பறவைகள்தான் இவருடைய உலகம்!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பரப்பளவிலும் உயிர்சூழலிலும் வேடந்தாங்கலைவிட பெரியது. கூந்தன்குளத்தில் மற்றுமொரு சிறப்பு…இங்கு வலசை வரும் பறவைகளுக்கும் ஊர் மக்களுக்கும் உள்ள உறவு. பல கிலோமீட்டர் கடந்து வீடு தேடி விருந்துக்கு வரும் பறவைகளை கூந்தன்குளம் மக்கள் உபசரிக்கும் விதம் உலகமக்களுக்கெல்லாம் பாடம்! அனைத்திலும் உச்சமாக பால் பாண்டி என்ற தனிமனிதரின் பங்களிப்பு பிரமிப்பு ரகம். கூந்தன்குளம் மக்களுக்கு வலசை வரும் பறவைகள் விருந்தாளிகள் என்றால், பால் பாண்டிக்கு பெற்றெடுத்த பிள்ளைகள்! வலசை வரும் பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொறிக்கும் சமயத்தில் கூட்டிலிருந்து தவறி விழுவது இயல்பு. கால் ஒடிந்து, உடலில் காயம்பட்ட இளம் குஞ்சுகளை எடுத்து காப்பாற்றி குணமாக்கும் அரிய பணியைத்தான் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக செய்துவருகிறார் பால் பாண்டி.

“பறவைகளோடு பறவையாக பிறந்து, வளர்ந்தது கூந்தன்குளத்துலதான். சின்ன வயதிலேயே பறவைகள் மேல அன்பு நிறைய. கூட்டிலிருந்து தவறி விழுகிற பறவை குஞ்சுகளை எடுத்து, காப்பாத்திவிடுவேன். பத்தாவது வரைக்கும் படிப்பு. வேலை தேடி குஜராத்துக்குப் போனேன். ஆனா ஞாபகம் முழுக்க ஊர் பற்றிதான். ஒருகட்டத்தில் இனி முடியாதுன்னு ஊருக்கே திரும்பிட்டேன். குஞ்சுகளை எடுத்து காப்பாத்தறது, அதுகளுக்கு மீன் பிடிச்சு போடறதுன்னு பறவைகள்தான் என் உலகம்னு மாறிப்போச்சு. பிறகு படிப்படியா கூந்தன்குளத்துக்கு வருகிற பறவைகள் ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பிச்சேன். பறவை எப்படி கூடுகட்டும்? எத்தனை முட்டைகள் வைக்கும்? எத்தனை நாள் அடைகாக்கும்? குஞ்சுகளுக்கு எப்படி உணவளிக்கும்னு ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிச்சேன். அப்போ ஊருக்கு வந்த பறவையியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப் என்கிறவர் பறவைகள் பற்றி சலீம் அலி எழுதின புத்தகத்தை கொடுத்து அறிவியல் ரீதியா தெரிஞ்சிக்க உதவினார்” என்கிற பால்பாண்டியின் பணிகளைப் பார்த்த தமிழக வனத்துறை, சரணாலய உதவியாளராக்கி இருக்கிறது.

“கூந்தன்குளத்துக்கு கூழக்கடா, பூநாரை, கரண்டிவாயன், நீர்காக்கை(மூன்று வகை), செங்கால்நாரை, பாம்புதாரா, செண்டுவாத்து, புல்லிமூக்கு வாத்து, நத்தை கொத்திநாரை, அரிவாள் மூக்கன்(மூன்று வகை), நாமக்கோழி,. கானாங்கோழி, சாம்பல்நாரை, சாரை நாரை, முக்குலிப்பான், சம்புகோழி, பட்டைத்தலை வாத்து என 174 வகையான பறவைகள் வருது. சைபீரியாவிலிருந்து ஏராளமான வாத்து வகைகள் வரும். மற்ற பறவைங்க எல்லாம் குஜராத் போன்ற இந்திய பகுதிகளிலிருந்து வருகிறவைதான். பூநாரை ஆயிரக்கணக்கில் வரும். அதோட வெளிர்சிவப்பு நிறமும் உயரமும் கொள்ளை கொள்ளும் அழகு! ஊருக்கு நடுவுல இருக்கிற இந்த குளமும் குளத்தை சுற்றி வளர்ந்திருக்கிற மரங்களும்தான் பறவைகளின் வாழ்விடம். 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருமேனி ஆத்துல இருந்து குளத்துக்கு தண்ணீர் வருது. தை அமாவாசைக்கு வரும் பறவைகள் ஆடி அமாவாசை முடிந்ததும் கிளம்பிப்போகும். சீஸன் நேரத்துல ஊர்பக்கம் வந்தா மூக்கைப்பொத்திக்கிட்டுதான் நடமாட முடியும். காரணம் பறவைகளோட எச்சம்தான். பறவைகள் அந்த அளவுக்கு கூட்டம் கூட்டமாக வரும். பறவைகள் எச்சமிடுகிற குளத்து தண்ணீரை ஊர்மக்கள் விவசாயத்திற்கு காலங்காலமாக பயன்படுத்திட்டு வர்றாங்க. அவங்க நம்பிக்கை பொய்க்காம மூணு மேனி மகசூல் நிச்சயமா கிடைக்குது” என்கிறார் பால் பாண்டி.

கூட்டியிலிருந்து தவறி விழும் பறவை குஞ்சுகளுக்கு கால்நடை மருத்துவத்தில் கற்றுக்கொண்ட முறைப்படி சிகிச்சை அளிக்கிறார் பால் பாண்டி. இவரின் சூழலியல் ஆர்வம் பறவைகளோடு நின்றுவிடவில்லை. கூந்தன்குளத்தைச் சுற்றி ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டு, வளர்த்திருக்கும் பெருமை அவரையும் அவருடைய மனைவி வள்ளித்தாயையும் சேரும்.

“அரச மரம், ஆலாமரம், நவ்வா மரம், புளிய மரம், அத்தி, வேம்பு, வாகை, மருதம், இலுப்பை, தூங்குமூஞ்சி, புங்கன், புங்கை, வாசாமடக்கி, அழகுகொண்டை, கருவேலம் என பறவைகள் கூடுகட்டும் மரங்களாகப் பார்த்து நட்டு, நீர் ஊற்றி, பராமரித்து நானும் என் மனைவியும் தோப்பாக்கி இருக்கிறோம். நான் இந்த அளவுக்கு பறவைகளுக்காக அர்ப்பணிப்போட பணிசெய்ய காரணம் என் மனைவி வள்ளித்தாய்தான். என்னைவிட அவரோட அர்ப்பணிப்பு பெரியது. பறவைகளுக்காக தன் உயிரையே துறந்தவர் வள்ளித்தாய். கூட்டிலிருந்து தவறி விழுகிற இளம்குஞ்சுகள் நெஞ்சில் அடிபட்டதால வாயில் ரத்தம் கக்கும். நாம வாயில் தண்ணீர் வைச்சு வேகமாக பறவை குஞ்சுகளுக்கு செலுத்தணும். அப்படி செலுத்தும்போது இரத்தம் வெளியேறி, அதுகளால சுவாசிக்க முடியும். இப்படி தொடர்ந்து என் மனைவி செய்து செய்துதான் பறவை வைரஸ் தாக்கி, இருதய வால்வு செயல்படாம போச்சு. முதல் முறை ஆபரேஷன் நடந்து பிழைச்சுக்கிட்டாங்க. இரண்டாவது தாக்கினப்போ ஆபரேஷன் நடந்தும் இறந்துட்டாங்க” பால் பாண்டியின் கண்கள் கலங்குகின்றன. பால் பாண்டி – வள்ளித்தாய் தம்பதியின் காதலும் இவர்களுக்கு பறவைகள் மேல் இருக்கும் காதலும் கூந்தன்குளம் வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பூட்டும் விஷயங்கள். இவர்கள் குறித்து ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தம்பதியின் பணியைப் பாராட்டி கேரள அரசு முதல்கொண்டு பல சுற்றுச்சூழல் அமைப்புகள் விருது கொடுத்து கவுரவித்துள்ளன. ஆனாலும் பால் பாண்டியின் வாழ்க்கைத் தரம் அரசாங்கம் தரும் சொற்ப வரும்படியில் தான் தொடர்கிறது.

“2500 ரூபாய் சம்பளத்தை வச்சிக்கிட்டு நானும், பிள்ளைகள் நாலு பேரும் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம். நிரந்தர வேலை இல்லை. மனைவியோட ஆபரேஷன் செலவுக்காக மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கின பணத்தையே இன்னும் திருப்பித்தர முடியலை. என் மனைவியும் என் போல வேலை பார்த்துட்டு இருந்தா. அவ போனதுக்குப் பிறகு, பென்சன் தந்திருக்கலாம். அது கிடைக்கிறமாதிரி தெரியலை, மனைவியோட வேலையை என் குடும்பத்தில் யாருக்காவது கொடுக்கலாம். பொருளாதார ரீதியான கவலை இருந்தாலும் அடுத்து இந்தப் பறவைகளை யார் பார்த்துக்குவாங்க என்கிற கவலைதான் பெரிதாக இருக்கு. நிறைய பேர் கூந்தங்குளத்துக்கு ஆராய்ச்சிக்காக வர்றாங்க. இங்கிருந்து ஏராளமான விஷயங்களை கத்துக்கிட்டு போறாங்க. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற இன்னும் ஏழு வருடங்கள் இருக்கு. அதற்குள் என்னைப்போல பத்து பேரை கூந்தன்குளத்துக்கு உருவாக்கி தந்துடணும். ஆனா கடந்துபோன இருபத்தியேழு வருஷத்துல அப்படியொருத்தரையும் பார்க்க முடியலை” ஆதங்கத்தோடு தன்னை கடந்து செல்லும் பறவைக் கூட்டத்தைப் பார்க்கிறார் பால் பாண்டி.

பறவைகள் பலவிதம்…ஒவ்வொன்றுக்கும் தனிகுணம்!

றவை நோக்கராக பறவைகளின் இயல்புகளை கூர்ந்து நோக்கிவரும் பால் பாண்டியன், சில பறவைகள் தனிச்சிறப்புகளை பகிர்ந்துகொள்கிறார்…

ன்றுகூடி வாழும் குணமுடையது கூழக்கடா. பறவையின் எடை ஏழிலிருந்து எட்டு கிலோவரை இருக்கும். இரண்டு முட்டைகள் இடும். பத்தொன்பது நாட்கள் அடைகாக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ரோமம் இல்லாமல் குரங்கு குட்டிகளைப்போல இருக்கும்.

செங்கால் நாரை அழகிலும் அறிவிலும் சிறந்த பறவை. வீட்டுப் பறவைகளைப் போல மனிதர்களோடு பழகும் குணமுடையது. முட்களை வைத்து கூடுகட்டி, இளம்தளிர்களால் மெத்தை அமைக்கும். மீன்தான் பிரதான உணவு. குஞ்சுகளை குளிப்பாட்டும். வெயிலில் குடை போல தன் சிறகை விரித்து குளிப்பாட்டிய குஞ்சுகளை நிறுத்தி குளிர்போக வைக்கும்.

லகு கரண்டிபோல் உள்ளதால் கரண்டிவாயன் என பெயர் இந்தப்பறவைக்கு. உடல் பால் போல வெண்மையாக இருக்கும். நான்கு முட்டை இடும். முட்டையிடும் காலத்தில் கழுத்துப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிற வளையம் அழகிலும் அழகு!

படம் உதவி:ஆர்.ஆர்.சீனிவாசன்

சிபிகாவின் ரெண்டாவது பிரசவம்!

நாடோடிகளைப் போன்றதொரு வாழ்க்கைதான் சென்ற ஆண்டுவரை எங்களுக்கு வாய்த்திருந்தது. நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை, எங்களுக்கென்றே ஒரு வீடு கிடைக்குமென்று. 2006ல்தான் எங்களுடைய பூர்வீகத்துக்கு நாங்கள் திரும்பினோம். அப்போதும் வாடகை வீடுதான். எந்த திட்டமிடலும் இல்லாமல் ஏதோ அற்புதம் நடந்தமாதிரி வீடு கட்டுமளவு நிலம் வாங்கினோம். அது விளைநிலம். மனைபோட்டு விற்றிருக்கிறார்கள். அலுவலக வேலைக்கு செல்பவராக இருக்கும் என் அம்மாவும் வியாபாரியாக இருக்கும் என் அப்பாவும் இன்னமும் விவசாயிகள்தான்! அந்த நிலத்தில் உடனடியாக வீடு கட்டாமல், கத்தரி, மிளகாய், வெங்காயம் என சில காய்கறிகளை நட்டிருந்தார்கள். காலை நேரத்தில் என் அப்பா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்; மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் என் அம்மா செடிகளை கொத்தி சீராக்குவார். இதற்குள் என் அப்பாவுக்கு மாடு வளர்க்கும் ஆசையும் வந்துவிட்டது. ஒரு எருமை கன்றையும் ஒரு பசுங்கன்றையும் வாங்கி விட்டிருந்தார். கூடவே நான்கு கோழிகளும் வளர்த்து வந்தார். திருப்புமுனையாக நாங்கள் குடியிருந்தவீட்டின் சொந்தக்காரர் தன்னுடைய சொந்த தேவையின் காரணமாக வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். பதினைந்தே வீடுகள் இருந்த அந்த கிராமத்தில் வாடகைக்கு வீடு கிடைத்ததே பெரிய விஷயம். இதில் இன்னொரு வீடு கிடைப்பது சாத்தியமே ஆகாத விஷயம் என்பதால் வீடு கட்டுவதுதான் சரியான தீர்வென முடிவெடுத்தோம். பூக்களுக் பிஞ்சுகளுமாக இருந்த செடிகளை கண்ணீரோடு பிடிங்கி எறிந்ததாக அம்மாவும் அப்பாவும் தொலைபேசியில் சொன்னார்கள். நான் பக்கத்தில் இல்லாதபோது அந்தச் செடிகள்தான் அவர்களுக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  சில காலம் பக்கத்தில் இருந்த ஒற்றை அறை கொண்ட குடிசையில் அப்பா அம்மா இருந்தார்கள். எப்படியோ இழுத்து இழுத்து ஓராண்டு ஆகியது நாங்கள் வீடு கட்டி முடிக்க. இப்போது எங்கள் வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களும் சில காய்கறி‍, பூ செடிகளும் உள்ளன. எப்போதும்போல நீர் ஊற்றும் பொறுப்பு என் அப்பாவுடையது. பராமரிக்கும் பொறுப்பு அம்மாவுக்கு. எருமையை அப்பா விற்றுவிட்டார். பசுங்கன்று வளர்ந்து சினையாக இருக்கிறது. அடுத்த மாதம் கன்று ஈனும் என்று சொல்லியிருக்கிறார் அப்பா.

எங்கள் வீட்டில் செல்லப்பிள்ளையாக சிபிகா(பூனைதான்)சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறாள். என்னைவிட அவள்மேல்தான் பாசம் அதிகம்!(எனக்கு பொறாமை பொறாமையா இருக்கும்) மாட்டுப்பாலும் கருவாடுமாக ராஜ உபசாரம்தான். குட்டி எலியை மட்டும்தான் பிடித்து திண்பாள். அதையும் பிடித்துக்கொன்டு வந்து அப்பா அம்மாவுக்கு காட்டி அதனுடன் கொஞ்சம் ஓடிப்பிடித்து விளையாடிவிட்டுத்தான் ருசிப்பாள். தொலைபேசி மணி அடித்து வீட்டில் யாரும் இல்லையென்றால், எங்கே இருக்கிறார்களோ அங்கே போய் அழைத்துக்கொண்டு வருவாள். அம்மணிக்கு தற்போது ரெண்டாவது பிரசவம் நடந்திருக்கிறது; நார்மல் டெலிவரி..!

நான் இல்லாத குறையை தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். பெற்றோரை பிரிந்திருக்கும் குற்ற உணர்வு ஆட்கொள்ளும் போதும், வெறுமையோடு தனித்திருக்கும்போது என்னுடைய களைப்பை போக்குகிறது இவர்களுடைய நினைப்பு. பசுக்களையும் எருமைகளையும் நாய்களையும் பூனைகளையும் வளர்க்காமல் போயிருந்தால் நிச்சயம் சரிபாதியளவு மனிதர்கள் மனநோயாளிகளைப்போல்தான் திரிந்திருக்கக்கூடுமோ என நினைக்கத்தோன்றுகிறது. ரெண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் நான் நட்டு வைத்த செடிகளை பார்க்கவும் என் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் பசு, சிபிகா, கோழிகளை காணவும் வாய்க்காமல் போயிருந்தால் சென்னை வீதிகளில் பைத்தியமாகத்தான் நான் அலைந்திருப்பேன்.