ராகுல் காந்தி Vs ஆர் எஸ் எஸ்: வலுக்கும் யுத்தம்!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தாயான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்புக்கும் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவைவிட ஆர் எஸ் எஸ்ஸை கடுமையாக எதிர்க்கிறார் ராகுல் காந்தி. அதுபோல மற்ற எந்த தலைவரைக் காட்டிலும் ராகுல் காந்தியை தொடந்து தாக்கி வருகிறது ஆர் எஸ் எஸ். கொஞ்சம் ஃபிளாஷ் பேக்குக்குப் போவோம்…
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் சோனாலி என்னும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “காந்தி ஆர் எஸ் எஸ் காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போது ஆர்எஸ்எஸ் காரர்கள் காந்தியைக் கொண்டாடுகிறார்கள்” என்று பேசியிருந்தார். ஆர் எஸ் எஸ் குறித்து  ராகுல் காந்தி வெளிப்படையாக விமர்சனத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்தப் பேச்சுதான்.
ஆர் எஸ்  எஸ் அமைப்பின் தீவிர ஊழியரான நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்தது எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து வைத்திருந்ததாலே ராகுல் காந்தி அப்படி பேசியிருக்ககூடும்.  நரேந்திர மோடி பதவியேற்றி ஒவ்வொரு முறையும் பாஜகவினராலும் குறிப்பால ஆர் எஸ் எஸுடன் நெருங்கிய உறவைப் பேணும் அமைச்சர், எம்பிகள்,  எம் எல் ஏக்கல் வெறுப்பு பேச்சு பேசும்போது ராகுல் காந்தி கடுமையாக ஆர் எஸ் எஸை சாடினார்.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு,  தாணே மாவட்ட ஆர்எஸ்எஸ் செயலாளர் ராஜேஷ் குண்டே, பிவாண்டி நடுவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தியிருக்கிறார்.  அண்மையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் ராகுல் காந்தி மன்னிப்பு கோரினால் வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை சொன்னார்கள். ஆனால், ராகுல் காந்தி அதற்கு மறுத்துவிட்டார்.
அதுபோல கடந்துபோன ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழாவில் பேசிய ராகுல் காந்தி, “ஆர் எஸ் எஸ்ஸை எதிர்க்கும் மிகப் பெரிய சக்தியாக காங்கிரஸ் இருக்கும். மதச்சார்பின்மை எங்களுடைய மரபணுவில் உள்ளது. அது ஆர் எஸ் எஸ் போன்ற மதவாத அமைப்பை நசுக்கிவிடும்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அரசியலில் புதிதாகப் பிறந்த குழந்தையெல்லாம் ஆர் எஸ் எஸ் பற்றி கருத்துச் சொல்லக்கூடாது” என்றார்.
அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, “ஆர் எஸ் எஸ் தேசப் பக்தர்களின் அமைப்பு. மக்களவைத்தேர்தலுக்குப் பிறகு  காங்கிரஸ் தண்ணீரில் இருந்து தவறி விழுந்த மீனாக நடந்து கொள்கிறது” என்று தெரிவித்தார்.
இதுவரை ‘சாத்வீகமாக’ நடந்துகொண்ட ஆர் எஸ் எஸ், கடந்த வாரம் அஸ்ஸாம் சென்ற ராகுல் காந்தியை கோயிலுக்குள் நுழைய விடாமல் வலுக்கட்டாயமாக தடுத்துள்ளனர். இந்தியாவின் முக்கிய கட்சியின் தலைவர் ஒருவரை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல்முறையாக இருக்கும்! இத்தனைக்கும் அஸ்ஸாமில் ஆள்வது காங்கிரஸ் தலைமையிலான அரசு.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு மாநில அரசின் மீது எவ்வித பயமும் இல்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த நிகழ்ச்சி என்கிறது காங்கிரஸ். இதுகுறித்து திங்கள் கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிய ராகுல் காந்தி, “என்னை கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என வெடித்துத் தள்ளியிருக்கிறார்.
பீகாரில் முன்னெடுத்த மதவாத, வகுப்புவாத அரசியல் பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளுக்கும் படுதோல்வி தந்துள்ளன. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் பாணியில் சொல்வதென்றால் ‘வாண்டட்டா வண்டியில ஏர்றது’ என்பதுபோல இத்தகைய நடவடிக்கைகளால் விரைவில் வரவிருக்கும் அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதை பாஜக-ஆர் எஸ் எஸ் அமைப்பினர் உணர வேண்டும்!

தினச்செய்தி(15-12-2015) நாளிதழில் வெளியான என்னுடைய கட்டுரை.