Tag Archives: அனுபவம்
ட்ரம்போவும் நானும்
‘Tumbo’ படத்தைப் பார்த்து முடித்தேன். ட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொறுத்திப் பார்க்க முடிந்தது. ஜேம்ஸ் டால்டன் ட்ரம்போ 40களில் முன்னணியில் இருந்த ஹாலிவுட் திரைக்கதாசிரியர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த பலரை அன் அமெரிக்கன் அக்டிவிடீஸ் கமிட்டி பட்டியலிட்டு, அவர்களை பொது வாழ்க்கையிலிருந்து துரத்தியடித்தது. அவர்கள் வேலை இழந்தார்கள்; கடனால் அவதிப்பட்டார்கள்; சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி திரைக்கதாசிரியராக இருந்த ட்ரம்போ, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் (கம்யூனிஸ்டுகள் ரஷ்ய உளவாளி என்கிற பிரச்சாரத்தை அமெரிக்கா முன்னெடுத்தது) என்ற காரணத்தால், எவ்வித அரசு விரோத நடவடிக்கைகளிலும் இறங்காதபோதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சினிமா மூலம் தங்களுடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகளுக்கு சினிமாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனைக்குப் பிறகு, தன்னுடைய வசதியான பண்ணை வீட்டில் விற்றுவிட்டு, நகரத்துக்குள் குடும்பத்துடன் குடியேறுகிறார் ட்ரம்போ. தன்னுடைய குடும்பம் எவ்விதத்திலும் துன்பங்களை அனுபவிக்க அவர் விரும்பவில்லை. முதல் நிலையில் இருந்த அவர், மூன்றாம் தரமான படங்களுக்கு திரைக்கதை எழுதுகிறார் சொற்ப சம்பளத்துக்காக. ஹாலிவுட்டில் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் புனைப் பெயர்களில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் எழுதி குவிக்கிறார். அவர் புனைப் பெயரில் எழுதிய திரைக்கதைகளுக்கான 2 ஆஸ்கர் விருதுகளும் கிடைக்கின்றன. ட்ரம்போவிடம் பேசுவதைக்கூட அவமானமாக கருதி அவரை உதாசீனப்படுத்திய பலர், அவர் புனைப்பெயரில் எழுதிய திரைக்கதைகள் வெற்றியடைவதை மோப்பம்பிடித்து தங்களுடைய படத்துக்கும் திரைக்கதை எழுதித்தரும்படி கெஞ்சுகிறார்கள், ஆனால் புனைப்பெயரில்தான் எழுத வேண்டும் என்ற நிபந்தனையுடன். காலம் மெல்லச் சுழலுகிறது. எந்தவித குற்றமும் இழைக்காத ட்ரம்போவுக்கும் அவரைப் போன்ற கம்யூனிஸ்டுகளுக்கும் தண்டனை தந்த ஹாலிவுட்டுக்கு தன்னுடைய வெற்றியின் மூலம் பதிலடி தருகிறார் ட்ரம்போ. அவருடைய திறமையை உணர்ந்த இயக்குநர்கள் நடிகர்கள் அவருடைய பெயரை திரையில் போடுகிறார்கள். ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதைகளை எழுதியது தான் தான் என ட்ரம்போ பகிரங்கப்படுத்துகிறார். காலம் தாழ்ந்து ஆஸ்கர் விருதுகள் அவரைத் தேடி வருகின்றன. தங்களுடைய தடைக்கு எதிராக சட்டரீதியாக போராடுவதைக் காட்டிலும் தன்னுடைய திறமையால் போராடுவதை நியாயப்படுத்துகிறார் ட்ரம்போ. திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட ஒருவனின் போராட்டம்-வெற்றி என்பது மட்டுமல்ல இந்தப்படம்.
ட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொறுத்திப் பார்க்க முடிந்தது என தொடக்கத்தில் சொல்லியிருந்தேன். ட்ரம்போ போல நான் கம்யூனிஸ்ட் அல்ல; கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளலாம். எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் கலந்துகொண்டதில்லை. அவரைப் போல புகழ்பெற்ற நிலையில் எல்லாம் இருந்ததில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் வெகுஜென இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த பெண்களில் எனக்கொரு தனித்த அடையாளம் இருந்தது. குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரைகளுக்காக என்னை பணியாற்ற அழைத்த ஆனந்தவிகடன் என்னை எட்டு மாதங்களில் வெளியே அனுப்பியது. வெளியேற்றுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்புவரைகூட என்னுடைய கட்டுரை கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. தலைமை பதவியில் இருந்தவர்களின் ஈகோவில் நான் பலியானேன். நான் வேலையே செய்வதில்லை என என்னை ஒதுக்கினார்கள். நான் ஒதுங்கிவிட்டேன்.
அடுத்தது, சன் நியூஸில் வேலை. செய்தி பிரிவில் உதவி ஆசிரியராக என்னை பணிக்குச் சேர்த்துக்கொண்டார்கள். செய்தி பிரிவின் ஆசிரியர் என்னை சும்மாவே உட்கார வைத்திருப்பார். எனக்கு ஜுனியராக இருந்த பெண்கள், அதிக சம்பளத்துடன் அங்கே சிறப்பு நிருபர்களாக இருந்தார்கள். சும்மா இருக்கப் பிடிக்காமல் அவர்களுக்கு ஐடியாவும் கொடுத்து ஸ்கிரிப்டும் எழுதிக்கொடுப்பேன். அதை செய்தி பிரிவின் ஆசிரியர் தன்னுடைய கேபினில் அமர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பார். சிறப்பு நிருபர் ஒப்புதலுக்காக எடுத்துச் செல்லப்படும் அந்த ஸ்கிரிப்ட் உடனே ஓகே செய்யப்படும், சிறப்பு செய்தியாகவும் வந்துவிடும். ஆனால், எனக்கு எந்த வேலையும் தரமாட்டார். உலகச் செய்தி எழுதும் பணிகூட கிடைக்காது. தானாக முன்வந்து எழுதினாலும் படித்து பார்த்துவிட்டு, ஓரமாக வைத்துவிடுவார். மூன்று மாதங்கள் சம்பளமே வாங்காமல் அலுவலகம் வந்து போனேன். அப்போது ஸ்கராலிங் நியூஸ் எழுதிக்கொண்டிருந்தவர் போய்விட்டதால், என்னை அங்கு போட்டார். அது ஒரு தண்டனைக்குரிய பணி, நியூஸ் ரூமில் இருப்பதிலேயே மதிப்பற்ற பணி என்றுதான் அங்கே இருப்பவர்கள் பார்ப்பார்கள். சிறு தவறுகளுக்காகக்கூட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவார் அந்த ஆசிரியர். ஆ.வியிலிருந்து வந்த பிறகு, நீண்ட நாட்கள் கழித்து நான் எழுதிய கட்டுரை பெயர் இல்லாமல் கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதே நேரத்தில் நியூஸ் ரூமில் இருந்தவர்கள் , செய்தி ஆசிரியர் என்னை எழுதத் தெரியவில்லை என கேலி பேசியபோது சிரித்தார்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத தருணம் அது. செய்தி ஆசிரியர் ஏன் என்னிடம் அப்படி நடந்துகொண்டார்? என்னிடம் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல பெண்களின் கனவுகளை சிதறடிப்பதுதான் அவருக்கு முழு நேர வேலையே! என்னுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிஜம் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் எழுதும் பணி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு. எழுதத் தெரியாது என்று சொன்ன ஆசிரியர் சிறப்பாக எழுதியிருப்பதாக எல்லோர் முன்னிலையிலும் சொன்னார். என்னைப் பார்த்து சிரித்தவர்களும் ஒப்புக்கொண்டார்கள். சிறப்பாக எழுதினாலும் 5 எபிசோட் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. அதன் பிறகு வழக்கம்போல ஸ்க்ராலிங். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக சிதைந்தது.
வாழ்க்கைச் சூழலில் மீண்டும் உதவி ஆசிரியராக குமுதம் சிநேகிதியில் பணி. அரசியல்-சமூகம்-இலக்கியம் எழுதத் தெரிந்திருக்கலாம்; ஆனால் சமையல் குறிப்பு எழுதுவதே உங்களுக்கு வாய்க்கும். சமையல் குறிப்பு எழுதுவதை நான் கீழ்மையாகப் பார்க்கவில்லை. தமிழ் பத்திரிகை உலகம் அப்படித்தான் பார்க்கிறது. சமூகம் ஒன்றை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்ததான், ஒன்றுக்கு பெருமையும் சிறுமையும் சேர்கிறது. மூன்று வருடங்கள் அந்த பணியில் கடுமையாக உழைத்த பின்னும், ஊழியராகக்கூட அங்கீகரிக்கவில்லை அந்நிறுவனம். என்னிலும் மூன்று வருடங்கள் சீனியராக பணியாற்றிய ஊழியருக்கும் அதே நிலைதான். 10 நிமிடங்கள் தாமதமாக பணிக்கு வந்தாலும் முழுநாள் சம்பளம் பிடித்தம் செய்வார்கள். அலுவலக நேரம் முடிந்த பிறகு பணியாற்றுவதெல்லாம் அவர்களுடைய கணக்கில் வராது. இரண்டு மூன்று ஊழியராக்குவது குறித்து பேசியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்ற நிலையில் வெளியேறினேன்.
வெளியேறிய நேரத்தில் மிகப்பெரும் கடன்சுமை இருந்தது. அம்மாவின் உழைப்பில் உருவான வீடு கடனில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருந்தது. தி இந்து தமிழ் ஆரம்பிக்க இருந்த நேரம், நானும் விண்ணப்பித்திருந்தேன். இரண்டு கட்ட தேர்வுக்குப் பிறகும் எனக்கு பணி கிடைக்கவில்லை. விசாரித்தபோது காரணம் என்ன என்பது நடுப்பக்க ஆசிரியருக்குத்தான் தெரியும் என்றார்கள். எனக்குத் தெரிந்தவரையில் அவர் வழியாக விண்ணப்பிக்காமல், வேறொருவர் மூலமாக விண்ணபித்ததுதான் நான் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கும். என்னுடைய எழுத்தும் காரணமாக இருக்கலாம். கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்று காத்திருந்த நேரத்தில் உங்களுக்கு அந்த வேலை கிடைக்காது, வேற பாருங்க என்ற பதில் வந்தால் இடிந்துபோய் உட்காருவோம். தலையில் கை வைத்து அமர்ந்தேன். நான் செய்த தவறுதான் என்ன?
அந்த நேரத்தில் அவள் விகடனுக்கு ஆட்கள் தேவை என்றார்கள். ஆசிரியரிடம் பேசினேன். நீங்கள் ஏற்கனவே பிரச்னை செய்துவிட்டு போனீர்கள் இல்லையா? (நான் எந்த பிரச்னையும் செய்யவில்லை. என்னை நீக்க முடிவு செய்திருந்தார்கள். அதை அறிந்து நானே விலகிவிட்டேன்) அந்த ஆசிரியரிடம் பேசுங்கள் என்றார். அந்த ஆசிரியரிடம் பேச முயற்சி செய்தேன். அவரை பேச விரும்பவில்லை போலும். அங்கே இருந்த நண்பர்களும்கூட உங்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பில்லை என்று விட்டார்கள். எப்படி கடனை அடைப்பேன்? இனி, நான் என்ன செய்வேன்? இரண்டு நாட்கள்தான் என்னுடைய துக்கம். மூன்றாவது நாள் நான் வாழத் தயாராகிவிட்டேன்.
எனக்கு எழுதத் தெரியவில்லையா? யாரிடமாவது காசு வாங்கி எழுதி மாட்டிக்கொண்டேனா? தனிப்பட்ட ‘ஒழுக்க’ பிரச்னைகளில் மாட்டிக்கொண்டேனா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் என்னை பிளாக்லிஸ்ட் செய்தார்கள்; செய்கிறார்கள்? நிச்சயம் இந்த நிறுவனங்களில் மீண்டும் நான் பணியாற்றப் போவதில்லை. இருந்தபோதும், அவர்கள் ஏன் என்னை ஒதுக்குகிறார்கள்?
இவர்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு தோற்றுப்போன பத்திரிகையாளர். பெண்கள் இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் என்னை அந்தப் பணிக்கு அழைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் இரண்டாம் பட்சமான நிலையிலோ, ஆகக்குறைந்த சம்பளத்துக்கோ அழைப்பார்கள். எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்று தெரிந்திருந்தும் கட்டுரை எழுதவோ, பத்தி எழுதவோ அழைக்க மாட்டார்கள்… அப்படியே வாய்ப்பு தந்தாலும் பெயர் போடுவதில் சீனியாரிட்டியை பின்பற்ற மாற்றார்கள், ஐந்து பக்கம் எழுதியிருந்தாலும் ஒரு பக்கம் எழுதியவரின் பெயருக்கும் பின்னால் போடுவார்கள். ஆமாம், இதெல்லாமும் இக்னோர் செய்வதுதான்.
கோஸ்ட் ரைட்டிங் போல, பிழைப்புக்காக நான் இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய தேவைகளை சுருக்கிக் கொள்கிறேன். என்னை ஏளனமாகப் பார்க்கிறவர்களை, பார்க்காதமாதிரி கடந்து போகிறேன். என்னுடைய மாத வருமானம் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம். இறக்கமுள்ளவர்கள் எனக்குப் பணி தருகிறார்கள். எழுதுவதன் மீதான காதலில் ஒரு இணையதளத்தை நடத்துகிறேன். ஒரு இதழ் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். ஆஸ்கர் விருது கிடைக்குமா? புக்கர் கிடைக்குமா? என்பதெல்லாம் இருக்கட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதே இங்கே மிகப்பெரிய எதிர் போராட்டம்தான். ட்ரம்போவைப் பார்த்தபிறகு, நான் உணர்ந்தது இது.
பணிபுரிய திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள் வேண்டும் என்றுகூட சொல்வார்கள்!
திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள்தான் முழுமூச்சில் உழைப்பார்கள் என்று மூடக் கருத்து ஊடக நிறுவனங்களிலும் இருக்கிறது. நான் என்னைடைய பிரசவத்துக்கு ஒரு வாரம் முன்பு வரைக்கும்கூட பணியாற்றினேன். நிறைவாகவே பணி செய்தேன். ஏற்கனவே அந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவள், இடைவெளிக்குப் பிறகு ஒன்பது மாதங்கள் நிறைவாகவே உழைத்தேன். பணிக்கு இடையூறு வந்துவிடுமோ என்று ஐந்து மாதங்கள் என் கர்ப்பத்தை மறைத்தேன். தீபாவளி நாட்களில் இதழ் பணிகளில், கடும் பசியுடன் இரவு எட்டு, எட்டரை வரைக்கும் பணியாற்றினேன்.
பிரசவத்துக்குப் பிறகு, மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று மட்டும் சொன்னார்கள். ஒரு மாதச் சம்பளம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் மீண்டும் ஐந்து மாதம் கழித்து அந்த நிறுவனத்திலே சேர்ந்தேன். இரண்டு வருடங்கள் மேலும் உழைத்தேன். பணி நியமனம் கேட்டு பல முறைப் போராடினேன். தரவில்லை. எனக்கு ஊடக வாய்ப்பளித்தவர், என்னை ஊக்குவித்தவர், என்னுடைய ஆசிரியருக்கு பணியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிக் கொள்ளக்கூட விரும்பவில்லை. விலகிவிட்டேன்.
குழந்தை இருப்பதை நம்முடைய பணித்திறனை பாதிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். நம்முடைய திறமையும் அர்ப்பணிப்பும் எப்போதும் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ராதிகா அப்தே நடித்திருக்கும் மைந்தரா விளம்பரம், என்னை எனக்கு நினைவு படுத்துகிறது. விளம்பரத்தில் ராதிகாவின் கதாபாத்திரம் பிரமாண்டமான அலுவலகம் அமைத்து புதிய தொழில் தொடங்கும் அளவுக்கு எனக்கு பொருளாதார வசதி இல்லையெனினும் என்னுடைய சுயமுயற்சிகள் குறித்து எப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.
வெள்ளம் விட்டுச் சென்ற துயரம் எல்லோருக்குமானது
வெள்ளம் சூழ்ந்த வசிப்பிடம், கையில் பொருளில்லை, சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, தொலைத் தொடர்புகள் இல்லை…மழை விட்டுச் சென்ற அசாதாரண சூழ்நிலை, வாழ்வின் துயரங்களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டது. ஆனால் நம்மின் நிலைமை மேல் என்பதே நேரில் கண்ட வெள்ளத் துயரங்கள் உணர்த்தின.
அலுவலகம் செல்லலாம் என்று கடந்த வியாழன் அன்று மகனுடன் தி.நகர் புறப்பட்டேன். பேருந்து நடத்துனர் டிக்கெட் தரும்போதே வள்ளுவர் கோட்டம் வரைதான் பேருந்து செல்லும், அதற்கு மேல் செல்லாது எனச் சொல்லி விட்டார். வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது; சரி அங்கிருந்து ஆட்டோவில் அலுவலகம் சென்று விடலாம் எனக் கிளம்பினோம். மழை தூறல் ஆரம்பித்தது.
அண்ணாநகர் சாந்தி காலனியை அடுத்த பிரிவரி சாலையை ஒட்டி ஓடும் கூவம் ஆறு பாலத்தைத் தொட்டு ஓடியது. பிரிவரி சாலை முழுவதும் மூழ்கியிருந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த குடிசைகளின் கூரைகள் மட்டுமே தெரிந்தன. இருப்பிடங்களை விட்டு வெளிறிய மக்கள் சாலைகளில் அகதிகளாக குவிந்திருந்தனர். ஒரு சிறுவன் தெருவில் தேங்கிய வெள்ளத்தில் நீந்தி வந்துக்கொண்டிருந்தான்.
அண்ணா வளைவு சாலையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் வீடுகளை விட்டு வெளியேறிய அமைந்தகரை மக்கள் நிரம்பியிருந்தனர். சூளைமேட்டை தொட்டுச் செல்லும் கூவம் ஆறு ஆக்ரோஷமாகப் பாய்ந்துக் கொண்டிருந்தது பயத்தைக் கொடுத்தது.
சிறு வயதில் குட்டை நீரைக் கண்டால்கூட அலறுவேன். கிருஷ்கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மழைக்காலத்தில் ஏரிகள் பெருக்கெடுத்து ஓடும். எங்கும் வெள்ளம் புரண்டுகொண்டிருக்கும். ஏரிக்கரைகளில் அமைக்கப்பட்ட சாலைகளை பேருந்து கடக்கும்போது நான் கண்களை மூடிக் கொள்வேன். இப்போது தேவலாம்.
கரையைத் தொட்டு ஓடிய கூவம் ஆறு என்னுடைய சிறு வயது பயத்தைக் கிளறிவிட்டது. சூளைமேட்டின் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ரயில்வே பாலத்தை ஒட்டியிருந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நல்ல உள்ளத்துடன் அவர்களுக்கு சிலர் உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.
பேருந்து வள்ளூவர் கோட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டிருந்தார். நடத்துனர் தி. நகர் முழுதும் வெள்ளம் என்றார். என் மகனை இருகப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப முடிவு செய்தேன்.
சென்னைக்கு மிக அருகில் ஃபிளாட் வாங்கணுமா?
பள்ளிக்கரணையைச் சுற்றிலும் 31 இயற்கை நீர்த் தொட்டிகள் அமைந்துள்ளன. ஏரிகளாகவும் கால்வாய்களாகவும் உள்ள இந்த நீர்த்தொட்டிகளை சீரமைத்து பாதுகாத்தாலே மழைக் காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்குள் சென்று கலப்பதை தடுத்து சேமிக்கலாம். பள்ளிக்கரணைக்கு நீர் வரத்தைத் தரும் வேளச்சேரி ஏரி தற்போது ஆக்கிரப்புகளாலும் பராமரிப்பின்மையாலும் பாழடைந்து வருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சில கட்டடங்கள் இதோ…
* போக்குவரத்துக் கழக பணிமனை 92 ஹெக்டேர் பரப்பளவில்
* ஃபெப்ஸி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு சொந்தமான இடம் 34 ஹெகடேரில்
* லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் டிரஸ்டுக்கு சொந்தமான நிலம் 5 ஹெக்டேரில்
* தமிழ்நாடு வேளாண் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான இடம் 12 ஹெக்டேரில்
* டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 8 ஹெக்டேரில்
* சட்ட கல்வியகம் 6 ஹெக்டேரில்
* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பிரிக்கும் சாலை 13 ஹெக்டேரில்
* சட்டப்படி வழங்கப்பட்ட பட்டாக்கள் 2 ஹெக்டேர்
* ஐஐடி, சென்னை 17 ஹெக்டேரில்
* முன்னாள் ராணுவ பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் 61 ஹெக்டேர்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி, 20 ஹெக்டேர்
சென்னை பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இவை. இதில் பெரும்பாலானவை அரசு நிறுவனங்கள் என்பது முக்கியமானது. மெத்தப்படித்த அதிகாரிகளே தொலைநோக்குச் சிந்தனை சிறிதும் இல்லாமல் வடிகால் நிலத்தை ஆக்கிரமிப்பை அனுமதித்ததன் விளைவை ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் அனுபவிக்கிறார்கள்.
அதுபோல, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, வேளச்சேரி-பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலத்தை ஆக்கிரமித்து விற்றன.
சென்னை புறநகர் பகுதிகளும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு 15 ஆண்டுகளில் கட்டிடங்களால் நிரம்பின. வாங்கும் வசதி படைத்தவர்கள் 2, 3 ஃபிளாட்டுகளை வாங்கினார்கள். இப்படி வாங்கப்பட்ட ஃபிளாட்டுகள் பலவை இன்னும் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராதவை. தாம்பரம் பகுதியில் ஏரிக்கு நடுவே, சுற்றியும் நீர் சூழ கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளை எப்போதும் காண முடியும். இப்போது அவற்றின் நிலைமை என்னவானதோ?
கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு கழிமுகப்பகுதியில் நீரின் கரையை ஒட்டி வானுயர்ந்த கட்டடங்கள் முட்டி நிற்கின்றன. வெயில் கொளுத்தும் சென்னைக்கு நீர் நிலையை ஒட்டி வீடிருந்தால் நன்றாக இருக்குமே என்கிற அழகான கற்பனையில் இந்த குடியிருப்புகள் உருவாகியிருக்கும். இந்த அழகான கற்பனை, கற்பனையாக இருப்பதே நல்லது! இந்த பெருவெள்ளத்தில் அந்தக் கட்டடங்களில் பாதி மூழ்கியிருக்கும். சுனாமி வந்தால் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகும்.