அரசியல் கட்சிகள் சில நேரங்களில் மூத்தத் தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்களை தூக்கியெறிவது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால், மோடி-அமித் ஷா பாஜகவின் அதிகார மையங்களாகிவிட்ட பிறகு பல மூத்தத் தலைவர்கள், நேர்மையான அரசியல்வாதி என பெயர் எடுத்தவர்களை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதன் பட்டியல் இதோ…
மோடி தலைமைக்கு பாஜக பலிகொடுத்த மூத்தத் தலைவர் ‘ரத யாத்திரை’ புகழ் அத்வானி. பிரதமர் கனவில் இருந்த அத்வானியை ஓரங்கட்டி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் முழு பங்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பையே சாரும். மோடி போன்ற அதிரடியாளர்கள்தான் தற்போதை ‘இந்துத்துவ’ வளர்ச்சிக்குத் தேவை என்பது அவர்களுடைய கணக்கு. அதன்படி மோடியை முன்னிறுத்தினார்கள்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அத்வானிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அறை ஒதுக்குவதில் ஆரம்பித்து, அவரை ‘கார்னர்’ செய்தது மோடி தலைமை. அத்வானியுடன் முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களுடைய ஆலோசனைகளை அமித் ஷா புறக்கணித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஜுன் மாதம் அத்வானி,
“ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கம் நாட்டில் மேலோங்கி இருக்கின்றன. அரசியல் சாசன பாதுகாப்பு வலுவாக இருப்பினும் கூட ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கமே வலுவாக இருக்கிறது. இப்போது உள்ள சட்டதிட்டங்கள் அவசர நிலையை தவிர்க்க போதுமானதாக இல்லை.
மீண்டும் அவசர நிலை ஏற்படாமல் தடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியுடைய அரசியல் தலைமை இந்தியாவில் இல்லை என நான் கூறவில்லை. ஆனால், அந்த தலைமைக்கு அத்தகைய சூழலை தடுக்கும் வலிமையில்லை என்பதே எனது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. எனவே, நாட்டில் மீண்டும் அவசர நிலை ஏற்பட வாய்ப்பில்லை என நான் முழுமையாக நம்பவில்லை” எனக் கூறியிருந்தார்.
பாஜகவின் மற்றொரு மூத்தத் தலைவரான அருண் சோரி, “முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பலகீனமான பிரதமர் நாட்டை ஆள்வதாக நான் உணர்கிறேன். பொருளாதார நிர்வாகம் என்பதை இந்த அரசு தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பது என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
“மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை எல்லோரும் இப்போது நினைவு கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் காங்கிரஸ்+பசு என்பதாகவே உள்ளது. காங்கிரஸ் வழியிலேயே பாஜக அரசும் செயல்படுகிறது” என்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் அருண் சோரி.
மோடியை விமர்சிக்க ஆரம்பித்ததிலிருந்து, மோடி ஆதரவாளர்கள் தன்னை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிப்பதோடு, மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் மகனையும் கேலி செய்வதாக அருண் சோரி தெரிவித்தார்.
“இந்த நிகழ்ச்சியில் என் மீதும் என் மகன் மீதும் தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதல்கள் குறித்து பேச ஆரம்பித்தால், பார்வையாளர்கள் அதிர்ச்சியடைவார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்…‘அவருக்கு பைத்தியக்கார மகன் ஒருவன் இருக்கிறான். அவனைப் போல இவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது’. இத்தகைய முட்டாள்களை பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவராக இருக்கிறார்” என்று பேசினார்.