வேட்பாளர் நேர்காணல் என்பது ஏமாற்று வித்தையா?

இன்னும் கூட்டணி குழப்பமே முடிவுக்கு வரவில்லை; அதற்குள் சில கட்சிகள் மும்முரமாக வேட்பாளர் விண்ணப்பங்களை விநியோகித்து, நேர்காணலையும் நடத்த ஆரம்பித்துள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால், உள்கட்சி ஜனநாயகம் தழைத்தோங்குவதாகப் பார்க்கலாம். தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் தாமாகவே முன்வந்து விருப்பத்தை தெரிவிப்பதும் அவர் தகுதியான வேட்பாளர்தானா என கட்சித் தலைமை முடிவெடுத்து அவரை கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட வைப்பதும் பாராட்டப் பட வேண்டிய நடைமுறைகள்தான். உண்மையில் அப்படித்தானா?
பெரிய கட்சிகள் முதல் இப்போது தொடங்கிய கட்சிகள் வரை வேட்பாளர் விண்ணப்பிக்கும்போது பொதுத் தொகுதிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500 முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலும் செலுத்த வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஒரு தொகுதியில் 20 பேர் போட்டியிட விண்ணப்பித்து, அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் மற்றவர்களின் பணம் திரும்ப அளிக்கப்படமாட்டாது. போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கும் தொகுதி, கூட்டணி கட்சிக்குப் போகும்பட்சத்தில் மட்டுமே, விண்ணப்பித்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும். இதை பொருட்களை விற்கும் நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று அறிவிப்பார்களே அதுபோல, கட்சிகளும் முன்பே சொல்லிவிடுகின்றன.
இது என்ன மோசடியாக இருக்கிறதே? என்று கோபப்படுவர்களுக்கு கட்சிகள் சொல்லும் விளக்கம், ‘தேர்தல் செலவுகளை கட்சி தானே செய்கிறது; அதை கட்சிக்கு அளிக்கும் தேர்தல் நிதியாகத்தான் கருத வேண்டும்’. அப்படியென்றால் தேர்தல் நிதி வசூல் என்ற பெயரிலேயே ஒன்று திரட்டப்படுகிறது அது என்ன? திராவிட கட்சிகள் உருவாக்கிவைத்திருக்கும் கட்சி நிதி கொள்ளை வழிகளில் இதுவும் ஒன்று. அதை நாங்கள் மாற்று என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளும் பின்பாற்றுகின்றன என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும்.
சரி, இடதுசாரிகளின் வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறையில் நடக்கிறதா என்று பார்ப்போம். இடதுசாரி கட்சிகளில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால், அவர் படிப்படியாக கட்சியில் உயர்ந்தவராக இருக்க வேண்டும். போராட்டங்களில் பங்கேற்றவராக, மக்களின் செல்வாக்கைப் பெற்றவராக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட பிரதிநிதிகள் தயாரித்துக் கொடுக்கும் முதல் கட்ட பெயர் பட்டியலை உயர்மட்டக் குழு இறுது செய்யும். வேட்பாளர் படிவ விண்ணப்பம், நேர்காணல் இந்த வழிமுறையெல்லாம் இல்லை. ஆனால் இவர்கள் மீதும் வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்துவிட்டு ஒப்புக்கு மாவட்ட பிரநிதிகளிடம் பரிந்துரை கேட்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு.
சிறு கட்சிகளைப் பொறுத்தவரை  எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பதே தெரியாத நிலையில், 234 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்படுகிறது. எதன் அடிப்படையில் இப்படியான முடிவு என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
ஆக, தெளிவாகப் புரிவது இவைதான். பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள் என எல்லோரும் வேட்பாளர் தேர்வை மேலிடத்தின் முடிவுக்கே விட்டுவிட்டு, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் நேர்காணல் என ஜனநாயக சக்திகளாக வேஷம் கட்டுகின்றன.

தினச்செய்தி(23-02-2016)நாளிதழில் வெளியானது.

நுகர்வு காதல் என்ன செய்தது?

பிப்ரவரி என்பது காதல் மாதமாக நுகர்வு கலாச்சாரம் உருவாக்கிவிட்டது. இந்த நுகர்வின் வழி இளைஞய வயதுக்கே உரிய பால் உணர்வுகள் புனித பிம்பத்துக்குள் அடைக்கப்பட்ட ‘காதலாக’ நம் இளைஞர்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புனித பிம்பத்தின் பெயரால் தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறிவிடுகின்றன.  இந்தப் புனித காதலின் பெயரால்தான் ஆதிகாலம் முதல் பெண்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, மனித சமூகம் அனைத்திலும் புனிதப்படுத்தப்பட்ட காதல் பெண்களைத்தான் பலியிட்டுருக்கிறது. ஆசிட் வீச்சுகளும் கழுத்தழுக்கும் மரணங்களும் பெண்களைத்தான் குறிவைக்கின்றன.

‘தாஜ்மஹாலை ஒரு பெண் மீதான ஆணின் காதல்தான் கட்டவைத்தது; ஆனால் ஏங்கேயாவது ஒரு பெண், ஆணுக்காக எதையாவது கட்டியிருப்பாளா?’ என்று பொதுபுத்தி இன்றைய வாட்ஸப் வரை, காதல் உணர்வு என்னமோ ஆண்களுக்கானது என்பதாக உருகிக் கொண்டிருக்கிறது. தொன்மையான இலக்கியம் முதல் நேற்று வந்த சினிமா வரை சமூகத்தை பிரதிபலிக்கும் ஊடகங்கள் அத்தனையிலும் ஆணுக்குத்தான் காதல் உரியதென்றும் ஆண் தான் பெண்ணிடம் காதலைச் சொல்பவனாகவும் சித்தரிக்கின்றன. இதில், விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக காதல் செய்கிற உரிமையே பெண்களுக்கு இல்லை என்கிறபோது, தன் காதலனுக்காக கட்டடம் எழுப்பும் உரிமை எங்கிருந்து பெண்களுக்கு கிடைத்திருக்கும்? கிடைக்கும்?

இதே பின்னணியை சற்றே சாதிய கண்ணோட்டத்துடன் காதல் எப்படி பார்க்கப்படுகிறது என்று பார்க்கலாம். இன்னமும் கிராமங்களில் ஒரு ஆதிக்க சாதி ஆண், ஒரு தலித் பெண்ணை காதல் வயப்பட்டு சட்டப்படி திருமணம் செய்தாலுமே எப்படி சொல்வார்கள் தெரியுமா? ‘அவளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறான்’ என்றுதான். அதாவது ஆதிக்க சாதி ஆணுக்கு ‘கீழ்சாதி’ பெண்ணைச் சேர்த்துக் கொள்ளும் உரிமையும் வேண்டாம் என்றால் ‘கழித்துவிட்டு’ தங்கள் சாதிப் பெண்ணைத் ‘திருமணம்’ செய்துகொள்ளும் உரிமையும் உண்டு. இதே ஆதிக்க சாதி பெண், தலித் ஆணைக் காதலித்தாலோ திருமணம் செய்துகொண்டாலோ ஒன்று அவள் ஆணவக் கொலை செய்யப்படுவாள்; இல்லையேல் அந்த ஆண் கொல்லப்படுவான்.

விரும்பிய ஆணை, விரும்பிய பெண்ணை காதலித்தால் அவர்களை சாதியின் பெயரால் வதைப்பதும் கொல்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதே காலக்கட்டத்தில்தான் ‘காதல்’ என்கிற புனிதம் ஒருபக்கம் வளர்ந்துகொண்டிருக்கிறது.  பன்னாட்டு வியாபாரிகளும் உள்நாட்டு வியாபாரிகளும் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த புனித காதலால் சமூகத்துக்கு இம்மியளவும் அளவும் பயனில்லை என்பதே நிதர்சன உண்மை.

இயற்கையான பால் உணர்வுகளுக்கு புனித பிம்பம் கொடுக்காமல், அறம் சார்ந்து அதை அணுகும்போது மட்டுமே காதல் என்பது மதிப்பிற்குரியதாக இருக்கும். சாதியை தூக்கிப் போடும் துணிச்சலும் காதலில் பெண்ணுக்குரிய சுதந்திரம்(காதலை ஏற்கவோ மறுக்கவோ, சொல்லவோ) நிலைநாட்டப்படுவதும் காதலின் அறமாக இங்கே கொள்ளப்பட வேண்டும்.  இதை முன்வைத்து இன்றைய இளைஞர்கள்  ‘காதல்’ குறித்த உரையாடலைத் தொடங்க வேண்டும்.

இனிய உதயம் இதழுக்காக எழுதியது.

மோடி ஃபார்முலாவில் சமூக ஊடகங்களில் தமிழகக் கட்சிகளின் பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார உத்தியில் தெரு முனைக் கூட்டங்கள் எல்லாம் பழங்கதைகளாகிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் பிரச்சாரம்தான் இனி தங்களுடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை தமிழக கட்சிகளும் உணர ஆரம்பித்துவிட்டன. 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின் போது இந்த டிரெண்டை இந்தியாவில் தொடங்கி வைத்த பெருமைக் குரியவர் நரேந்திர மோடி.  பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற சமூக ஊடங்களின் பங்களிப்பு முக்கியமானது. மோடியின் வெற்றிக்காக சமூக ஊடக உழைக்க வைத்தது ஒரு நிறுவனம். மேலை நாடுகளில் பிரபலமான தகவல் தொடர்பு நிறுவனங்கள் நடத்தி தரும் தேர்தல் போல, மோடியும் நடத்திக் காட்டினார். அதில் வெற்றியும் பெற்றார்.

மோடி ஃபார்முலா என்று உருவாகிவிட்ட அதைத்தான் இந்திய அரசியல்வாதிகள் பலரும் பின்பற்ற நினைக்கிறார்கள். நிதிஷ்-லாலு-காங்கிரஸின் மெகா கூட்டணி வெற்றி பெற கிஷோர் என்ற தகவல் தொடர்பு நிபுணரின் உதவி முக்கியமானது என்று ஆங்கில ஊடகங்கள் எழுதின. கிஷோர் மோடிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர். இந்தியாவில் இந்த ஆண்டு வரவிருக்கிற தேர்தலுக்காக கிஷோரை வலைவீசி பல மாநில அரசியல்வாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். அதில், திமுகவும் அதிமுகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டின் தேர்தலின் வெற்றி தோல்வியை இளம் வாக்காளர்கள்தான் நிர்ணயிக்க இருக்கிறார்கள் என்பதால் தமிழகத்தின் கட்சிகள் அவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றன. இந்த பிரச்சாரத்தை முதலில் தொடங்கியது பாமக. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு, சமூக ஊடக பிரச்சாரத்தையும் தொடங்கியது பாமக. இந்த பிரச்சாரத்தை கவனித்துக் கொள்ள தனி பிரிவே இருக்கிறது.

அடுத்து, திமுக ’நமக்கு நாமே’ பயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிய வேளையில் தனி வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டரில் ஸ்டாலின் பயணம் பற்றிய தகவல்கள் உடனடியாக பதியப்பட்டன. திமுக தலைவர் கருணாநிதிக்கென்றும் தனி வலைத்தளம் திறக்கப்பட்டது. அதிமுகவும் தன்னுடைய சமூக ஊடக பிரச்சாரத்துக்கென்று தனி பிரிவை அமைத்திருக்கிறது. அதிமுக அரசின் விடியோக்கள், ஆடியோக்கள் என வெளியிட்டு தாங்களும் கடமையாற்றுகிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணி சளைத்ததா என்ன? மதிமுகவுக்கு என்று தனி வலைத்தளம் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணிக்கு பிரத்யேகமாக வலைத்தளம் அமைத்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், ஃபேஸ்புக்கில் ஆர்வமாக பங்கெடுக்கிறார். இவர் திங்கள்கிழமை பதிவிட்ட மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி வைரல் ஆனது! மதுரை மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணிக்கு மவுசு கூடியிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு முன்பு வரை ஜி. ராமகிருஷ்ணன் பக்கத்தை கட்சித் தோழர்கள் மட்டும்தான் பார்த்து வந்தார்கள். இன்று அவர் போடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பகிரப்படுகிறது.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக உள்ள அரசியல்வாதி கருணாநிதிதான். ஃபேஸ்புக்கில் தினமும் பதிவிடக்கூடியவராகவும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்பவராகவும் கருணாநிதி இருக்கிறார்.

இளைஞர்களுக்காக அரசியல்வாதிகளும் தங்களை நவீனப்படுத்திக் கொண்டது சரிதான். ஆனால், கொள்கைகள் இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்க வேண்டுமே!

தினச்செய்தி(10-02-2016) நாளிதழில் வெளியானது.

பெண்குழந்தைகளுக்கு மேனகா காந்தி செய்யும் பாதுகாப்பு இதுதானா?

சுப்ரமணியம் சுவாமி பெண் வடிவாக உருவானவர் மேனகா காந்தி! எதையாவது சர்ச்சைக்குரிய வகையில் சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஏற்ற கட்சியாக பாஜக அமைந்துவிட்டது. கூடுதல் சிறப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக பதவியும் இருக்கிறது. இனி சர்ச்சைகளுக்கா பஞ்சம்?! தினம் ஒன்றாக அவிழ்த்துவிடலாம். ஆனால் மேனகா காந்தி, அமைச்சர் பணிக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால் அவ்வவ்போது மட்டுமே சர்ச்சைகளை அவிழ்த்து விடுகிறார்.

இவருடைய லேட்டஸ்ட் சர்ச்சை, பெண்கள் தங்கள் கருவில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமையைத் தரவேண்டும் என்கிறார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய அமைச்சகத்தின் மண்டல இயக்குனர்கள் கருத்தரங்கில் பேசிய மேனகா காந்தி இந்த யோசனையை அங்கே சொல்லியிருக்கிறார். கருவிலே ஆணா பெண்ணா என்பது தெரிந்துவிட்டால், அதை வைத்து கருவை சுமக்கும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாரா என்பதை கண்டுபிடித்துவிட முடியும். இதன்மூலம் பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்த இயலும் என்கிறார் அமைச்சர். அதோடு, தான் கருவில் சுமப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கு இருக்கிறது என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் சொல்லியிருக்கிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருக்கும் மேனகா காந்திக்கு, இந்திய சமூகம் பெண்களுக்கு எவ்வகையான வாழ்க்கையைத் தந்து கொண்டிருக்கிறது என்பதை அவருக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் அறிவார். 2011-ஆம் ஆண்டின் கணக்குப் படி 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். பாலின விகிதாச்சாரம் சில மாநிலங்களில் இதைவிட குறைவாக உள்ளது. வரதட்சனை மரணங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் சட்டம் 1994-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. சட்டம் இருந்தும்கூட பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை. சமூகத்திலிருந்து மாற்றம் வரும்வரை கடுமையான சட்டங்கள் போட்டாலும் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இந்த நிலையில், சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான வழிகளைத் தேடுவதை விடுத்து, அதிரடியாக தலைகிழான யோசனை முன்வைக்கிறார் மேனகா காந்தி. வரதட்சணையை மையப்படுத்தி எடுக்கப்படும் தங்க நகைக்கடை விளம்பரங்களைத் தடுக்க மேனகா காந்தி ஏதாவது சட்டம் இயற்றுவாரா? வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பாரா? இதுதானே பெண்களை பாரமாகக் கருதி சிசுவிலே அவர்களை அழிக்க வைக்கிறது.

பாலினத்தை கண்டறியும் சோதனைக்கு தடை உள்ளபோதே வெளிப்படையாக பெண்சிசுக்களை கருவிலே அழிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லேசான பயத்தைக் கொடுக்கும் அந்தச் சட்டத்தையும் நீக்கிவிட்டால், பிரச்சினையே இல்லை. ஆண் குழந்தைகளை மட்டும் இந்திய சமூகம் பெற்றெடுக்க ஆரம்பித்துவிடும். மேனகா காந்தியின் வாதப்படியே, கருவில் இருப்பது பெண் தான் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டாலும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத காரணத்தால் கரு அழிந்துவிட்டது என அதை சுமந்தவர் தரப்பில் சொன்னால், அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்? இவரேதான் கருகளைப்புகளை கண்காணிப்பது கடினமாக இருக்கிறது என்கிறார். பிறகு, சட்டத்தை நீக்கிவிட்டு, கருவில் இருக்கும் குழந்தையில் விவரங்களை பதிவு செய்து கண்காணிப்பது மட்டும் எளிதாக இருக்குமா?

இத்தகைய குளறுபடியான கருத்துகளுக்காகத்தான் மேனகா காந்தியை, சுப்பிரமணியம் சுவாமியுடன் ஒப்பிட முடிகிறது. சென்ற வாரம் மகாராஷ்டிர மாநிலம் சனி பகவான் கோயிலில் தங்களுக்கு வழிபடும் உரிமை வேண்டும் என்று பெண்கள் நடத்திய  போராட்டம் குறித்து, மேனகா காந்தியிடம் கேட்கப்பட்டபோது, அதை சமூகத்திடமே விட்டுவிட வேண்டும் என்று பதில் சொன்னார். இந்திராவின் மருமகளுக்கு இருக்கும் சமூக அக்கறையை இந்த விஷயமே எடுத்துக் காட்டும்!

தினச்செய்தி(3-2-2016) நாளிதழில் வெளியானது.

மத போதகருக்கு மொட்டையடித்து, கழுதையில் ஏற்றி ஊர்வலம்: கிறித்துவர்களை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்!

ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் 2008-ஆம் ஆண்டு கிறித்துவர்களின் மதமாற்றத்தை தடுப்பதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் தூண்டிவிட்ட கலவரம் மறக்கக் கூடியதல்ல.  இந்தக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டதும் 50 ஆயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானதும் நடந்தது.  அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் பிரதமர் மன்மோகன் சிங், ‘நாட்டின் அவமானம்’ என்று இதை சொல்லியிருந்தார்.

இந்து மதத்தின் தனித்துவத்தை காப்பாற்றும் பொருட்டு, பழங்குடி மக்கள் கிறித்துவ மதத்துக்கு தாவுவதை தடுக்கும் வகையில் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாமியார்கள் இதை முன்னின்று நடத்தினர். இந்த சம்பவங்களுக்கெல்லாம் முன்னோடியாக 1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இருமகன்களுடன் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது எரித்துக் கொல்லப்பட்டார். இதைச் செய்தது விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த தாராசிங் என்பவர்.

இந்தச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை கிறித்துவ போதகர் ஒருவர் மிகக் கடுமையான முறையில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். பாதி மழித்த மீசை, பாதி மழித்த தலைமுடி, புருவ முடியும்கூட பாதி மழிக்கப்பட்டநிலையில், செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு கழுதையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவரை இப்படி ஊர்வலமாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்கள் அழைத்துச் சென்றனர்.
பஜ்ரங் தள் அமைப்பினர் போதகர் மேல் குற்றச்சாட்டு, மூன்று இந்துக்களை ஏமாற்றி கிறித்துவர்களாக மதம் மாற்றி அவர்களை மாட்டிறைச்சி உண்ண வைத்தார் என்பதே. மாட்டிறைச்சியை வேண்டுமென்றே உண்ண வைத்தார் என்று இவர்கள் அழுத்தம் சேர்த்துக் கொள்கின்றனர்.

தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் அதைப் பற்றி போதனை செய்யவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமையாக வரையறுக்கிறது. இந்நிலையில் மதத் தூய்மைவாதம் பேணுகிறோம் என்கிற பெயரில் இந்துத்துவ அமைப்புகள், அடிப்படை உரிமைகளை பறிக்கும்வகையிலும் மனிதத் தன்மையற்ற முறையிலும் இத்தகைய செயல்களைச் செய்கின்றன. உபியில் மனிதத்தன்மையற்று போதகரிடம் நடந்து கொண்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2015-ஆம் ஆண்டில் மட்டும் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் எதிராக 600க்கும் மேற்பட்ட வன்முறைகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இந்த வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த விவரம் சொல்கிறது. கிறித்துவர்களுக்கு எதிராக மட்டும் 149 வன்முறைச் சம்பவங்கள். இதில் கொல்கத்தாவில் 70 வயது கன்னிகாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடங்கும்.

பெரும்பாலும் முஸ்லிம்களை குறிவைத்தே அரங்கேறிய வன்முறை சம்பவங்கள், இப்போது கிறித்துவர்களை நோக்கி படர ஆரம்பித்துள்ளன. மவுனப் பிரதமராக பெயர் பெற்ற மன்மோகன் சிங், மத வெறியாட்டங்களைப் பார்த்துக்கொண்டு எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனால், அக்லக் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரமாகட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு வன்முறையாகப்பட்டும் இன்றைய பிரதமர் மோடி, வாயைத் திறக்காமல் மவுனம் காக்கிறார். இந்த மவுனம்தான் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு வன்முறையை அவிழ்த்துவிட சம்மதமாகத் தெரிகிறதோ என்னவோ?!

தினச்செய்தி(31-01-2016) நாளிதழில் வெளியானது.