பாடகர் கோவனின் கைதும் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளும்

ஓய்ந்திருந்த மதுவிலக்குப் போராட்டத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறது தமிழக அரசு. மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டிருந்த பாடகர் கோவன் கைதுக்குக் காரணமாக இருந்த “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன் யூட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டவை.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் இசைப் பாடகர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு காவல்துறை அவருக்கு உடைக்கூட மாற்றிக்கொள்ள நேரம் தராமல் கைது செய்திருக்கிறது. அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 ஏ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல் துறை சொல்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அது சார்ந்த அமைப்புகளும் இந்தப் பாடல்களை தெருமுனைக் கூட்டங்களில் பாடி வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எடுக்கப்படாத கைது நடவடிக்கை இப்போது ஏன் எடுக்கப்பட்டுள்ளது என்கிற கேள்வி எழுகிறது. அதோடு மக்கள் திரளில் பாடும் ஒரு பாடகரை தலைமறைவுக் குற்றவாளியைக் கைது செய்வதுபோல அதிகாலை கைதை அரங்கேற்றுவதன் அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வியும் வருகிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அது சார்ந்த அமைப்புகளும் கட்சி அரசியலை, இந்திய ஜனநாயக அமைப்பின் மீது கடுமையான விமர்சன நிலைப்பாட்டை உடையவை. பிரச்சாரங்கள், மக்களை சென்றடையும் கலை வடிவங்கள் மூலம் தங்களுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு அவை கொண்டு செல்கின்றன.

இந்நிலையில் இந்த அமைப்புகள் கடந்த காலத்தில் கடுமையாக விமர்சித்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போது கோவனின் கைது நடவடிக்கையைக் கண்டித்திருக்கின்றன.

கோவனின் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் திங்கள்கிழமை சென்னை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அதிமுக ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்த பாடகர் கோவனின் கைது, ஜனநாயக விரோதச் செயல் என்று கண்டித்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவன் பாடிய “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்களிடத்தில் வரவேற்பு பெற்று விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியதை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டையும், பிரிவினைவாத குற்றச்சாட்டையும் கூறி கைது செய்திருப்பதாக விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக்கூட்டு இயக்கமும் கோவனின் கைதைக் கண்டித்திருக்கிறது. வைகோ ஒரு படி மேலே போய், கோவனின் பாடலைப் பாடிக் காண்பித்து முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என அறைகூவல் விடுத்திருக்கிறார்.

கோவன் கைது விவகாரத்தில், முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்த கோவன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், தமிழக காவல்துறையின் இந்த செயல் நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ், சீமான் ஆகியோரும் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்எதிர் நிலைப்பாடுகளுடன் விமர்சிக்கப்பட்ட பாஜககூட கோவனின் கைதை கண்டித்திருக்கிறது என்பதற்கான காரணம் மதுவிலக்குக்கு எதிராக கோவன் பாடல்களைப் பாடினார் என்பதே! அடித்தட்டு மக்களுக்கு டாஸ்மாக் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதைக் கண்டறிந்து, தொடர் பிரச்சாரமாக டாஸ்மாக்கை மூட வலியுறுத்திவரும் மகஇக போன்ற மக்கள் இயக்கங்களின் உழைப்பை, வெட்கமே இல்லாமல் தேர்தலில் அறுவடை செய்யும் யுத்திதான் இந்த ‘ஆதரவு’நிலைப்பாடு.

இவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டாலும் இதே காவல்துறை இதுபோன்ற அடக்குமுறை கைதுகளைச் செய்யும் என்பதை நாம் நினைவில் வைக்கத்தான் வேண்டும். அதிமுக அரசின் கைது நடவடிக்கை எந்தளவுக்கு கண்டிக்கத்தக்கதோ, அதே அளவுக்கு கோவனின் கைதில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளின் செயல்களும் கண்டிக்கத்தக்கவை.

சாதிக் கட்சித் தலைவர் யுவராஜ், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவருக்கும் சவால்விட்டபடி, நூறு நாட்களுக்கும் மேல் இளைய வீரப்பனாக வலம் வந்தார் அவரை ஸ்காட்லாண்ட் யார்டுக்கு நிகரான காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. அவராக வந்து சரணடைந்தார். அவர் பேசிய பேச்சும், அவர் சரணடைவதற்கும் முன் நடத்தப்பட்ட நாடகமும் சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்தும் பிரிவின் கீழ் வருமா வராதா?

பெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்…

பகுதி-1

Nawal El Saadawiருவரின் ஒழுக்க மீறலை அல்லது ஒழுக்க சீலத்தை சுட்டும்போது, அவர் சார்ந்துள்ள மதத்தோடு பொறுத்தி பேசுவது இயல்பான விஷயமாக இங்கே இருக்கிறது. ‘இஸ்லாமியதீவிரவாதி என்ற சொல்லாடலும் பார்ப்பான் உயர்ந்தவன்என்கிற எண்ணமும் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். உயர்ந்த நல்லோழுக்கங்களையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் இன்னபிற நல்லனவற்றையும் வலியுறுத்துவதாக சொல்லப்படும் அனைத்து மதங்களைச் சேர்ந்த தீவிர பற்றாளர்களும்கூட அடிப்படையில் மனிதர்களே! மதங்களால் புனிதர்களாகப்படும் எல்லோருக்குமே புனிதத்திற்கு எதிரிடையான பக்கமும் இருக்கிறது என்பதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்துவருகிறோம். மதத்தால் புனிதராக்கப்பட்டவருக்குள் எப்படி சராசரியான மனித இயல்புகள் இருக்கிறதோ, அதுபோலவே இஸ்லாம், கிறித்துவம், இந்து என உலக மதங்கள் அத்தனையிலும் பெண் ஒடுக்குதலும் அவள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதும் இருக்கிறது.

கருணையும் குரூரமும் மனித இயல்பானால், பெண் மீதான ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கச் சிந்தனை, இச்சமூகத்திற்கு இயல்பென செயற்கையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் கொடை. அது வழிவழியாக இச்சமூகத்ததில் பெண் ஒடுக்கப்பட வேண்டியவள் என்பதை ஆணுக்கும் ஒடுக்கப்பட பிறந்தவர்கள் என்பதை பெண்ணுக்கும் போதிக்கிறது. இந்தியாவில், ஈரானில், அமெரிக்காவில் எங்கு பிறந்தாலும் காலச்சாரங்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலும் பெண், ஒடுக்குதலுக்கு ஆளாக வேண்டியவள் தான்! இது குறித்து பெண்ணிய சிந்தனையோடு கூடிய ஆய்வுகளும் கட்டுரைகளும் இலக்கிய பதிவுகளும் உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எகிப்து பெண்ணிய எழுத்தாளரான நவ்வல் எல் சதாவியின் எழுத்துகளை மதிப்பு மிக்க ஆவணங்களாக கருத முடியும்.

நீண்ட மாதங்களுக்கு முன் ஒரு இலக்கிய பத்திரிகையில் நவ்வல் எல் சதாவி குறித்த கட்டுரையை வாசித்தபோது, அவர் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டானது. நவ்வல் எல் சதாவி குறித்த மேலதிக விவரங்களை அவருடைய இணைய தளத்தில் படித்து அறிந்தேன். சில கட்டுரைகளையும் அங்கே படிக்க முடிந்தது. கட்டுரை, சிறுகதை, நாவல் என பன்முகத் தன்மையோடு ஏராளமாக எழுதியிருக்கும் அவருடைய எழுத்துகளைப் படிக்க ஆர்வம் மேலிட்டது. குறிப்பாக
Women at point zero

நாவலை படிக்க விரும்பினேன்
. புத்தகக் கடைகளில் விசாரித்தபோது அப்போதைக்கு இருப்பில் இல்லை என்று கூறி, வேண்டுமானால் தருவித்து தருவதாக பதில் வந்தது. அழைப்பு எண்ணை தந்துவிட்டு வந்த நேரம், எண்ணையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. நேரில் சென்றும் விசாரிக்கவில்லை. அதோடு வேறுவேறு வேலைகளில் கவனம் கொள்ள எதேச்சையாக தி.நகர் புக் லேண்டில் Women at point zero-ன் தமிழ் பெயர்ப்பாக சூன்யப் புள்ளியில் பெண்நாவலை புத்தகமாகப் பார்த்தேன். ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரே மூச்சில் படித்திருக்க முடியுமா என்று தெரியாது. தமிழில் கிடைத்ததால் விரைந்து முடித்தேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு இது. மூல மொழியில் படிக்காததால் மொழிபெயர்ப்பு குறித்து பேசுவது சரியாக இருக்காது.

1974 ல் நவ்வல் எல் சதாவி அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கு சந்தித்த ஃபிர்தவுஸ் என்ற பெண்ணின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. நாவல் குறித்து பேசுவதற்கு முன் நவ்வல் எல் சதாவி குறித்து சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன். நவ்வல் எல் சதாவியின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். கல்வி அமைச்சகத்தில் பணியாற்றியவர். பெண் இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுவதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கும் அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார் நவ்வால். தன் சகோதரனைவிட தான் படிப்பிலும் இன்னபிற விஷயங்களிலும் முதன்மையானவராக இருந்தபோதும் சகோதரனுக்கு தன் குடும்பத்தினரிடம் கிடைக்கும் சலுகையும் அன்பும் (இந்த விஷயம் நம்முடைய குடும்பங்களுக்கு இப்போதும் பொருந்திப்போவதை கவனிக்க) இவருக்கு கிடைப்பதில்லை. அடிப்படையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக பிரச்சினைகளை நவ்வால் எதிர்கொண்டபோதிலும் உளவியல் மருத்துவம் படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

உளவியல் மருத்துவராக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்திக்கும்போது அவருக்குள் பெண்ணிய சிந்தனை கிளர்ந்து எழுந்துள்ளது, எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு நோக்கில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் மத அடிப்படைவாதத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசுகளை விமர்சிப்பதாகவும் இருந்த காரணத்தினால் அரசியல் கைதியாக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எழுதவதற்கு மறுக்கப்படுகிறது. கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் அடிப்படைவாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் தொடர்ந்துகொண்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நவ்வால். அவருடைய எழுத்துப் பயணம் சற்றே அசுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.