பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்?

பெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் தூண்டின.

2011ன் கணக்கெடுப்பின்படி  தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடியே 38 லட்சம் படித்த பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இதழ்கள் இதுவரை சென்றடைந்தது இரண்டரை லட்சம் பெண் வாசகர்களை மட்டும்தான். மேலே சொன்ன புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று பெண்கள் இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே அடைபட்டிருப்பது.

’நாங்கள் அரசியல் பேசுவோம்’
சென்ற நூற்றாண்டில் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொல்லி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்ததைப் போன்றதே, இன்றைய பெண்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்வதும். வாக்காளர்களில் சரிக்குப் பாதியாய் (2.5 கோடி பெண் வாக்காளர்கள்) இருக்கும் பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்று பெண்கள் இதழ்கள் நிராகரிப்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கிப்போடக்கூடியது. அரசால் இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குமானவை. ஆண்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் சட்டதிட்டங்களை அறியும் உரிமைக்கூடவா பெண்களுக்குக் கிடையாது? மக்களாட்சியின் நான்காவது தூணாக சொல்லப்படும் பத்திரிகைகள், முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே இதுபடுகிறது. அரசியலின் தூய்மை காக்கப்பட வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகப்பட வேண்டும். அதற்கொரு தூண்டுகோளாக, அரசியல் குறித்த நேர்மறையான பார்வையை பெண்களுக்கு இந்த இதழ்கள் தரவேண்டும்.

பணிபுரியும் பெண்கள்
படித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் இன்று பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பணிபுரிவதன் மூலம் கட்டுப்பெட்டியான வாழ்க்கைச் சூழலிலிருந்து பெண்கள் விடுதலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். குடும்ப அமைப்பிலும், குடும்பத்தை அடுத்துள்ள சமூகத்திலும் பணிபுரியும் பெண்களுக்கு பல சவால்கள் முன்நிற்கின்றன. குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பது, அலுவலகச் சூழலில் தன் திறமையை நிரூபிப்பது என இருவகையான நெருக்குதல்களை இன்றைய பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதுவரை ஆண்கள்தான் அதிகார மையமாக இருந்தார்கள், இப்போது அதிகாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைத்திருக்கிறது. பணிபுரியும் இடத்தில் தனக்கு மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது கலாசார ரீதியாக ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகத்தில் அது சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிடுகிறது. குடும்பத்திலும் அது எதிரொலிக்கிறது. மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இதேநிலைதான். இது குறித்த சொல்லாடல்களை, தீர்வுகளை, புரிதல்களை, ஆலோசனைகளை சொல்வது பெண்கள் இதழ்களிம் கடமை. பணிபுரியும் பெண்களை பெரும்பாலான வாசகர்களாகக் கொண்டிருக்கும் பெண்கள் பத்திரிகைகள் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை? ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள்? அவர்களிடம் பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உண்டு.

இலக்கியம்

தமிழ் இதழ்கள், நவீன இலக்கியங்களை ஏன் புறந்தள்ளுகின்றன என்கிற கேள்வி ஆய்வுக்குரியது. ஒரு மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்பவை இலக்கியங்கள். இலக்கியத்தை புறக்கணித்தது இன்றைக்கு தாய்மொழியின் சொற்பிரயோகத்தை குறைத்து, வேற்றுமொழி கலப்பை அதிகமாக்கிவிட்டது. மொழிக்காகவும் செழுமையான இலக்கியங்கியங்களை வாசகர்களுக்கு தரவும் நவீன இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் சிறு பத்திரிகை அளவிலே முடங்கிப் போய்விட்ட இலக்கியப் பெண்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

சொல்வளம் மிக்க நம் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வெறுமனே பேப்பர் கட்டுகளாக பல்கலைக்கழகங்களின் வெளிச்சம் நுழையா அறைகளில் அடைந்துகிடக்கின்றன. ரசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரிய ஆய்வுகளை வெளியிடுவது இன்றைய தலைமுறை பெண்களுக்கு  தொன்மையான நம் இலக்கியங்கள் குறித்து மதிப்பான பார்வையை ஏற்படுத்தும். அதோடு, இலக்கியங்கள் ஊடாக சொல்லப்படும் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தவும் செய்யலாம். அதுபோல பெண்கள் இதழ்கள் எவற்றிலும் புத்தக விமர்சனங்கள் இருப்பதில்லை, புத்தக அறிமுகங்கள்கூட வருவதில்லை. பெண்கள் புத்தகங்களையே விரும்புவதில்லையா? இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை? அறியாமை என மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டியிருக்கிறது.

சுற்றுச்சூழல்
நாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு படியாக தங்கள் தேவைகளுக்கு தாங்களே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளும் வாழ்க்கைமுறைக்கு அவர்களை தூண்ட வேண்டும்.

உணவு
உணவின்றி அமையாது உலகு. பெண்கள் சமையல் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வதன் பொருள், பெண்கள் இனி சமைக்கவே கூடாது என்பதல்ல. உணவு எப்படி ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதோ, அதுபோலவே சமைப்பதும் பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இது நம் இல்லங்களில் சாத்தியப்படும். மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சமையலை,பெண்களுக்கும் பெண்களைச் சார்ந்திருக்கும் ஆண்களுக்குமாய் சொல்லித் தருவோம்.
ஓர் ஆணித்தரமான உண்மை, இன்றைய பெண்கள் இதழ்களின் விற்பனை சமையல் குறிப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது. சமையல் குறிப்புகளைத் தாங்கிவரும் 32 பக்க இணைப்புகள் தருவதை நிறுத்தினால் பெண்கள் இதழ்களின் விற்பனை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். இதழின் விற்பனையே சமையல் குறிப்புகளால்தான் நடக்கிறது எனும்போது அதையாவது இந்த இதழ்கள் துல்லியத்தன்மையோடு, புதுமையான முறையில் தரலாம். இதழ்களில் வெளியாகும் சமையல் குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே வெளியான அதே இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, அல்லது வேறு இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இது இதழாசியர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே நடக்கிறது. அளவீடுகள் துல்லியமாக இல்லாத, சமைப்பதற்கு கால கணக்கீடு சொல்லப்படாத இந்தச் செய்முறை குறிப்புகளை வைத்துக்கொண்டு, யூகமான சமையலைத்தான் செய்ய முடியும்.

அடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உண்டு. அந்தப் பகுதியில் கிடைக்கும் விளைப்பொருட்கள், தட்பவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த உணவுப் பழக்கம். அவற்றைப் பற்றிய ஆய்வோ, அறிவோ இல்லாமல் எல்லோருக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை பரிந்துரைக்கின்றன இந்த இதழ்கள். இதனால் பாரம்பாரியமான உணவுக் குறிப்புகள் அழிவதோடு, நம் மண்ணின் தானியங்களும் அழிவைச் சந்திக்கின்றன. நம்முடைய உடலும் உணவு சார்ந்த பலவகை நோய்களுக்கு ஆளாகிறது.

நிதி மேலாண்மை
பெண்கள் சிக்கனமானவர்கள், வீட்டு பட்ஜெட் போடுவதில் சிறந்தவர்கள் என்கிற பொதுக்கருத்துகள் இங்கே உண்டு. வீட்டின் தலைவனான ஆண், அன்றாட செலவுகளுக்கு தரும் பணத்தை சிக்கனமான, திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதாக இந்த பொதுக்கருத்துகள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இவர்களை பொருளாதார அறிவு மிக்கவர்களாக கொள்ள முடியாது. ஒரு வீட்டின் வசதிகளைப் பெருக்கும் செலவுகள், எதிர்கால பொருளாதார தேவைகள் என பெரிய அளவிலான, முக்கியமான நிதி திட்டமிடல் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. இன்றைய பெண்கள் பணமீட்டுபவர்களாக இருக்கிறார்கள். தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இன்றைய பெண்களுக்கு விசாலமான பார்வை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிதி மேலாண்மையில் நிறைய கற்றல் தேவைப்படுகிறது.

நடைமுறைச் செய்திகளையொட்டிய கட்டுரைகள்
பத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று சொல்வதுண்டு. ஆனால் பெண்களுக்கான இதழ்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த எந்த பதிவுகளையும் செய்வதில்லை. உதாரணத்துக்கு, இப்போது மீண்டும் பெண்சிசுக்கொலை அதிகரித்துவருகிறது. இந்த செய்தி பெண்கள் இதழ்களின் கரிசனத்துக்கும் பார்வைக்கும் படாமலேயே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இன்றைய தலைமுறைக்காக இயங்கும் ஒரு இதழ் பெண்களின் வாழ்வியலை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.

நுகர்வு வழிகாட்டி
அளவுக்கதிகமாக நுகர்வது இன்றைக்கு மேட்டிமைக்குரிய வாழ்வியலாகிவிட்டது. பெண்களை கண்மூடித்தனமாக நுகரத் தூண்டுவதில் பெண்கள் இதழ்களின் பங்கு அதிகம். நுகர்வு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டபோது, நுகர்வின் அளவைச் சொல்வது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓர் ஊடகத்தின் பணி. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, உறங்கும் உறைவிடம், அதை அலங்கரிக்கும் பொருட்கள் என எது நல்ல நுகர்வு என்பதை சொல்ல வேண்டும்.

கலை
ஓவியம், சிற்பம், சினிமா, நாடகம், நடனம், இசை, நாட்டுப்புற கலை என கலைத்தொழில் செய்யும் பெண்கள் விருதுபெறும்போது மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறார்கள். இதில் சினிமா கலைஞர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் பற்றி செய்திகள் நான்கு வரிகளோடு முடிந்துவிடுகின்றன. விருதுபெற்றவர்கள்தான் திறமைசாலிகள் என்கிற கருத்து வலுக்கட்டாயமாக இந்த இதழ்களால் திணிக்கப்படுகிறது. அதோடு விருது பெறாத திறமையான பல கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகிறது.

மருத்துவம்
பெண்கள் இதழ்களில் வரும் பெரும்பாலான மருத்துவ கட்டுரைகள் பீதியை உண்டாக்குபவையாக இருக்கின்றன. சில சமயம் மூடநம்பிக்கையை வளர்ப்பவையாகவும் உள்ளன. நவீன மருத்துவத்தை ஆதாரமே இல்லாமல் எதிர்ப்பதும் பாரம்பரிய மருத்துவத்துவ முறைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தற்போது பெண்கள் இதழ்களின் டிரெண்டாக இருக்கிறது. எந்தவித ஆய்வுத்தன்மையும் இவ்வகையான கட்டுரைகளில் இருப்பதில்லை. மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் உடலின் தன்மையும் மாறுபடுகிறது, நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மருத்துவமுறையால், நவீன காலத்து நோய் குணமாகிறதென்றால் அதற்கான ஆதாரம், ஆய்வுமுறை உள்ளிட்டவைகளோடு கூடிய மருத்துவ ஆவணமாகத்தான் கட்டுரை எழுதப்பட வேண்டும். நவீன மருத்துவம் குறித்த கட்டுரைகளில், மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியவையா அல்லது நோயை முழுமையாக குணமாக்கக்கூடியவையா என்கிற விவரங்கள் இடம்பெற வேண்டும்.

அறிவியல், தொழிற்நுட்பம்
அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வளரும் ஒரு இந்தியப் பெண்ணால் புதுமையாக சிந்திக்கவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் முடிகிறது. இங்கே இருக்கும் பெண்களால் சிந்தனை அளவில்கூட செயல்பட முடிவதில்லை. பெரும்பாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாவே இருக்கிறார்கள். இந்நிலைக்கு அறிவியல் பார்வை இல்லாத சமூக அமைப்பு முதன்மையான காரணம். நம்முடைய ஊடகங்களும் இதில் அடக்கம். அறிவியலில் புரிதல், ஆர்வம் ஏற்படாதவரை புதிய புதிய கண்டுபிடிப்புகளை நகலெடுப்பவர்களாகவே நாம் இருப்போம்.

வரலாறு
உலகெங்கிலும் இதுவரை எழுதப்பட்ட 90 சதவிகித வரலாறு ஆண்களால், ஆண்களைப் பற்றி எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் வரலாறும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் 10 சதவிகித வரலாற்றில் பெரும்பாலும் அரசிகள் பற்றி மிகைச் சித்திரங்களாகவே உள்ளன. வரலாற்றின் மூலைமுடுக்குகளில் தேடினால் சாதாரண பெண்ணின் வரலாறும் அகப்படலாம். இதன் மூலம் புதிய வரலாறு எழுதப்படலாம். வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய பெண்களுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.

குழந்தை வளர்ப்பு
மனிதக் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளரும்போது சிறந்த செயல்திறனோடு வளர்கிறார்கள் (அதனால் ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கில்லை என்பது இதன் பொருள் அல்ல.) என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பெண்கள் இதழ்கள் சொல்லும் மேலோட்டமான குழந்தை வளர்ப்பு முறைகளால் நல்ல அம்மாக்களையோ, அவர்கள் மூலமாக நல்ல குழந்தைகளையோ உருவாக்க முடியாது. இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி, நிபுணர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டத்தை உருவாக்கி அதை நம் இதழின் வாயிலாக சொல்லித் தரவேண்டும். பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு மீண்டும் பள்ளிப் பாடங்களைத்தான் பெரும்பாலான பெற்றோர் சொல்லித்தருகிறார்கள். கதைகள், பாடல்கள் மூலமாக அறத்தை போதிக்கும் குழந்தை வளர்ப்பு முறை இன்று காணாமல் போய்விட்டது. பெற்றோரைவிட மேம்பட்டவர்களாக உள்ள இன்றைய குழந்தைகளின் திறமைகள் மதிப்பெண்களுக்குள் குறுக்கப்படுகின்றன. மேம்பட்ட குழந்தைகளை வளர்க்க மேம்பட்ட முறை தேவைப்படுகிறது.
90களில் கூட்டுக்குடும்பமாக வசிப்பது பிரச்னைக்குரியதாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. அன்று பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லவில்லை. அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதாக பிரச்னைகள் எதுவும் இல்லை. இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது சிக்கலான விஷயமாகிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைக்கக்கூடிய ஆலோசனைகளை இதழ் முன்வைக்க வேண்டும்.

உறவு மேம்பாடு
ஒரு குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் பெண்ணைச் சுற்றிய எல்லா உறவுகளும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைய சூழல் முந்தைய நூற்றாண்டில் இருந்த மாமியார், நாத்தனார் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டது. இன்றைய பெண்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல் தன் துணையுடனானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரத்தன்மை அல்லது இன்னமும் கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட அடிமைத்தன்மை இந்த இரண்டும் இன்றைய பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுவரை பெண்கள் இதழ்கள் முன்வைத்த ஆண், பெண் உறவு மேம்பாடு படுக்கையறை தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண்களின் வாழ்வியலுக்கு இது மிகவும் பொருந்திப்போகும். இன்றைய பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள். தன் துணையிடம் தனக்கு என்ன தேவையிருக்கிறது என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே கேட்கத் தெரியும். இன்றைய பெண்களின் பிரச்னை அவர்களுடைய உளவியல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவை மேம்படுத்த வேண்டும்.

பராமரிப்பு குறிப்புகள்
பெண்கள் இதழ்களின் மொழியில் பராமரிப்பு என்பது அலங்கரிப்பது, தூய்மையாக்குவது என்பதாக இருக்கிறது. மற்றபடி வீட்டின் மேம்பட்ட வேலைகளான கணிப்பொறி,குளிர்சாதனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை பராமரிப்பது ஆண்களுடையதாகிறது. அதாவது இவற்றைப் பராமரிப்பது பெண்களின் அறிவுக்கு எட்டாத செயலாகவும் மேம்பட்ட விஷயங்களுக்காக ஆண்களையே நம்பியிருக்க வேண்டும் என்று சொல்வதுபோலவும் இருக்கிறது. இதை உடைத்து வீடு முதல் அலுவலகம் வரை பராமரிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் சொல்லித்தர வேண்டும்.

சட்டம்
பெண்கள் இதழ்களால் கையாளப்படும் சட்டப் பக்கங்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற ஊடகங்களால் பிரபலமாக்கப்பட்ட சில சட்டங்களைப் பற்றியே திரும்ப திரும்ப நிரப்பப்படுகின்றன. வீட்டைத்தாண்டிய வெளியில் தேவைப்படும் சட்டபாதுகாப்பு குறித்து இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சமஉரிமையை நிலைநாட்டவும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கவுமான சட்டங்கள் பற்றி பெண்கள் அறிய வேண்டும்.

ஆன்மிகம்
பொதுவாக எல்லா மதங்களுமே அறத்துடன் வாழுங்கள் என்பதைத்தான் சொல்கின்றன. நேரடியாக இதைச் சொல்லாமல் பூஜைகள், நோன்புகள் வழியாக இதை வலியுறுத்தின. ஆனால் இன்றைய பெண்களுக்கு தேவைப்படுவது இன்ஸ்டன்ட் ஆன்மிகம். சுற்றிவளைத்து இது செய்தால் இது விளையும் என்று சொல்வதைவிட நேரடியான முறையிலே அறத்தைச் சொல்லிக்கொடுப்போம். அறத்தோடு செயல்படுபவர்களால் ஆன்மவொளியைப் பெற முடியும். அதைத்தான் நம் இதழின் ஆன்மிகமாகச் சொல்ல வேண்டும். மதம்சார்பற்ற ஆன்மிகமாக இது இருக்கும். இன்றைய தலைமுறை விரும்புவதும் அதுதான்.

 

’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன். ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு அழைத்துச் சென்று என்னை மேனேஜிங் டைரக்டருக்கு அறிமுகப்படுத்தினார். மேனேஜிங் டைரக்டர் என்னை சோதிக்கும் விதமாக, ‘‘நிருபர் என்ற முறையில், எங்கே இந்த இதழின் ஆசிரியரை பேட்டி எடுங்கள், பார்க்கலாம்?’’ என்றார்.
எதிர்பாராத விதமாக ஆசிரியருக்கும் எனக்கும் சிறு அதிர்வைக் கொடுத்தது, அவரின் இந்த வினவல். அடுத்த சில நொடிகளில் ஒரு நிருபராக கேள்விகளை மனதுக்குள் தயாரித்துக் கொண்டு, ஆசிரியரை பேட்டி காண தயாரானேன். முழுவதுமாக நினைவில்லை என்றாலும் அந்த பேட்டி அப்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதில் மறக்க முடியாத ஒரு கேள்வியும் பதிலும்…
‘‘பெண்கள் இதழ் என்றாலே சமையல், வீட்டுப் பராமரிப்பு என்றாகிவிட்டது. ஏன் இதைத் தாண்டி பெண்களுக்குச் சொல்ல வேறு எதுவும் இல்லையா?’’ இது என் கேள்வி…
‘‘எடுத்த உடனேயே பெண்களுக்கு புரட்சிகரமான விஷயங்கள் சொன்னால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்பிக்கைகளை உடைக்கும்படி உண்மைகளைச் சொன்னால் ‘இது நமக்கான இதழ் இல்லை’ என்று நம்மை விட்டுப் போய்விடுவார்கள். மெதுமெதுவாகத்தான் அவர்களை சமையல் கட்டிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும்’’ இது ஆசிரியரின் பதில்…
அந்த சமயத்தில் இந்த பதில் மிகச் சரியாகவே பட்டது. ஆனால் ஆசிரியர் சொன்னபடி, அந்த இதழின் உள்ளடக்கம் 12 ஆண்டுகளாக சமையல்கட்டையும் வீட்டையுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை விட்டு வெளியேறவில்லை. தமிழில் விற்பனையாகும் அரை டஜன் பெண்கள் இதழ்களில் அது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. பெண்கள் சமூக ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட பிறகும் 80களில் இருந்த பெண்களின் வாழ்வியலைச் சொல்வதுபோல் இருக்கிறது இந்த இதழின் உள்ளடக்கம்.
ஏதோ ஒரு இதழை குறைவுகூறுவதுபோல் தோன்றலாம். உண்மையில் அட்டையை அகற்றிவிட்டால் எல்லா பெண்கள் இதழ்களின் உள்ளடக்கமும் ஒன்றுதான். இது முழுக்க, முழுக்க வியாபாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் காலகட்டத்துக்கு இவை பொருந்தி வரும், இந்த இதழ்கள் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதழ்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த, மக்களின் வாழ்வியலில் வேகமாக மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் இங்கே ஆழமாக வேரூன்றி வருகின்றன. அவற்றின் அசுர வளர்ச்சியில் இந்த அரதப் பழசான உள்ளடக்கம் காணாமல் போய்விடும்!

பெண்கள் இதழ்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிக மிக பின்தங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நகரத்தில் வாழ்ந்த ஒரு 40 வயது பெண்ணின் வாழ்க்கை முறையோடு, இன்று 40களில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது. முந்தைய தலைமுறையில் திருமணமான பெண்களுக்கு மாமியாருடனான சிக்கல்கள் அதிகம், ஆனால்  இன்றைய திருமணமான பெண்களின் சிக்கல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்றைய பெண்களுக்கு பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு நேரம் இல்லை, அல்லது அவ்வளவு பொறுமை இல்லை. இன்னமும் நீட்டி முழக்கி ஆன்மிகத்தை பூஜைகளுக்குள்ளும் விரதங்களுக்கும் அடைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இதழ்களின் அறியாமையை என்ன சொல்வது?  ஒருபுறம் பெண்கள் சுதந்திரத்தை சுவாசிக்கிறார், இன்னொரு புறம் வீடுகளில் ஆரம்பித்து பணியாற்றும் இடங்கள் வரை பல அத்துமீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் தமிழில் வெளிவரும் எந்த பெண்கள் இதழும் கண்டுகொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாம் சுபிட்ஷமாகவே இருக்கிறார்கள். பெண்கள் இரவுநேர பணிகளுக்குப் போவதை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இரவில் ஒரு பெண் தனியாக பயணம் செய்வதை விவாதத்திற்குரியதாக பார்க்கிறது. இந்த முரண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஊடகங்களோ, முக்கியமாக பெண்களுக்காக உள்ள இதழ்கள் எங்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதுபோல் மெளனிக்கின்றன. சமூகப் பிரச்னைகளை பொதுவெளியில் பேசி, அந்தப் பிரச்னையை தீர்வை நோக்கி செலுத்தும் வல்லமைமிக்க இந்த ஊடகங்களின் மெளனம் பெண் சமூகத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய். பெண்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளை மட்டுமல்ல பெண்களை உயர்த்தக்கூடிய நல்லவற்றைக்கூட இந்த இதழ்கள் பேசுவதில்லை.

பொதுவாக பெண்கள் இதழ்களில் பணியாற்றுபவர்களை இரண்டாம்பட்சமான இதழாளர்களாகவே மற்ற இதழாளர்கள் நினைப்பதுண்டு. சமையல், வீடு பராமரிப்பு, அழகு குறிப்பு இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே எழுதத் தெரியாது என்கிற நினைப்புதான் காரணம். ஒருவகையில் இது உண்மையும்கூட.. தொடர்ந்து பெண்கள் பத்திரிகைகளில் அரைபட்டுக்கொண்டிருக்கும் இந்த விஷயங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாது. சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.

இதுபோன்ற ஒரு இதழில் பணியாற்ற நேர்வதே ஒரு சாபம்தான். இதில் தினக்கூலியாக வேலைப்பார்த்தால் எப்படியிருக்கும்? இந்த தினக்கூலி அனுபவங்களை பிறிதொரு தருணத்தில் பகிர்கிறேன்.

“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன்

அப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா? அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா? எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை! நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும் அதே மனநிலையில் தான் எதிர்கொண்டேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் தவிர அசோகமித்திரனை அதிகம் படித்ததில்லை. கட்டாயம் படிக்கவேண்டும் என்று வாங்கி வைத்திருக்கும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் புரட்டப்படாமல் கிடக்கின்றன. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் பிறந்த கிராமத்தில் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்காத லிங்காயத்து ‘சாமி’களை, அசோகமித்திரன் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது எடுத்த பேட்டி இது. சுவாரஸ்ய குறைவு காரணமாக பேட்டி பிரசுரமாகவில்லை. பேட்டியில் சுவாரஸ்யத்தைக் கூட்டச் சொல்லி ஆசிரியர் குழு பலமுறை சொல்லியும் அதை செயல்படுத்த முடியாமைக்கான காரணங்களில் என் ஜாதி குறித்த அசோகமித்திரனின் கேள்விக்கு நிச்சயம் இடம் உண்டு. பழைய காகிதங்களுக்கு நடுவே இருந்த இந்த பேட்டியை கீழித்துப் போட மனம் வரவில்லை. பிரசுரிக்கிறேன்…

”முதுமையை என்னால் கொண்டாட முடியவில்லை. இறக்கி வைக்க முடியாத மாபெரும் சுமையாக இருக்கிறது. அதை இறக்கி வைக்கும் காலத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் அசோகமித்திரன். அறிமுகம் தேவையில்லாத தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமை.

”என்னுடைய இளமை பருவத்தில் செகந்திராபாத்திலிருந்து சென்னை வந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை. அப்போதிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘நாடகத்தின் முடிவு’ நான் எழுதிய முதல் சிறுகதை. அந்த வேலையிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளனாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையே இருபத்தி மூன்று ஆண்டுகள் கணையாழி ஆசிரியராக இருந்தேன். எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அனுபவங்களே படைப்புகளாகின்றன”

”தமிழ் இலக்கிய சூழல் தற்போது எப்படியுள்ளது?”

”தமிழ் ஜொலிக்கிற காலம் இது. நிறைய படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. என்னால் முடிந்தவரை எல்லா படைப்பாளிகளையும் படைப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு காலத்தில் தீவிர எழுத்தை சிற்றிதழ்களில்தான் பார்க்க முடியும். இன்று வெகுஜன பத்திரிகைளே தீவிர எழுத்துக்களை தேடிப்பிடித்து பிரசுரிக்கின்றன. சிற்றிதழ்களின் தேவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நிறைய படைப்புகள் வெளிவந்தாலும் சமகாலத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படி கொண்டாடப்பட்ட எத்தனையோ படைப்புகள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. கல்கி எழுதிய போது இதெல்லாம் எழுத்தா என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருடைய எழுத்து கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரு படைப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை பத்து, இருபது வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்”

”சமீப காலங்களில் நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் அது சர்ச்சைக்குரியதாகிறதே?”

”நிஜத்தை பதிவு செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். எழுத்தைப் போலவே தான் நானும் நிஜமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இறை நம்பிக்கை உண்டு. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனக்கஷ்டங்களை கடவுளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன். இதில் எந்தவித போலித்தனத்தையும் காட்டவில்லை. அதுபோலவே சில சமயம் எதார்த்தமாக சொல்லிப்போகிற வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. ஒரு கலைஞன் மீது சொல்லப்படுகிற இப்படிப்பட்ட அவதூறுகள் எவ்வளவு தூரம் அந்த கலைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையான வாசகனையோ, படைப்பையோ ஒருபோதும் பாதிப்பதில்லை.”

”ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். அதை விட்டுவிட்டு தமிழிலேயே தொடர்ந்து இயங்குவது பற்றி வருத்தம் உண்டா?”

”தமிழின் வசீகரம் என்னை ஆட்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன். ஒரு முறை வி.எஸ்.நைபால் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றார். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவதில் வருத்தம் ஒன்றும் இல்லை. எழுத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை என்கிற மனக்குறை இப்போது அழுத்துகிறது. சில தீர்க்கமான முடிவுகளை நான் எந்தவித பலாபலன்களையும் எதிர்பார்க்காமல்தான் எடுக்கிறேன்.”

படங்கள் நன்றி : அவுட்லுக்

“நாங்கள் (பார்ப்பனர்கள்) யூதர்களைப் போல் வாழ்கிறோம்” என்கிற அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரைக்காக போடப்பட்ட சித்திரங்கள் இவை.

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்!

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர், தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!