தலித்துகளின் துயர் அறியாத மேட்டுக்குடி தலித்துகளின் கவனத்துக்கு…

சமீபத்தில் கவிஞர் சுகிர்தராணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஆசிரியையின் தலித் விரோத நடத்தை குறித்து பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு பலர் ‘அய்யய்யோ…அப்படியெல்லாமா நடக்குது?’ என்றபடி தங்களுடைய ‘ஆழ்ந்த’ வருத்தங்களை பகிர்ந்திருந்தார்கள், இதில் பலர் தலித் அபிமானிகள்.  தலித் அபிமானிகள் தலித்துகள் படும் பாடுகள் குறித்து அறியாதவர்களாக இருப்பதிலிருந்து அவர்கள் தலித்துகளிடமிருந்து எத்தனை தூரம் விலகியிருக்கிறார்கள் என்பதும் ‘எல்லாம் நன்றாக நடக்கிறது’ என்கிற உலகத்துக்குள் வாழ்ந்துகொண்டிருப்பதையும் அறிய முடிகிறது.  இந்த அன்பர்கள், நண்பர்களுக்காக முத்துலட்சுமி என்கிற தலித் சிறுமியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை சொல்கிறேன். இந்த சம்பவத்தை அச்சிலேற்றிய தி இந்து (ஆ), எழுதிய நிருபர் வால்டர் ஸ்காட்டுக்கும் நன்றியை சொல்ல வேண்டும்.

துப்புரவுத் தொழிலாளியின் மகளான முத்துலட்சுமிக்கு தன் 11வது வயதில் காது கேட்கும் திறனில் பிரச்னை எழுந்தது. காதுகளில் கருவியை பொருத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்.  சென்ற வருடம் பத்தாம் வகுப்பில் நுழைந்த நேரம் அவருடைய காது கேட்கும் கருவியில் தண்ணீர் பட்டு, இயங்காமல் போனது. புதிய கருவி வாங்க வசதியும் வாய்ப்பும் கிடைக்கப் பெறாத முத்துலட்சுமி, படிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறார். காது கேட்காததால் வகுப்பில் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இதைக் கண்டுபிடித்த ஆசிரியை செய்ததுதான் மனிதத்தின் உச்சம்! முத்துலட்சுமியை எல்லா மாணவர்கள் மத்தியிலும் அவமானப்படுத்தியதோடு இனி வகுப்பு வரவேண்டாம் என்று சொன்னதோடு, அந்தப் பள்ளியை விட்டே துரத்த தலைமையாசிரியரிடம் பரிந்துரைத்திருக்கிறார். மகளுக்காக தந்தை கெஞ்சியதையும் காதில் வாங்காத செவிடாய் தலைமையாசிரியரும் முத்துலட்சுமியிடம் டிசி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

இங்குதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது… பத்தாம் வகுப்பில் ரிசல்ட் காட்ட வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கும் தனியார் பள்ளியா இது? எந்த பள்ளி இது என்று மேற்கொண்டு படித்தேன். அது ராமநாதபுரம் மாவட்டம், பேராவூர் அரசு மேனிலைப் பள்ளி.

இந்நிலையில் முத்துலட்சுமியின் மனதைரியமும் உறுதியும் என்னை நெகிழ வைக்கிறது. தன் குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு தன்னார்வ நிறுவத்தின் மூலம் தையல் கற்றுக் கொண்டார்.  தையல் மிஷின் வாங்க நிதி கேட்டு ராமநாதபுரம் கலெக்டரிடம் மனுகொடுத்த போது, 15 வயது தொழில் தொடங்கும் வயதல்ல என்று சொல்லி விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் முத்துலட்சுமி தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கிறார்.

புதிய காது கேட்கும் கருவியை வாங்க உதவி கிடைத்து, ஆட்சியரின் பரிந்துரையில் அவர் பள்ளிக்குத் திரும்பலாம். ஆனால் முத்துலட்சுமி, ‘மீண்டும் அவமானப்படுத்தப் படுவேன் என்று எனக்கு பயமாக இருக்கிறது’ என்று சொன்னதாக முடிக்கிறார் நிருபர்.

சினிமா காக்கா முட்டைகளுக்காக விழுந்து விழுந்து நெகிழும், தலித்துகள் இப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப் படுகிறார்களா என்று அறியாத மேட்டுக்குடி மக்களுக்கு முத்துலட்சுமியின் நிலையும் அழுவதற்குரிய ஒன்றுதான். அழுவதற்காகவாவது நாலு பேர் வேண்டும் இல்லையா? இந்த அழுகையில் முத்துலட்சுமிக்குரிய நீதி அழிந்து போய்விடக்கூடாது. முத்துலட்சுமியை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தியதோடு அவருக்குரிய அடிப்படை உரிமை பறித்த அந்த அசிரியையும் இதில் தொடர்புடைய மற்ற ஆசிரியர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், கல்வி கற்பிப்பதற்கே லாயக்கற்ற அவர்களை ஆசிரியர்களாக தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது! உங்களின் நெகிழ்வான கண்ணீர்  வேண்டாம் இதை வலியுறுத்துங்கள், ஒரு சிறுமியின் அடிப்படை உரிமையை நிலைநாட்டுங்கள்!

Follow up:

முத்துலட்சுமி பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். தி இந்து(ஆ) நிருபர் வால்டர் ஸ்காட்டுக்கு வாழ்த்தும் நன்றியும். ஆனால் முத்துலட்சுமியை மனிதமில்லாமல் நடந்துகொண்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக, பள்ளிக்குப் போக பயப்படும் முத்துலட்சுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்திருக்கிறார். முத்துலட்சுமிக்கு காது கேட்கும் கருவியை வாங்கித் தர பலர் முன்வந்திருப்பதை நிருபர் சுட்டிக்காட்டியுள்ளார். முத்துலட்சுமிக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரான பி. கனகராணியை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண்: 94865 59888.
இது வெறுமனே காது கேட்கும் கருவியின் தேவையை தீர்க்கும் பிரச்னை அல்ல, ஆசிரியரின் நடத்தை சார்ந்த பிரச்னை. வழக்கமாக இங்கேயும் அது mute செய்யப்பட்டுவிட்டது!

ஆஷிஷ் நந்தியும் இன்னபிற சகிக்க முடியாத பேச்சுக்காரர்களும்

பிரபல அரசியல் மற்றும் கலை விமர்சகரும் சமூகவியல் கோட்பாட்டாளருமான ஆஷிஷ் நந்திக்கு கண்டனங்கள் எழுந்த போது நான் நம்பிக்கை கொண்டேன், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலிக்க குரல்கள் இருக்கின்றன என்று! இப்படியெல்லாம்கூட நெகிழ முடிகிறது பாருங்கள். என்னைச் சுற்றி எல்லாவிதமான மக்களும் இருக்கிறார்கள். அவர்களின் எல்லாவிதமான பேச்சுக்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சில சமயம் சகிக்க முடியாத பேச்சுக்களையும்.
சகிக்க முடியாத பேச்சு : 1
‘‘என்கூட படிச்ச …. சாதி பொண்ணு பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் பார்டர் மார்க் வாங்கி பாஸ் பண்ணா. கோட்டா மூலமா டீச்சர் டிரெயினிங் முடிச்சு கவர்மெண்ட் ஸ்கூல்ல டீச்சராயிட்டா. எடுத்த எடுப்பிலேயே மாசம் 12 ஆயிரம் ரூபா சம்பளம். அதுபோகட்டும். பார்டர்ல பாஸ் பண்ணவங்க கோட்டாவுல டீச்சர் ஆகற ஸ்கூல்ல நம்ம பிள்ளைகளை படிச்சா நூத்துக்கு நூறா வாங்குவாங்க?’’
சகிக்க முடியாத பேச்சு : 2
‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் லஞ்சம் வாங்குகிறார்கள். இப்போது அந்த வரிசையில் பழங்குடிகளும் சேர்ந்துவிட்டார்கள்’’
ச.மு.பேச்சு: 1 மற்றும் ச.மு.பேச்சு: 2 ‘ஸோ கால்டு மிடில் கிளாஸ்’ கண்ணோட்டத்தில் மிக மிக சரியானவையாகப் படுகின்றன. இதில் வேதனையான  விஷயம்… இடஒதுக்கீடு மூலம் முன்னுக்கு வந்தவர்கள் இடஒதுக்கீட்டு எதிராக செயல்படுவதும் அறிவுஜீவிகளாக காட்டிக்கொள்பவர்கள் சமூகத்தை பின்னோக்கி இழுப்பதுவும்தான்.
முன்னோக்கிய சமூத்தைச் சேர்ந்தவர்கள் எதை சதா யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்? கையில் இருக்கும் கடைசி ரூபாயைக்கூட பிடிங்கிக்கொள்ளும் தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களை எப்படி ஒழிப்பது என்றா? இல்லவே இல்லை… என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர் எப்படி முன்னேறலாம்? என்பதாகத்தான் சதா சிந்தனைகள் இருக்கின்றன. அறிவுஜீவிகளும் இதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடிகளும் புதிதாக லஞ்சம் வாங்குவது லஞ்சம் வாங்குவதில் முன்னோடிகளான முன்னோக்கிய சமூகத்துக்கு கண்டனத்துக்குரியதாக இருக்கிறது. அதன் ஒட்டுமொத்த பிரதிநிதியாகி இருக்கிறார் ஆஷிஷ் நந்தி. ஒரு கட்டுரையாளர் எழுதினார் ‘‘ஆஷிஷ் நந்தி பேச நாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது’’ என்று.
ஆஷிஷ் நந்தி வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘‘இது போன்ற கருத்துகளைச் சொல்ல உங்கள் க்ளையண்ட் (ஆஷிஷ் நந்தி) எந்தவித லைசென்ஸும் பெறவில்லை’’ என்று பேசியது, கருத்து சுதந்திரம் பேசும் அறிவுஜீவிகளுக்கு பதில் சொன்னது.
ஆனால் என்னை சுற்றியுள்ள முன்னோக்கிய சமூகத்தின் சகிக்க முடியாத பேச்சுக்காரர்களுக்கு எதன் மூலம் பதில் சொல்வது?