மஃபளர் மேனை கதறவைத்த சிபிஐ!

‘மஃப்ளர் மேன்’ அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி வந்துகொண்டிருக்கிறது. இந்த முறை மனிதர் நிதானத்தை இழந்து “மோடி ஒரு கோழை, மனநோயாளி” எனப் பொரிந்து தள்ளிவிட்டார். மத்திய அரசின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமான டெல்லிக்கு முதல்வராக பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்தாலும், முழு அதிகாரமும் மத்திய அரசின் கையில்தான். டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து தருவோம் என்று வாக்குறுதி தந்தார் பிரதமர் மோடி.  பாஜக படுதோல்வி கண்டது.  தனி மாநில அந்தஸ்து விவகாரம் வரும்போதெல்லாம் அதைப் பற்றி பரிசீலிப்பதாகச் சொன்னது மத்திய அரசு.

மத்தியில் பெரும் வெற்றி கண்ட மோடி, முதல் படுதோல்வியாக டெல்லி தேர்தல் அமைந்துவிட்டது. புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பெரும்பான்மை பலம் பெற்று விட்டதும் பாஜகவை அசைத்தது உண்மை. அந்த அசைவை நிமிர்த்தும் பொருட்டு, டெல்லியின் அதிகாரம் என்ற கடிவாளத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள விரும்புகிறது மத்திய அரசு.
டெல்லியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை, டெல்லி மாநில அரசின் பரிந்துரையைப் பெறாமல் தானாகவே நியமித்தது மத்திய அரசு. கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் நிழல் யுத்தம் ஆரம்பமானது இங்கேதான். இந்தச் செயலுக்கு மோடியின் தலைமையிலான பாஜக அரசை நேரடியாகத் தாக்கினார் கெஜ்ரிவால்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் மோடி வாயைத் திறந்து பேசவில்லை. அவருடைய அமைச்சரவை சகாக்களே பதில் சொன்னார்கள். துணை நிலை ஆளுநரை நியமிக்க மத்திய அரசுக்கு சட்டப் பூர்வமான அதிகாரம் உள்ளதென தெரிவித்தார்கள்.  டெல்லி போலிஸ் தன்னுடைய தினசரி அறிக்கைகளை ஆளுநரிடம் சமர்பித்தது.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், அரவிந்த கெஜ்ரிவாலின் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர்,  மோசடி கல்விச் சான்றுதழ் அளித்தார் என்பதற்காக டெல்லி காவல்துறை அவரைக் கைது செய்ய அலையோ அலையென்று அலைந்தது. இதே குற்றச்சாட்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது இருந்தும், அது ஏதோ கிணற்றில் போட்ட கல்லாக எந்த நடவடிக்கைக்கும் இல்லாமல் கிடக்கிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கி சர்ச்சையை இல்லாமல் ஆக்கினார். தன்னுடைய அரசு எல்லா தடைகளையும் தாண்டிசிறப்பாக நடத்திப் படுவதாக விளம்பரங்களில் வெளியிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்குயபோது இணைந்திருந்த பிரசாந்த் பூஷனும், யோகேந்திர யாதவும் கட்சியை விட்டு விலகினார்கள். பாஜக கடுமையாகத் தாக்கிய போது கட்சியை, தன்னை காத்த இவர்களுடைய இழப்பு பேரிழப்புதான் என்பதை கெஜ்ரிவால் உணராமல் இல்லை. இருந்தாலும் தனிமனிதனாக கட்சியைத் தாங்கி நின்றார்.

கூட்டத்திலிருந்து விலகிய ஆடுகளை வேட்டையாடுவது பெரிய விலங்குகளுக்கு எளிதானது. அதே யுத்தியைக் கையாள்கிறது பாஜக.  சமீபத்தில் டெல்லியில் அரசு நிலத்தில் ஆக்ரமித்திருந்த குடிசைகளை அகற்றுவது குறித்து டெல்லி அரசு-மத்திய அரசு-காங்கிரஸிடையே கடும் வார்த்தை போர் நடந்தது.  இதற்கு அடுத்தடுதடுத்த நாளில் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் பேரில் எழுந்த குற்றச்சாட்டுக்காக டெல்லி போலீஸ் அல்ல, சிபிஐயே நேரடியாக டெல்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டது.
தன்னை அரசியல் ரீதியாக எதிர்க்க திராணி இல்லாமல் தன்னுடைய அலுவலகத்தை சிபிஐ சோதனைக்கு உட்படுத்தியதன் மூலம் பாஜகவும் மோடியும் பழிவாங்கப் பார்க்கிறார்கள் என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார் கெஜ்ரிவால். இதன் உச்சம்தான் மோடியை கோழை, மனநோயாளி என்று பேசியது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தபோது, அருண் ஜேட்லி ‘முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடக்கவில்லை. முதல்வர் அலுவலகத்தின் அருகில் உள்ள அறையில்தான் சோதனை நடந்தது’ என்று விளக்கினார். இந்த விளக்கத்தை கசக்கி எறிந்த கெஜ்ரிவால் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி புளுகுகிறார் என்று ட்விட்டினார்.

இந்த விவகாரங்கள் பற்றி, அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் சகாவும் சட்ட வல்லுநருமான பிரசாந்த் பூஷண் இப்படிச் சொல்கிறார்…“முதன்மைச் செயலாளர் குற்றம் செய்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவருடைய குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்பே குற்றவாளியைத் தப்பவிடும் வகையில் அதிரடி சோதனைகளை சிபிஐ செய்தது நகைப்புக்குரியது. அதேபோல கெஜ்ரிவால் இந்த அளவுக்கு கதற வேண்டிய அவசியமும் இல்லை!”

தினச்செய்தி(16-12-2015) நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை.

 

ஆம் ஆத்மி, தினமணி, தி இந்து…

கருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது. 70க்கு 70 பெற்றாலும் பெறலாம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றியாக டெல்லி மக்கள் கொண்டாடுகிறார்கள். ஊடகங்கள் கொண்டாடிய மோடிக்கும் அவருடைய  8 மாத ஆட்சிக்கும்  மிகப் பெரிய  பரிசை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் . மாய்ந்து மாய்ந்து மோடி-அமித் ஷா மாயாஜாலம் டெல்லியிலும் பலிக்கும் என்று எழுதிய ஊடகங்களை பின்நோக்கிப் பார்க்கிறேன்.

தி இந்துவின் ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நாளின்  கார்ட்டூன் பகுதியில் அரவிந்த கெஜ்ரிவால் எதிர் கட்சி வரிசையில் அமரப் போவதாக சித்திரம் வெளியானது. மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்தவுடன் மாலினி பார்த்தசாரதி அவரைச் சந்தித்து கைகுலுக்கினார். தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி என்னமா இங்கிலீஷ் பேசறார் என டிவி சீரியல் பார்த்து வியக்கும் ஒரு குடும்பத் தலைவியின் வியப்பைக் காட்டியிருந்தார். மோடியிடம் வியப்பதற்கு அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்! போகட்டும்… சாதாரண விஷயத்துக்கே வியப்பை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட மோடி அபிமானி ஒரு பத்திரிகையின் ஆசிரியரானால் எப்படிப்பட்ட நடுநிலை செய்திகள் வெளியாகும் என்பது என் போன்ற வாசகரின் கேள்வி. (தி இந்துவின் வரலாற்றில் ஒரு பெண் ஆசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதற்காக அவருக்கு வாழ்த்து சொல்லலாம்தான். ஆனால் தாத்தாவின் நிறுவனத்தில் பேத்தி ஆசிரியராக பொறுப்பேற்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்றும் தோன்றுகிறது!) டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஊடகவியலாளர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாரம் செய்தன. தினமணியில் ஒரு செய்தி, அதில் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி என்பதற்கு பதிலாக பாஜக முதல்வர் கிரண்பேடி என்று எழுதி தன் எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது தினமணி.

காலையில் ஆம் ஆத்மி முன்னிலை என்று செய்தி எழுதினாலும் பாஜக பின்னடைவு என்றோ, கிரண்பேடி ஆரம்பம் முதலே பின்னடைவில் இருக்கிறார் என்றோ  வராமல் தணிக்கையுடன் செய்தி வெளியிடுகிறது தினமணி.

இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள் இப்படியான ஒரு தலைபட்சமான, தணிக்கை செய்யப்பட்ட செய்திகளைத்தான் வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையே அவர்களின் சார்பை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக  நடுநிலை ஊடகமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறையை சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்கு உறுதிகளைக்கூட இவர்கள் வெளியிடவில்லை.

என்னுடைய பதிவின் நோக்கம் ஊடகங்களின் ஒரு சார்பை சுட்டிக்காடுவதே அன்றி, ஆம் ஆத்மி மேல் அபிமானம் காட்டுவதல்ல, நான் அபிமானியும் அல்ல.  இந்திய கட்சிகளில் ஆம் ஆத்மி எவ்வகையில் மேம்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை பார்வையாளராக இருந்து பார்க்கப் போகிறேன். இந்திய ஆட்சியாளர்களின் மேல் நம்பிக்கை இழந்த ஒரு சாமானிய பெண்ணுக்கு உண்டான எதிர்பார்ப்பில் நானும் மாற்றத்தை எதிர்நோக்குகிறேன். ஆனால் அந்த மாற்றம் ஆம் ஆத்மியால் நடக்கும் என்று தோன்றவில்லை!!