குளவியின் தளராத முயற்சி…

 

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஒரு சிமெண்ட் தொட்டியில் குளவி ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. விடியற்காலையில் பெய்த மழையின் சொதசொதப்பு மண்ணில் அப்படியே இருக்க, அதை நேர்த்தியாக ஒரு குயவனைப் போல குழைத்து குழைத்து தன் கூட்டை கட்டிக் கொண்டிருந்தது இந்தக் குளவி.

இந்த இடத்தில் தொட்டிச் செடிகள் வளர்க்க ஆரம்பித்த காலத்திலிருந்த இந்தக் குளவி இங்கே வசிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கலாம். மழை வரும்போதோ, செடிகள் நடும்போதோ கூடு உடைந்துவிட்டால், அடுத்த சில நாட்களில் கூடு கட்டிவிடும் இந்தக் குளவி. இந்த முறை கூடு கட்டும்போது அதை பதிவு செய்ய விரும்பினேன்.

உள்ளிருக்கும் மண்ணைக் குழைத்து, முன்பக்க கால்களால் உருட்டி மேலே கொண்டி வந்து, அதை கட்டிக்கொண்டிருக்கும் வரிசைப்படி வைத்து தன் பின் பக்கத்தால் மண்ணை அழுத்துகிறது. இதனால் கூட்டின் உள்பக்கம் நேர்த்தியாக உருளை வடிவம் பெறுகிறது. எனக்கு கிராமங்களில் மண் வீடு கட்டுவது நினைவுக்கு வந்தது. ஆனாலும் இத்தனை நேர்த்தியாக மனிதர்கள் கட்டிய மண்வீட்டை நான் பார்த்ததில்லை!
DSCN0807

DSCN0808

DSCN0819

DSCN0820

குளவி கட்டி முடித்த மண் கூடு!

 

இதை காணொலியாகவும் பதிவு செய்திருக்கிறேன். ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் பார்க்கவும்…

எல்லாம கர்மவினை!

‘கர்மவினை’ போன்ற பல அறிவியல் அனுகூலங்களை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்னபிறகும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் முன்னோர்களால் ஏன் நிகழ்த்தமுடியவில்லை?

journalism copy

‘கர்மவினை’ பற்றி அடிக்கடி நண்பர் ஒருவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார். அதாவது நியூட்டன் தன்னுடைய ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’ என்ற மூன்றாம் விதியை 1687ம் ஆண்டில் வெளியிடுவதற்கு முன்பே நம் முன்னோர்கள் ‘கர்மவினை’ என்ற ஒற்றை வார்த்தைக்குள்(அதாவது ‘கர்மம்’ என்றால் செயல், ‘வினை’ என்பது செயலுக்கு எதிராக வருவது) சொல்லிவிட்டார்கள் என்பது அவரின் விளக்கம். தட்டையாக எடுத்துக்கொள்ளும்போது இது நம்மையெல்லாம் பெருமையில் திக்முக்காட வைத்துவிடும்! நம் தாத்தாக்கள் (பாட்டிகள் இதில் சேர்த்தியில்லை) எப்படி யோசித்திருக்கிறார்கள் பாருங்கள் என்று மயிர் கூச்செறிய பேசத்தோன்றும். பேசமட்டுமே செய்வது நமக்கே உரிய சிறப்பு குணாதிசயம்! இப்படிப் பேசுபவர்கள் இன்று பல்கிப் பெருகிவிட்டார்கள்.

எல்லாம் சரிதான் ‘கர்மவினை’ பற்றி சொன்னவர்களால் ஏன் அதை அறிவியல் ரீதியாக அதை நிரூபிக்க முடியலில்லை?

‘கர்மவினை’ போன்ற பல அறிவியல் அனுகூலங்களை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்னபிறகும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் முன்னோர்களால் ஏன் நிகழ்த்தமுடியவில்லை?

இன்னொரு விஷயம்… ஒரே விதமான சிந்தனைகள் பல பேருக்கு ஒரே சமயத்தில் தோன்றுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த சிந்தனைக்கு யார் முதலில் நடைமுறை வடிவம் கொடுக்கிறார்கள் என்பதே முக்கியம். அந்த வகையில் நம் முன்னோர்கள் எல்லாம் நல்ல சிந்தனாவாதிகள் மட்டுமே. இதுபோன்ற சிந்தனைகள் உலகம் முழுக்க உண்டு. ஆப்பிரிக்க பழங்குடிகளிடம் உண்டு, இன்காக்களிடம் உண்டு, ஆஸ்திரேலிய  அபராஜினல்களிடமும் உண்டு.

‘கர்மவினை’ பற்றி சிந்தித்தவர்கள்தான் மக்களை பகுத்து, இவர்கள் இதை மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற வருணாசிரம கட்டுப்பாட்டை விதித்து, அவர்களை சிந்திக்கவே விடாதபடி செய்துவிட்டவர்கள். இதுதான் பெருமைபடுவதற்குரிய விஷயமா என்று சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – முட்டாள் மாணவன்

1

பாரம்பரியமிக்க யூத குடும்பம் அது. அந்த குடும்பத்தின் தலைவர் ஹெர்மன் ஐன்ஸ்டீன், பொறியியல் படித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி பாலின், பியானோ வாசிப்பதில் கைதேர்ந்தவர். பெற்றோர்களால் பார்த்து நடத்தப்பட்ட திருமணமானாலும் ஹெர்மன், பாலினுடைய இல்வாழ்க்கை நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தது. அதற்கு சாட்சியாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பாலின் அந்த குழந்தையை மிகவும் நேசித்தார். அவன் தன்னை அம்மா என அழைக்கும் காலத்திற்காக ஆவலோடு காத்திருந்தார். அவன் பேச ஆரம்பித்ததும் தான் கற்றுவைத்திருக்கும் அத்தனை இசை அறிவையும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், அவனை பெரிய இசைக்கலைஞனாக்கிவிட வேண்டும் என்று துடித்தது அந்த இளம்தாயின் மனது. ஆனால்… அவனுக்கு இரண்டு வயது ஆனபோதும் பேச்சுவரவில்லை. அப்படியே பேசினாலும் மற்ற குழந்தைகளைப்போல அம்மா, அப்பா என்று வார்த்தைகளை முழுதாக உச்சரிக்கத் தெரியாது. அ, ப், பா என ஒற்றை வார்த்தைகளை மட்டுமே உச்சரிப்பான்.
நாட்கள் மாதங்களாகி, வருடங்களான பின்னும் இது மாறவில்லை. சுற்றியிருப்பவர்களின் கிண்டலும் கேலியும் அந்த இளம் தம்பதியை வாட்டி எடுத்தது. அவர்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணும்கூட “உங்களுக்கு முட்டாள் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பரிகாசம் செய்தாள்.
ஒருவழியாக அந்தத்தாயின் தொடர் முயற்சி வெற்றி பெற்றது. மூன்று வயதில் குழந்தை பேச ஆரம்பித்தான். எப்படி தெரியுமா-? தான் என்ன பேச வேண்டும் என்று மனதுக்குள்ளேயே வார்த்தைகளை கோர்வையாக்கிக் கொள்வான். அப்போது சத்தமே வராமல் அவன் உதடுகள் மட்டும் அசையும். பிறகு மனதுக்குள் பேசியதை எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக பேசுவான்.
இப்படியொரு வித்தியாசமான குணத்துடன் பள்ளிக்குப் படிக்கப்போன அந்தச் சிறுவனை ஆசிரியர்களும் மற்றவர்களும் அடிமுட்டாள் என தூற்றினார்கள். விளையாட்டிலும் உடற்பயிற்சி வகுப்புகளிலும் அந்தச் சிறுவனுக்கு சிறிதும் விருப்பம் இருக்கவில்லை. எந்த விஷயத்தையும் நத்தை வேகத்தில் செய்வதைப் பார்த்து இவன் எப்படி வாழப்போகிறனோ? என்று கவலைப்பட்டார்கள் ஹெர்மனும் பாலினும் ஆனால் தீர்க்கதரிசனம் மிக்க அவன் கண்கள் சாதாரணமானவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தன. அவனுடைய 26வது வயதில் உலகமே ஒப்புக்கொண்டது அவன் ஒப்பற்ற மேதை என்று. அவன்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

ஒரு முட்டாள் அதிமேதாவியான கதை ஐன்ஸ்டீனுடையது. நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் ஐன்ஸ்டீன் தந்த சார்பியல் தத்துவத்தை மீறிய இன்னொரு கோட்பாடு உருவாக்கப்படவில்லை. இன்னமும் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருக்கும் இருபதாம் நூற்றாண்டின் ஒரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மட்டுமே!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜெர்மனி வட்டேம்பர்க் நகரை ஒட்டியுள்ள உல்ம் என்னும் இடத்தில் 1879ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ந் தேதி பிறந்தார். ஐன்ஸ்டீனுக்கு ஒரு வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் ஜெர்மனியின் மற்றொரு நகரமான முனிச்சுக்கு குடிபெயர்ந்தது-. ஐன்ஸ்டீன் அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து எலக்ட்ரிக் உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை முனிச் நகரின் புறநகரில் ஆரம்பித்தார்கள். ஐன்ஸ்டீனுக்கு ஒரு தங்கை பிறந்தாள், பெயர் மாஜா.
சிறுவயது ஐன்ஸ்டீனுக்கு யூதமத போதனைகள் மிகவும் முக்கியமாக சொல்லித்தரப்பட்டன. கூடவே இசைப் பிரியையான அம்மாவின் விருப்பப்படி வயலினும் சொல்லித்தரப்பட்டது. முனிச் நகரில் அப்போது யூத மத பள்ளிகள் சரியான கல்வியை தராதபடியால், ஒரு கத்தோலிக்க பள்ளியில் ஐன்ஸ்டீன் ஆரம்ப கல்வி கற்க வேண்டியிருந்தது. 70 பேர் படித்த பள்ளியில் இவர் மட்டுமே யூதர். அதனாலேயே சக மாணவர்களால் இவர் ஒதுக்கப்பட்டார். அதோடு அந்தப் பள்ளியில் பெரும்பாலான நேரங்களில் மத கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். பின்னாளில் மத நம்பிக்கையற்றவராக ஐன்ஸ்டீன் மாற இந்த சம்பவங்கள் முக்கிய காரணமாக இருந்ததாக சொல்லப்படுவதுண்டு.
ஏற்கனவே பேசுவதில் குறைபாடு கொண்டிருந்ததோடு, மதரீதியாக ஒதுக்கப்பட்டவராக இருந்தாலும் ஆரம்ப படிப்பில் அவர்தான் முதன்மை மாணவராக வருவார்.
பெற்றோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த அந்த சமயத்தில் ஐன்ஸ்டீன் திடீரென்று காய்ச்சலில் படுத்த படுக்கையானார். “கடவுளே! என் குழந்தையை குணமாக்கு என்று சதா வேண்டியபடியே இருந்தார் அம்மா. மருந்து, மாத்திரைகள் கொடுத்தும் பழைய ஐன்ஸ்டீனை அவர்களால் மீட்க முடியவில்லை. அப்போது சிறுவன் ஐன்ஸ்டீனை உற்சாகப்படுத்த அப்பா ஹெர்மன் கொடுத்த பொருள்தான் ஒரு மாமேதையை உருவாக்குவதற்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது…

தள்ளுபடி விலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் The evolution of physics வாங்க  இங்கே க்ளிக்கவும்.