையும் வாரம் ஒரு முறை வழங்குகிறார்கள். எல்லாமே அரசு நமக்காக காசு வாங்காமல் கொடுப்பது.
எட்டாவது மாதம் பதிவு செய்ய சென்றபோது, ஏன் இவ்வளவு தாமதம் என்றார் அந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர். வெளியூரிலிருந்து வந்ததாக காரணத்தை புனைந்தோம். 5வது மாதத்தில் ஸ்கேனிங் எடுத்தீர்களாக என்றார். நாங்கள் எடுத்த ஸ்கேனிங் ரிப்போர்ட்டை சில நொடிகள் கீழ்பார்வையால் பார்த்தார். பிறகு, என்னிடம் நீட்டி, ‘‘ஸ்கேன் செய்ய வேண்டும்’’ என்றார். வரிசையில் நின்றேன். சில நூறுகள் கொடுத்துச் செல்லும் தனியார் ஸ்கேன் சென்டர்களில் உள்ள கவனிப்பு எதுவும் இங்கே கிடையாது. டாக்டரேதான் இங்கே ஸ்கேனிங்கும் செய்வார். வந்திருக்கும் கர்ப்பிணிகளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும். 40 வயதைத் தொடும் நிலையில் இருந்த அந்த டாக்டர், பொதுவாக எல்லோரையும் ‘நீ, வா, போ’ என ஒருமையில்தான் அழைத்தார். கர்ப்பிணிகளின் வயிற்றில் களிம்பைத் தடவி, மவுஸ் போல ஒரு கருவியை வைத்து முன்னும் பின்னும் அசைத்தார். வயிற்றில் இருக்கும் எதுவும் அந்த கம்ப்யூட்டர் திரையில் சரியாக பதிவாகவில்லை அல்லது சரியாக அவர் பதிவு செய்யவில்லை. ஒருவேளை அவருக்கு சரியாக ஸ்கேனிங் செய்ய தெரியாமல்கூட இருந்திருக்கலாம். இந்த முன் பின் அசைவுகளுக்குப் பிறகு, கர்ப்பிணிகளை அழைத்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த டாக்டர். எனக்கும் ஒரு துண்டுச் சீட்டுக் கொடுத்தார்…அதில் அந்தப் பகுதியில் இருந்த ஒரு தனியார் ஸ்கேனிங் சென்டரின் முகவரி இருந்தது. ‘‘ஏற்கனவே நான் ஸ்கேனிங் செய்துவிட்டேன். குழந்தை நலமாக இருப்பதாக ரிப்போர்ட் வந்துவிட்டது. திரும்பவும் நான் ஏன் செய்யணும்?’’ என்று கேட்டதற்கு, என் முகத்தைப் பார்த்துவிட்டு, ‘‘சரியா பேபியோட அசைவு தெரியல…அதான் சொல்றேன். இந்த மெஷின்ல சரியா தெரியலை. அடுத்தமுறை வரும்போது எடுத்துட்டு வாங்க’’ என்றார். எனக்கு நன்றாகப் புரிய வைத்தது அவருடைய தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த அந்த தனியார் ஸ்கேனிங் சென்டரின் காலண்டர்.
(இந்தக் காட்சியைக் கண்டது சென்னை வில்லிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இதே காட்சி, கிட்டத்தட்ட இதே போன்ற உரையாடலை சென்னை அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையிலும் பார்க்க கேட்க முடிந்தது. அங்கிருக்கும் ஒரு மருத்துவரும் இதேபோல குறிப்பிட்ட ஸ்கேனிங் சென்டரின் துண்டுச் சீட்டை பரிசோதனைக்கு வருகிற பெண்களிடம் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.)
நான் எதுவும் சொல்லாமல் ‘ஐயோ அப்படியா’ என்று பதறாமல் கணவரிடம் வந்து விஷயத்தைச் சொல்லி ‘கண்டிப்பாக நான் மீண்டும் ஒரு ஸ்கேனிங் செல்ல மாட்டேன்’ என்பதைப் புரியவைத்தேன். உடனே, எங்கள் பகுதி மருத்துவ பணியாளரைக் கூப்பிட்டு அந்த டாக்டர் ஏன் அவசியமே இல்லாமல் ஸ்கேன் செய்யச் சொல்கிறார்? அந்த டாக்டரின் பெயர் என்ன என்று கேட்டோம். பதறியவர்…‘‘ஸ்கேன் எல்லாம் வேண்டாம், தெரியாமல் சொல்லிவிட்டார். இனி இங்கே வரத்தேவையில்லை. நேரா அயனாவரம் மருத்துவமனைக்கே சென்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். நான் எழுதித்தருகிறேன்’’ என்று வழிகாட்டினார். இவரைப்போலவே, மகப்பேறு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் சிறப்பாகவே தங்களுடைய பணிகளை செய்தார்கள். (நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று எந்த இடத்திலும் சலுகை கோரவில்லை) உண்மையான மருத்துவ சேவை செய்வது கடைநிலையில் இருக்கும் இந்த ஊழியர்கள்தான். வீடு வீடாகத்தேடிச் சென்று, எந்தவித மருத்து அறிவும் இல்லாத பெண்களுக்கு அரசின் உதவிகளை ஓரளவுக்காவது கிடைக்கச் செய்வது இவர்கள்தான்!
பிரசவ நாளும் வந்தது, வயிற்று வலியோடு அனுமதிக்கப்பட்டு, ஒரு நாள் கழித்து எனக்கு மகன் பிறந்தான். எனக்கு பிரசவம் பார்த்தது முழுக்க, முழுக்க அந்த மருத்துவமனை செவிலியர்களே…ஒருமுறைகூட நான் மருத்துவரை பார்க்கவில்லை. குழந்தை மூன்றரை கிலோவுடன் பிறந்தான். சற்றே சிரமப்பட்ட சுகப் பிரசவம். தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால், நிச்சயமாக சிசேரியன்தான். எனக்கு பிரசவம் ஆன நேரத்தில் என்னுடன் நான்கைந்து பேர் பிரசவித்தார்கள். மூன்று செவிலியர் அனாயசமாக அடுத்த கேஸ், அடுத்த கேஸ் என்று ஒவ்வொருவருக்கும் பிரசவம் பார்த்து முடித்தார்கள்.
சினிமாக்களில், ஊடகங்களில் வருவதுபோல் பிரசவம் மறுஜென்மம் என்கிற கதை விடுதல் எல்லாமே இங்கே இல்லை… பிரசவித்த குழந்தையை முதன்முதலில் பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விடும் செண்டிமெண்ட் காட்சியையும் நான் பார்க்கவே இல்லை. எல்லாமே இயல்பாகத்தான் இருந்தது.
சுகப்பிரசவம் ஆனவர்கள் மூன்று நாட்களும், சிசேரியன் செய்த பெண்கள் ஒரு வார காலமும் மருத்துவமனையில் தங்கிவிட்டுச் செல்ல வேண்டும். அந்த நாட்களில் பிரசவித்த பெண்களுக்கு குறை சொல்ல முடியாத சுவையில் உணவையும் வழங்குகிறது அரசு.
ஆயாக்களுக்கு சில பத்து ரூபாய்களும், நர்சுகளுக்கு சில நூறு ரூபாயும் தரவேண்டி இருக்கிறது. அவர்களாகவே கேட்கிறார்கள். கொடுக்க முடிந்தவர்கள் கொடுக்கலாம், கொடுக்கவே முடியாதவர்களின் நிலைமை?
அடுத்து முக்கியமான விஷயம் அரசு மருத்துவமனைகளின் சுகாதார சீர்கெடு பற்றியது… அரசு மருத்துவமனைகள் மீது உள்ள மாபெரும் குற்றச்சாட்டும் இதுதான். இது உண்மையும்கூட. ஆனால் மருத்துவமனை சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய பங்கு நிறையவே இருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளைவிட, அரசு மருத்துமனைகளில் கூட்டம் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். நான் பார்த்தவரை துப்புரவுப் பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வருகிற மக்கள் கூட்டத்துக்கு அது போதவே போதாது. அதேபோலத்தான் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கமும் அறவே நமக்குக் கிடையாது. காலை ஏழரை மணிக்கு துப்புரவுப் பணியாளர் கழிவறைகளை சுத்தப்படுத்திவிட்டு சென்றிருப்பார். அடுத்த அரை மணி நேரத்தில் பயன்படுத்திய நாப்கின்கள், காலையில் உண்டு முடித்த உணவின் மிச்சங்கள் என கழிவறையின் வாசல்வரை சிதறிக்கிடக்கும். இத்தனைக்கும் குப்பைகள் போடுவதற்கென்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்?
அப்போதைய தேவை முடிந்துவிட்டது என்று குப்பைகளை விசீவிட்டு செல்லும்போது, ஒரு நிமிடம் அதை சுத்தம் செய்யப்போவது நம்மைப் போல ஒருவர்தானே என்ற நினைப்பு ஏன் வரமாட்டேன் என்கிறது?
இந்த விழிப்புணர்வுகூட இல்லாததால்தான் அரசு தரும் மருத்துவ திட்டங்கள் முழுமையாக நமக்கு வந்துசேரவில்லை. அதுபற்றி யாரும் கவலைப்படப் போவதும் இல்லை…

சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்

‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள்.இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார்கள் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.  இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…

“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,

“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.

தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. படிக்க…