அதானிக்காகவும் அம்பானிக்காகவும்தான் ‘மேக் இன் இந்தியா’!

‘மேக் இன் இந்தியா’ அதாவது ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்பதை பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணங்களின் போதெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தியாவை வெளிநாட்டினருக்கு திறந்து விடுவதை இத்தனை நாசூக்காக,  உணர்ச்சிப் பொங்க வைக்கும் வாக்கியத்தின் மூலம் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருக்க முடியும்.

ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில்  20 நாடுகளுக்கும் மேல் பயணம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி நாட்டில் இருப்பதைக் காட்டிலும் வெளிநாட்டில் இருக்கும் நாட்கள் அதிகம் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அவர் காதில் போட்டுக்கொள்வதில்லை. சமூக வலைத்தள பகடிகளை அவர் சட்டை செய்வதில்லை (அவர்களை கவனித்துக்கொள்ள மோடி பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதால் பிரச்சினை இல்லை). தொடர்ந்து விமானம் ஏறிக்கொண்டே இருக்கிறார். யாருக்காக?

தன்னை ஏகபோக பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்த மக்களுக்காக அல்ல; ஆட்சியில் அமர வைக்க ஏகத்துக்கும் ‘பொருள்’ உதவி செய்த, தொழிலதிப நண்பர்களுக்காக. ஆஸ்திரேலியாவுக்குப் போனார், நண்பர் அதானிக்கு நிலக்கரி சுரங்கத்தை ஒப்பந்தம் செய்துகொடுக்க. தன் அருகிலேயே தொழிலதிபர் அதானி வைத்துக்கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார். இந்திய ஊடகங்களில் படங்கள் வெளியானதோடு விமர்சனங்களும் வெளியானது. எனவே, தன்னுடைய அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களை மோடி இந்த விஷயத்தில் கவனமாக இருந்தார்.

எனினும், மோடியின் மேக் இன் இந்தியா(வழக்கமானதுதான் வெளிநாட்டு கம்பெனிகள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ சேராமலோ இந்தியாவில் பொருட்களைத் தயாரிப்பார்கள்) எதைப் பற்றியது என்பது அம்பலமான பிறகும் மோடி தன் நண்பர்களுக்கான பயணத்தை நிறுத்தவில்லை. சமீபத்தில் ரஷ்யாவுக்குப் பயணமானார், அனில் அம்பானிக்காக!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் அல்மாஸ் ஆன்டே நிறுவனமும் இணைந்து இந்திய ராணுவத்துக்கு எஸ்.400 வகை ஏவுகணை வாங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். 400 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட, நிலத்திலும் வான்வெளியிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணை இது.

ரஷ்யாவின் ஆயுதத் தயாரிப்பில் மகுடமாக குறிப்பிடப்படும் இந்த ஏவுகணையை சீன, பாகிஸ்தான் நாடுகளின் ஆயுத சக்திக்கு ஈடுகட்டும் வகையில் வாங்குகிறது இந்தியா. ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இதை வாங்கி, இந்தியத் தன்மைக்கேற்றபடி மாற்றம் செய்துகொடுக்கும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்தினுடையது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு ரோந்து கருதுவிகளை செய்துகொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ‘பாதுகாப்பு’க்காக ஏவுகணை வாங்குகிறது; நல்லது. ஆனால் அதை ஏன் மோடி அரசு மறைக்கிறது என்பதே கேள்வி. அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கார்மோவ் ரக ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக வாங்கப்படும் ஏவுகணை குறித்து எந்த விவரமும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

ரஷ்யாவின் அரசு ஊடகம், எஸ்.400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது என செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. உலக அளவிலான வர்த்தக பத்திரிகைகள் இதுபற்றி எழுதுகின்றன. ஆனால், அரசு இதுகுறித்து மவுனம் காக்கிறது. அரசு மவுனம் காப்பது ராணுவ ரகசியத்தைக் காப்பாற்ற என்று நாம் நினைக்கலாம். ரஷ்யாவுக்கு இந்தியாவைவிட சீனா நெருங்கிய கூட்டாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதோடு, ரஷ்யாவே உலகத்துக்கு தெரியப்படுத்திவிட்ட பிறகு ராணுவ ரகசியமும் இல்லை; ஒன்றும் இல்லை. எல்லாம் மோடியின் ‘நண்பர்கள்’ பற்றிய ரகசியம்தான்!

பிரதமர் நரேந்திர மோடி கோயில் இல்லாத நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ செல்ல மாட்டார்!

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற முதுமொழியை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியோ கோயில் இல்லாத ஊருக்குச் செல்ல வேண்டாம் என்கிற புதுமொழியை தனது பயண திட்ட மொழியாக வைத்திருக்கிறார். அன்றாட வாழ்க்கைப் பாடுகளில் இருந்து தங்களுளைக் காப்பாற்றி மிகப் பெரும் புரட்சியை செய்துவிடுவார் என வாக்களித்த மக்கள் அவரது திருக்கோயில் தரிசனங்களை தினசரிகளின் முதல் பக்கத்திலும் தொலைக்காட்சிகளில் முதன்மை செய்திகளாகவும் படித்தும் பார்த்தும் வருகிறார்கள்.

modi temple visit (2)

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழின மக்கள் வாழும் இடங்களைப் பார்வையிட்டு தமிழரின் துயர் தீர்ப்பார் என இங்கிருந்து அறிக்கைவிட்ட அரசியல்வாதிகள், குறிப்பாக பெரியார் வழி வந்த மு. கருணாநிதியின் அறிக்கை கண்முன் வந்து போகிறது. மோடி நாகுலேஸ்வரன் கோயிலுக்கு சென்று இலங்கை தமிழரின் துயர் தீர்க்க இறைவனிடம் வேண்டி வந்ததாக தமிழிசையும் பொன்.ராதாகிருஷ்ணனும் அறிக்கை விடக்கூடும்.

முதன்முறையாக இந்துத்துவத்தை நேரடியாக முன்வைத்து ஆட்சியை பிடித்திருக்கும் மோடி உலகெங்கும் உள்ள இந்துக்களை இந்துக் கோயில்களுக்குச் செல்வதன் மூலம் இணைக்கிறார், இந்துத்துவத்தை பரப்புகிறார் என்று வாக்களித்த பெரும்பான்மை மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். மோடி ஆஸ்திரேலியாவுக்கு அதானிக்காக செல்கிறார், டாடாவுக்காக ஸ்ரீலங்கா செல்கிறார் என்பதை அவர்கள் எப்போதும் அறியப் போவதில்லை.