தத்தளிக்கும் காங்கிரசை கரை சேர்ப்பது யார்?

கடந்த ஒருவாரமாக மகாராஷ்டிரத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த அரசியல் த்ரில்லர் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், தாராளவாத ஜனநாயகவாதிகளின் வாழ்த்துக்களை பெற்றுவருகிறது சிவ சேனா என்னும் பாசிச மதவாத, பிரிவினை வாத கட்சி. ஜனநாயகத்தின் யாரும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்கிற ஃபார்முலா படி, சரத் பவார்தான் இந்த அரசியல் த்ரில்லரின் இயக்குநர் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எனில், காங்கிரசின் இடம் என்னவாக உள்ளது என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. சிவ சேனாவுக்கு ஆதரவா இல்லையா என்கிற முடிவெடுக்கவோ துணிந்து களத்தில் இறங்கவோ காங்கிரஸ் மேலிடம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போன நிலையில் பாஜக முந்திக்கொண்டு ஆட்சியமைக்க முயன்றது.

மாலுமி இல்லாத கப்பலைப் போல காங்கிரஸ் இந்திய அரசியல் களத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையே மகாராஷ்டிரத்தில் நடந்தவை சுட்டிக்காட்டுகின்றன. பொது நோக்கத்துக்காக இயங்கும் ஒரு அமைப்புக்கு தலைவர் வேண்டும் அல்லது உறுதியான ஒரு சித்தாந்தம் வழிநடத்த வேண்டும். பாஜகவை வலதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. கம்யூனிஸ்டுகளை இடதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தனது சித்தாந்தம் குறித்த தெளிவற்ற நிலையில், ஒரு தலைமையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தத் தலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரசில் யாருமில்லை. அல்லது காங்கிரசின் வாரிசு தலைமை அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார்கள். காங்கிரஸ் துணை தலைவராகவும் எம்.பி. யாகவும் இருந்த ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியின் மீது இருந்த பல்வேறு ஊழல் புகார்கள், பாஜக முன்வைத்த ‘வளர்ச்சி’ என்கிற முழக்கம் காரணமாக காங்கிரஸ் வெறும் 44 இடங்களை மட்டுமே வெல்லும் நிலைமைக்குச் சென்றது.

‘மோடி’ அலை காரணமாகவே இந்த வீழ்ச்சி என காங்கிரசார் சொல்லிக்கொண்டார்கள். தோல்விக்கான காரணங்களை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர்கள் அலசவில்லை. பதவியில்லை; சற்று ஓய்வெடுக்கலாம் என்கிற மனநிலையே காங்கிரசாரிடம் இருந்தது. இந்த ஓய்வு மனநிலையில், எல்லாம் தலைமை பார்த்துக்கொள்ளும் என ராஜீவ் குடும்பத்திடம் பொறுப்புகளை தள்ளிவிட்டார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். சோனியா காந்தி உடல்நிலை காரணங்களால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அத்தனை எளிதாக அவருடைய முயற்சிகளை புறம்தள்ளிவிட முடியாது. தங்களுடைய கடந்த கால அரசியல் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகட்டும், மதவாத அரசியலை கடுமையான நிலைப்பாட்டுடன் எதிர்ப்பதாகட்டும் அவர் நேருவிய மதப்பீடுகளை சற்றேனும் உள்வாங்கியவராகத்தான் தெரிந்தார். தன்னளவில் அவர் உறுதியாக இருந்ததுபோல, தன் கட்சியினர் முக்கியமாக இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இந்த உறுதியை வலியுறுத்தவில்லை என்கிற அளவில் ராகுலின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது.

உதாரணத்துக்கு, திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இடது முன்னணி 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் தனது இருப்பை தக்க வைக்கவோ, ஆட்சியைப் பிடிப்பதற்கோ காங்கிரஸ் மேலிடம் வழிமுறைகளை வகுத்து தந்திருக்க வேண்டும். தனது மாநிலங்களை நழுவவிட்டதைப் போல, திரிபுராவையும் கைகழுவியது காங்கிரசின் டெல்லி மேலிடம். காங்கிரசிலிருந்து திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவிய எட்டு எம்.எல்.ஏக்கள், 2018 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன், பாஜக-வில் இணைந்தார்கள். சுவடே இல்லாத பாஜக, ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது! காங்கிரஸ் தலைமை மறைமுகமாக அதற்கு உதவியது! 10 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த காங்கிரசின் சுவடுகூட திரிபுராவில் இல்லை.

அதுபோல, சோனியாவுக்கும் – ஜெகன் மோகனுக்கும் – சந்திரசேகரராவுக்குமான ஈகோ யுத்தம் காரணமாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுவடில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் இன்று பாஜக தலைமை ஆள்கிறதென்றால் அதற்குக் காரணமும் விலைபோன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். சமீபத்திய உதாரணமான மகாராஷ்டிர மாநிலத்தில்கூட இரண்டு தேர்தல்களுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று வெறும் 44 எம்.எல்.ஏக்களுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதாவது, தனிநபராக ராகுல் காந்தி, தாராளவாத ஜனநாயகவாதியாக மதவாதத்தை எதிர்ப்பவராக இருந்தாலும், அதை தனது கட்சியினருக்கு கடத்தும் அளவுக்கும் ஆளுமை உள்ளவராக வளரவில்லை. இதை உணர்ந்ததாலோ என்னவோ தானாகவே 2019 தேர்தல் முடிவுகளை ஏற்று பதவி விலகியிருக்கிறார். தனது போதாமைகளை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராஜீவ் குடும்பத்திடமிருந்து தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு போவதை பிரயத்தனத்துடன் தடுத்துக்கொண்டிருக்கிறது. சோனியாவும் ராகுலுமே தங்களுடைய பதவிகளை விட்டுத்தருவதாக வெளிப்படையாக அறிவித்தாலும் அதை செயல்படுத்துவோர் யாரும் இல்லை.

மாநிலங்களில் காங்கிரசின் தலைமை பதவிகளில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளே அலங்கரிக்கும் நிலையில், டெல்லி தலைமையில் வாரிசு அல்லாதவர்கள் வந்தால், எங்கே தங்களுடைய வாரிசுகளின் பதவிகளும் பறிபோய்விடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். கட்சி எப்படி போனாலும்சரி, நாடு எப்படி போனாலும்சரி நம்முடைய பதவி தப்ப வேண்டும் என்கிற மானப்பான்மை காங்கிரசாரின் பொதுவான குணமாகியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச காங்கிரசின் வாரிசு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி குறிப்பில் காங்கிரஸ்காரர் என்ற பதத்தை நீக்கினார். முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு தாவப்போகிறாரா என்றெல்லாம் வதந்திகள் வந்த நிலையில், வதந்திகளைவிட அவர் அளித்த விளக்கம் மோசமானதாக இருந்தது; காங்கிரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாகவும் இருந்தது. அதாவது, தன்னைப் பற்றிய முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் கூறிக்கொண்டதாகவும், நீளமாக இருந்ததால் காங்கிரஸ்காரர் என்பதை வெட்டி விட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்.

பாரம்பரியமாக காங்கிரஸ்காரர்கள் குடும்பத்திலிருந்து வரும் வாரிசு இளம் தலைவர் காங்கிரசை எவ்வளவு துட்சமாக மதிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியது அவருடைய விளக்கம். அயோத்தி தீர்ப்பை ஒரு சில காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்; பலர் வரவேற்கிறார்கள். இதுபோல பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவான கருத்துக்களை காங்கிரசார் சொல்வது அவ்வவ்போது பரபரப்புக்குரிய செய்தியாகிறது. இத்தகையவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எப்படி இந்தியாவை இறுகப் பற்றியிருக்கும் மதவாத அரசியலை வேரறுக்க முடியும்? திறந்த மனதுடன் தற்போதிருக்கும் தலைமை ஒரு தலைவரை, ராஜீவ் குடும்பத்தைச் சாராத ஒருவரை (தனது போதாமைகளை வளர்த்துக்கொள்ள ராகுலுக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு) அனுமதிக்குமா?

“நாம் அனைவரும், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம உரிமை, சலுகைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனென்றால் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது”.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆற்றிய முதல் உரையில் இடம்பெற்ற முழக்கம் இது. நேரு முதல் பிரதமர் மட்டுமல்ல, மதசார்பின்மையை என்னும் பாதையை வலுவாக போட்டு, இந்தியாவை கட்டமைத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ்காரராக அதைச் செய்தார். இன்றைய காங்கிரஸ் தலைமை அவர் காட்டிய வழியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்குமா? அல்லது தனது சுயநலனுக்காக நாட்டையும் அதன் பாரம்பரியத்தை மதவாதத்திடம் அடகு வைக்குமா?

குடியுரிமை சட்ட திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்பு திட்டங்களுக்கு இணையானது!

நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

நாசி கட்சி (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’)யின் தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக்கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வதிக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

1920களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ஆம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ஆம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே அவர்கள் ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. மேலும் இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டுவரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்தனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாக பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

ஹாங்காங் போராட்டமும் காஷ்மீர் போராட்டமும் ஒன்றா?

ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்கள் என்றாலே பதறும் மேற்கத்திய ஊடகங்கள், ஹாங்காங் போராட்டங்களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. சீன ஊடகங்கள் போராட்டச் செய்திகளை முற்றிலுமாக தவிர்த்துவருகின்றன.

கிட்டத்தட்ட ஹாங்காங் போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்த இதே காலக்கட்டத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது இந்திய அரசாங்கம். காஷ்மீர் முடக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து காஷ்மீரிகளின் உரிமைகளின் பேரில் அக்கறையுள்ள இந்திய அமைப்புகள் போராடினர்.

காஷ்மீர் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் தனக்கென தனித்த ஆட்சிமுறையைக் கொண்ட பிராந்தியம் என்பதே உண்மை. ஆனால், பல பத்தாண்டுகளாக காஷ்மீரில் நடக்கும் போராட்டங்கள், அண்டை நாடுகளால் தூண்டிவிடப்படுபவை என்றும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும் பொதுக்கருத்து இந்தியர்களிடம் உருவாக்கப்பட்டது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் பெரும்பாலான இந்திய ஊடகங்கள் காஷ்மீர் பிரச்சினையை அணுகுகின்றன.

இந்தப் பின்னணியில் அண்மையில் ‘இடதுசாரிகளுக்கு இலவச ஆலோசனை’ வழங்கிய பிரபல நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரை ஒன்று, ‘இடதுசாரிகள், காஷ்மீரிகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கொண்டு, ஹாங்காங் போராட்டத்தை எதிர்க்கும் சீனாவுக்கு ஆதரவளிக்கிறார்கள்’ என எழுதப்பட்டிருந்தது.

பெரும்பாலும் மேற்கத்திய அரசு சார்பான செய்தி ஏஜென்ஸிகள் தரும் செய்திகளை அப்படியே போடுவது என்பதே இந்திய வெகுஜென ஊடகங்களின் இயல்பு. மேற்கத்திய அரசுகளின் சொந்த நலன்களின் அடிப்படையிலேயே உலகில் என்ன பிரச்சினை நடந்தாலும் இந்த செய்தி ஏஜென்ஸிகள் செய்தி தரும்.

‘சுதந்திரத்தன்மை’ என மேற்பூச்சாக சொல்லிக்கொண்டாலும் செய்தி முகமைகளின் செய்திகள் அரசுகளின் நிலைப்பாடுகளை பிரதிபலிப்பவையே. இத்தகை ஊடக சூழலில் திறனாய்வு தன்மையில்லாத ஊடகர்கள் அவர்கள் தரும் செய்தியை அப்படியே நம்புகிறார்கள். அதன் அடிப்படையில்தான் காஷ்மீரிகளின் போராட்டமும் ஹாங்காங் வாசிகளின் போராட்டமும் ஒன்று என்கிற கருத்துருவாக்கம் வருகிறது.

பின்னணிகளை ஆராய்வோம்:

காஷ்மீருக்கும் ஹாங்காங்கும் முக்கியமான ஒற்றுமை ஒன்றுள்ளது; அது போராட்டத்தை மையப்படுத்தியது அல்ல. இரண்டு பிராந்தியங்களையும் தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது பிரிட்டீஷ். சுரண்டி கொழுத்தபின், இந்தப் பிராந்தியங்களை விட்டு வெளியேறி பிரிட்டீஷ், பெரும் குழப்ப நிலையை அங்கே உருவாக்கிவிட்டே சென்றது.

1947-ஆம் ஆண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கலாமா வேண்டாமா என்பதில் உறுதித்தன்மையற்ற நிலையில், அப்படியே விட்டுப் போனது ஆங்கில அரசு. இந்தியாவுடன் இணைவதில் காஷ்மீரிகள் அப்போதிலிருந்து போர்க்கொடி தூக்கி வந்தனர். ‘சிறப்பு அந்தஸ்து’ என்ற பெயரில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரை நிர்வகித்து வந்தது இந்திய அரசாங்கம். ஆனால், காஷ்மீரில் 70 ஆண்டு காலமாக சுதந்திரம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேர்ல் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஹாங்காங் பிராந்தியம். இதை 1997-ஆம் ஆண்டில் ‘ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்தது பிரிட்டீஷ் அரசு. சீன நாட்டின் நிர்வாக முறையோ, பொருளாதார அமைப்போ இங்கே செயல்படுத்தப்படாது; ஹாங்காங் தனி நிர்வாகமாக, தனித்த பொருளாதார அமைப்புடன் செயல்படும் என்பதே அந்த கொள்கை.

ஹாங்காங் உலகின் மிகப்பெரிய அளவிலான ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் துறைமுகங்களைக் கொண்ட பிராந்தியம். காலனி ஆதிக்கத்தில் இருந்தபோதே ஹாங்காங் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான மைல்கற்களை எட்டியது. இப்போது உலகின் அதிகமான பெரும் பணக்காரர்களைக் கொண்ட பிராந்தியமாகவும், அதிக உயர்விலான தனிநபர் வருமானம் உள்ள நகரமாகவும் ஹாங்காங் உள்ளது. அதே சமயத்தில் வருமான சமத்துவத்திம் மிகமோசமான நிலையில் உள்ளது.

ஹாங்காங் வாசிகள் ஏன் போராடுகிறார்கள்?

வானுயர்ந்த கட்டடங்களும் உலகின் பெருநிறுவனங்களின் தலைமையிடங்களும் நிறைந்த இந்த பிராந்தியத்தில் சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது பெருமுதலாளித்துவத்தை எதிர்த்தாகத்தான் இருக்க முடியும். போராட்டங்களின் போது எழுப்பப்படும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான முழக்கங்களே இதை விளக்கப்போதுமானவை.

ஆனால், இது முற்றிலுமாக சீன அரசாங்கத்திடமிருந்து ஹாங்கங் பிராந்தியத்துக்கு விடுதலை கோரும் போராட்டமாகவே மேற்கத்திய ஊடகங்கள் எழுதுகின்றன. அனைத்து அரசாங்கங்களுக்கும் இருப்பதுபோல, தங்களுக்குக் கீழ் உள்ள பிராந்தியத்தை சீனாவும் ஒடுக்க நினைக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை கைது செய்து சீனாவில் விசாரிக்கும் சட்டத்தை சீனாவின் அறிவுறுத்தலின் பேரில் அமலாக்க முயன்றது ஹாங்காங் அரசாங்கம்.

பிரிட்டீஷ் ஹாங்காங்கை கையளித்தபோது, 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங்கின் சுதந்திர தன்மைக்கு எந்தவித பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதற்கு சீன ஒப்புக்கொண்டது. அதை மீறும் வகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதை எதிர்த்துதான் ஹாங்காங் வாசிகள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.

போராட்டங்களை ஊக்குவிக்கும் மேற்குலகம்!

போராட்டங்கள் வலுத்த நிலையில், அந்தச் சட்டத்தை அமலாக்கப்போவதில்லை என ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துவிட்டது. ஆனாலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. போராடுகிறவர்களில் பெரும்பாலோனோர் பணி வாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்கள். ஒருபக்கம் தனிநபர் உயர்ந்துகொண்டே போகும் வருமானமும் இன்னொரு பக்கமும் குறைவாக ஊதியம் பெறுவது அதிகரித்து வரும் சூழலில் ஹாங்காங் போன்ற முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி கொண்ட பிராந்தியத்தில் போராட்டங்கள் எத்தகைய அழுத்தத்தின் பேரில் உருவாகின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இந்தப் போராட்டங்களை வெறுமனே, ஹாங்காங்கின் தனி சுதந்திரத்தைக் காக்கும் போராட்டங்கள் என மேற்கத்திய ஊடகங்கள் எழுதி போராட்டங்களை ஊக்கிவிப்பதற்கும் காரணம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா முழுமையடைய இருக்கும் நிலையில், ஹாங்காங் பிராந்தியத்தை சீனாவிடமிருந்து பிரித்து, தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர மேற்கத்திய வளர்ந்த நாடுகள் முயற்சிக்கின்றன என்ற கருத்தில் உண்மையில்லாமல் இல்லை.

ஏன் காஷ்மீர் – ஹாங்காங் போராட்டங்கள் வெவ்வேறானவை?

சந்தேகத்துக்கு இடமின்றி காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான போராட்டமும் ஹாங்காங் வாசிகளின் இருக்கும் தனித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்டமும் வெவ்வேறானவை. பொருளாதாரம் உள்ளிட்ட துணைக்காரணங்களும் வெவ்வேறானவை.

காஷ்மீர் மக்கள் நீண்ட நெடும் காலமாக இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள். அங்கே கொல்லப்பட்ட மக்களும் அங்கே சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் ஹாங்காங் மக்களுடன் ஒப்பிட முடியாதவை.

காஷ்மீரைப் போன்று, தனித்துவமான சமூகங்களைச் சேர்ந்த மக்களையோ, ஒரு மதப்பிரிவைச் சேர்ந்தவர்களையோ கொண்டதல்ல ஹாங்காங். அங்கே பெரும்பான்மையினர் சீனர்களே. அதுபோல, பொருளாதாரத்தில், வாழ்வாதாரத்தில் சிறந்த நிலை ஹாங்காங்கில் உள்ளது. காஷ்மீரில் அப்படிப்பட்ட சூழலே கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்படவில்லை.

மேலும், ஹாங்காங்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நிலையில், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் நிலையில் சீனா இல்லை. இந்திய அரசாங்கத்தைப் போல ஒற்றை தேசியம், பெரும்பான்மையின மத அடிப்படையிலான ஒரு தேசத்தை உருவாக்கும் கொள்கை சீனாவுக்கு இல்லை என்றே இந்தச் சூழலை நோக்கிவரும் பல திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஹாங்காங் போராட்டங்களை தொடக்கத்தில் கடுமையான ஒடுக்கும் நிலையில் பார்த்துவந்த சீன அரசாங்கம், தற்போது தனது குரலை மென்மையாக்கிக்கொண்டு பேசுகிறது. ஒட்டுமொத்தத்தில் சீனா தனது பொருளாதார நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது.

இந்தியாவோ 70 ஆண்டுகளாக ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல், காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமையையும் பறித்துக்கொண்டு 100 நாட்களுக்கும் மேலாக அம்மக்களை முடக்கி வைத்துக்கொண்டிருக்கிறது. இப்போது சொல்லுங்கள்… ஹாங்காங் போராட்டமும் காஷ்மீர் போராட்டமும் ஒன்றா?

நாம் எதிரெதிராக நிற்க வேண்டியவர்கள்தானா?

அண்மைக்காலமாக தமிழகத்தில் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி ஒழிப்பு பேசியவர்களை, பார்ப்பனியத்தை விமர்சித்தவர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலை பார்ப்பனிய சாதிவெறி ஏற்றப்பட்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதை முன்வைத்து சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழக மக்கள் சாதிவெறியர்களின் கொடுஞ்செயலைக் கண்டித்தனர். மறுநாள் அதிகாலையில் அதே இடத்தில் அண்ணலின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. வடமாவட்டம் ஒன்றில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோதும், உடனடியாக மீண்டும் பெரியார் அதே இடத்தில் அமர்த்தப்பட்டார். பெரியோர்களின் சிலை உடைக்கப்படுவதும் நிறுவப்படுவது தொடர்ந்து நிகழும் சம்பவங்களாகிவிட்டன. சில இடங்களில் தலைவர்கள் கம்பி வளைக்குள் நிறுத்தப்படுவதும் நடந்துகொண்டிருக்கிறது.

சிலை உடைப்பு சம்பவங்களுக்கும் அதற்குப் பிறகான முற்போக்கு சமூகத்தின் கொந்தளிப்புகளுக்கும் சாதி வெறி கூச்சல்களுக்கும் சாதி ஒழிப்பு யோசனைகளுக்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டியவை ஏராளமாக உள்ளன. அடையாள அரசியல் பேசும் பலர் இதை பேசுவதில்லை. சாதிக்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். அரசியல்வாதிகளுக்கு அது போதும். ஆனால், சமூக யதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது.

பட்டியின மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வர்க்கப் பின்னணி என்ன? சமூகப் பிண்ணனி என்ன? ‘இந்து மதம்’ என இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கிற மதம் இவர்களை எத்தகைய சமூக சூழலில் வைத்துள்ளது? அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ன? அரசு நிர்வாகத்தில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் உள்ள சாதி எது? இவர்களுடைய கலாச்சாரம் என்ன? உணவுப் பழக்கம் என்ன? இத்தனை கேள்விகளுக்கு விடை தேடினால், சமூக யதார்த்தம் நம் கண்முன் வந்து நிற்கும். அது தலித்-பகுஜன் சமூகங்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்கும்.

பார்ப்பனியத்தின் சாதி படிநிலையை ஆங்கிலேயர்கள் ‘இந்து’ மதமாக்கியதாக பிரபல கன்னட தலித்திய எழுத்தாளர் தேவனூர மகாதேவா எழுதியிருப்பார். நூற்றுக்கணக்கான இந்திய ஒடுக்கப்பட்ட சாதிகளை, நான்கு வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை ‘தலித்’ என்ற வார்த்தையால் அழைத்தவர் மகாத்மா ஜோதிபா பூலே. அதை பிரபலமாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பார்ப்பனிய மதம் தீண்டத்தகாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் ஒதுக்கியவர்கள்தான் இன்று எதிரெதிராக நின்று சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிலையின் தலையை துண்டாக்கும் சூத்திரர்களுக்கும் சேர்த்துதான் அம்பேத்கர் பேசினார். ஜோதிபா பூலேயும் பெரியாரும் இயக்கங்களை நடத்தினார்கள். இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகும், முற்போக்கு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்திலும் ஏன் பிற்படுத்தப்படுத்த சமூகம், தலித்துகளுக்கு எதிராக நிற்கிறது?

தலித் பகுஜன் ஒற்றுமையை வலியுறுத்திவரும் எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா இதற்கு பதில் சொல்கிறார்…“ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமூகத்துக்கு மதம் என்பது முக்கியமானது. நான் ஏன் இந்துவல்ல என சொல்லியிருக்கிறேன். அதுபோல, சூத்திரர்களும் அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களும் படிக்கவோ, பரப்பவோ ஒரு அமைப்பாக்கப்பட்ட மத வாழ்க்கையை கொண்டிராதவர்கள். இந்துயிசத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. உற்பத்தி அல்லாத நல்ல வாழ்க்கையை வாழும் பனியாக்களும் சத்திரியர்களும் பார்ப்பனியத்துடன் சேர்ந்துகொள்வார்கள். ஆனால் தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் ஆன்மிக எழுத்துக்களை படிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. தலித்துகள் இதைப் புரிந்துகொண்டு பவுத்தத்திற்கும் கிறித்துவத்திற்கும் மாறினார்கள். தங்களுடைய வழிபடும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்களுடைய வாழ்க்கை சூழல் மாறுகிறது. ஆனால் பார்ப்பனியத்தை தலித்துகள் கேள்வி எழுப்பியதைப் போல சூத்திரர்கள் எதிர்க்கவில்லை. இதுதான் பிற்படுத்தப்பட்ட மக்களை பல நூற்றாண்டுகளுக்கு முடக்கி வைத்துவிட்டது” என்கிறார்.

காஞ்சா அய்லய்யா, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஆய்வாளர். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அவருடைய எழுத்துக்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. காஞ்சா அய்லய்யா சொன்னதன் சாரத்தை, வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுதிய சிலர் முன்வைத்தனர். சிலையை உடைத்தவர்கள் தங்களுடைய சமூக படிநிலையை உயர்த்திக்கொண்டார்களா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பார்ப்பனிய இந்து மதத்தின் ஒற்றை கொள்கையை நாடு முழுவதும் பரப்ப முயற்சி நடந்துகொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய நிலையை மறந்து, சாதி பெருமையை தூக்கி சுமக்க தமிழகத்தில் பலர் தயாராக உள்ளனர். கிட்டத்தட்ட பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்ப்பது போன்றது இது.

மிகச் சமீபத்தில் தருமபுரி அருகே ஒரு கிராமத்தில் இருந்த முனியப்பன் சாமி சிலைக்கு கயவர்கள் சிலர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில் செருப்பு மாலை அணிவித்திருக்கின்றனர். ஊரில் நடந்த விசாரணையின்போது, மதத்தின் பெயரால இயங்கும் ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் முனியப்பன் சாமி சிலை அருகே ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டுள்ளனர். முனியப்பனுக்கும் ஜெய் ஸ்ரீராமுக்கும் என்ன தொடர்பு? பெரும்பான்மையினரின் சாமி எது? எது இறக்குமதி செய்யப்பட்ட சாமி? எந்த மதத்துக்காக சொந்த சாமிக்கே அவர்கள் செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளை சாதி பெருமிதம் பேசி, தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்கிறவர்கள் அலச வேண்டும்.

மேலாதிக்கம் மிக்க ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரின் மதத்தை, கலாச்சாரத்தை தனது மதமாக, கலாச்சாரமாக சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, நமது ஆன்மீகத்தைத்தான் நாம் இழந்து நிற்கிறோம். அந்த வகையில் அய்லய்யா குறிப்பிடுவதைப் போல தலித்-பகுஜன் கலாச்சாரமும் வாழ்நிலையும் ஒன்றே. அவர் உனது தலைவர், இவர் எனது தலைவர் என பிரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிற்பது, நம்மை ஆதிக்கம் செய்வோருக்குத்தான் சாதகமாக அமைகிறது. எதற்காக இதைச் செய்கிறோம் என தெரியாமல்கூட வெற்று ஆதாயங்களுக்காக நாம் எதிரெதிராக நிற்கத்தான் வேண்டுமா?

தற்கொலை அரசியல்!

எந்தவொரு நாகரிக சமூகமும் ‘தற்கொலை’யை ஆயுதமாக எடுக்காது. தலைவனின் கட்டளைக்காக கண்மூடித்தனமாக கழுத்தறுக்கொள்ளும் காட்டுமிராண்டியின் செயல் ‘தற்கொலை’. வாழ்க்கையை நேர்கொள்ளும் திராணியற்றவர்கள் தற்கொலையை புனிதப்படுத்தும், கொண்டாடும் வேலையை செய்துவருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு, அதிமுக எம்பிக்கள் ‘தற்கொலை’ நாடகம் ஆடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்த தற்கொலை நாடகம், நிஜமாகப்போவதில்லை. உணர்வுகளைத் தூண்டி அப்பாவிகள் எவராவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும், அதை வைத்து பிண அரசியல் நடத்தக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன். அப்பட்டமான திசைதிருப்பல் இது.

போதாக்குறைக்கு அய்யாக்கண்ணு, தற்கொலை செய்வோம் என்கிறார். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். கடந்தகால தற்கொலைகளால் எதுவும் நடந்துவிடவில்லை, தற்கொலையைத் தவிர, பிற அத்தனை வழிகளையும் சிந்தியுங்கள்.

அரசுகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஏமாற்றுகிறவர்களிடம் தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்த முடியுமா? அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா? காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைத்துவிட்டதா?