என்னை புகைப்படம் எடுத்த சிறந்த ஃபோட்டோகிராபர்…

சிலர் நேரில் பார்ப்பதைவிட படங்களில் நேர்த்தியாகத் தெரிவார்கள். இயற்கையாக அவர்களுக்கு அத்தகைய முகவடிவம் இருக்கும்.  இவர்களை படம் எடுக்க கைதேர்ந்த கலைஞர்கள் தேவையில்லை. யார் படம் எடுத்தாலும் அந்தப் படங்களில் இவர்கள் நேர்த்தியாகத் தெரிவார்கள். எனக்கு அப்படியான முகவடிவம் கிடையாது.  ஒளிப்படங்களில் மிகவும் தட்டையாகத் தெரிவேன்.

கோசிகன் (நான் எடுத்த ஒளிப்படம்)

கோசிகன் (நான் எடுத்த ஒளிப்படம்)

என்னை தட்டையாக அல்லாமல் ஓரளவு நேர்த்தியாக படம் எடுத்தது என் மகன் கோசிகன்தான். ஒன்றை ரசனையோடு அணுகும்போதுதான் அது நேர்த்தியாக வரும்.  அவன் என்னை மட்டுமல்ல, பார்க்கும் எல்லாவற்றையும் ரசனையோடு அணுக முயற்சிக்கிறான் என்று எண்ணுகிறேன்.

ஒளிப்பட தொகுப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது கோசிகன் எடுத்த இந்தப்படம் கிடைத்தது. அது குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நன்றி!

கோசிகன் எடுத்த படம்

கோசிகன் எடுத்த படம்

சென்னையின் பெருமழையில் ஒரு பயணம்

CUgc0EpWUAAWjAk

நுங்கம்பாக்கத்தில் தேங்கிய நீரில் நீந்திச் செல்லும் பேருந்து

சென்னை மக்கள் திங்கள்கிழமை(23-11-2015) இரவை ஆயுசு முழுக்கவும் நினைவில் வைத்துக் கொள்வார். அப்படியொரு அனுபவம்; கொட்டித்தீர்த்த பெருமழையும் நகர முடியாமல் திணறிய வாகனங்களும் திங்கள் இரவை பேரிடர் நேர அனுபவமாக்கிவிட்டன.  அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் போய் சேர்ந்துவிடக்கூடிய தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நான்கரை மணி நேரத்தில் போய் சேர்ந்தேன்.

விடாது துரத்திய மழையும், வழி நெடுக மக்கள் பட்ட பாடுகளும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நிறைந்துவிட்டன.  குறிப்பாக பெண்களின் அவஸ்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அதிகாலை 1 மணிக்கு, 4 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்த பெண்களின் அனுபவங்களைக் கேட்டபோது அவர்கள் மேல் அனுதாபம் கூடியது.

எனக்கிருந்த ஒரே பிரச்சினை என் மகன் பசியோடு காத்திருந்தான் என்பதுதான். ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் அவனைத் தொடர்பு கொண்டு ‘இதோ வந்துவிட்டேன்’ என சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ‘நீ போம்மா அப்படித்தான் சொல்லுவ’ என்று சலித்துக்கொண்டு இணைப்பைத் துண்டிப்பான்.

பசிக்கிறதே என்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை பிரிக்கப் பார்த்து அதை பிரிக்கத் தெரியவில்லை என்றான். மனம் வலித்தது.  நல்லவேளையாக உணவகத்தில் தோசை கிடைத்தது. இருவரும் சேர்ந்து உண்டபோது மணி 11 ஆகியிருந்தது.

என் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இரவு 1 மணி, 4 மணிக்கெல்லாம் வீடு போய் சேர்ந்தவர்களின் குழந்தைகள் எப்படி உண்டிருப்பார்கள்?  பெண் தான் வீட்டுக்கு வந்து சமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்கிற நிலை இந்தக் காலத்திலும் நீடிப்பது சரிதானா? ஆண்கள் எப்போது தங்கள் வீட்டுப் பெண்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்?

பெருமழையும் திங்கள்கிழமை இரவின் அசாதாரண பயணச் சூழலும் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்விகளை  மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன!

தமிழ்மணம் விரும்பினால் என் வலைத்தளத்தை நீக்கிக் கொள்ளலாம்!

என்னுடைய கட்டுரைகள் என் வலைப்பதிவு வாசகர் படிக்க வேண்டும் என்பதற்காகவே என்னுடைய தளத்தில் இணைப்புத் தருகிறேன். தமிழ்மணத்தில் நான் என் வலைப்பதிவை  இணைத்திருந்தேன். இப்போது அது தானாகவே நான் எழுதும் பதிவுகளைத் திரட்டிக் கொள்கிறது.  நான் இப்போது.காமுக்கு மார்க்கெட்டிங் செய்வதாக சிலர் பின்னூட்டமிடுகிறார்கள். ஒருவேளை தமிழ்மணமும் இதே நிலைப்பாடு எடுத்தால் அதை நான் ஆட்சேபிக்கப்போவதுமில்லை.

எழுதுவதே வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதற்குத்தான். அதுவும் இந்தியா தற்போது எதிர்கொண்டுவரும் அசாதாரண சூழலில் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து எழுதும்போது ஏதோ ஒருவகையில் குற்றம் கண்டுபிடித்து நம்மை தாக்குகிறவர்கள் வரத்தான் செய்வார்கள். அதற்காகவெல்லாம் நான் பயந்து ஒதுங்கப்போவதில்லை. தமிழ்மணத்தில் இருந்து நீக்க முடியும். அல்லது என்னுடைய வலைதளத்தை முடக்க முடியும். என்னை வந்தேறி, வடுகர் எனச் சொல்ல முடியும். அல்லது உங்களால் எல்லாமேகூட செய்ய முடியும். ஆனால் என்னால் எழுத மட்டுமே முடியும். நிச்சயம் நான் அதை ஒருபோதும் நிறுத்தப் போவதுமில்லை.

நன்றி நண்பர்களே…

நெகிழவைத்த தந்தை

refugee story

இந்தப் படம் செவ்வாய்கிழமை பகிரப்பட்டு இணையத்தில் வைரலான படம். இந்தப் படத்தை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் கண்களில் கசியத் தொடங்குகின்றன. அப்பா என்பவர் வெறுமனே இனிஷியல் தருபவர் என்கிற நிலையிலே பார்த்து வளர்ந்த என் உளவியல் காரணமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.  இந்தப் படத்தில் இருக்கும் சிரிய அகதியான அப்துலின் தாய்மையை என்னால் உணர முடிகிறது. என்னை மட்டுமல்ல,  அகதிகளை கரப்பான்பூச்சிகளாகப் பார்க்கும் மேற்கத்தியர்களின் இதயத்திலும் இது ஈரத்தை கசிய வைத்திருக்கிறது. பின்னணியை இப்போது. காமில் எழுதியிருக்கிறேன்.