குங்குமம் பேட்டி

Kunkumam interview about our web portal www.thetimestamil.com.

இந்த பேட்டி, கடந்த ஜனவரி மாதம் வந்தது. அப்போது எங்கள் வீட்டில் இழவு விழுந்த நேரம் பகிரும் மனநிலை இல்லை. கவிதா இல்லாமல் இணைய தளம் தொடங்கும் யோசனை விரைவடைந்திருக்காது. கவிதாவின் ஊக்கமும் பங்களிப்பும் என்னை உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன், குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகிக்குப் பிறகு என்னை ஊக்குவித்து, வாய்ப்பளித்த நல் உள்ளம் கொண்டவர். எங்களுடைய இந்த முயற்சிக்கு நான் பணியாற்றி, எனக்கு பெயர் பெற்றுக்கொடுத்த அதே பத்திரிகையில் பேட்டி வெளியிட்டு இப்போதும் ஊக்கமளித்திருக்கிறார். இவர்களைப் போல என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்கிறேன். காலம் தாழ்ந்தாலும் நன்றிக்கடனை சொல்லிவிடவேண்டும்.

Advertisements

Gone Girl

இரண்டு மாத அலுவலக குப்பைகளை நேற்று எதிர்பாராத விதமாக சுத்தம் செய்ய நேரிட்டது. இரவு 10.30 வரை இடைவிட்டு இடைவிட்டு பணி. அயற்சியில் தூக்கம் வரும் என்று பார்த்தால் ம்ஹூம்.. சேனல் மாற்றிக்கொண்டிருந்தபோது Gone Girl படம் துவங்கியிருந்தது. கேள்விப்பட்ட படம். டேவிட் ஃபின்சர் இயக்கியது. The Social Network, The Girl with the Dragon Tattoo படங்களின் இயக்குநர். எனக்கு இரண்டு படங்களும் பிடித்திருந்தது. Gone Girl ஐ அவருக்காகப் பார்த்தேன்.

ஐந்து வருட திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கும் இடையே விரிசல். மனைவி ஒரு நாள் காணாமல் போகிறார். செயவதறியாது தவிக்கும் கணவர் அவராகவே காவலர்களிடம் செல்கிறார். துப்பறிவாளர்கள் விசாரிக்கிறார்கள். கணவரே மனைவியை கொன்றிருக்கலாம் என்கிற கோணத்தில் அவர்களுக்கு துப்பு கிடைக்கிறது. மனைவி ஒரு எழுத்தாளர். திருமணத்துக்கு முன் நிறைய எழுதிக்கொண்டிருந்தவர். சிறார் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர். திருமணத்துக்குப் பிறகு, நிறைய படிக்கிறார்; எழுதவில்லை. ஆனால் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து எழுதி வைக்கிறார். ஐந்தாண்டு காலத்தில் தங்களுக்குள் இருந்த காதல் எப்படி மெல்ல மெல்ல காணாமல் போகிறது என்பதை எழுதுகிறார். அந்த டைரியை, கணவரின் அப்பாவுக்குச் சொந்தமான வீட்டில் ஒரு ரகசிய இடத்தில் துப்பறிவாளர்கள் கண்டெடுக்கிறார்கள். தன்னை கணவர் எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம் என எழுதியதோடு டைரியின் கடைசி குறிப்பு முடிகிறது. டைரியை ஆதாரமாகக் கொண்டு கணவர் கைது செய்யப்படுகிறார்.

இதற்கிடையே கணவர் தன் மாணவி ஒருத்தியுடன் ரகசிய உறவில் இருப்பதும் அம்பலமாகிறது. தொலைக்காட்சிகள் கொடூர கணவர் என தீர்ப்பு எழுதுகின்றன. காவல்துறை கொலையான மனைவியின் சடலத்தை தேடிக்கொண்டிருக்க மனைவி, காரில் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சுதந்திரத்தை, செல்வாக்கான வாழ்க்கையை இழக்கக் காரணமாக இருந்தவன், தனக்கு துரோகம் இழைத்தவனுக்கு தான் தக்க தண்டனை கொடுத்துவிட்டதாக சொல்கிறாள் அவள். கணவனை கொலை வழக்கில் சிக்க வைக்க தானே அனைத்து திட்டங்களையும் தீட்டியதையும் நினைத்துப் பார்க்கிறாள். துரோகம் இழைத்த கணவனுக்கு மனைவி கற்பித்த பாடம் என முடிகிறது போல நினைத்தால் படத்தின் ஒருபாதி தான் இது. (டேவிட் ஃபின்சரின் The Girl with the Dragon Tattoo படத்திலும் இப்படி முடிவது போன்று முடிந்து கதை நீளும்)

எந்தவொன்றும் இன்னொரு கோணம் இருக்குமல்லவா? அதுபோல படத்தின் அடுத்த பாதி இன்னொரு கோணத்தின் கதையை சொல்கிறது. இரண்டாம் பாதி விஷுவலாக செதுக்கப்பட்டிருக்கிறது. மனைவியாக நடித்த ரோஸ்மண்ட் பைக்கின் உடல்மொழி, பார்வையாளர்களை ஒன்றி இழுக்க வைக்கக்கூடியது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கருக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது) வெகுநேரம் இந்த கதாபாத்திரத்தின் தாக்கம் எனக்குள் இருந்தது.

புனையும் திறனுள்ள ஒரு பெண், எப்படி தன்னை சுற்றியுள்ளவர்களையும் உலகத்தையும் ஒட்டுமொத்தமாக நம்பவைக்க முடிகிறது என்பதே மீதிக்கதை. படத்தை பார்க்கும்போது அது பிடிபடும். அவள் ஏன் அப்படி செய்கிறாள்? குழந்தை பருவத்தை பிடிங்கிக்கொண்ட வளர்ப்பு ஒரு காரணம். தன் சுயத்தை பிடிங்கிக்கொண்டு துரோகம் இழைக்கும் கணவன், மிக இக்கட்டான நிலையிலும் தன்னை வெறும் உடலாகப் பார்க்கும் காதலன் என அந்தப் பெண்ணை தேர்ந்த கிரிமனலாக மாற்றக் காரணங்கள் இருக்கின்றன. இறுதியில் அவள் தனக்கான நீதியை தானே தேடிக்கொள்கிறாள். அவளை சுற்றியுள்ளவர்கள் தண்டனை பெறுகிறார்கள். பார்க்கவேண்டிய படம்தான்!

ஒரு இல்லத்தரசியின் முகநூல் குறிப்பு!

குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள், பசுமையான காடுகள், சுழித்து ஓடும் நீரோடைகள் அல்லது நள்ளிரவு அமைதி…தங்களுக்கு கற்பனை வளம் பெருக்கெடுத்தும் ஓடும் சூழல்களாக பிரபல எழுத்தாளர்கள் நேர்காணலில் சொல்லிக் கொள்வார்கள். நான் பிரபல எழுத்தாளரும் அல்ல, சொல்லப்போனால் நான்கு வரிகளுக்கு மேல் என் முகநூல் பக்கத்தில் எழுதியதில்லை. ஆனால் எனக்கு பாத்திரங்கள் துலக்கும்போது கற்பனை வளம் பெருக்கெடுத்து ஓடும். ஆம், சமையல் பாத்திரங்கள் தாம்! நான் ஒரு இல்லத்தரசிதானே, ஒரு நாளைக்கு மூன்று வேளை கட்டாயமாக பாத்திரம் துலக்கிவிடுவேன். நடுநடுவே மாமியார் – மாமனார் குடிக்கும் காபி தம்பளர்களை துலக்கி வைப்பேன். காபி தம்பளர்களை சேர்த்து வைத்து கழுவுவது அவர்களுக்குப் பிடிக்காது.

என் கற்பனை வளம் பெருக்கெடுக்கும் விஷயத்தை சொல்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பாத்திரங்களை துலக்க செலவிடுவேன். மற்ற பெண்களைப் போலத்தான் திருமணம் ஆகும்வரை பாத்திரங்களை துலக்கியதில்லை. திருமணத்திற்குப் பிறகு, சமைப்பதும் துலக்குவது துவைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது. இந்திய குடும்ப சாசனத்தில் பெண்கள் கட்டாயம் செய்யவேண்டிய கடமைகள் இவை. வாரத்தின் ஏழு நாட்களும் மாதத்தில் 30 நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் செய்ய வேண்டிய கடமை இது. திருமணமான 15 ஆண்டுகளில் அம்மா வீட்டுக்குச் சென்ற நாட்களைத் தவிர, ஓயாமல் இந்தக் கடமையைச் செய்துகொண்டிருக்கிறேன். ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஓய்வு கிடைக்குமே என்றெல்லாம் சலுகை எதிர்பார்க்க முடியாது. உடல்நலன் தேறியவுடன் வேலை இருமடங்காகி இருக்கும். சுயகழிவிரக்கும் கொள்கிறோனோ? இல்லையில்லை, பணிக்கு வெளியே செல்லும் கணவருக்கு பொருளாதார ரீதியாக உதவுகிறேன். பாத்திரம் துலக்க குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் சம்பளம் தரவேண்டியிருக்கும். பெருநகர வாழ்க்கையில் கூடுதல் சுமைதான். வீட்டில் சும்மா தானே இருக்கிறேன், ஏதாவது வேலை செய்ய வேண்டும் இல்லையா?

இப்படி பாத்திரம் துலக்குவதை கடமையாகக் கருதி செய்ய ஆரம்பித்து, அதையே என் கற்பனை வளத்துக்கான திறப்பாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். மலைகளுக்கு பயணம் போகத் தேவையில்லை; நதிகளில் கால் நனைத்தபடியே வானத்து மேகங்களை அன்னார்ந்து பார்த்து கற்பனையை தட்டி தட்டி விடவேண்டியதில்லை. பாத்திரங்களில் ஒட்டியுள்ள எண்ணெய் பிசுக்குள்ள குழம்பை வழித்தெடுக்கும்போதே என் கற்பனை வீறுகொண்டு எழுந்துவிடும். குக்கரில் ஒட்டியுள்ள காய்ந்த சோற்று பருக்கைகளை அழுத்தி தேய்க்கும்போது என் கற்பனைக்கான விஷயம் ஒரு நிலையை எட்டியிருக்கும். பாத்திரத்தில் ஒட்டியுள்ள சோப்புக் கரைசலை சலசலக்கும் தண்ணீரில் கழும்போது வார்த்தைகளும் வாக்கியங்களும் வந்து விழும்.

ஆனால், எது குறித்து எழுத நினைத்து வார்த்தைகளை கோர்த்தேனோ அதை எழுதியதில்லை. நான் ஒரு இல்லத்தரசி; எழுத்தாளரில்லை. ஸ்மார்ட் போனில் ‘ஹாய் ஃபிரண்ட்ஸ் குட் மார்னிங்!’ என்று எழுதுவதே அதிகபட்சம். ஆஃப் ட்ரால் நானொரு இல்லத்தரசி. நான் எழுத வேண்டும், எழுத்தாளராகப் போகிறேன் என்று வீட்டில் சொன்னால் ஆவி பிடித்தவளைப் போல என்னைப் பார்ப்பார்கள்.

நான் புத்தகங்கள் படிப்பேன். முகநூலில் பிரபல எழுத்தாளர்களை பின்தொடர்கிறேன். அவர்கள் எல்லோரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்…நாவல் எழுதுகிறார்கள்; சிறுகதை எழுதுகிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், கட்டுரை எழுதுகிறார்கள், முகநூலில் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்…அவர்களைப்போல நானும் எழுதிக்குவிக்க வேண்டும். ஒருவேளை நான் ஆணாகப் பிறந்திருந்தால் எழுதிக் குவித்திருப்பேன். என் மனைவி என் இல்லத்துக்கு அரசியாக எல்லாப் பணிகளையும் செய்துகொண்டிருப்பாள். நானும் சுரண்டியிருப்பேன்.

சுரண்டல் என்றதும் சிட்னி போலக்கின் The way we were படத்தின் நாயகி காதாபாத்திரமான கேத்தி நினைவுக்கு வருகிறாள். நான் பார்த்ததிலேயே கம்யூனிஸ்டுகளை உயர்வாகக் காட்டிய படம் இதுதான். நீங்கள் அமேசிங் ஸ்பைடர் மேன் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தின் முதல் காட்சியில் தோன்றும் ரஷிய வில்லன், காலில் அரிவாள் சுத்தியலை பச்சை குத்தியிருப்பான். சரி..கேத்தியின் கதையை சொல்கிறேன், அவள் ஒரு முற்போக்கான பெண்; கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கத்தில் செயல்படுகிறவள். நேர் எதிர் கருத்துகளைக் கொண்ட நாயகனை விரும்புகிறாள். தன்னுடைய கொள்கைகளை தூக்கி வைத்துவிட்டு, தன்னை நாயகனுக்குரியவளாகக் காட்ட அவனுடைய துணிகளை துவைத்து சலவை செய்து தருகிறாள். முரண்களுக்கிடையே இருவரும் இணைகிறார்கள்; பிரிகிறார்கள். நாயகன்தான் அவளை, அவளுடைய அரசியல் செயல்பாடுகளுக்காக ஒதுக்குகிறான், துரோகம் இழைக்கிறான். குழந்தையுடன் கேத்தி ஒதுங்கிக்கொள்கிறாள். மறுமணம் செய்துகொண்டு தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடர்கிறாள் கேத்தி. 70களில் வந்த படம். காதல் படம் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு பெண்ணின் அரசியல் பற்றிய படம்.

பெண்களுக்கு அரசியல் பிடிக்குமா? என சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவர் எழுதியது நினைவுக்கு வருகிறது. பெண்கள் வாக்களிக்க வேண்டுமா என கேட்பதுபோல இருந்தது. எனக்கு அரசியல் பிடிக்கும். கேத்தியைப் போல எனக்கும் அரசியல் நிலைப்பாடு உண்டு. என்னுடைய கணவரின் குடும்பம் தீவிர திமுக விசுவாசிகளைக் கொண்டது. தன்னுடைய இளம் வயதில் திமுக தலைவர் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி பெருமையோடு கதை சொல்வார் என் மாமனார். என் கணவர் எந்த சூழ்நிலையிலும் உதயசூரியனுக்கன்றி வேறெந்த சின்னத்திலும் வாக்களித்ததில்லை என்பார். ஆனால் அவருக்கு அரசியலில் ஒன்றும் தெரியாது. எனக்கு அரசியல் பிடிக்கும், நான் வாக்களிக்க மறுத்தபோது என்னைக் குடும்பமே திட்டிதீர்த்தது.

கேடிவியில் ”ஒரு பொண்ணுன்னா எப்படியிருக்கணும் தெரியுமா?” வசனங்களுடன் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை கணவரும் இரண்டு மகன்களும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் அரசியல் விவாதங்களை பார்க்கத் துடிப்பேன். பெரும்பாலும் விளம்பர இடைவெளிகளில் அந்த வாய்ப்பு கிட்டும்.

எப்படியாயினும் நான் ஒரு இல்லதரசி. என்னால் எழுத முடியாது; அரசியல் பேசக்கூடாது. கேத்தியை போல நானும் சமரசம் செய்துகொண்டிருக்கிறேன். கேத்தியிடம் தீர்க்கமான அரசியல் இருந்தது. என்னிடம் என்ன இருக்கிறது என பாத்திரங்களை துலக்கிக்கொண்டே சிந்திக்கிறேன். அழுக்குப் பாத்திரங்களில் சத்தங்களில் கிளர்தெழும் சொற்களாக, வாக்கியங்களாக அவை இருக்கலாம். சொற்களை, வாக்கியங்களை சேகரித்து உருவம் தருவேன். நான் மட்டும் பார்க்கும்படியாக முகநூலில் அந்த உருவத்தை பதிவு செய்வேன். ரகசியமாக அவ்வப்போது படித்துக்கொள்வேன். ஏனெனில் நானொரு இல்லத்தரசி ரகசியங்களை ஒளித்து வைத்து வாழ்பவள்.

பின்குறிப்பு: புனைவில் வரும் அத்தனையும் கற்பனையே. எவரையும் மறைமுகவாகவோ நேரடியாகவோ சுட்டுவன அல்ல.

படம் நன்றி: டிசைன் பப்ளிக் டாட் இன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….

நீண்ட நாட்களுக்குப் பிறகு, (சில மாதங்களுக்குப் பிறகு) வலைப்பதிவு  எழுதுகிறேன்.  எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாகவே கருதிக்கொள்வேன். வார்த்தைகளை, வாக்கியங்களை, பதிவுக்கான அல்லது கட்டுரைக்கான தலைப்பை…எழுதுவதற்காக எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பேன்.  காலவோட்டத்தில் அனைத்தும் எழுத்தாவதில்லை. எனக்கு வருத்தம்தான். எழுதிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அல்லது நாமாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் முயற்சிக்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத முனைந்திருக்கும் நான், மகிழ்வான செய்தியை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் ஒன்றாக பயணிக்கிறோம். என்னுடைய (எங்களுடைய) புதிய முயற்சி குறித்து சொல்ல விரும்புகிறேன். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக கைவினைப் பொருட்கள் செய்முறைக்கென பிரத்யேகமாக இதழ் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.  அதை பெரிய அளவில் செயல்படுத்தும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. அதற்கான முயற்சியிலும் இறங்கவில்லை.

கைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு இருந்த ஆர்வத்தை ‘நான்கு பெண்கள்’ மூலம் வெளியே கொண்டுவந்தேன். கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணனை சந்தித்தேன். யூ ட்யூப்பில் வீடியோவாகவும் நான்கு பெண்கள் தளத்தில் எழுத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை விளக்கினார் ஜெயஸ்ரீ. நானும் அவருமே கூட கைவினைப் பொருட்களின் செய்முறைக்கென புத்தகங்கள் கொண்டுவருவது குறித்து பேசியிருக்கிறோம். ஆனால் முனைந்து செய்யவில்லை.

2012-ஆம் ஆண்டு என்னுடை முழு நேர பணியை விட்டேன்.  கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எந்தவித பணியும் இல்லாமல்தான் இருந்தேன். அதன் பிறகு பத்திரிகை துறை சார்ந்து சிறு சிறு வேலைகள். அதிலிருந்து கிடைத்த வருமானம்….போதுமானதாக இல்லையெனினும் எனக்கு அதில் மகிழ்ச்சிதான்.  ஆடம்பர தேவைகளை குறைத்துக்கொண்டேன்.  படோபடங்கள் இல்லாமல் வாழ்வதும் சிறப்பானதாகவே இருக்கிறது.  உறவினர்கள், ஒரே துறையைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் என என்னைச் சுற்றியுள்ள பலரும் என்னை ஏற இறங்க பார்ப்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் சில நேரங்களில் இத்தகைய பார்வைகள் வருத்தம் தறுவதையும் நான் மறுக்கவில்லை. இதற்கிடையே என்னுடைய அடிப்படை தேவைகளை, என்னுடைய தேடல்களை பூர்த்தி செய்யும் வகையில் வீடியோக்கள் எடுத்தேன்; இணையத்தில் தொடர்ச்சியாக இயங்கினேன்.

அது எனக்கு பலவற்றையும் கற்றுத்தந்தது. இதுதான் எதிர்காலம் என உணர்ந்த நேரத்தில் அரசியல்-சமூகம்- செய்தி சார்ந்த இணையதளம் நடத்தலாம் என்கிற யோசனையை முன்வைத்தார் கவிதா. சில மாதங்கள் ஒரு இணையதளத்தில் பணியாற்றிவிட்டு, திரும்பியிருந்த எனக்கு அது சரியென பட்டது. த டைம்ஸ் தமிழ் இணையதளத்தை தொடங்கினோம். ஓராண்டு முடிந்திருக்கிற நிலையில் எங்களுக்கு அது மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. தளம் பரவலாக அறியப்பட்டது, சிலர் தூற்றினார்கள், பலர் பாராட்டினார்கள்.  த டைம்ஸ் தமிழ் எதிர்காலத்தில்  பல லட்சம் தமிழர்கள் விரும்பும் இணையதளமாக மாறும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுண்டு. எங்களுக்கு பல லட்சம் பேரை சென்றடைவதற்கான ஃபார்மூலா தெரியும். எங்களுக்கு பொருளாதார பலமில்லை. அதனாலேயே பல முயற்சிகளை செய்ய முடியவில்லை.

தற்போதைய தளத்தை மேம்படுத்தி முழுமையான இணையதளமாக மாற்ற வேண்டும் என்பது ஓராண்டு முடிவில் நாங்கள் செய்ய நினைத்திருந்த திட்டம். அதற்காக சேமித்திருந்த பணம், திடீர் சிக்கல்களால் காணாமல் போனது. இதற்கிடையே சில நண்பர்கள் பண உதவி செய்ய முன்வந்தார்கள். ஒரு நண்பர் வேண்டாம் என மறுத்தும் ரூ. 5 ஆயிரத்தும் மேல் அனுப்பி வைத்தார்.  பண உதவி கேட்பது எனக்கு மிகப் பெரும் சங்கடத்துக்குரிய விடயம். இதுதான் என்னுடைய முழு நேர பணி, என்னால் எனக்கான கூலியை சம்பாதித்துக்கொள்ள முடியும்…இதைதான் சேவையாகவெல்லாம் செய்யவில்லை எனும்போது உதவுங்கள் எனக் கேட்பது சரியாக இருக்காது என்பது என் எண்ணம். விளம்பரங்கள் வேண்டாம் என்கிற எண்ணம் முதலில் இருந்தது. ஆனால் நான் இதை தொழிலாகத்தான் செய்ய விரும்புகிறேன்…சாரிட்டியாகவோ, ஒரு இயக்கமாகவோ அல்ல!  ஆனால், எனக்கென்று, எங்களுக்கென்று சில அறங்களை வைத்துள்ளோம். அந்த வகையில் நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட விரும்புகிறோம்.

இத்தகையதொரு சூழ்நிலையில், ‘செய்து பாருங்கள்’ இதழ் ஆரம்பிக்கும் எண்ணம் துளிர்விட்டது. அதை நீண்ட நாளுக்கு நீர் ஊற்றி நீர் ஊற்றி வேர் அழுக வைக்க விரும்பவில்லை. உடனடியாக செயலில் இறங்கினேன்.  என்னால்  செய்ய முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தியது த டைம்ஸ் தமிழ்.  அதுபோல கவிதாவின் நம்பிக்கை வார்த்தைகளும்.  என்னிடமிருந்த சேமிப்பும் ஜெயஸ்ரீயின் உதவியும் முதல் இதழைக் கொண்டு வர உதவியது. இதோ இதழ் வந்துவிட்டது…

என்னுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் மிகவும் தீவிரமான அரசியல்-இலக்கிய-சமூக பார்வை கொண்டவர்கள். கைவினைப் பொருட்கள் செய்முறைக்கென இதழை கொண்டிவந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதுவும் நந்தினிதான். அதில் எனக்கு பெருமையும்கூட… என்னால் அரசியலையும் எழுத முடியும் சமயல் குறிப்பையும் செய்முறை குறிப்பையும் எழுத முடியும்… நான் ஒரு ப்ராட்டகானிஸ்ட்.

‘செய்து பாருங்கள்’ இதழ் இப்போதைக்கு ஆன் லைன் மூலமாகத்தான் விற்பனை  செய்யவிருக்கிறோம்.  எம்பிராய்டரி, ஃபேப்ரிக் பெயிண்டிங், குரோஷா, சோப் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி, ஒரிகாமி என பல பிரிவுகளில் 20க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை குறிப்புகள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்தவ விருப்பமுள்ளவர்களை நிச்சயம் இதழ் ஏமாற்றாது. இதழின் விலை ரூ. 150. காலாண்டிதழ்.

இதழ் தேவைப்படுகிறவர்கள்
S. Nandhini
A/C NO: 602263423 (Indian Bank)
IFS Code IDIB000K071
என்ற கணக்கில் ரூ. 150ஐச் செலுத்தி, mvnandhini84@gmail.com மற்றும் contactt3life@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.  நேரடியாக வாசகர்களுக்கு இதழை தருவதால் தபால் செலவை நாங்களே ஏற்கிறோம்.
எங்களுக்கு நம்பிக்கையளியுங்கள், அதே நம்பிக்கையை உங்களுக்கும் தருகிறோம்…!

சினிமாவை எப்படி இலக்கியத்தரமாக்கலாம்?: பாஸ்கர் சக்தி நேர்காணல்

பாஸ்கர் சக்தி, வெகுஜன வாசகர்களை சென்றடைந்த ஒரு எழுத்தாளர். செறிவுள்ள கதைகளைப் படைத்தவர். தமிழ் சினிமாவில் சொற்பமாக உள்ள வசனகர்த்தாக்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். எம்டன் மகன்,வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல,முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, பாண்டிய நாடு போன்ற படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதி வருகிறார். இவருடைய நாவல் ‘அழகர்சாமியின் குதிரை’ சுசீந்திரனால் இயக்கப்பட்டு தேசிய விருதுகளைப் பெற்றது. அந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவரும் இவரே. இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு வருவது பலமாக அமைந்ததா? இலக்கியங்களை சினிமாவாக்குவது தமிழ்ச் சூழலில் ஏன் பரவலாக இல்லை? என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதில் தந்தார் பாஸ்கர் சக்தி…

கேரளத்தில் சினிமாவும் இலக்கியமும் நெருக்கமாக இயங்குகின்றன. பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து சினிமாவாகின்றன. அங்கே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தமிழில் அப்படியான ஒரு சூழல் இல்லை. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் இலக்கியத்துக்கான இடமும் கேரளத்தில் இலக்கியத்துக்கான இடமும் வேறுபடுகிறது. அங்கு எழுத்தாளர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.  தமிழ்நாட்டில் பெரும்பாலும் எழுத்தாளர்களைக் கண்டுகொள்வதில்லை. அப்படியே பார்த்தாலும் யாரை எழுத்தாளர்களாக பார்ப்பார்கள் என்றால், வெகுஜன பத்திரிகையில் எழுதுகிறவர்களில் ஒரு சிலரைத்தான். உதாரணத்துக்கு சுஜாதா, பாலகுமாரன் போன்றோர்களுக்கு ஸ்டார் எழுத்தாளர்கள் அந்தஸ்து இருந்தது. அப்புறம் ஜெயகாந்தன் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை..நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு படங்கள் வந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இரண்டு படங்கள். அதில் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் ஹிட்டானது. அடுத்து  எடுத்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படம்  ஓடவில்லை. தமிழ்நாட்டில் வெற்றிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நாளைக்கே பிரபலமான இலக்கியத்தை படமாக எடுத்து அது வசூல் ஆகிவிட்டது எனில், எல்லோரும் அதுபோல எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது மாதிரி ஒன்று இங்கே நடக்கவேயில்லை.

இங்கே கதை பஞ்சம் எப்போதுமே இருக்கிறது. இலக்கியத்துக்குள் போனால் நிறைய கதைகள் கிடைக்கும். ஆனால் அதற்கான உழைப்பைச் செலுத்த யாரும் தயாராகயில்லை. இரண்டு வருடங்களில் எத்தனை பேய் படங்கள் வந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.  ரெண்டு, மூணு படங்கள் வசூலானது என்ற உடனே, எல்லாவிதமான பேய்ப்படங்களும் வர ஆரம்பித்துவிட்டன. பேய்-காமெடி அப்படியென்றால் ஹிட்.  தற்போது வெளியான தில்லுக்கு துட்டு என்ற படமும் அப்படித்தான் ஹிட்டாகிவிட்டது. இப்படியிருந்தால் வேறு மாதிரி கதைகள் எப்படி வரும்?. காலம்காலமாக டிரெண்ட்டை ஒட்டித்தான் இங்கே சினிமா செய்துகொண்டிருக்கிறார்கள். நாவல் படிப்பதற்கோ, சிறுகதை படிப்பதற்கோ அவர்களுக்கு நேரமில்லை. ஸ்கிரிப்டுக்காக மெனக்கெட தமிழ் சினிமாவில் பெரும்பாலானோர் தயாராக இல்லை. ஒருசில விதிவிலக்குகள் உண்டே தவிர, எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

இலக்கிய வாசிப்பு பழக்கமற்ற சமூகமும் இதற்கொரு காரணமில்லையா?

உண்மைதான். விசாரணை ஒரு தனிமனிதரின் அனுபவமாக இருந்தாலும் இலக்கிய பிரதி அது. அந்தப்படம் விருதெல்லாம் வாங்கியது, ஆனால் கமர்ஷியலாக ஹிட்டாகவில்லை. எப்போதாவது வரக்கூடிய முயற்சிகள் இப்படி ஆகிவிடுகின்றன. நாளை ஒரு இயக்குனர் ஒரு புத்தகம் பிடித்துப் போய் இந்தப் புத்தகத்தை படமாக எடுக்கலாம் யாராவது ஒரு தயாரிப்பாளரை அணுகினால், உடனே தயாரிப்பாளர் விசாரணைகூட கூட ஓடலையே என்று சொல்லி நிராகரித்து விடலாம்..எனவே விசாரணை போன்ற  முயற்சிகளை ஆடியன்ஸ்தான் ஆதரித்து நிலைமயை மாற்ற வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வது போல தமிழில் படிக்கிற பழக்கம் குறைந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்றமாதிரி வாசகர் எண்ணிக்கை இல்லை. 15, 20 ஆண்டுகளில் நிறைய பேர் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். படிப்பென்றால் அதெல்லாம் பட்டம் வாங்குவதற்கான படிப்பாக மட்டுமே இருக்கிறது. வாசிப்பனுபவம் மிக மிக பலவீனமாக இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மாதிரியான சமூக ஊடகங்கள் வந்தபிறகு, வாசிப்பு என்பது அந்த அளவில் தேங்கிப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.

பரந்துபட்ட சமூகம் நிறைய வாசிக்கிறதெனில், ரசனை கூடும். சினிமா மாதிரியான வடிவங்களிலும் அது பிரதிபலிக்கும்.  இலக்கியம் படிப்பதே குறைவு எனும்போது, இலக்கியம் எப்படி படமாக வரும்?

வசனகர்த்தாவாக கதைக்கு தகுந்த வசனங்கள் எழுதிக்கொடுத்தால் போதும் என்று உங்களிடம் கேட்கிறார்களா? அல்லது இலக்கியவாதிக்குண்டான சுதந்திரத்துடன் உங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா?

என்னை ஒரு வசனகர்த்தாவாகத்தான் பார்க்கிறார்கள். அழகர் சாமியின் குதிரை ஒரு விதிவிலக்கு. அது என்னுடைய கதை. அதை சுசீந்திரன் படமாக்கியது தற்செயலாக நடந்தது. விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தாலும் அதுவும்கூட கமர்ஷியலாக பெரிய வெற்றியடையாத படம்தான். அதனால்தான் அதுபோல அடுத்தடுத்து எதுவும் நடக்கவில்லை.

என்னிடம் வந்து இலக்கியத்தரமாக வசனம் எழுதிக்கொடுங்கள் என்று எவரும் கேட்பதில்லை. திரைக்கதைக்கு ஏற்றமாதிரி எழுதிக்கொடுங்கள் என கேட்பார்கள். ஒரு எல்லைக்குட்பட்டுதான் வசனம் எழுதிகொடுக்க முடியும். இதுதான் கதை, இந்த கதாபாத்திரம் இதைத்தான் பேசும் என்பதற்கான எல்லையுடனே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அதைத்தாண்டி இலக்கியவாதியாக இருப்பதால் இலக்கியத்தரமாக கொடுங்கள் என யாரும் கேட்பதில்லை. எனக்கு மட்டுமல்ல ஜெயமோகன், எஸ். ரா போன்ற இலக்கிய வெளியில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் கூட அவங்களுடைய முழுமையான திறமையை சினிமாவுக்குள் பிரதிபலிக்க முடியவில்லை. எல்லைக்குட்பட்டே அவர்களும் செயல்படுகிறார்கள்.
அழகர்சாமியின்  குதிரைக்கு எழுத்தில் இருந்த உயிர்ப்பு, சினிமாவிலும் வந்திருக்கிறதா?
ஒரளவுக்கு திருப்தியாக இருந்தது. என்ன காரணமென்றால் இந்தப் படத்துக்கு திரைக்கதை யில் சுசீந்திரனுடன் நானும் இருந்ததால்தான். அப்படத்தில் அசோசியேட்டாக வேலை செய்தேன். எழுதி முடித்த கதையில் சினிமாவுக்காக சிலதை சேர்க்க வேண்டியிருந்தது. குதிரைக்காரனின் பின்புலத்தை சேர்த்தோம். எழுதிய கதையில் இரண்டு வரிகளில்தான் அது சொல்லப்பட்டிருக்கும். நானும் சேர்ந்து இதைச் செய்ததால் திருப்தியாக இருந்தது. அழகர்சாமியின் குதிரை எழுத்தாளராக எனக்கு மகிழ்ச்சியைத்தந்த படம்தான்.  ஒரு எழுத்தாளராக திருப்தியானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறு நாவலில் வரும் ரெண்டு, மூன்று இடங்கள்…குறிப்பாக காவல் நிலைய காட்சி, இறுதியில் ‘சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா மழை பெயாது’ எனச் சொல்லும்போது மழை பெய்யும் காட்சி போன்றவை சினிமாவில் அழுத்தமாக வெளிப்பட்டன. மழை பெய்யும் காட்சியைப் பார்த்து தியேட்டரில் கைத்தட்டினார்கள். அதுதான் வெற்றி என நினைக்கிறேன். அழகர்சாமியைப் பொறுத்தவரை அது சரியாகவே உருமாற்றம் ஆகியிருந்தது.

இப்போது படம் இயக்கும் முயற்சிகளில் இருக்கிறீர்கள். உங்களுடைய சினிமாவில் இலக்கியத்தின் தாக்கம் எப்படியானதாக இருக்கும்?

ஆமாம், இப்போது நான் ஒரு திரைக்கதை எழுத்திக்கொண்டிருக்கிறேன்.  அதில் என்னுடைய பல சிறுகதைகளின் சாயல் இருக்கும். எனக்கு திருப்திகரமான திரைக்கதையாக அது அமையும் என நினைக்கிறேன். புதுமுகங்கள் வைத்து எடுக்கும்போது சுதந்திரமாக அதைச்  சிறப்பாக வெளிப்படுத்த முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால் எங்கு அது பிரச்சினையாகும் என்றால், இதை புதுமுகங்கள் வைத்து எடுக்க முடியாது, இதில் இந்த நடிகர்களைப் போடுங்கள் என சொல்லும் போது பிரச்சினையாகும்.  சின்ன சின்ன காம்ப்ரமஸை பண்ண வேண்டியிருக்கும். சினிமாவில் நூறு சதவீதம் திருப்தியாக செய்துவிடமுடியாது. வெளிப்புற தாக்கங்கள் நாற்பது, ஐம்பது சதவீதம் இருக்கும். எவ்வளவு அதிகபட்சமாக உங்களை வெளிப்படுத்துறீங்களோ, அந்தளவில் அது உங்களுக்கான வெற்றி என புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய சூழல் அப்படித்தான் உள்ளது.

சினிமாவை எப்படி இலக்கியத்தரமாக்கலாம்?

இலக்கியத் தரம் என்கிற பிரயோகம் இங்கு பொருந்தாது.இலக்கியம் என்பது வேறு, சினிமா என்பது வேறு. சினிமா என்கிற மீடியம் வேறுபட்டது. அதன் தன்மை வேறுபட்டது.  இலக்கியம் என்பது தனி அனுபவம் ஒருத்தர் எழுதுகிறார் இன்னொருவர் படிக்கிறார். ரெண்டு பேருக்குமான அனுபவம் அது. அதை சினிமாவுக்கு நூறு சதவீதம் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. டிமாண்ட் என்னவாக இருக்கலாம் என்றால், நல்ல சினிமாவாக, நல்ல அனுபவமாக இருக்கலாம் என வைக்கலாம். இப்படிச் சொல்லலாம் ஏண்டா அந்தப் படத்தைப் பார்த்தோம். அல்லது நீங்கள் ஒரு படத்தைப் பார்த்து டி மாரலைஸ்டு ஆகி வரக்கூடாது.  அலுப்பூட்டுவது, சங்கட உணர்வை ஊட்டுவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை குலைப்பது போன்ற நெகட்டிவ்வான விஷயங்களைத் தராமல், நல்ல அனுபவம் தருவதே நல்ல படத்துக்கான இலக்கணமாக நான் நினைக்கிறேன். கமர்ஷியல் படமாகக்கூட இருக்கட்டும். உங்களை மேலும் சீரழிக்காமல், நல்ல மனநிலையில் வைத்திருப்பதே நல்ல படம்தான். இலக்கியத்தரமான படம்தான் என்று சொல்வதைவிட நல்ல படம் என்று சொல்லலாம்.

இலக்கியத்தரம் என்பதை சினிமாவை சினிமா எனும் கலையாக பார்ப்பது என எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

இலக்கியத்தில் எந்தவித சமரசங்களும் செய்யாமல் நான் ஒரு வாழ்க்கையை சொல்கிறேன், அதை வேறொரு வாழ்க்கை பின்புலத்தில் வாழ்கிற நீங்கள் அந்த வாழ்க்கைக்குள் போய் வாசிக்கிறீர்கள். ஒரு அனுபவம் கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் செயல்பாடு. சினிமாவிலும் அதேமாதிரி வெறுமனே புனையப்பட்டதாக இல்லாமல், ஒரு வாழ்வியலை, ஒரு நெருக்கடி, பிரச்சினையை, காதலை வெளிப்புற சமரசங்கள் இல்லாமல் சொல்ல வேண்டும். அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று சொல்லலாம். கூடவே அது அழகியலோடும் இருக்கவேண்டும். இதை வேண்டுமானால் நீங்கள் சொல்ல வருகிற இலக்கியத்தரமான சினிமாவுக்கான வரையறை என்று வைத்துக் கொள்ளலாம்.

மலையாளத்திலிருந்து மறுஆக்கம் செய்யப்பட்ட ‘36 வயதினிலே’ படத்தின் ஒரு இடத்தில் ஜோதிகா கதாபாத்திரம் தன் அலுவலகத்தில் பேசுவதாக உரையாடல் வரும். அதில் புத்தகம், இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக்கொள்வார்கள். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தபோதும் அந்த உரையாடல் வெட்டுப்படாமல் வைத்திருந்தார்கள். ஆனால், தமிழ் படங்களில் இலக்கியம் குறித்தோ, புத்தகங்கள் குறித்தோ இப்படியான உரையாடல் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை என்ற சூழல்தானே நிலவுகிறது?

அந்த படத்தின் வசனகர்த்தா விஜி. அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர், நிறைய படிக்கக்கூடியவர். ரொம்ப சென்ஸிபிள் ஆன ரைட்டர்.வேறொருவராக இருந்தால் அந்த வசனமும் கூட இடம் பெற்றிருக்காது. மலையாள சூழலோடு தமிழ் சூழலை ஒப்பிடவே முடியாது. கதாநாயகியை மையப் பாத்திரமாக வைத்து வந்த அந்தப்படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததால்தான் தமிழுக்கு வந்தது. தமிழில் கதாநாயகியை மையப்படுத்திய கதையை ஒரு இயக்குனர் யோசிப்பதே அபூர்வம். நீங்கள் சினிமா படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரிதான் படம் செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்வீர்கள். எழுதும்போதே அப்படித்தான் எழுதுகிறோம். ஒரு திரைக்கதை எழுதிவிட்டு, அதற்கேற்ற தயாரிப்பாளரைத் தேடுவது மிக மிக சிரமமானது.  அவர்களுக்கு எது பிடிக்கும், டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எதைச் செய்தால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்பதற்கேற்பதான் கதை யோசிக்கிறார்கள்.

நிறைய இளைய இயக்குநர்கள் இலக்கியம் படிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் படம் இயக்க வரும்போது இன்றைய டிரெண்டுக்கு என்ன கதை சொன்னால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்றுதான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை. வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, படம் இயக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும்போது ரிஸ்க் எடுக்க அவர்களாலும் முடியவில்லை. இது சூழலின் சிக்கல்தான்.

இந்த சூழல் மாறும் என நினைக்கிறீங்களா? ஏதேனும் புரட்சி நடக்க வாய்ப்பிருக்கிறதா?

இந்தப் புரட்சியெல்லாம் தமிழ் சூழலில் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. நமக்குக் கிடைக்கிற வெளியில் என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். நான் எழுதும் வசனத்துக்குள் ஏதேனும் சொல்ல முடியுமா எனப் பார்ப்பேன், படம் செய்தால், முழு திருப்தி இல்லாவிட்டாலும் திருப்தியாக இல்லை என்று படம் செய்யக்கூடாது. பெரிய அளவில் புதுசாக நான்கைந்து இயக்குநர்கள் வருகிறார்கள், நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் அவர்களுமே இரண்டு படங்களுக்குப் பிறகு, ஒரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கும்போது வேறுமாதிரி ஆகிவிடுகிறார்கள்.

இலக்கிய பின்புலத்தில் சினிமாவுக்கு வருவது, உங்களுக்கு பலமாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா?

தற்செயலாதான் சினிமாவுக்கு வந்தேன். பர்சனலா இலக்கியவாதியாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய எல்லை எது என்பதையும், வாழ்வு குறித்தும் வெற்றி தோல்வி பற்றிய எனது பார்வையையும் இலக்கியம் தெளிவு படுத்தி இருக்கிறது. என்னுடைய கதைகள்தான்  என்னுடைய அடையாளம். வாழ்க்கைக்காக சினிமா, சீரியல் வசனங்கள் எழுதுகிறேன்; இப்போது ஒரு படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறேன். இது இயல்பாக நடந்தது. சினிமாவுக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. கதை எழுதுகிறவர் என்பது திரைத்துறையில் எனக்கொரு மரியாதை அவ்வளவுதான். கதை எழுதி வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலை இல்லை. வசனம் எழுதித்தான் ஈட்ட முடிகிறது.

இலக்கியவாதியாக இருந்து சினிமாவுக்கு வசனம் எழுதுவது உதவிகரமாக இருக்கிறது. பலமாகவும் இருக்கிறது. புதிதாக வருகிறவர்களுக்கு நிறைய படிக்க வேண்டும் என நான் சொல்வேன். ஏனென்றால் வேறுபட்ட வாழ்க்கையை படிப்பதன் மூலம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை இல்லாமல் படம் நன்றாக இருக்காது. வாழ்வியலை தெரியாமல், சமூகத்தையும் மனிதர்களையும் இங்கிருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளவில்லையென்றால், அவன் செய்வது அனைத்தும் உள்ளீடற்ற விஷயமாகத்தான் இருக்கும். இது எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். சினிமா படிக்கிற மாணவர்களுக்கு இதை நான் வலியுறுத்தி சொல்வேன். இலக்கியம் தெரிந்த ஆள் உருவாக்குகிற ஒரு சினிமா, இலக்கியம் தெரியாதவர் உருவாக்குகிற சினிமாவைவிட சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

தற்போது இயக்குவதற்காக எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை எதைப் பற்றியது?

தற்போது சமூகத்தில் பெரிய மாறுதல் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை, நிலம் சார்ந்த பெரிய மாறுதல் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகளைப் பேசுகிற திரைக்கதை ஒன்றை எழுதி வருகிறேன். இதை அப்படியே சொல்லாமல் நகைச்சுவை கலந்த ஒரு திரைக்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அது எதை சொல்லும் என்றால் கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள், மதிப்பீடுகள் எப்படி மாறுகின்றன, உறவுகளின் அடிப்படை மாறுவது, பணம் என்பது எப்படி ஒரு பெரிய முக்கியமான பொருளாக சொல்லப்படுகிறது, அந்தப் பணம் நிம்மதியையும் சந்தோசத்தையும் ஏன் தருவதில்லை, கிராமங்களில் வெறுமை சூழ்ந்திருக்கிறது, கிராமத்தில் நிம்மதி இருக்கும் என்பார்கள் ஆனால் இப்போது அது இல்லை. இப்படியான் இந்த விஷயங்களை பேசியிருக்கிறேன். இதில் நகைச்சுவையும் காதலும் இருக்கும். இவை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அது முடியாது.

சமீபத்தில் ‘திதி’ என்றொரு கன்னடப்படத்தைப் பார்த்தேன். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. கர்நாடகத்தில் அந்தப் படம் விருது வாங்கியிருக்கிறது. ஓரளவு ஓடவும் செய்திருக்கிறது. தமிழில் ஏன் அது சாத்தியமில்லை என்பது உண்மையில் எனக்குப் புரியவில்லை. அப்படியொரு படம் எடுத்தால் தமிழ்நாட்டில் அங்கீகரிப்பார்களா? ஓடுமா? முதலில் அதை திரையரங்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியுமா? என்கிற வருத்தமான சிந்தனைகள் தோன்றுகின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படத்தில்  வரும் ‘ஆண்டை’ என்ற சொல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஒரு வசனகர்த்தாவாக இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் தொழிற்நுட்ப ரீதியாக நிறைய வளர்ந்திருக்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் நாம் சிந்தனையில் மோசமாக சீரழிந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. சவாலே சமாளி போன்ற பழைய படங்களில் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் கதாநாயகனாக இருப்பார். அவர் பண்ணையாராக, ஆண்டையாக இருப்பவரின் மகளைக் காதலிப்பார். அதனால் பிரச்சினை வரும். கதாநாயகன் பண்ணையாரை எதிர்த்து நிற்பார். அவருடைய ஆண்டைத்தனத்தை கேள்வி கேட்பார். நசுக்கப்பட்ட மனிதன் நசுக்கிறவனை கேள்வி கேட்கும் எம்ஜிஆர் படங்கள் பல உண்டு..இப்படி தமிழில் அந்தக் காலக்கட்டத்தில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அப்போது அது ஒரு விஷயமாகவே இல்லை. ஆனால்  இப்போது அது பிரச்சினைக்குரியதாக மாறி இருக்கிறது.

ஆண்டை என்பது அடக்குமுறையைக் குறிக்கும் ஒரு சொல்லாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட எந்தவொரு சாதியையும் அந்த வசனம் குறிக்கவில்லை. ஒடுக்குகிற ஒருவனை ஒடுக்கப்படுகிற ஒருவன் நீ என்னை ஒடுக்குகிறாய் என சொல்கிறான் இதிலென்ன தவறு இருக்கிறது? இதற்கு எவ்வளவு விவாதங்கள். பேச்சுகள். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு இவ்வளவு வக்கிரமான ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் வருகிறது. சாதியம் முன்னை விட அதிகமாகவே இங்கே பரவிக்கொண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இது வேதனைக்குரிய ஒன்று.

‘படச்சுருள்’ ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்.

முகப்புப் படம்: பாஸ்கர் சக்தியின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.